ஒரு வழியாக விஷாலுக்கு திருமணம்! நடிகை தன்ஷிகாவை மணக்கிறார்!
கடந்த சில மாதங்களாக ஏற்கனவே திருமணமானவரை சமந்தா காதலித்து வருவதாக வெளியான வதந்திகளுக்கு ஒருவழியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. நடிகர் விஷால் தனது திருமணம் குறித்த தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு குடும்ப பாங்கான படத்தை பார்த்த திருப்தியை கொடுத்திருக்கும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’க்கு மக்கள் மத்தியில் மவுசு இன்னும் குறையாத நிலையில், சூப்பர் ஸ்டாரின் பாராட்டு, நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார் சசிகுமார். இதுபோன்ற பல சினிமா செய்திகள் இந்த வார சினி பிட்ஸில் உங்களுக்காக...
எடை குறைக்க காரணம்!
அடுத்தடுத்து படங்கள் வெளியான மகிழ்ச்சியில் இருக்கும் அஜித் ரசிகர்களை மேலும் குஷிப்படுத்தும்விதமாக அவருக்கு பத்ம பூஷண் விருதும் சமீபத்தில் வழங்கப்பட்டது. இதனிடையே பல வருடங்களாக உடல் எடையை குறைக்காமல் இருந்த அஜித் திடீரென சரசரவென எடையை குறைத்து ஸ்லிம்மாக வலம்வருவது குறித்து பலரும் கேள்வியெழுப்பி வந்தனர். இந்நிலையில் எடை குறைத்தது பற்றி மனம்திறந்திருக்கிறார் அஜித்.
எடை குறைப்புக்கான காரணத்தை பகிர்ந்த அஜித்
அதில் தான் ரேஸிங்கிற்குள் வரவேண்டுமென முடிவெடுத்ததும், மீண்டும் உடல் உறுதியுடன் இருக்கவேண்டுமென நினைத்ததாகவும், அதற்காக, கடந்த 8 மாதங்களில் உடற்பயிற்சி, சைக்கிளிங், டயட், நீச்சல் என பல பயிற்சிகளை மேற்கொண்டு 42 கிலோ எடையை குறைத்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும் தான் ஒரு டீடோட்டலராகவும், வெஜிட்டேரியனாகவும் மாறியிருப்பதாகவும், தன்னுடைய உடல், பொருள், ஆவி அனைத்தையும் ரேஸிங்கிற்காக அர்ப்பணித்திருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
ஒருவழியாக கல்யாணம்!
நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடித்துவிட்டுதான் திருமணம் செய்வேன் என்ற விஷாலின் சபதம் ஒருவழியாக நிறைவேறப்போகிறது. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளரான இவருக்கு இப்போது 47 வயதாகிறது. ஏற்கனவே திருமண ஏற்பாடுகள் செய்து அவை நின்றுபோன நிலையில், காதலிலும் தோல்வியுற்றார். சமீப காலமாக இவருடைய உடல்நிலை சரியாக இல்லாததால் எப்போதுதான் விஷால் திருமணம் செய்துகொள்ளப்போகிறார் என்று பலரும் கேட்டுவந்தனர். இந்நிலையில் தனது திருமணம் குறித்து அறிவித்திருக்கிறார் விஷால்.
திருமணம் குறித்து மனம்திறந்த விஷால்
அவர் அளித்த பேட்டி ஒன்றில், வெறும் 3 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும் என்று நினைத்த நடிகர் சங்க கட்டிடத்தை முடிக்க 9 ஆண்டுகள் ஆகிவிட்டதாகவும், வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி அதன் திறப்பு விழாவை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தார். தனக்கு பெண் பார்த்துவிட்டதாகவும் ஆகஸ்ட் - செப்டம்பரில், குறிப்பாக தனது பிறந்தநாளான ஆகஸ்ட் 29ஆம் தேதிகூட தனது திருமணம் நடக்கலாம் என்றும் கூறினார். எப்படி பார்த்தாலும் இன்னும் 4 மாதங்களில் தனக்கு திருமணம் நடந்துவிடும் என்றும், ஒரு மாதமாகத்தான் ஒரு பெண்ணை காதலித்து வருவதாகவும், அவரைத்தான் திருமணம் செய்யவிருப்பதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் யோகிடா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகை தன்ஷிகா, தனக்கும் விஷாலுக்கும் வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி திருமணம் நடைபெறவிருப்பதாக அறிவித்தார். உடனே அங்கிருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். அவரை தொடர்ந்து பேசிய விஷால், மேல இருக்கு சாமி, கீழே இருக்கு பூமி, எல்லோருக்கும் நன்றி, வணக்கம் என பேசி முடித்தார். தன்ஷிகா திருமணம் குறித்து அறிவித்த போது விஷால் சிரித்தபடியே வெட்கப்பட்டுக் கொண்டிருந்தார்.
