நல்லவேளை, சினிமா நடிகரை கல்யாணம் பண்ணல! குடும்பமே நடத்தியிருக்க முடியாது! - நடிகை மோகினி
சின்னதம்பி, தளபதி ஆகியவை தான் நடிக்க வேண்டிய திரைப்படங்கள் என்றும், தன் திருமணம் 3 முறை நின்றுவிட்டதாகவும், நல்ல வேளையாக தன் கணவர் சினிமா துறையை சேர்ந்தவர் இல்லை என்றும் நடிகை மோகினி தெரிவித்துள்ளார்.;
என்னதான் 2கே காலகட்டத்தில் அனிமேஷன், ஏஐ என தொழில்நுட்ப வளர்ச்சியில் படங்கள் எடுக்கப்பட்டாலும், 80ஸ், 90ஸ் காலகட்டத்தில் எடுக்கப்பட்ட படங்களும், பாடல்களும் எப்போதும் எவர்கிரீன்தான். அப்படித்தான் அந்த காலகட்ட கதாநாயகிகளும். இப்போது வரும் கதாநாயகிகள் எல்லாம் ஒரீரு படங்களில் காணாமல் போய்விடுவார்கள். இதில் விதிவிலக்கு ஒருசிலரே. ஆனால் 90ஸ் காலகட்ட கதாநாயகிகள் மட்டும் இப்போதும் ரசிகர்களால் நினைவுக்கூரப்பட்டு வருகின்றனர். அதற்கு அவர்களின் நடிப்பும், கதை தாக்கமும் காரணமாக இருக்கலாம். அப்படி தனது வசீகர கண்களால் ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர்தான் நடிகை மோகினி. தென்னிந்தியாவின் பிரதான மொழிகள் அனைத்திலும் நடித்த மோகினி திருமணத்திற்கு பின் நடிப்பில் இருந்து விலகி தற்போது அமெரிக்காவில் குடும்பத்துடன் செட்டில் ஆகியுள்ளார். இந்நிலையில் நடிகை மோகினி, தனது கடந்தகால நினைவுகள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அண்மையில் மனம் திறந்து பேசியுள்ளார். அதனை பார்ப்போம்.
ஈரமான ரோஜாவே படத்தில் நடிகை மோகினி
தந்தையின் விருப்பத்தால் நடிகையான மோகினி...
1971ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் பிறந்தவர் நடிகை மோகினி. மகாலட்சுமி என இயற்பெயர் கொண்ட இவர், கடந்த 1991ஆம் ஆண்டு வெளியான ‘ஈரமான ரோஜாவே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படம் வெளியாகும்போது மோகினிக்கு வயது 14. ஆனால் 13 வயதிலேயே இப்படத்தில் நடிப்பதற்காக மோகினியிடம் கேட்கப்பட்டுள்ளது. தனக்கு நடிப்பதில் விருப்பம் இல்லை என தெரிவித்துள்ளார் மோகினி. ஆனால் பரதநாட்டிய கலைஞரான தனது மகள் நடித்தால் நன்றாக இருக்கும் என அவரின் தந்தைக்கு ஒரு விருப்பம் இருந்துள்ளது. அப்போது மோகினியின் தந்தை ஸ்ரீனிவாசன் ரேஸ் கிளப்பில் பணியாற்றி வந்துள்ளார். அங்கு தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் அடிக்கடி செல்வாராம். அப்போது தனது மகள் குறித்து அவர்களிடம் பேசிக்கொண்டே இருப்பாராம் மோகினியின் தந்தை. மேலும் அவரின் கண்ணாடி மேசையில் மோகினியின் புகைப்படம் இருக்குமாம். இதனைப் பார்த்த பஞ்சு அருணாசலம் படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் எனக்கூறியுள்ளார்.
இப்படித்தான் ஈரமான ரோஜாவே படத்தில் நடிப்பதற்காக மோகினியிடம் கேட்டுள்ளனர். முதலில் மோகினி மறுக்க, அடுத்தாண்டும் அவரிடம் கேட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 9ம் வகுப்பு கோடை விடுமுறையில் இந்தப் படத்தில் நடித்துள்ளார் மோகினி. அங்கிருந்துதான் மோகினியின் சினிமா பயணம் தொடங்கியது. இப்படத்தில் தனது வசீகர கண்களால் ரசிகர்களை கவர்ந்த மோகினிக்கு அடுத்தடுத்து படவாய்ப்புகள் வந்துள்ளன. சினிமாவில் அறிமுகமான முதல் ஆண்டே தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளிலும் நடித்தார். இதில் ஹிந்தியில் அக்ஷய் குமாருடன் நடித்த படத்தைதவிர மற்ற அனைத்து படங்களும் 100 நாட்கள் தாண்டி ஓடி ஹிட் அடித்தன. தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாளங்களில் பல்வேறு படங்களில் நடித்து 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம்வந்தார். உன்னை வாழ்த்தி பாடுகிறேன், சின்ன மருமகள், தாய்மொழி, நான் பேச நினைப்பதெல்லாம், கண்மணி, வனஜா கிரிஜா, பட்டுக்கோட்டை பெரியப்பா போன்றவை இவர் நடித்த படங்களில் குறிப்பிடத்தக்கவை.
