லட்சுமி மேனனுக்கு பாலியல் தொல்லை தந்த ஐடி ஊழியர்? மதுபாட்டிலால் துன்புறுத்தல்?

ஐடி ஊழியர் ஒருவரை கடத்தி தாக்கிய வழக்கில் நடிகை லட்சுமி மேனன் சிக்கியுள்ளார். மேலும் இந்த வழக்கில் கைதான அவரின் 3 நண்பர்களும் குற்றப் பின்னணி கொண்டவர்கள் என கூறப்படுகிறது.;

Update:2025-09-02 00:00 IST
Click the Play button to listen to article

தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் பிரபலமான நடிகையாக வலம்வரும் லட்சுமி மேனன், கொச்சியில் ஐடி ஊழியரைக் கடத்தி, தாக்கியதாக சர்ச்சையில் சிக்கியுள்ளார். இது தொடர்பாக, லட்சுமி மேனனின் மூன்று நண்பர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் லட்சுமி மேனன் முன்ஜாமின் பெற்றுள்ள நிலையில், கைதான மூன்று பேரும் ஏற்கனவே குற்றப் பின்னணியை கொண்டவர்கள் என செய்திகள் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆள்கடத்தல், தங்க கடத்தல் வழக்குகளில் சம்பந்தப்பட்ட இவர்களுக்கும், நடிகை லட்சுமி மேனனுக்கும் என்ன தொடர்பு என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சினிமா வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ள இந்த சம்பவத்தின் முழு பின்னணி குறித்து பார்க்கலாம்.


சுந்தரபாண்டியன், சந்திரமுகி படங்களில் லட்சுமி மேனன்

பரதநாட்டியம் மூலம் சினிமா வாய்ப்பை பெற்ற லட்சுமி மேனன்

மே 16, 1996ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தவர் நடிகை லட்சுமிமேனன். லட்சுமி மேனனின் தாய் மற்றும் தந்தை இருவருமே கலைத்துறையில் இருந்து வந்ததால் சிறு வயதில் இருந்தே நடனம், நடிப்பு போன்றவற்றில் ஆர்வம் கொண்டிருந்தார் லட்சுமி மேனன். இந்நிலையில் லட்சுமி மேனனின் பரதநாட்டியம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக அதனைப் பார்த்து வியந்த மலையாள இயக்குநர் வினயன், அவரை தனது ‘ரகுவின்டே ஸ்வந்தம் ரசியா’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார். இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் பிரபாகரன் ‘சுந்தரபாண்டியன்’ படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக லட்சுமி மேனனை தமிழில் அறிமுகப்படுத்தினார். இப்படி தன்னுடைய 16 வயதில், 2012 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார் லட்சுமி மேனன். ஆனால் இத்திரைப்படம் வெளியாவதற்கு முன்னரே பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்த கும்கி வெளியானது. அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு அப்படியே மலைவாழ் பெண்போலவே தோன்றி தமிழ் ரசிகர்களின் நெஞ்சத்தில் இடம் பிடித்தார். இத்திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற, தொடர்ந்து வந்த சுந்தரபாண்டியனும் வெற்றிப் பெற்றது. இதனைத்தொடர்ந்து தமிழில் பல படவாய்ப்புகள் குவியத் தொடங்கின லட்சுமி மேனனுக்கு. தொடர்ந்து பாண்டிய நாடு, குட்டிப்புலி, மஞ்சப்பை, நான் சிகப்பு மனிதன், கொம்பன், வேதாளம், ஜிகர்தண்டா போன்ற பல திரைப்படங்களில் நடித்தன் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்றார்.


கும்கி படத்தில்... மற்றும் விருது விழாவில்...

இதன்பிறகு சிறிது நாட்கள் படவாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தார். இதையடுத்து ராகவா லாரன்ஸ் நடித்த சந்திரமுகி 2 திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரமான சந்திரமுகியாக மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார். ஆனால் சந்திரமுகி இரண்டும் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. வெற்றி இல்லையென்றாலும் அடுத்தடுத்து சில பட வாய்ப்புகள் வந்துகொண்டுதான் இருந்தன. மேலும் அறிமுக இயக்குநர் முருகேஷ் பூபதி இயக்கத்தில் நடிகர் யோகி பாபுவுக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. அப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகளின் ஃபோட்டோக்கள் சிலவும் இணையத்தில் வைரலாகின. 

விருதுகள்!

அறிமுக காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவில் லட்சுமி மேனன் நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றிப் படங்களே. தமிழ் சினிமாவில் இவர் நடிப்பில் வெளியான முதல் இரண்டு படங்களான கும்கி மற்றும் சுந்தரபாண்டியன் படங்களுக்கு மட்டும் நார்வே தமிழ் திரைப்பட விருதுகள் விழாவில் சிறந்த அறிமுக நடிகை, இரண்டு தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருதுகள், தமிழ்நாடு அரசின் மாநில விருது, ஆனந்த விகடன், சைமா என பல்வேறு விருதுகளை பெற்றார். அதனைத்தொடர்ந்து தென்னிந்திய சினிமாவின் வளர்ந்து வரும் நட்சத்திரம் விருதையும் பெற்றார். பிற விருதுகளுக்கும் லட்சுமி மேனன் பரிந்துரையும் செய்யப்பட்டார். 


நடிகர் விஷாலும், லட்சுமி மேனனும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது

காதல் கிசுகிசு...

