19 வயதில் கல்யாணமாகி, ஒரு வாரத்துலயே அது செட் ஆகலன்னு தெரிஞ்சிடுச்சு! - நடிகை பிரகதி
தாயின் விருப்பத்திற்கு எதிராக, 19 வயதிலேயே காதல் திருமணம் செய்துகொண்டதாகக் கூறும் நடிகை பிரகதி, ஆனால் அந்த கல்யாணம் தனக்கு செட்டாகவில்லை என்பது ஒரு வாரத்திலேயே தெரிந்துவிட்டதாக கூறியுள்ளார்.;
தமிழில் கடந்த 1994ம் ஆண்டு பாக்கியராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம்தான் ‘வீட்ல விசேஷங்க’. இப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர்தான் நடிகை பிரகதி. தொடர்ந்து தமிழில் ‘பெரிய மருது’, ‘வாழ்க ஜனநாயகம்’, ‘சும்மா இருங்க மச்சான்’, ‘ஜெயம்’, ‘கெத்து’, ‘பகீரா’, ‘தாரை தப்பட்டை’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் . தற்போது தமிழ் சினிமாவில் ஆக்டிவாக இல்லாவிட்டாலும், தெலுங்கில் தனது நடிப்புக்கென தனி அங்கீகாரத்தையே பெற்றுள்ளார். இந்நிலையில் தனது திரைப்பயணம், திருமண வாழ்க்கை என இயல்பாக, கலகலவென, சிரித்த முகத்துடன் தன்னைப்பற்றிய பல சுவாரசிய தகவல்களை நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார் பிரகதி. எதற்காக நடிப்பைவிட்டு விலகினார்? பின் மீண்டும் வந்து தெலுங்கு திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தது எப்படி? என்பது குறித்தெல்லாம் அவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
நடிகை பிரகதியின் சிறுவயது புகைப்படமும் - தற்போதைய புகைப்படமும்
மாடலிங் துறைக்கு வந்தது எப்படி?
ஆந்திராவின் ஹைதராபாத்தில் பிறந்த நடிகை பிரகதி, மருத்துவரான தனது தந்தையின் இறப்பைத் தொடர்ந்து தாயுடன் சென்னைக்கு குடிப்பெயர்கிறார். வீட்டிற்கு ஒரே பிள்ளை. தந்தை இல்லாததால், தாயே அனைத்து செலவுகளையும் பார்க்க வேண்டிய சூழல். மிகவும் கஷ்டம் இல்லையென்றாலும், டைட்டான பட்ஜெட்டில் இருவரும் வாழ்ந்து வந்துள்ளனர். இதனால் தனது சிறுவயதிலேயே வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம். தனது 14 வயதில், தனக்கு தெரிந்தவர் மூலம் டப்பிங் வேலை ஒன்றில் முதல்முதலாக சேர்கிறார். அதில் கிடைக்கும் சம்பளம் ரூ.500. தனது முதல் சம்பளத்தில் ரூ.300க்கு அம்மாவிற்கு பிங்க் நிறத்தில் ஒரு புடவை; பாக்கி 200 ரூபாயை பத்திரமாக எடுத்துச் சென்று அம்மாவிடமே கொடுத்துள்ளார்.
