நான் ஜெய்சங்கர் வீட்டுப்பிள்ளை எனக் கூறினால் அனைவரும் ஆச்சரியமாக பார்ப்பார்கள் - நடிகர் ராஜ்கமல்
ஜெய்சங்கர் மறைந்து 25 வருடங்கள் ஆனாலும் இப்போதும் நான் ஜெய்சங்கர் வீட்டுப் பிள்ளை எனக்கூறினால் அனைவரது புருவமும் மேலே போகும் என்று சின்னத்திரை நடிகர் ராஜ்கமல் தெரிவித்துள்ளார்.;
சின்னத்திரையில் பல பிரபலமான சீரியல்களில் நடித்து புகழ்பெற்றவர்தான் நடிகர் ராஜ்கமல். தற்போது சந்தியாராகம் என்ற தொடரில் நடித்து வருகிறார். தொலைக்காட்சி தொடர்களை தாண்டி, கதாநாயகனாகவும் சில படங்களில் நடித்துள்ளளார். தொலைக்காட்சி தொடரோ, படமோ எதுவாக இருந்தாலும் தனக்கு வழங்கும் கதாபாத்திரங்களை யதார்த்தமாகவும், எளிமையாகவும் மக்களிடம் கொண்டு சேர்க்கக்கூடியவர். படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தாலும், அவரது மனதில் இருக்கும் ஒரே ஆசை தமிழ் திரையுலகில் ஒரு சிறந்த குணச்சித்திர நடிகராக வரவேண்டும் என்பதே. அதற்காக தனக்கு கொடுக்கும் ஒவ்வொரு கதாபாத்திரங்கள் மூலமும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, கடுமையாக முயற்சித்து வருகிறார். எந்த கதாபாத்திரம் என்பது முக்கியமில்லை, எனக்கு சினிமாவில் இருக்க வேண்டும், நான் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் எனக் கூறுகிறார் நடிகர் ராஜ்கமல். இந்நிலையில் தனது திரைவாழ்க்கை தொடர்பாக ராணி ஆன்லைனுடனான நேர்காணலில் அவர் பகிர்ந்து கொண்ட சில சுவாரஸ்ய தகவல்களை இங்கு காணலாம்.
சிறுவயதில் நடிகர் ஜெய்சங்கர் உடனும், தற்போது அவரது மகனுடனும் இருக்கும் நடிகர் ராஜ்கமல்
நடிகர் ஜெய்சங்கருடன் பழகிய அனுபவம் எப்படி இருந்தது?
நடிகர் ஜெய்சங்கருடன் நான் அதிகம் பழகியதில்லை. என் அப்பாதான் அவருடன் அதிகம் பழகியுள்ளார்கள். அகில இந்திய மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் ரசிகர் மன்றத்தின் தலைவர்தான் என் அப்பா. இதன்மூலம் அவர் வீட்டிற்கு 1969-ல் சென்றார் என் அப்பா. அதன்பின் அவரின் எல்லா வேலைகளையும் என் அப்பாதான் செய்வார். அப்போது திருச்சி கணேஷ் என என் அப்பாவை கூப்பிடுவார்கள். அப்பாக்கூடவே நானும் இருந்ததால், ஜெய்சங்கரின் தம்பி பையன் என எல்லோரும் கூப்பிட ஆரம்பித்துவிட்டார்கள். நாங்கள் நேரடி சொந்தம் எல்லாம் கிடையாது. ஆனால் அதைவிட எங்கள் உறவு மிகப்பெரியது. அவர் மறைந்து 25 வருடங்கள் ஆனாலும் இப்போதும் நான் ஜெய்சங்கர் வீட்டுப் பிள்ளை எனக்கூறினால் அனைவரது புருவமும் மேலே போகும். ஜெய்சங்கர் சார் எவ்வளவு பெயர் சம்பாதித்து வைத்திருந்தார் என்பதை இதன்மூலம் அறியலாம். இன்று அதனை நான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். அவரது சொந்த பிள்ளைகளான அண்ணன்கள் விஜய், சஞ்சய் மற்றும் அக்கா சங்கீதாவைவிட அதனை அதிகம் அனுபவிப்பது நான்தான். ஏனெனில் அவர்கள் தற்போது வெவ்வேறு துறைகளுக்கு சென்றுவிட்டனர். அதனால் சினிமாவில் அன்றாடம் மக்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்குதான் கிடைத்துள்ளது. ஜெய்சங்கர் என சொன்னால் ஒவ்வொருவரின் மனதிலும் ஒரு கதை இருக்கும். அது எல்லாவற்றையும் என்னிடம்தான் கூறுவார்கள். இதில் என்னுடைய வேலை என்னவென்றால், அவர்கள் சொல்வதை கேட்டுக்கொண்டு, நடிகர் ஜெய்சங்கர் அளவுக்கு பெயர் எடுக்காவிட்டாலும், அவரது பெயரை கெடுக்காமல் இருப்பதுதான்.
