அப்பா விஜய்யை மிஞ்சிய மகன் சஞ்சய்... முதல் படத்திலேயே 2 அவதாரங்கள்!

Update:2025-05-20 00:00 IST
Click the Play button to listen to article

தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களுக்கு பஞ்சம் ஏற்பட்டிருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் எஸ்.ஜே. சூர்யா ஒரு மேடையில் பேசியிருந்தார். மற்ற திரையுலகங்களில் வாரிசு நடிகர்களாவது அடுத்தடுத்து அறிமுகமாகி வருகிறார்கள். ஆனால் தமிழ் திரையுலகை எடுத்துக்கொண்டால் பெரிய பெரிய நடிகர்கள் மற்றும் இயக்குநர்களின் வாரிசுகளில் அடுத்து யாரெல்லாம் நடிக்க வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டதோ அவர்களில் முக்கியமான சிலர் கேமரா பின்பு இருப்பதையே விரும்புவதாக கூறிவிட்டனர். அதில் முக்கியமாக மிகவும் எதிர்பார்க்கப்பட்டவர் நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய். பார்ப்பதற்கு அப்படியே தனது அப்பாவை போன்றே தோற்றம், சிரிப்பு மற்றும் உடல்மொழி என இருக்கும் இவர் அடுத்து கண்டிப்பாக ஹீரோவாவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரோ தனது அப்பா பாணியில் செல்லாமல் தாத்தா எஸ்.ஏ.சந்திரசேகரைப் போன்று இயக்குநர்தான் ஆவேன் என்று சொல்லிவிட்டார். சொன்னதைப் போன்றே இப்போது இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கும் ஜேசன், தனது பெயரிலேயே தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் தொடங்கி, தனது முதல் படத்தை, லைகா நிறுவனத்துடன் சேர்ந்து தானே தயாரிக்கவும் செய்கிறார். 69 படங்களில் நடித்திருக்கும் விஜய், கைவைக்க துணியாத இரண்டு துறைகளையும் மகன் முதல் படத்திலேயே கையில் எடுத்திருப்பது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

ஜேசன் சஞ்சய் எடுத்த இயக்குநர் அவதாரம்!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம்வருபவர் விஜய். முழுநேர அரசியலில் தன்னை ஈடுபடுத்த முடிவெடுத்திருக்கும் இவர், ‘ஜனநாயகன்’ தனது கடைசிப்படமாக இருக்கும் என்று அறிவித்திருக்கிறார். விஜய்யின் இடத்தை அவரது மகன் ஜேசன் சஞ்சய் நிரப்புவார் என்று நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்த அவருடைய ரசிகர்களுக்கு ஒருசில ஆண்டுகளுக்கு முன்பே ஷாக் கொடுத்தார் ஜேசன். நடிப்பின்மீது ஆர்வமில்லை எனவும், படங்களை இயக்குவதுதான் தனக்கு பிடித்திருக்கிறது எனவும் கூறிவிட்டார். சென்னையில் பள்ளிப்படிப்பை முடித்த ஜேசன், வெளிநாட்டிற்கு சென்று ஃபிலிம் மேக்கிங் படிப்பை முடித்தார். படித்து முடித்த கையோடு இந்தியா திரும்பிய அவர், ஒருசில குறும்படங்களை இயக்கினார். ஆனால் அவை மக்கள் மத்தியில் அவ்வளவாக சென்று சேரவில்லை. 


விஜய் மகன் சஞ்சய்யின் முதல் படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம்

இருந்தாலும் ஜேசன் ஒரு வித்தியாசமான கதையை எழுதி வருவதாகவும், அதை படமாக எடுக்க சில தயாரிப்பு நிறுவனங்களை அணுகிவருவதாகவும் ஒருசில ஆண்டுகளுக்கு முன்பு திரை வட்டாரங்களில் பேசப்பட்டது. அதுவரை விஜய்யை போன்றே ஜேசனும் ஹீரோவாக அறிமுகமாவார் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்கள், அதன்பிறகு, இவர் என்ன மாதிரியான கதையை இயக்கப்போகிறார்? யாரை வைத்து இயக்கப்போகிறார்? என்று பேசத்தொடங்கினர். அந்த எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும்விதமாக லைகா நிறுவனம் ஜேசனின் கதையை தயாரிக்க ஒப்புக்கொண்டதாக செய்திகள் வலம்வந்தன. அதனைத் தொடர்ந்து ஒருசில நாட்களில், சுபாஸ்கரனுடன் ஜேசன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இந்த தகவலை லைகாவே உறுதிசெய்தது.

முதல் படமே 10 மொழிகளிலா?

லைகா நிறுவனம் தயாரிக்கிறது என்ற தகவலைத் தவிர, ஜேசனின் படம் குறித்த மற்ற எந்த விவரங்களும் நீண்ட நாட்களுக்கு வெளியாகவில்லை. முதலில் யுனிவர்சல் ஸ்டோரியை ஜேசன் தேர்ந்தெடுத்திருப்பதாகவும், முதல் படமே 10 மொழிகளில் வெளியாகவிருப்பதாகவும், 2023ஆம் ஆண்டு இறுதியில் தகவல்கள் வெளியாகின. அதுவரை விஜய் கூட 10 மொழிப்படங்களில் நடிக்காததால் இந்த படம் குறித்த எதிர்பார்ப்பானது நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே போனது. குறிப்பாக, ஜேசன் இயக்கும் படத்தில் யார் ஹீரோவாக நடிக்கப்போகிறார்? என்ற கேள்விதான் எல்லாருக்குமே இருந்தது. ஏனென்றால் ஜேசன் வெளிநாட்டில் படித்துக்கொண்டிருந்தபோதே இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் தனது பேரனை பற்றி ஒரு பேட்டியில் பேசியிருந்தார். அதில், ஜேசனிடம் விஜய்யை வைத்து படம் இயக்குவது பற்றி தான் கேட்டதாகவும், ஆனால் தனக்கு விஜய் சேதுபதிதான் பிடிக்கும் என்று வெளிப்படையாகவே அவர் பதில் சொன்னதாகவும் கூறியிருந்தார்.