தொடர்ந்து அம்மா ஒரு ஆளாகவே கஷ்டப்படுகிறார்களே என என்ன வேலை கிடைத்தாலும், சிறியது, பெரியது என வித்தியாசம் பார்க்காமல், கொஞ்சம் கூட மனம் வருந்தாமல், கிடைக்கும் வேலையை விருப்பபட்டு செய்துள்ளார். எஸ்டிடி பில்லிங், பீட்சா ஹட் சர்வர் என கிடைக்கும் வேலைகளில் பொறுப்புடன் இருந்து வந்துள்ளார். இச்சூழலில்தான் கல்லூரியின் முதல் ஆண்டில் கால் எடுத்து வைக்கிறார். ஃப்ரெஷ்ஷர்ஸ் டேவில் பிரகதியை பார்த்த அவரின் தோழியின் தந்தை, மைசூர் சில்க்ஸ் பேலஸ் கடைக்கு சேரி மாடலிங் செய்ய விருப்பம் உள்ளதா என பிரகதியிடம் கேட்க சொல்லியுள்ளார். உடனே பிரகதியிடம் வந்து அவரது தோழி விஷயத்தை கூறியுள்ளார். வேலை கிடைத்தால் போதும் என பிரகதியும் ஓகே சொல்லியுள்ளார். இப்படித்தான் மாடலிங் துறையில் அடியெடுத்து வைத்துள்ளார் பிரகதி.
சம்பளத்திற்காக பாத்ரூம் கழுவிய பிரகதி...
சின்ன வேலை, பெரிய வேலை என எதுவும் கிடையாது; அது வேலை. அதில் பொறுப்புடன் இருக்க வேண்டும் என்கிறார் பிரகதி. “என் அம்மாவுடைய வளர்ப்பு அப்படி இருக்கலாம். விடுமுறை நாட்களில் நான்தான் வீட்டில் எல்லா வேலையும் செய்வேன். வீட்டை பெருக்குவது, பாத்ரூம் கழுவுவது, பாத்திரம் கழுவுவது என அனைத்து வேலையும் செய்வேன். அதற்கான சம்பளத்தையும் வாங்கிக் கொள்வேன். சம்பளம் வேணும்னா வேலை செய்யணும். சும்மா இருந்தால் வராது என்பதை அம்மா உணர்த்தினார். அப்போது அந்த விதம் எனக்கு பிடிக்கவில்லை. சம்பளம் வரும்போது நல்லா இருக்கும். ஆனால் அதை செய், இதை செய் என கூறும்போது கோபம் வரும். அப்போது அதன் பயன் எனக்கு புரியவில்லை. இப்போதுதான் தெரிகிறது. வீடு இருப்பது பெரிய விஷயமில்லை. வேலை தெரிந்தால்தானே நாம் ஒருவரை வேலை வாங்க முடியும். பணம் வருகிறது என்றால் அது கடவுள். பாத்ரூம் கழுவினால் கூட அது ஒரு வேலை. வேலையால்தான் சாப்பாடு கிடைக்கிறது. அதனால் அது எந்த வேலையாக இருந்தாலும் மரியாதைக்குரியது” என தெரிவித்துள்ளார் பிரகதி.
நடிகை பிரகதி - நடிகர் பாக்கியராஜ்
திரைத்துறையில் நுழைந்தது எப்படி?
வீட்ல விசேஷங்க படத்தில் நடிகையானது எப்படி என்பது குறித்து குழந்தைப் போல சிரித்துக் கொண்டே பேசிய நடிகை பிரகதி, “நடிகை சி.ஆர். சரஸ்வதி வீட்டில்தான் வாடகைக்கு இருந்தோம். அப்போது வரும்போது, போகும்போது எல்லாம் என்னை பார்ப்பார்கள். ஒருநாள் வீட்டில் அம்மா சமைத்துக்கொண்டு இருந்தார். அந்த வாசனையை வைத்துதான் எங்கள் வீட்டிற்கு சி.ஆர். சரஸ்வதி வந்தார். எங்களுடன் ஃபோட்டோ எடுத்து சென்றார். அந்த ஃபோட்டோவை பாக்கியராஜ் சார் பார்த்திருப்பார்போல... மறுநாளே பாக்கியராஜ் சார் ஃபோன் செய்தார். நீ தான் ஹீரோயின் என சொல்லிவிட்டார். அன்றைக்கு நைட் ஃபுல்லா நான் துங்கல. ஷூட்டிங்கில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என தெரியாது. சாப்பிட்டுக்கிட்டே இருப்பேன்; சிரிச்சிக்கிட்டே இருப்பேன்; ஷாட்ல சிரிப்பேன். பாக்கியராஜ் சார் திட்டிக்கிட்டே இருப்பார். ஒருமுறை என்னை கோபத்தில் அறைந்துவிட்டார். சிரிச்சி, சிரிச்சி அவரை கோவப்படுத்திருக்கேன்" என்று கூறினார். மேலும், எல்லாத்துக்கும் சாரி சார் என நடிகர் பாக்கியராஜிடமும் நேர்காணல் வாயிலாக மன்னிப்புக் கோரினார்.