மோகினியின் திருமண புகைப்படம் - கதாபாத்திரம் ஒன்றில் மோகினி
3 முறை நின்றுபோன திருமணம்...
கொழுகொழு கன்னங்கள், பூனைக்கண், ஸ்டைலிஷான பேச்சு என ரசிகர்களை கவர்ந்து கோலிவுட், மோலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும்போதே, 1999ஆம் ஆண்டு சென்னையை சேர்ந்த பரத் கிருஷ்ணசாமி என்பவரை மோகினிக்கு வீட்டில் திருமணம் செய்து வைத்துள்ளனர். மோகினியின் இந்த திருமணம் 3 முறை நின்று போனதாம். நான்காம் முறைதான் பரத்தை மணந்தாராம் மோகினி. திருமணத்தை தொடர்ந்தும் படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார். தமிழ் மட்டுமன்றி மலையாள தொடர்களிலும் நடித்து பிரபலமானார். தமிழில் அறிமுகமாகியிருந்தாலும், மலையாள திரையுலகில் நல்ல புகழை பெற்றார் மோகினி. 2006ம் ஆண்டு கடைசியாக கலெக்டர் என்ற திரைப்படத்தில் நடித்தார். குழந்தைகள் பிறந்தபின் சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். தனது அம்மா, தான் பிறந்தபோது வேலைக்கு சென்றுக் கொண்டிருந்ததால், தன்னை வீட்டில் இருந்த பணியாளர்கள்தான் பார்த்துக் கொண்டதாகவும், அதனால் தன் பிள்ளைகளை தான் அப்படி வளர்க்க விரும்பவில்லை என்பதால் சினிமாவை விட்டு விலகியதாகவும் மோகினி கூறியுள்ளார்.
மகாலட்சுமி டூ மோகினி கிறிஸ்டினா...
தஞ்சாவூரில் இந்து பிராமண குடும்பத்தில் பிறந்தவர் நடிகை மோகினி. ஆனால் தற்போது ஒரு கிறிஸ்துவராக மதம் மாறி மதபோதகராவும் இருந்துவருகிறார். தனது திடீர் மதமாற்றத்திற்கு காரணம் குறித்து கடந்தாண்டுகளில் பேசியிருந்த மோகினி, "குடும்பத்தில், திருமணத்தில், வாழ்க்கையில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் ஒரு கட்டத்தில் நாம் எதற்காக வாழ வேண்டும் என்ற எண்ணம் வர ஆரம்பித்தது. இதனையடுத்து நான் கொஞ்சம், கொஞ்சமாக மன அழுத்தத்திற்குள் செல்ல ஆரம்பித்தேன். எனக்கு கெட்ட, கெட்ட கனவுகள் வர ஆரம்பித்தன. பேய் கனவு, பிசாசு கனவுகள் வந்தன. இதனால், என் தூக்கம் பாதித்தது. அப்போதுதான் நான் ஒரு ஜோசியரை பார்த்தேன். அவர் உங்களுக்கு செய்வினை செய்து வைத்து இருக்கிறார்கள். நீங்களாக தற்கொலை செய்து கொண்டு இறக்க வேண்டும் என்று அதை செய்து இருக்கிறார்கள், கவனமாக இருங்கள் என்றார். அந்த ஜோசியர் சொன்னது போல, எனக்கும் தற்கொலை எண்ணம் அதிகமாக வந்தது.
படங்களில் நடித்தபோது மோகினி... தற்போது மோகினி...
