எம்.ஜி.ஆரோடு ஜெயலலிதா தகராறு? எம்.ஜி.ஆரோடு நடிக்க மறுப்பு?
நடிகை என்றால், எத்தனை வதந்திகள்! தன்னைப் பற்றிய வதந்"தீ" களை அணைக்க ஜெயலலிதா முயற்சிக்கிறார்!;
(19-08-1973 தேதியிட்ட ராணி இதழில் வெளியானது)
நடிகை என்றால், எத்தனை வதந்திகள்! தன்னைப் பற்றிய வதந்"தீ"களை அணைக்க ஜெயலலிதா முயற்சிக்கிறார்!
நடிப்பு! இது என் தொழில். நான் வகுத்துக் கொண்ட வாழ்க்கைப் பாதை!
இந்த பாதையில் நான் முழு வெற்றி பெற்றுவிட்டேன் என்று கூறவில்லை. ஆனாலும், சாதனை புரிந்து இருக்கிறேன். அதுதான், நான் நடிக்கத் தொடங்கிய எட்டு ஆண்டுக்குள் 100-வது படத்தை நெருங்கிக் கொண்டிருப்பது!
சரி, குறுகிய காலத்தில் 100 படத்தில் நடித்து, பெயரும் புகழும் சம்பாதித்து விட்டோம். இனிமேல் ஆண்டுக்கு மூன்று அல்லது நான்கு படங்களில் மட்டும் நடித்துக் கொண்டு நிம்மதியாக வாழ்க்கை நடத்தலாம் என்றால், அதுவும் முடியவில்லை. படங்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் கொண்டால், "ஜெயலலிதாவுக்கு மார்க்கெட்டு குறைந்துவிட்டது! ஜெயலலிதாவை ஒப்பந்தம் செய்ய படத் தயாரிப்பாளர்கள் தயங்குகிறார்கள்! என்ற வதந்தியை சிலர் கிளப்பி விட்டுவிடுகிறார்கள்". இது போன்ற வதந்திகளை போக்கவே அதிக படங்களை ஏற்று நடிக்க தோன்றுகிறது. இப்பொழுது, நான் 20 படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறேன். அதோடு எல்லாப் படங்களிலும் என் சொந்தக் குரலில் ஒரு பாட்டும் பாடுகிறேன்.
நடிகையாக 2 இறுமாறுபட்ட அழகான தோற்றங்களில் ஜெயலலிதா
எம். ஜி.ஆரோடு தகராறா?
நடிகை என்றால், தயாரிப்பாளர் யாரோடு நடிக்கச் சொல்லுகிறாரோ, அவரோடுதான் நடிக்க வேண்டும். அப்படித்தான் நானும் நடித்து வருகிறேன். ஆயினும் சில ரசிகர்கள், "எம்.ஜி.ஆரோடு ஏன் இப்பொழுது நடிக்கவில்லை? ஏன் அவரோடு வெளிநாட்டுக்கு போகவில்லை? உங்களுக்குள் தகராறா?" என்று கேட்கிறார்கள். இதை எல்லாம் கேட்கும்போது, எனக்கு சிரிப்புதான் வருகிறது! முன்பு தயாரிப்பாளர்கள் எம்.ஜி.ஆரோடு நடிக்கச் சொன்னார்கள், நடித்தேன். இப்பொழுது சொல்லவில்லை. நான் நடிக்கவில்லை. இதில் தகராறுக்கு என்ன இருக்கிறது? நான் எம்.ஜி.ஆரின் ஒப்பந்த நடிகை இல்லையே அவரோடு வெளிநாடு செல்வதற்கு!
தலைக்கனமா?
நான் இதுவரை படத் தயாரிப்பாளர்களிடமும், மற்றவர்களிடமும் படித்தவள், பண்புள்ளவள், பழகத் தெரிந்தவள் என்றுதான் பெயர் எடுத்து இருக்கிறேன். ஆனாலும் சிலர் என் பெயரைக் கெடுக்க வேண்டும் என்று இல்லாத பழியை என் மீது சுமத்தி வருகிறார்கள். "ஜெயலலிதா, கதாநாயகனுக்கு முன்பாக தன் பெயரைப் போட வேண்டும் என்று படத் தயாரிப்பாளரிடம் வற்புறுத்துகிறார்" என்று ஒரு செய்தியை இப்பொழுது பரப்பியிருகிறார்கள்.
இது முற்றிலும் தவறு. எந்த படத் தயாரிப்பாளர்களிடமும் "கதாநாயகனுக்கு முன்பாக என் பெயரைப் போடுங்கள்" என்று நான் வற்புறுத்தவில்லை. அப்படி போடுவதும், போடாததும் தயாரிப்பாளர்களை பொறுத்தது. "சூரியகாந்தி" படத்தில் என் பாத்திரத்தின் சிறப்பை உணர்ந்து, அதன் தயாரிப்பாளரே எனக்கு அதில் முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறார். இதில் என் வற்புறுத்தல் எள்ளளவும் இல்லை.