இதனால்தான் திரைத்துறையில் இருந்து விலகினேன்...
ஒரு படத்தில் தனக்கு பிடிக்காத சீனில், பிடிக்காத உடையில் தன்னை நடிக்க சொன்னதே திரைத்துரையில் இருந்து தான் விலக காரணம் என நடிகை பிரகதி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், “ஒரு பொருளின் மதிப்பு தெரியாதவர்களிடம் அதை கொடுத்தால், அது இருக்காது. எனது வாழ்க்கையும் அப்படித்தான். எனக்கு தெரிந்திருந்தால் ஹீரோயின் வாய்ப்பை விட்டும், சினிமாவில் இருந்தும் விலகி இருக்க மாட்டேன். இன்று தெலுங்கில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளேன். இரண்டு நந்தி விருதுகளை பெற்றுள்ளேன். தெலுங்கில் இப்போது முக்கிய நடிகையாக இருக்கிறேன் என்றால், அதன் மதிப்பு தெரிந்ததால்தான். ஆனால் முதலில் எனக்கு கிடைத்த வாய்ப்பின் அருமை எனக்கு தெரியவில்லை. ஒருவர் மேல் இருந்த கோபத்தால் திரைத்துறையை விட்டே சென்றுவிட்டேன். ஒரு படத்தின் நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என மூன்று பேரும் என்னை திட்டினார்கள். ஒரு பாடலில் அவர்கள் போட சொல்லிய டிரஸை நான் போட மாட்டேன் எனக் கூறினேன். அதற்காக என்னை திட்டினார்கள். என்னை யாரும் வீட்டில் திட்டியதேயில்லை. பொதுமக்கள் முன்னிலையில் வைத்து திட்டினார்கள்; அவமானப்படுத்தினார்கள்; அசிங்கமா திட்டினார்கள். அப்போதுதான் எனது 18 வயதில் திரைத்துறை வேண்டாம் என முடிவு செய்தேன்” எனத் தெரிவித்தார்.
பெரிய மருது படத்தில் நடிகை பிரகதி - நடிகர் விஜயகாந்த்
விஜயகாந்தை பார்த்தாலே பயம்...
“முதல்முறையாக நான் ரயிலில் இருந்து, ஜன்னல் வழியாகத்தான் விஜயகாந்த் சாரை பார்த்தேன். அதற்கு முன் பார்த்ததில்லை. முதல்முறையாக நான் பார்த்த ரசிகர் கூட்டம் என்றால் அவருக்கு அன்று கூடிய ரசிகர் கூட்டம்தான். அவரை பார்க்க அவ்வளவு பெரிய கூட்டம் ரயில் நிலையத்தில். ஒரு ஹீரோவுக்கு மக்கள் மத்தியில் அவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்ததை அன்றுதான் நான் முதல்முதலில் பார்த்தேன். அங்கிருந்தவர்கள் அனைவரும் அவரை கடவுளாக பார்த்தனர். படம் முழுவதும் நான் அவர்கிட்ட பேசவே இல்ல; அவரை பாத்தாலே பயம். என்னை பயமுறுத்திக் கொண்டே இருப்பார். பாக்கியராஜ் சார் மாதிரி, இவரும் அடித்துவிடுவாரோ என்ற பயத்திலேயே அமைதியாக இருப்பேன்” என விஜயகாந்த் உடனான தனது பயணம் குறித்து பிரகதி பேசியுள்ளார்.