விவாகரத்து செய்யும் அளவிற்கு சென்றேன். நாளைக்கு விவாகரத்து வழக்குக்கு தீர்ப்பு வர இருந்தநிலையில் என் கணவர் என்னை பேசி மனம் மாற்றம் செய்தார். அப்போது நான் ஜோசியம், ஜாதகம், நேரம், கர்மா இவை அனைத்தையும் கடந்த கடவுள் யார் என்று தேட ஆரம்பித்தேன். அப்போதுதான் என்னுடைய கனவில் இயேசு கிறிஸ்து வந்தார். இயேசு கிறிஸ்து எப்போது என்னுடைய கனவில் வந்தாரோ, அன்றிலிருந்து எனக்கு விடுதலை கிடைக்க ஆரம்பித்து விட்டது. கெட்ட கனவுகள் இல்லை. என்னுடைய உடல்நலம் தேற ஆரம்பித்தது. தற்கொலை எண்ணம் வரவில்லை. மனது நிம்மதி அடைய ஆரம்பித்தது. பலமுறை தற்கொலை செய்ய முயன்றுள்ளேன். ஒருமுறை 100-க்கும் மேற்பட்ட தூக்க மாத்திரைகளை சாப்பிட்டேன். ஆனாலும் இயேசுவின் அருளால் நான் சாகவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், தனது சினிமா அறிமுகம், ஈரமான ரோஜாவே படத்தின் நினைவுகள், தன்னால் நடிக்க முடியாமல் போன திரைப்படங்கள், தன்னைக்குறித்து வந்த கிசுகிசுக்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக பல சுவாரஸ்ய தகவல்களை மோகினி பகிர்ந்துள்ளார். மேலும், நல்ல கதை மற்றும் கதாபாத்திரம் கிடைத்தால் சினிமாவில் ரீ - எண்ட்ரி கொடுக்க தயார் எனவும் அவர் கூறியுள்ளார்.
நான் நடிக்க வேண்டிய திரைப்படம் "சின்னத்தம்பி"
ஈரமான ரோஜாவே திரைப்படம் நடித்தபோது காண்ட்ராக்ட் கையெழுத்திட்டிருந்ததால், அப்போதுவந்த பல பட வாய்ப்புகளை தான் மிஸ் செய்ததாக மோகினி தெரிவித்துள்ளார். அதேநேரம் ஈரமான ரோஜாவில் நடித்த அத்தனை நடிகர், நடிகைகளும், உறவுகளைப்போல் என்றும் தனக்கு நெருக்கமானவர்கள் என்று கூறியுள்ளார். அந்தப் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில், நடிகை ஸ்ரீவித்யா தன்னை மிக மிக பாசமாக பார்த்துக்கொண்டதாகவும், அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால் அவரின் மகளாக பிறக்க விரும்புவதாகவும் மோகினி தெரிவித்துள்ளார்.
ஈரமான ரோஜாவே பட சமயத்தில்தான் திருடா திருடா, தளபதி போன்ற படங்களில் நடிக்க வாய்ப்பு வந்ததாகவும், அதனால் சூப்பர் ஸ்டாருடன் நடிக்க முடியாமல் போனது மிகவும் வருத்தமாக இருந்ததாகவும் கூறியுள்ளார். அதேபோல், சின்னத்தம்பி, முத்து போன்ற படங்களின் வாய்ப்புகளை மிஸ் செய்ததாகவும், அதில், சின்னத்தம்பி பட வாய்ப்பை மிஸ் செய்தது பின்னாளில் தனக்கு மிகப்பெரிய வருத்தமாக இருந்ததாகவும் மோகினி கூறியுள்ளார். சமீப ஆண்டுகளில், வாரணம் ஆயிரம் படத்தில், சிம்ரன் நடித்த கதாபாத்திரத்தையும் மிஸ் செய்துவிட்டதாக மோகினி தெரிவித்துள்ளார்.
நடிகர் பிரசாந்துடன் வந்த கிசுகிசு
படங்களில், தான் அணியவேண்டிய உடை குறித்து இயக்குநர்களுடன் பல சண்டைகள் போட்டுள்ளதாகவும், குறிப்பாக இயக்குநர் செல்வமணியுடன் அதிக சண்டைப்போட்டுள்ளதாகவும், சில படங்களில் தன் உடை கவர்ச்சியாக இருப்பதைப் பார்த்து கண்ணீர்விட்டு அழுதுள்ளதாகவும் மோகினி கூறியுள்ளார். இதனிடையே, நடிகர் பிரசாந்துடன் படங்கள் நடித்துக்கொண்டிருந்த சமயத்தில், தானும் பிரசாந்தும் திருமணம் செய்துகொள்ளப் போவதாக வதந்திகள் பரவியதாகவும், இதனைக்கேட்டு இருவருமே, உன்னையா? நானா? கல்யாணமா? என்று கேவலமாக லுக்கு விட்டுக்கொண்டதாகவும் மோகனி தெரிவித்துள்ளார். அத்துடன், நல்லவேளையாக சினிமா இன்டஸ்ட்ரியை சேர்ந்த யாரையும் தான் திருமணம் செய்துகொள்ளவில்லை என்று கூறியுள்ள மோகினி, அவ்வாறு திருமணம் செய்திருந்தால், குடும்பமே நடத்தியிருக்க முடியாது என்று வெளிப்படையாக குறிப்பிட்டுள்ளார்.