சூப்பர் ஸ்டார் சொன்னால்...
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வசூல் வேட்டை புரிந்துவருகிறது ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம். இந்த படத்தில் சசிகுமார், சிம்ரன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, 24 வயதேயான அபினேஷ் ஜீவிந்த் இந்த படத்தின்மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார். இந்த படத்திற்கு பலதரப்புகளிலிருந்தும் பாராட்டுகள் குவிந்துவருகின்றன. இந்நிலையில் சசிகுமாரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டி இருக்கிறார். இதுகுறித்து சசிகுமார் தனது எக்ஸ் தள பக்கத்தில் மகிழ்ச்சித்துள்ளலுடன் பதிவிட்டிருக்கிறார்.
’டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தை ரஜினி வாழ்த்தியது குறித்து சசிகுமார் நெகிழ்ச்சி
அதில் ‘சமீப காலமாக உங்களுடைய கதைத் தேர்வு வியக்க வைக்கிறது’ என்ற ரஜினியின் பாராட்டை மேற்கோளிட்டு, ரஜினி சார் இதை சொன்னபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை என்று நெகிழ்ந்திருக்கிறார். மேலும் தட்டிக் கொடுத்து உற்சாகமூட்டும் உங்களின் தங்கமான மனசுக்கு மிக்க நன்றி ரஜினி சார் என்றும் கூறியிருக்கிறார்.
செக் வைத்த அமலாக்கத்துறை!
தனுஷின் ‘இட்லிக் கடை’, சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ மற்றும் சிம்புவின் ‘எஸ்.டி.ஆர் 49’ என மூன்று பெரிய ஸ்டார்களின் படங்களை ஒரே நேரத்தில் தயாரித்து வருகிறார் ஆகாஷ் பாஸ்கரன். இதனால் சந்தேகமடைந்த அமலாக்கத்துறை, ஆகாஷின் வீடு உட்பட அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியது. ஆனால் பெரிய அளவில் ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என தெரிகிறது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பரான இவர், கடந்த ஆண்டு கவின்கேர் நிறுவன உரிமையாளரின் மகளை திருமணம் செய்துகொண்டார்.
ஆகாஷ் பாஸ்கரனுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை விசாரணை
இவர் தனது Dawn பிக்சர்ஸ் நிறுவனத்தின்மூலம் பல்வேறு படங்களை தயாரித்துவருகிறார். இவருடைய மனைவி தாரணியும் கவின்கேர் நிறுவனம் மட்டுமல்லாமல் மூன்பேக்ஸ் என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். தனக்கு சினிமா மீது இருக்கும் காதலால் தனது வருமானத்தின் பெரும்பகுதியை ஆகாஷ் திரைப்பட தயாரிப்பில் பயன்படுத்தி வருகிறார் என்று சொல்லப்படுகிறது.
சமந்தா - ராஜ் வதந்திக்கு முற்றுப்புள்ளி!
உடல்நல பிரச்சினைகளால் சினிமாவில் இருந்து விலகியிருந்தாலும் ‘சிட்டாடல் ஹனி பனி’ என்ற வெப் தொடரில் மட்டும் நடித்துவந்தார் சமந்தா. அந்த தொடரை இயக்கிய ராஜ் நிடிமொருவும் சமந்தாவும் சமீப காலமாக எங்கு சென்றாலும் ஒன்றாகவே போகின்றனர். குறிப்பாக, சமந்தாவின் தயாரிப்பில் உருவான முதல் பட பூஜைக்கும்கூட ராஜுடன் வந்தார் சமந்தா. இதனால் இருவரும் காதலித்து வருவதாகவும், லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும் வதந்திகள் பரவி வந்தன. ராஜுவுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டதால் சமந்தாவிடம் அவரை விட்டுவிடுமாறு சிலர் கோரிக்கை விடுத்துவந்தனர்.
