ஜெயம் ரவியின் நிலைமையை பார்த்து அழுத அம்மா மற்றும் அண்ணன்!

நடிகர் ரவிமோகன் மற்றும் அவரது தோழி கெனிஷா ஆகியோர் இணைந்து ரவிமோகன் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளனர்.;

Update:2025-09-02 00:00 IST
Click the Play button to listen to article

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருக்கும் ரவிமோகன் (ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்ததில் இருந்து கோலிவுட்டின் தலைப்புச் செய்தியாகவே மாறிவிட்டார். மேலும் தனது தோழி கெனிஷா உடனான உறவு குறித்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானதிலிருந்து சர்ச்சைகளுக்கு பெயர்போனவராகவும் இருக்கிறார். தனிப்பட்ட வாழ்க்கையில் சர்ச்சைகள் தொடர்ந்தாலும் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே ரவிமோகன் ஸ்டூடியோஸ் என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் தொடங்கியுள்ளார். இந்த தயாரிப்பு நிறுவனத்தின் தொடக்க விழா ஆக.26ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற நிலையில், நடிகர்கள் சிவராஜ்குமார், கார்த்தி, சிவகார்த்திகேயன், எஸ்ஜே சூர்யா, நடிகை ஜெனிலியா என பல பிரபலங்கள் இதில் கலந்துகொண்டனர். இதில் ஜெயம்ரவியின் அம்மாவும் கலந்துகொண்டு பேசினார். இது ஒருபக்கம் இருக்க, கடவுளை ஏமாற்ற முடியாது என மறைமுகமாக ரவிமோகனை சாடியுள்ளார் ஆர்த்திரவி. மேலும் ஆர்த்தி குடும்பத்தின் மீது உள்ள ஈகோவால், தயாரிப்பு நிறுவனம் தொடங்கி தனது தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுகொண்டுள்ளார் ரவி என்றும் இணையவாசிகள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


ரவிமோகன் ஸ்டூடியோஸ் திறப்பு விழாவிற்கு வருகை தந்த சிவகார்த்திகேயன், கார்த்தி

ரவிமோகன் ஸ்டூடியோஸ்!

தமிழ் திரையுலகில் எடிட்டராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வந்தவர் மோகன். இவரது மகன்தான் நடிகர் ஜெயம்ரவி. தயாரிப்பாளரின் மகனாக இருந்தாலும், தனது நடிப்புத் திறமையாலேயே ரவிமோகன் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறினார். ரவிமோகனை கதாநாயகனாக திரையுலகில் அறிமுகப்படுத்திய முதல் படம் ஜெயம். இப்படத்தை அவரது அண்ணன் ராஜாதான் இயக்கினார். காதலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த முதல் படமே வெற்றிப் பெற்று சூப்பர் ஹிட் அடிக்க, அதுவே அடைமொழியாக ஜெயம்ரவி என மாறியது. ஆனால் கடந்தாண்டு, தன்னை ஜெயம்ரவி என அழைக்கவேண்டாம், ரவிமோகன் என அழைத்தால் போதும் என ரவி தெரிவித்தார். ரவியின் ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் பல படங்களை அவரது அண்ணனும், இயக்குநருமான மோகன்ராஜாவே இயக்கியிருந்தார். ரவிமோகன் வெளியே தெரிய முக்கிய காரணமாக ராஜா அமைந்தார்.

ஜெயம் படத்தைத் தொடர்ந்து மோகன் ராஜா - ரவி காம்போவில் வெளிவந்த உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம், எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, தனி ஒருவன் போன்ற படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தன. இந்தப் படங்கள் எல்லாம் தற்போதுவரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. இவ்வாறு தனது திரைப்பயணத்தை தொடர்ந்து வந்த ரவியின் அண்மைக்கால படங்கள் எதுவும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனிடையே காதலித்து திருமணம் செய்துகொண்ட மனைவி ஆர்த்தியை பிரிவதாகவும் ரவிமோகன் அறிவித்தார்.