சஞ்சய்யின் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கும் சந்தீப் கிஷன்

இப்படி முன்பே தனது அப்பாவை வைத்து இயக்கமாட்டேன் என்று அவர் கூறிவிட்டதால் கண்டிப்பாக ஏதாவது ஒரு இளம் ஹீரோவை தேர்ந்தெடுப்பார் என்று சொல்லப்பட்டது. அதேபோல் தனுஷின் ‘ராயன்’ படத்தின்மூலம் தமிழ் ரசிகர்களிடையே நன்மதிப்பை பெற்றிருந்த சந்தீப் கிஷனை ஹீரோவாக தேர்ந்தெடுத்தார். இருந்தாலும் படத்தில் வேறு யார்யாரெல்லாம் இடம்பெறுகிறார்கள், இது என்ன மாதிரியான கதை என்பது போன்ற கேள்விகள் தொடர்ந்து இருந்துவந்தன. படம் குறித்த அறிவிப்பு வெளியான பல மாதங்களுக்கு பின்புதான் ஹீரோ குறித்த அப்டேட் வெளிவந்தது. அதேபோல், கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் ஹீரோயின் யார் என்பது குறித்து தகவல் வெளியானது. 2021ஆம் ஆண்டு வெளியான ‘ஜதி ரத்னாலு’ என்ற படத்தில் நடித்த ஃபரியா அப்துல்லாவை தனது படத்திற்கு கமிட் செய்திருக்கிறார் ஜேசன். இந்த படம் தெலுங்கில் ப்ளாக்பஸ்டர் ஹிட்டடித்தது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்த ‘வள்ளி மயில்’ என்ற படத்தில் இவர் நடித்திருக்கிறார்.

முதல் படத்திலேயே இயக்குநர் & தயாரிப்பாளர்!

சென்னையிலுள்ள பிரபல ஸ்டூடியோ ஒன்றில் கடந்த 2 மாதங்களாக ஜேசனின் படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில், சந்தீப் கிஷனின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது. அந்த வீடியோவில் பெரும்பாலான ஃப்ரேம்களில் சஞ்சய் இடம்பெற்றிருக்கிறார். உடல்மொழி, பாவனை அனைத்தும் விஜய் போலவே இருப்பதால் இவர் ஏன் ஹீரோவாக நடிக்கவில்லை என்று வருத்தம் தெரிவித்துவருகின்றனர். மேலும் அந்த வீடியோவில் லைகா நிறுவனத்தின் பெயரைத் தொடர்ந்து JSJ என்ற தயாரிப்பு நிறுவனமும் இணைந்து தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அது ஜேசன் சஞ்சை ஜோசப் என்பதன் சுருக்கம் என்று கூறுகின்றனர். இவர் ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில்தான் லைகாவிற்கு படம் பண்ணுவதால் இயக்குநர் மட்டுமன்றி முதல் படத்திலேயே தயாரிப்பாளராகவும் உருவெடுத்திருக்கிறார் என்கின்றனர். ஏற்கனவே விஜய்யின் அட்மின் ஜெகதீஷ் பழனிசாமி தி ரூட் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி படங்களை தயாரித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து சஞ்சையும் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார்.


கேமராவிற்கு பின்னால் இருக்க ஆசைப்படும் பிரபலங்களின் வாரிசுகள்

இவ்வளவு ஆண்டுகள் ஹீரோவாக இருந்த விஜய் கடைசிவரை இயக்கம், தயாரிப்பு என இரண்டையுமே கையில் எடுக்கவில்லை. ஆனால் மகனோ முதல் படத்திலேயே இரண்டையும் செய்கிறார் என பாராட்டப்பட்டு வருகிறார் சஞ்சய். ஏற்கனவே கடுமையான நிதி நெருக்கடியில் இருக்கும் லைகா நிறுவனம் சமீபத்தில் ஒரு பாலிவுட் தயாரிப்பு நிறுவனத்துடன் கைகோர்த்திருப்பதாக சொல்லப்பட்டது. சஞ்சயின் படத்தை ரூ. 25 கோடியில் தயாரிக்க திட்டமிட்டிருந்த நிலையில், இதுபோன்ற பண பிரச்சினைகளால்கூட சஞ்சய் தயாரிப்பில் இறங்கியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. எப்படியாயினும் தமிழ் சினிமாவில் விஜய்யின் மகன் சஞ்சய் இயக்குநர் அவதாரம் எடுத்துவிட்ட நிலையில், தனுஷின் மகனான யாத்ரா நடிக்கவருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரும் தனது தாத்தா, அப்பா பாணி வேண்டாம் என்று சொல்லி, தனக்கு ஒளிப்பதிவில்தான் ஆர்வம் இருக்கிறது என்று கூறிவிட்டாராம். அதற்கான மேற்படிப்பையும் படித்துவருகிறாராம். அதேபோல் நன்றாக நடனம் ஆடக்கூடிய இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித்தும் முதலில் நடிப்பு வேண்டாம் என்று கூறி, ‘பராசக்தி’ படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்து வருகிறார். இருந்தாலும் அடுத்து இவர் ஹீரோவாக அறிமுகமாகவிருக்கிறார். இயக்கம் மற்றும் தயாரிப்பு இரண்டும் வெற்றியடையும் பட்சத்தில் வரும்காலங்களில் சஞ்சய்யும் ஹீரோவாக நடிக்க வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்