சமந்தா - ராஜ் நிடிமொரு உறவு குறித்த வதந்திகளுக்கு விளக்கமளித்த மேனேஜர்
இதுகுறித்து சமந்தா எதுவும் வாய் திறக்காத நிலையில் அவருடைய மேனேஜர் விளக்கமளித்திருக்கிறார். நாக சைதன்யாவை விவாகரத்து செய்த பிறகு சமந்தா திருமணமே செய்யப்போவதில்லை என்று கூறிவிட்டதாகவும், எனவே தவறான வதந்திகளை பரப்பவேண்டாம் என்றும் கூறியிருக்கிறார். மேலும் அவர்களுக்கு இடையே எந்தவொரு பந்தமும் இல்லை என்றும் தெளிவுபடுத்தி இருக்கிறார்.
ஷாருக் - தீபிகாவுடன் இணையும் பிரபலம்!
குழந்தை பிறந்ததால் திரைப்படங்களிலிருந்து சற்று ஓய்வில் இருக்கும் தீபிகா படுகோன், மீண்டும் ஷாருக்கானுடன் ‘கிங்’ என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பானது இப்போதுதான் தொடங்கியிருக்கிறது. இதில் ஷாருக்கானின் மகள் சுஹானா கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகவும், குறிப்பாக தீபிகாவின் மகளாக நடிக்கவிருப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் ஷாருக்கானுடன் சேர்ந்து ‘குச் குச் ஹோத்தா ஹை’, ‘கபி குஷி கபி கம்’ மற்றும் ‘கபி அல்வித நா கெஹ்னா’ போன்ற படங்களில் நடித்த ராணி முகர்ஜி இந்த படத்தில் இணைந்திருக்கிறார்.
ஷாருக்கானுடன் ‘கிங்’ படத்தில் இணைவதன்மூலம் கம்பேக் கொடுக்கும் தீபிகா படுகோன்
இவர்தான் சுஹானாவிற்கு அம்மாவாக நடிக்கவிருப்பதாக செய்திகள் வலம்வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தில் தீபிகா வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் இப்படம் அடுத்த ஆண்டு அக்டோபர் அல்லது டிசம்பரில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரவி மோகனுக்கு மாமியார் கேள்வி!
ரவி மோகன் சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்ட தனது அறிக்கையில், "முன்னாள் மனைவி ஆர்த்தி, ஆர்த்தியின் அம்மா, ஆர்த்தியின் குடும்பம் என அவர்கள் அனைவரும் தன்னை எப்போதும் பணத்திற்காக மட்டுமே பயன்படுத்தினார்கள். நான் சம்பாதித்த பணத்தில் இருந்து ஒரு பைசாவைக் கூட எனது பெற்றோருக்கு செலவு செய்யவிடவில்லை. அவர்களுக்கு எப்போதும் பணமும், பண உத்தரவாதத்திற்கு நானும் தேவை" என்று கூறியிருந்தார். இதற்கு ஆர்த்தியின் தாயாரும் தயாரிப்பாளருமான சுஜாதா விஜயகுமார், பதில் அறிக்கை வெளியிட்டு, ரவி மோகனிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
ரவி மோகனின் குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி எழுப்பிய மாமியார் சுஜாதா விஜயகுமார்
"அடங்க மறு, பூமி, சைரன் ஆகிய மூன்று திரைப்படங்களை என் மாப்பிள்ளை ரவி மோகனை கதாநாயகனாக வைத்து எடுத்தேன். இந்த படங்களுக்காக சுமார் 100 கோடி ரூபாய்க்கும் மேலாக ஃபைனான்சியர்களிடமிருந்து கடன் வாங்கி இருக்கிறேன். அந்தப் பணத்தில் 25 சதவிகிதத்தை ரவி மோகனுக்கு ஊதியமாக வழங்கியுள்ளேன். இதற்கு என்னிடத்தில் அவருடன் செய்து கொண்ட ஒப்பந்தம், அவர் வங்கி கணக்குக்கு செலுத்திய பரிமாற்றம், அவருக்காக நான் செலுத்திய வரி என அனைத்து ஆதாரங்களும் உள்ளன. இந்தப் படங்களின் வெளியீட்டின்போது ரவி மோகனை, நான் பல கோடி ரூபாய் கடன்களுக்கு பொறுப்பேற்க வைத்ததாக அவர் பொய்யான குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
இதில் கொஞ்சம் கூட உண்மை இல்லை. அவர் சொல்வது உண்மை என்றால், ஆதாரத்தை காட்ட வேண்டும். அவரிடம் ஆதாரம் உள்ளதா?" என்று சுஜாதா விஜயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தனது பேர குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக, ரவியும், ஆர்த்தியும் மீண்டும் இணைந்து வாழ வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.