இந்நிலையில் தனது தோழி கெனிஷாவுடன் இணைந்து ரவிமோகன் ஸ்டூடியோஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் தொடங்கியுள்ளார். நிறுவனத்தின் தொடக்க விழா ஆக.26ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிறுவன தொடக்க விழாவில் நடிகர்கள் கார்த்தி, சிவகார்த்திகேயன், அதர்வா, நடிகைகள் ஜெனிலியா, ஷ்ரத்தா ஸ்ரீநாத், கன்னட ஹீரோ சிவராஜ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர். அதனுடன், ரவி இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் படத்தின் அறிமுகம், ’ப்ரோ கோட்’ (BROCODE) திரைப்படம் உள்ளிட்டவற்றை அறிமுகமும் செய்துவைத்தனர். 


தயாரிப்பு நிறுவன அறிமுக விழாவில் கெனிஷா - ரவிமோகன்

“ரவி எனக்கு கடவுள்” 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ஜெயம் ரவி, கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். ஆர்த்தி பிரபல தயாரிப்பாளர், சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆவார். திருமணத்திற்கு பின்னர் திரையுலகமே பார்த்து பொறாமை படும் வகையில், ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இருவரும் கணவன் - மனைவியாக வாழ்ந்த நிலையில், இவர்களின் காதலுக்கு அடையாளமாக ஆரவ் மற்றும் அயான் என்ற இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தனர். இப்படி கடந்த 15 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்துவந்த இந்த ஜோடி கடந்தாண்டு பிரிவதாக அறிவித்தனர். இவர்களின் விவாகரத்து செய்தி திரைத்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முதலில் ஆர்த்தியுடனான திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக நடிகர் ரவி அறிவித்தார். ஆனால் இந்த முடிவு தன்னிடம் கேட்கப்படாமலேயே எடுக்கப்பட்டது எனவும், தான் ரவியின் மனைவிதான் என்றும் ஆர்த்தி தெரிவித்தார். பின்னர் ஜெயம் ரவி - ஆர்த்தி ஜோடி இடையிலான விவாகரத்துக்கான காரணங்கள் இணையத்தில் உலா வந்தன. அதில் பாடகி கெனிஷாதான் இவர்கள் விவாகரத்துக்கு காரணம் எனக் கூறப்பட்டது. ஆனால் அவர் தனது நண்பர் மட்டும்தான் எனவும், அவரை இந்த விவகாரத்தில் சேர்க்கவேண்டாம் எனவும் ரவி தெரிவித்தார். ஆனால் சில நாட்களில் தன்னுடன் கிசுகிசுக்கப்பட்ட பாடகி கெனிஷாவுடன் ஐசரி கணேஷின் மகள் திருமணத்தில் ரவி கலந்துகொண்டார். இது மிகப்பெரிய சர்ச்சையை உண்டாக்கியது. இதனையடுத்து இவர்களின் விவாகரத்திற்கு கெனிஷாதான் காரணம் என அவரை வறுத்தெடுக்க தொடங்கினர் இணையவாசிகள். ஆனால் அதற்கெல்லாம் செவிசாய்க்காத ரவி - கெனிஷா கோயில், திருமண விழாக்களில் ஜோடியாக பங்கேற்று வருகின்றனர்.

இந்நிலையில் ரவிமோகன் ஸ்டூடியோஸ் அறிமுக விழாவில் பேசிய கெனிஷா, “எல்லோரும் எனது முகத்தை எங்காவது ஒருமுறையாவது பார்த்திருப்பீர்கள். அவ்வளவு விளம்பரம். ஆனால் என்னை முதலில் இருந்து அறிமுகப்படுத்த விரும்புகிறேன். நான் ஒரு பாடகி, இசை தயாரிப்பாளர், ஆன்மிக சிகிச்சையாளர். தற்போது “ரவி மோகன் ஸ்டுடியோஸ்”-ன் பங்குதாரர். இந்த வாய்ப்பை வழங்கிய ரவி மோகனுக்கு நன்றி. இந்த இடத்திற்கு என்னை கொண்டுவந்த கடவுளுக்கும், பிரபஞ்சத்திற்கும் நன்றிக்கூற விரும்புகிறேன். அப்பா இங்கு இல்லை. அம்மா, ரவி அண்ணா இங்கு இருக்கிறார்கள். நான் நீண்ட காலமாக தனிமையில் இருந்தேன். இப்போது ரவி அவர்களின் மூலம் இப்படி அழகான குடும்பம் கிடைத்துள்ளது. நான் மிகவும் கடினமான சூழலில் இருந்து வந்த ஒருவர். ரவி அவர்கள் மிகவும் சிறப்பான ஒரு சூழலில் இருந்து வந்தவர். நாங்கள் இருவரும் இணைந்து, ரவி மோகன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தை பெரிய அளவில் பிரபலமாக்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளோம். எங்களின் கனவும் அதுதான். என்னதான் இருந்தாலும் எங்களுடைய குழு இல்லாமல் இன்றைய நாள் சாத்தியம் ஆகியிருக்காது.