புதுமுகத்தின் புகார்
எம்ஜிஆர் மற்றும் முத்துராமன் ஜோடியாக ஜெயலலிதா
நடிகர்-நடிகைகளிடம் ஒற்றுமை வேண்டும். போட்டி-பொறாமை கூடாது என்று வற்புறுத்துபவள், நான்! ஆனால் ஒரு புது நடிகை, "ஜெயலலிதா என்னைப் பார்த்ததும் முகத்தை திருப்பிக் கொண்டார். பேச மறுத்துவிட்டார்!" என்று புகார் கூறியதாக சமீபத்தில் பத்திரிகைகளில் பார்த்தேன்.
எனக்கு ஒருபக்கம் வேதனையும், மற்றொரு பக்கம் சிரிப்புமாக வந்தது. அந்த நடிகையை இதுவரை நான் நேரில் பார்த்ததே இல்லை. உண்மை இப்படி இருக்க, நான் அவரைப் பார்த்து எப்பொழுது முகத்தைத் திருப்பிக் கொண்டேன் என்று எனக்கே தெரியவில்லை. அவர் என் மேல் ஏன் இப்படி பொய்யான செய்திகளை சொல்ல வேண்டும்?
திருமணம்
இப்பொழுதெல்லாம் என்னைப் பார்ப்பவர்கள், "நீங்கள் திருமணம் செய்து கொண்டால் என்ன? ஏன் வீண் வதந்திகளுக்கு இடம் கொடுக்கிறீர்கள்?" என்று கேட்கிறார்கள். அவசர அவசரமாகத் திருமணம் செய்து கொள்வதற்கு நான் என்ன பாட்டியாகவா ஆகிவிட்டேன்!
எனக்கு என்று சில இலட்சியங்கள் உண்டு, அந்த இலட்சியம் நிறைவேறியபின், என் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள எனக்குத் தெரியும்! நடிகையும் ஒரு பெண்தானே! சாதாரண ஒரு பெண்ணுக்கு உள்ள உரிமை எங்களுக்குக் கிடையாதா? நடிகர் நடிகைகள் வீட்டில் நடக்கும் மிகச் சாதாரண விஷயங்களைக்கூட சிலர் பெரிதுபடுத்தி விடுகிறார்கள். இல்லாத வதந்திகளை பரப்புகிறார்கள். அதனால், நடிகரோ-நடிகையோ எவ்வளவு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை அவர்கள் சிறிதும் சிந்தித்துப் பார்ப்பது இல்லை.
நான் வதந்திகளைக் கண்டு அஞ்சி நடுங்குபவள் அல்ல. எது எப்பொழுது எப்படி நடக்க வேண்டுமோ, அது அப்பொழுது அப்படி நடக்கும் அதற்காக அவசரப்பட்டு, என் வாழ்க்கையை அழித்துக்கொள்ள நான் தயாராக இல்லை. இப்படிச் சொன்னால், "நீங்கள் யாரையும் காதலிக்கிறீர்களா?" என்று கேட்கிறார்கள்.
கதாநாயகியாக இருக்கும் போதே சினிமாவில் ஓய்வு பெற விரும்புகிறேன்-ஜெயலலிதா
காதல்
நான் "கான்வெண்டு" பள்ளிக் கூடத்தில் படிக்கும்பொழுது கிரிக்கெட்டு வீரர் பட்டோடி நவாப் ஒருவரைத்தான் மனதில் நினைத்தேன். ஆனால், அவர் ஷர்மிளாவைக் காதலிக்கிறார் என்பது தெரிந்ததும் அவரையும் மறந்துவிட்டேன். மற்றபடி நான் யாரையும் இதுவரை காதலிக்கவில்லை. இனிமேல் காதலிக்கப் போவதும் இல்லை.
விலகுவது எப்போது?
இதுவரை நான் சினிமா உலகில் கவுரவமாகவே பணியாற்றி வந்து இருக்கிறேன். நேரம் வரும்போது, அதே கவுரவத்தோடு, சினிமா உலகை விட்டு விலகி விடுவேன். கதாநாயகியாக நடித்துவிட்டு, "அம்மா பாட்டி" போன்ற சிறு சிறு பாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்க நான் விரும்பவில்லை. எனவே, சுதாநாயகியாக மிக உச்ச நிலையில் இருக்கும்போதே, சினிமா உலகில் இருந்து ஓய்வு பெற விரும்புகிறேன்.
புரட்சித் திட்டம்
"ஓய்வு பெற்ற பிறகு என்ன செய்யப் போகிறீர்கள்?" என்றுதானே கேட்கிறீர்கள்!
அதற்கு இன்னும் எத்தனையோ ஆண்டு இருக்கிறது. அதற்குள் நாம் எவ்வளவோ தடவை சந்திக்கப் போகிறோம். எல்லாவற்றையும் இப்பொழுதே சொல்லிவிட்டால், அடுத்த தடவை சொல்லுவதற்கு ஒன்றுமே இல்லாமல் போய்விடும். காலம் வரும் போது எனது புரட்சித் திட்டத்தை அறிவிக்கிறேன்!