"5 குழந்தைகள் பெத்துக்க நினைச்சோம்.. ஆனா..." பிரபுதேவா முதல் மனைவி ஓபன் டாக்!
அடுத்த பிரபுதேவா என் மகன்தான் என்று பிரபுதேவாவின் முதல் மனைவி ரம்லத் தெரிவி்த்துள்ளார். மேலும் பிரபுதேவாவுடன் 5 குழந்தைகளை பெற்றுக்கொள்ள விரும்பியதாகவும் கூறியுள்ளார்.;
இந்திய சினிமாவின் மைக்கேல் ஜாக்சன் என ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படுபவர் நடிகர் பிரபுதேவா. இவர், நடன ஆசிரியர், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமையோடு வலம் வந்து கொண்டிருக்கிறார். சினிமா வாழ்க்கை ஒருபக்கம் நன்றாக சென்றுக் கொண்டிருந்தாலும், பிரபுதேவாவின் திருமண வாழ்க்கை பல விமர்சனங்களை பெற்றது. காதல் திருமணம் செய்துகொண்ட முதல் மனைவியுடன் விவாகரத்து, பின் பிரபல நடிகையுடன் காதல், பின்னர் மருத்துவர் ஒருவருடன் இரண்டாவது திருமணம் என அவரது வாழ்க்கை சென்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பிரபுதேவாவின் முதல் மனைவி ரம்லத், அண்மையில் பேட்டி ஒன்றில், தனது குழந்தைகள் குறித்தும், பிரபுதேவா உடனான தனது உறவு குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார். அவரின் பேச்சு, ரசிகர்கள் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
போக்கிரி படத்தில் விஜய் மற்றும் நடிகர் ஸ்ரீமன் உடன் பிரபுதேவா
திரைப்பயணம்...
பிரபல நடன இயக்குநர் மூகூர் சுந்தரின் மகன்தான் நடிகர் பிரபுதேவா. என்னதான் தந்தை புகழ்பெற்ற நடன இயக்குநராக இருந்தாலும், தனது திறமையாலே முன்னுக்கு வந்தார் பிரபுதேவா. குரூப் டான்ஸராக நடன பயணத்தை ஆரம்பித்த பிரபுதேவா, தனது தொடர் முயற்சியால் சிறந்த நடன இயக்குநராக உருவெடுத்தார். ‘இந்து’ படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். இப்படம் நல்ல வரவேற்பை பெற, அடுத்ததாக இயக்குநர் ஷங்கரின் காதலன் படத்தில் நடித்தார். இப்படமும் சூப்பர் ஹிட் அடித்தது. இதனைத்தொடர்ந்து 90, 2000களில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வந்தார். கடைசியாக ஜாலியோ ஜிம்கானா திரைப்படத்தில் நடித்திருந்தார். அப்படம் தோல்வியை சந்தித்தது. நடிப்பு, நடனம் மட்டுமின்றி இயக்குநராகவும் தனக்கென தனி ரசிகர்களை வைத்துள்ளார் பிரபுதேவா. அவரின் இயக்கத்தில் வெளிவந்த போக்கிரி, எங்கேயும் காதல், வெடி போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாள திரையுலகிலும் முன்னணி நடிகராகவும், கோரியோகிராஃபராகவும் வலம் வருகிறார் பிரபுதேவா. பொதுவாகவே பாலிவுட்டில், வெளியில் இருந்து வருபவர்களை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். ஆனால் பாலிவுட்டிலும் பிரபுதேவா நல்ல இடத்தை பிடித்தார். ஹிந்தியில் சல்மான்கனை வைத்து இவர் இயக்கிய வான்டட் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
நடிகை நயன்தாவுடன் பிரபுதேவா - பிரபுதேவாவின் முதல் மனைவி ரம்லத்
திருமண வாழ்க்கை
ஹீரோவாக அறிமுகமான காலகட்டத்திலேயே ரம்லத் என்ற நடனக் கலைஞரை பிரபுதேவா காதலித்து திருமணம் செய்து கொண்டார். அப்போது கெரியரின் பீக்கில் இருந்ததால், அந்த திருமணத்தை சிறிது நாட்கள் யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. ரம்லத் மற்றும் பிரபுதேவாவிற்கு மூன்று மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் புற்றுநோயால் இறக்க, கணவன், மனைவி இடையே விரிசல் விழுந்துள்ளது. இந்நிலையில் விஜய்யின் போக்கிரி படத்தை பிரபுதேவா இயக்கினார். அப்போது நடிகை நயன்தாராவுக்கும், பிரபுதேவாவிற்கும் காதல் மலர்ந்துள்ளது. இந்த காதல் ரம்லத் மற்றும் பிரபுதேவாவிற்கு இடையேயான கிட்டத்தட்ட10 வருட திருமண வாழ்க்கை முடிய முக்கிய காரணமாக இருந்தது. ஆனால் நயன்தாரா உடனான காதலும் பிரேக் அப்பில் முடிந்தது. இதனையடுத்து சிறிது காலம் தனியாக வாழ்ந்துவந்த பிரபுதேவா, கடந்த 2020ஆம் ஆண்டு மருத்துவர் ஒருவரை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண்குழந்தை உள்ளது.