சந்தோஷ் சுப்ரமணியம் படத்தின் சீனை  ரீகிரியேட் செய்த ரவி - ஜெனிலியா

ரவி அவர்களை பற்றி சொல்ல வேண்டுமென்றால், அவர் வாழ்கையில் மிகவும் கடினமான சூழ்நிலையை கடந்து வந்து இருக்கிறார். உங்களுக்கு என்ன சோகம் இருந்தாலும், வலி இருந்தாலும் வெளியில் அதை காட்டிக்கொள்ளாமல் மற்றவரிடம் பழகுகிறீர்கள் ரவி. அது சரிதான். ஆனால், நீங்கள் யார் உங்களிடம் வந்தாலும், அவர் எவ்வளவு இருளை கொண்டு வந்திருந்தாலும் நீங்கள் அவர் வாழ்கையை வெளிச்சமாக மாற்றி விடுகிறீர்கள். இப்போது என்னிடம் 7 முழு ஸ்கிரிப்ட் உள்ளது. அவ்வளவு திறமையான நீங்கள், உங்களின் அனைத்து திறமைகளையும் இந்த உலகம் பார்க்க வேண்டும். எனக்கு மிகப்பெரும் பேராசை உள்ளது. என்னவென்றால், இந்த உலகத்திலுள்ள அத்தனை மனிதரும் உங்களுக்குள் இருக்கும் கடவுளை பார்க்க வேண்டும். அந்த கடவுளை நான் பார்த்து விட்டேன். நீங்கள் ஒருநாள் வரலக்ஷ்மி அம்மாவுடன் இருந்தால் தெரியும், ரவி மோகன் அவர்கள் என் இவ்வளவு சிறந்த மனிதராக இருக்கிறார் என்று. இப்படிப்பட்ட ஒருவரை கொடுத்ததற்கு நன்றி அம்மா. இங்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. ஆர்எம் எதைப்பற்றியும் கவலைப்படாதீர்கள். கர்மா திருப்பி அடிக்கும்” என தெரிவித்தார்.

 “கடவுள் கொடுத்த வரம் கெனிஷா”

தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் அறிமுக விழாவில் பேசிய ரவிமோகன், “என்னுடைய அழைப்பை ஏற்று இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் மிக்க நன்றி. நன்றி சொல்ல வேண்டும் என எதுவும் இல்லை. ஆனால் மனதில் இருக்கும் நன்றியை அள்ளி உங்களிடம் தெளிக்க வேண்டும் என நினைக்கிறேன். நாம் கஷ்டப்படும் நேரத்தில் உதவ சிலபேர் இருப்பார்கள். அவர்கள் இருப்பார்களா, இல்லையா என்பதை தெரிந்துகொள்ள நேரம் ஒன்றுவரும். அந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது என நான் நினைப்பேன். அப்படி வரும்போது இப்படி பரிசுகள் நமக்கு கிடைத்துள்ளது என அவர்களுக்கு தெரியும். இங்கு வந்த அனைவரும் எனக்கு கிடைத்த பரிசு. நன்றி, நன்றி, மனதார நன்றி. ஒருவரை பற்றி மட்டும் சொல்லிக் கொள்கிறேன். ஏனெனில் இந்தவிழா நடைபெற முழுமுதற்காரணம் அவர் மட்டும்தான். உங்கள் எல்லோருக்குமே அவரை தெரியும். கெனிஷா மட்டும்தான். எனக்கு இதுபோல் யாரும் செய்தது இல்லை. இவ்வளவு பேர் வருவார்கள் எனத் தெரியாது. நான் யாரென எனக்கு உணர வைத்தவர். எனக்குக் கடவுள் கொடுத்த வரம் கெனிஷா. இவரைப் போன்ற ஒருவர் அனைவரின் வாழ்விலும் இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்." எனக் கூறினார். மேலும் விழாவிற்கு வந்த ஜெனிலியா, கார்த்தி என ஒவ்வொருவர் பற்றியும் தனித்தனியாக பேசி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் ரவி. 