ஜெய்சங்கரின் ரசிகர் மன்ற தலைவரான தனது தந்தையுடன் ராஜ்கமல்
நடிகராக வேண்டும் என்ற எண்ணம் வந்தது எப்படி?
ஜெய்சங்கர் சாரை நிறைய பார்த்து வளர்ந்துள்ளேன். எப்போதெல்லாம் விடுமுறையோ அப்போதெல்லாம் அப்பா ஜெய்சங்கர் சார் சூட்டிங்கிற்கு அழைத்துச் சென்றுவிடுவார். ஃப்ரேமில் அவரைப் பார்க்கும்போது துருதுருவென இருப்பார். சார், ஐயா என இருந்த சினிமாவை ஹாய் என மாற்றியவர் ஜெய்சங்கர்தான். எதார்த்தமாக அனைவரிடமும் பழகினால், எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என கற்றுக்கொண்டதும் அவரிடம்தான். ஒரு இடத்தில் அவர் இருந்தால் அவர்தான் எல்லாமே. கல்யாண வீடு என்றால் மாப்பிள்ளை, சாவு வீடாக இருந்தால் நான்தான் பிணமாக இருக்க வேண்டும் என்பதை ஜெய்சங்கர் சாரிடம் இருந்துதான் கற்றுக்கொண்டேன். அப்படி ஒரு துருதுரு கேரக்டர் அவர். அவரை பார்த்து பார்த்து வளர்ந்ததால், எது செய்தாலும், அவரைப்போலவே செய்கிறேன் என அப்பா கூறுவார்.
கே. பாலச்சந்தரின் சஹானா தொடர் மூலம் அறிமுகமாகிய ராஜ்கமல்
சஹானா தொடரில் இடம்பெற்றது எப்படி?
சஹானா தொடரில் இடம்பெற முக்கிய காரணம் கே. பாலச்சந்தரின் மேனேஜர் மோகன் அண்ணாதான். சஹானா தொடருக்கு பப்ளியாக ஒரு திருடன் தேவை என கூறப்பட்ட நிலையில், அவர்தான் என்னை பாலச்சந்தர் சாரிடம் அழைத்துக்கொண்டு சென்று பேசினார். யார் இந்த பையன்? என பாலச்சந்தர் சார் கேட்டார். கேரக்டர் பண்ண வேண்டும் என சொல்றாப்ல என மோகன் அண்ணா கூறினார். அதற்கு நன்றாக பண்ணுவியா என பாலச்சந்தர் சார் கேட்டார். உடனே டெஸ்ட் ஷூட் ஒன்று எடுப்போம். நன்றாக வந்தால் ஷூட் போய்டுவோம் எனக் கூறினார். ஆனால் சில காரணங்களால் அது தள்ளி தள்ளி போனது. அப்போது திடீரென மோகன் அண்ணா ஃபோன் பண்ணி, ஒரு சீன்தான் ஷூட்டிங் நேரடியாக எடுத்துவிடலாம் எனக் கூறிவிட்டார். எனக்கு நைட் ஃபுல்லா ஒரே பயம். ஏனென்றால் கே. பாலச்சந்தர் என்றால் மிகப்பெரிய உலகம். அதில் புதுமுகமாக நான் செல்கிறேன். ஏனெனில் நான் முதலில் எஸ்.பி. முத்துராமன் சாரிடம் போய் வாய்ப்பு கேட்டபோது, தம்பி ஏவிஎம், வளர்ந்த நடிகர்களை வைத்து படம் எடுக்கும். நீங்கள் வளர வேண்டுமானால் கே. பாலச்சந்தரிடம் போங்கள் எனக் கூறினார். அங்கு நடிச்சுட்டு இங்கே வந்தால் உங்களுக்கு ஏவிஎம் கதவுகள் திறக்கும் எனத் தெரிவித்தார்.