ரம்லத் என்ற லதா - நடிகர் பிரபுதேவா
ரம்லத் பேட்டி...
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார் நடிகர் பிரபுதேவாவின் முதல் மனைவி ரம்லத். அதில், தனது தந்தை ஒரு முஸ்லிம் என்பதால் தனக்கு ரம்லத் என பெயர் வைக்கப்பட்டதாகவும், திருமணத்திற்கு பிறகு இந்து சமயத்திற்கு மாறி லதா என பெயர் வைத்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், “5 குழந்தைகள் பெற்றுக் கொள்ளலாம் என முடிவு செய்தோம். முதல் குழந்தை சிசேரியன் என்பதால் மூன்று குழந்தைகள்தான் சிசேரியன் மூலம் பெற்றுக் கொள்ள முடியும். அதனால் மூன்று குழந்தைகளோடு நிறுத்தி விட்டோம். அதுவும் மூன்றாவது குழந்தை என் முதல் மகனின் விருப்பத்தாலேயே பெற்றுக் கொண்டோம்” என தெரிவித்துள்ளார்.
மகன் ரிஷியுடன் பிரபுதேவா
அடுத்த பிரபுதேவா என் மகன்தான்...
மகன்கள் குறித்து பேசிய ரம்லத், “மூத்த மகன் பெயர் ரிஷி. சின்ன மகன் பெயர் ஆதி. இரண்டு பேரையும் வாடி, போடினுதான் கூப்பிடுவேன். அவங்க அப்பாவும் அப்படித்தான் கூப்பிடுவார். இரண்டு பேரும் அப்பாவை பார்க்க செல்வதை ஒருநாளும் நான் தடுத்தது கிடையாது. இரண்டு பேருக்குமே டான்ஸ்ல ஆர்வம் கிடையாது. இரண்டு வருஷமாகத்தான் ரிஷி டான்ஸ் கத்துக்கிறான். சின்னவனுக்கு டான்ஸே பிடிக்காது. உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சியில் அவர் தந்தை சொன்னதுபோல நிச்சயம் என் மகன்தான் அடுத்த பிரபுதேவா. நாங்கள் பிரிந்தபோது பிள்ளைகள் என்னுடன்தான் இருக்க வேண்டும் என நான்தான் முடிவு செய்தேன். பிள்ளைகள் என்னுடன் இருந்தாலும், அவர்கள் எதைக் கேட்டாலும் வாங்கி கொடுத்துவிடுவார் பிரபுதேவா. அவர்கள் மீது எப்போதும் தனிப்பாசம். பிள்ளைகள் குறித்து இருவரும் பேசிக்கொள்வோம். மற்றபடி எதுவும் கிடையாது. என் பிள்ளைகளிடம் என்னுடைய எந்த கஷ்டம் குறித்தும் பேசமாட்டேன். அவர் விட்டுச் சென்றுவிட்டார் என அழுதுக் கொண்டிருந்தால் பிள்ளைகளை யார் பார்ப்பது. இந்த 10 வருடம் பல மனிதர்களின் உண்மை முகத்தை காட்டியது. அதுவும் கொரோனா காலகட்டம் எனக்கு நிறைய பாடத்தை கற்றுக் கொடுத்தது” என தெரிவித்தார்.
மகன்கள் மற்றும் முன்னாள் மனைவி ரம்லத் உடன் பிரபுதேவா
பிரபுதேவாவிடம் நெருக்கம் காட்டாத மகன்கள்?
முன்னதாக நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த பிரபுதேவா தன்னிடம் தனது மகன்கள் அவ்வளவாக நெருக்கம் காட்டமாட்டார்கள் எனக் கூறியுள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், “குழந்தைகளிடம் அதிகம் நெருக்கமாக இருக்கக்கூடாது. நாம் நினைத்தாலும் அப்படி இருக்க முடியவில்லை. அது ரொம்ப கஷ்டம். நான் அவர்களிடம் ரொம்ப நெருக்கமாக இருப்பேன். ஆனால் அவர்கள் அப்படி இல்லை. என்னை கண்டுகொள்ளக்கூட மாட்டார்கள். இப்போதுவரை இருவரையும் குழந்தைபோலத்தான் நடத்துவேன். ஆனால் அதுபோல இருக்கக்கூடாது என நினைக்கிறேன்” எனப் பேசியிருப்பார்.
சினிமாவில் பிரபலங்கள் விவாகரத்து செய்துவிட்டு பின் வேறு திருமணம் செய்துக்கொள்வது இயல்பான ஒன்று. நிஜவாழ்க்கையிலும் அப்படித்தான். ஆனால் பலரும் விவாகரத்தின் போது ஒருவரை ஒருவர் இழிவாக பேசிக் கொள்வது, ஒருவர் மீது ஒருவர் பழி போடுவது என இருப்பர். ஒரு சிலரே இதற்கு மாறுப்பட்டவர்களாக இருப்பர். அதுபோல, என்னதான் தனது கணவருடன் விவாகரத்துப் பெற்றிருந்தாலும், அவர் குறித்து எந்த வார்த்தையும் இழிவாக பேசவில்லை என பலரும் ரம்லத் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.