மேடையில் அழுத தனது தாயை தேற்றிய ரவி மோகன்

மனம் உடைந்து அழுத ரவியின் அம்மா!

நடிகர் ரவியின் தயாரிப்பு நிறுவன தொடக்க விழாவிற்கு, அவரது தாய் மற்றும் அண்ணன் மோகன் ராஜா வந்திருந்தனர். தந்தை மோகன் மற்றும் சகோதரி ரோஜா வரவில்லை. விழாவில் தனது தாய் குறித்து பேசிய ரவி, நான் என் அம்மாவை நினைத்து ஒரு பாடல் எழுதினேன். அதற்கு காரணம் கெனிஷாதான். அம்மா என்றால் ஒரு எமோஷன். அதை எல்லோருடைய அம்மாவிற்காகவும் எழுதுவோம் என நினைத்து எழுதியதுதான். “கருவாக இருந்தேனே உருவை நீ தந்தாயே” எனும் பாடலை எழுதியுள்ளேன் என தெரிவித்தார். இதனையடுத்து மேடையில் கண்கலங்கி கொண்டே பேசிய ரவியின் தாய், அவன் குழந்தையாக இருக்கும்போது கீழ விழுந்துவிடக்கூடாதுன்னு பின்னாடியே போய் பிடித்தவள் நான். இன்னைக்கு அவன் இல்லாமல்” என அழுத தொடங்கினார். இதனையடுத்து ரவி அவரிடம் சில வார்த்தைகளை கூறி தேற்றினார். தொடர்ந்து மேடையில் தனது அம்மாவின் மடியில் ரவி சாய்ந்திருப்பது போன்ற புகைப்படத்தையும் தனது அம்மாவிற்கு பரிசாக வழங்கினார். இதனைப்பார்த்த ரவியின் அம்மா எதுவும் சொல்லாமல் வேகமாக இறங்கி கீழே சென்றுவிட்டார்.

கடவுளை ஏமாற்ற முடியாது...

ரவிமோகன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய அதேநேரத்தில், அவரின் மனைவி ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஸ்டோரி வைத்திருந்தார். அதில், “கடவுளை ஏமாற்ற முடியாது. மற்றவர்களை ஏமாற்றலாம். உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளலாம். ஆனால் கடவுளை ஏமாற்ற முடியாது” என்று ஆர்த்தி ரவி பதிவிட்டிருந்தார். ஆர்த்திரவி வைத்திருந்த இந்த ஸ்டோரி சமூக வலைத்தளங்களில் வைரலானது. ரவியைத்தான் மறைமுகமாக சாடியுள்ளார் என இணையவாசிகள் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். 


ஆர்த்தி ரவியின் இன்ஸ்டாகிராம் பதிவு

குடும்ப உறுப்பினர்கள் எங்கே?

ரவிமோகனின் தயாரிப்பு நிறுவன விழா முடிவடைந்த நிலையில், அதில் அவரது தந்தை, சகோதரி உள்ளிட்டோர் பங்கேற்காதது பெரும் கவனம் ஈர்த்துள்ளது. ரவியின் செயல்கள் பிடிக்காததால்தான் தயாரிப்பாளர் மோகன் விழாவில் கலந்துகொள்ளவில்லை எனவும், மாமியார் சுஜாதாவுடனான ஈகோ காரணமாகவே தானும் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ரவி என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்