நடிகை லட்சுமி மேனன் நடிகர்கள் சசிகுமார், விக்ரம் பிரபு, விஷால் ஆகியோருடன் தொடர்ந்து படங்களில் நடித்தார். இந்த காலக்கட்டத்தில் நடிகர் விஷாலுடன் காதல் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எதையும் வாய்திறக்காமல் மௌனமாகவே இருந்துவந்தார் லட்சுமி மேனன். இதனிடையே தனது காதல் வாழ்க்கை குறித்து நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த அவர், அது பள்ளிக்கால காதல் எனவும், டேட்டிங் எல்லாம் சென்றது இல்லை எனவும், ஃபோனில் அதிகமாக பேசுவோம், ஆனால் தொடர்ந்து வந்த பட வாய்ப்புகளால் படிப்பு மற்றும் காதல் இரண்டையும் கைவிட்டதாகவும், தற்போது அவருக்கு திருமணம் ஆகிவிட்டது எனவும் கூறியிருந்தார். 


பாரின் முன் காரில் இருந்த ஐடி ஊழியரை பார்த்து கத்தும் லட்சுமி மேனன்

சர்ச்சையில் சிக்கிய லட்சுமிமேனன்

பாவாடை தாவணியில் தோன்றி, தமிழ் ரசிகர்கள் மனதை கொள்ளையடித்த லட்சுமி மேனன், படவாய்ப்புகள் இல்லையென்றாலும் அவ்வப்போது தனது ஃபோட்டோக்களை இணையத்தில் பதிவிட்டு, ஆக்டிவாக இருந்துவந்தார். இந்நிலையில் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் லட்சுமிமேனன். அண்மையில், கொச்சி பானர்ஜி சாலையில் உள்ள மதுபான பார் ஒன்றுக்கு தனது தோழி, ஆண் நண்பர்கள் உள்பட 3 பேருடன் சென்றிரு்நத லட்சுமி மேனன், அங்கு மது அருந்த வந்திருந்த ஆலுவா பகுதியை சேர்ந்த ஐ.டி. ஊழியர் அலியார் ஷா சலீம் என்பவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அவருக்கும், லட்சுமி மேனன் தரப்பிற்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அந்த மதுபான பாரில் பரபரப்பு ஏற்பட்டது. பின்பு அவர்கள் அனைவரும் பாரில் இருந்து புறப்பட்டனர். பாரை விட்டு வெளியே வந்தபிறகும் இருதரப்பினரிடையே வாக்குவாதம் நடைபெற்றுள்ளது.

அப்போது லட்சுமி மேனனும், அவரது நண்பர்களும் இணைந்து அந்த ஐடி ஊழியரின் காரை வழிமறித்து அவரை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ காட்சிகளும் இணையத்தில் வெளியாகி வைரலாகின. இதனிடையே லட்சுமி மேனன் தரப்பினர் தன்னை காரில் கடத்தி தாக்கிவிட்டு இறக்கிவிட்டதாக அந்த ஐடி ஊழியர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அவரது புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், பாரின் அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையிலும், ஃபோனில் எடுக்கப்பட்ட வீடியோ ஆதாரங்களின் அடிப்படையிலும் லட்சுமி மேனனின் நண்பர்களான அனீஷ், மிதுன், தோழி சோனாமோல் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களின் மீது ஆள் கடத்தல், தாக்குதல், மிரட்டுதல் போன்ற பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் வீடியோ ஆதாரத்தை கொண்டு லட்சுமி மேனனிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர். தொடர்ந்து அவரை தொடர்பு கொள்ள முயற்சித்த போலீசார் அவரது ஃபோன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருப்பதாகவும், அவர் தலைமறைவாக இருப்பதாகவும் தெரிவித்தனர். தொடர்ந்து அவர் எங்கே இருக்கிறார்? என தேடினர்.


குற்றப் பின்னணியை கொண்ட லட்சுமி மேனனின் நண்பர்கள்

இந்தநிலையில் இந்த வழக்கு தொடர்பாக நடிகை லட்சுமி மேனன் தரப்பில் கேரள உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தங்கள் மீது குற்றம் சாட்டிய நபர், தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், பாரைவிட்டு வெளியே வந்தபிறகும் பின்தொடர்ந்து வந்து பீர் பாட்டிலால் தாக்கியதாகவும், அவர் தாக்கப்பட்டதாக தற்போது பொய் சொல்வதாகவும், அந்த சம்பவத்திற்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் லட்சுமி மேனன் தெரிவித்தார். லட்சுமி மேனனின் மனுவை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம் அவரை வருகிற செப்டம்பர் மாதம் 17ம் தேதி  வரை கைது செய்ய தடை விதித்தது. மேலும் ஓணம் பண்டிகை விடுமுறை முடிந்தவுடன் இந்த மனு விசாரணைக்கு பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவித்தது.

இதனிடையே கைதான நடிகை லட்சுமி மேனனின் நண்பர்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்த வழக்கில் கைதாகியுள்ள மூன்று பேரும் குற்ற பின்னணி கொண்டவர்கள் எனக் கூறப்படுகிறது. இதில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள மிதுன் என்பவர் மீது தங்க கடத்தல் உட்பட பல வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 2023 நவம்பரில், போலீஸ் அதிகாரி போல் வேடமிட்டு, தங்க வியாபாரி ஒருவரை கடத்தி 244 கிராம் தங்கத்தை திருடிய வழக்கில் கைதாகியுள்ளார். கடத்தல் வழக்கில் ஜாமினில் வெளிவந்துள்ள நிலையில் தற்போது இந்த அடிதடி வழக்கில் சிக்கியுள்ளார். மேலும் அனீஷ் என்பவர் மீது ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. தொடர்ந்து நடிகை லட்சுமி மேனனுக்கும், குற்றப் பின்னணி கொண்ட இந்த நபர்களுக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்