மறுநாள் மயிலாப்பூரில் இருந்த வங்கி ஒன்றில் ஷூட்டிங். அப்போ நான் அங்கு பாலச்சந்தர் சாருக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன். அண்ணாமலை படத்தில் ரஜினி சார் காரிலிருந்து இறங்கிய மாதிரி இறங்கினார். அங்கு வந்து யார் அது எனக் கேட்டார். நான் சென்றவுடன் என்னைப் பார்த்து என்ன வெறும் நெற்றியாக இருக்கிறது எனக்கூறி, திருநீரை எடுத்து என் நெற்றியில் இட்டார். அப்போது எனக்கு பாலச்சந்தர் சாரும், கபாலீஸ்வரரும் சேர்ந்து ஆசிர்வதித்த ஃபீல் வந்தது. நாலு பக்கம் டயலாக்.. ஷூட்டிங் முடிந்தது. பாலச்சந்தர் சார் வந்து நல்லா பண்றியே என தோளை தட்டிக்கொடுத்தார். அப்போதிலிருந்து இப்போதுவரை 20 பக்க டயலாக் கொடுத்தாலும், கிணற்றில் குதிக்க சொன்னாலும், நான் நடிப்பேன். ஏனென்றால் நான் பாலச்சந்தர் சாரிடம் நடித்துவிட்டேன். அடுத்த நாள் காலையில் மோகன் அண்ணா வந்து மற்ற நாட்களில் என்ன செய்கிறீர்கள் என கேட்டார். சும்மாதான் இருக்கிறேன் எனக்கூறியதும், நீங்க நல்லா பண்றீங்கன்னு சொல்லி உங்கள ரெக்க கட்டிய மனசு என்ற தொடரில் பாலச்சந்தர் சார் போட சொன்னார் எனக் கூறினார். அதற்குபின் எனக்கு கிடைத்த பாக்கியம் என்னவென்றால், 15 ப்ராஜக்டுகளில் அவருடன் சேர்ந்து பயணித்தேன். ரஜினி, கமல் சார் கூட அவரிடம் நடித்தாலும் 40 நாட்கள் கால்ஷீட்டில் போய்விடுவார்கள். நான் நான்கு வருடங்கள் அவருடன் பயணித்தேன். அவர் எழுதிவிட்டால், அது திருக்குறளாக இருந்தாலும் மாற்றக்கூடாது. அவரின் எழுத்து எங்களுக்கு திருக்குறள் மாதிரிதான். அங்கிருந்துதான் நான் வந்தேன்.
சரோஜா படத்தில் நடிகர் கமலேஷ் மூலம் வாய்ப்பு கிடைத்தது - ராஜ்கமல்
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்றது எப்படி?
எனக்கு சினிமாவில் இருக்க வேண்டும். அது பச்சக்குதிரையா, சண்டிக்குதிரையா என்பது முக்கியமில்லை. என்றுமே ராஜ்கமல் ஒரு ஓடும் குதிரை. எதுமேல் ஓடவேண்டும் என்பது பிரச்சனை இல்லை. ஓடிக்கொண்டே இருப்பேன். என்னுடைய பெயருக்கு களங்கம் விளைவிக்காத எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் நடிப்பேன். பணம் முக்கியமில்லை. இதுதான் எனது மனநிலை. நான் ஒரு களிமண். இதை ஒவ்வொரு இயக்குநரும் ஒவ்வொரு வடிவத்திற்கு கொண்டு செல்கின்றனர். அபியும் நானும் தொடரை இன்னும் மக்கள் பார்க்கின்றனர். அந்தத் தொடர் எனக்கு மிகவும் எளிதாக இருந்தது. காரணம் நான் வீட்டில் என் மகள்களுடன் என்ன செய்கிறேனோ அதைத்தான் அங்கு சென்று செய்தேன். வீட்டில் செய்வதை அங்கு செய்வேன், அங்கு செய்வதை வீட்டில் செய்வேன். சின்னத்திரை நடிகர் கமலேஷும், வெங்கட் பிரபுவும் நண்பர்கள். அப்போது வெங்கட் பிரபுதான் கமலேஷிடம் சின்னத்திரை நடிகர்கள் தேவை எனக் கூறியுள்ளார். அப்போது டிடியும், நானும் சேர்ந்து நடித்துக் கொண்டிருந்தோம். அப்படித்தான் சரோஜா படத்தில் நடித்தது.
தற்போது சந்தியாராகம் தொடரில் நடித்துவரும் ராஜ்கமல்...
நீங்கள் நடித்ததில் உங்கள் மனதை தொட்ட தொடர்?
இப்போது நான் நடித்துக் கொண்டிருக்கும் சந்தியாராகம். என்னவென்றால் எல்லாவற்றையும் கடந்து சென்றுவிடுவோம். இப்போது எனது மூளைக்குள் இருப்பது சந்தியாராகம் ‘சிவராமன்தான்’. இதுக்கு முன்னால் அபியும் நானும் சரவணன். ஏனெனில் இன்று பட்டித் தொட்டி எங்கும் என்னை சிவராமன் என என்னை பாராட்டி கொண்டிருக்கின்றனர். அதனால் அதுதான் இப்போது எனது மனதுக்கு நெருக்கமாக இருக்கிறது. ஏனெனில் என்னுள் கலாச்சார பழக்கம் அதிகமாக இருக்கிறது. வேட்டி கட்டுவது, குங்குமம் வைத்துக் கொள்வது போன்றவைதான் எனக்கு பிடிக்கும். ஆனால் இப்போது அதை எல்லாம் கலாய்க்கின்றனர். இந்த தொடரில் அந்த வாய்ப்பு கிடைத்ததால் சந்தியாராகம் ரொம்ப பிடித்துள்ளது. மேலும் தொடரும் நன்றாக சென்றுக் கொண்டிருக்கிறது.