19 வயதில் திருமணம்... ஒரே வாரத்தில் கசந்த மணவாழ்க்கை!
தனது 18 வயதில் திரை உலகம் வேண்டாம் என்று முடிவுசெய்த பிரகதி, 19 வயதிலிலேயே திருமணம் செய்துகொண்டார். திருமணம் செய்த ஒரேவாரத்தில் தனக்கும், தனது கணவருக்கும் ஒத்துப்போகாது என தெரிந்துகொண்டார். ஆனால் கணவரை பிரிந்தால் சமுதாயம் என்ன சொல்லிவிடுமோ என்ற பயத்தில் விவாகரத்து பெறாமல் இருந்து வந்துள்ளார். பிறகு படத்தில் கதாநாயகி கதாபாத்திரங்கள் கிடைக்காத நிலையில் 22 வயதில் சீரியல்கள் மூலம் மீண்டும் திரைக்கு திரும்பினார்.
இதுகுறித்து பேசிய அவர், “19 வயசுல எனக்கு கல்யாணம். என் அம்மாவிற்கு என்னுடைய கல்யாணத்தில் துளிக்கூட விருப்பமில்லை. ஒரு வாரத்திலேயே அம்மா சொன்னது சரிதானோ என யோசித்தேன். ஒரு வாரத்திலேயே எனக்கும், அவருக்கும் பிடிக்கவில்லை என்பது தெரிந்துவிட்டது. பின்னர் சமுதாயத்திற்காகவே வாழ்ந்தேன். துருதுருனு இருந்த நான் ரொம்ப அமைதியாக மாறிவிட்டேன். எதற்கெடுத்தாலும் சிரிக்கும் நான் சிரிப்பையே மறந்துவிட்டேன். இது நான் இல்லை என்று உணர ஆரம்பிச்சேன். அதற்கு பிறகுதான் அந்த வாழ்க்கையிலிருந்து வெளியேவர நினைத்தேன். பின்னர் சீரியல்கள் மூலம் நடிப்பிற்கு திரும்பினேன்” எனக் கூறினார்.
நடிகை பிரகதி - நடிகை ஸ்ரீவித்யா
என் வாழ்க்கையின் தேவதை ஸ்ரீவித்யா...
திரைத்துரையில் தான் மீண்டும் தலைதூக்க முக்கிய காரணமாக இருந்தது ஸ்ரீவித்யாதான் என பிரகதி தெரிவித்துள்ளார். “நானும், ஸ்ரீவித்யாவும் தெலுங்கில் ஒரு சீரியலில் நடித்துக் கொண்டிருந்தோம். நானும், அவங்களும் ரொம்ப க்ளோஸ். என்னை அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும். அவங்க மடியில உட்காரவெச்சி சாப்பாடு ஊட்டுவாங்க. நான் அவரை என்றைக்கும் மறக்கமாட்டேன். அவங்கக்கூட சேர்ந்து நடித்த போதுதான் என்னை சுரேஷ் புரொடக்ஷனிலிருந்து கூப்பிட்டார்கள். அம்மா கதாபாத்திரம்னு சொல்லிட்டு, நான் முடியாது என்று சொல்லிவிட்டேன். ஸ்ரீவித்யாதான் என்னை பண்ண சொன்னாங்க. தெலுங்கில் நீ பெரிய ஆளா வருவாய் என்று சொன்னாங்க. ஆனா எனக்கு நம்பிக்கை இல்லை. முதல்நாள் ஷூட்டிங்கில அழுதேன்; ஆனால் இன்றைக்கு அதனால்தான் நன்றாக இருக்கிறேன். ஸ்ரீவித்யாவை எப்போதும் மறக்க மாட்டேன். என் வாழ்க்கையின் தேவதை ஸ்ரீவித்யா” என பிரகதி கூறியுள்ளார்.
ஒரே வருடத்தில் 27 படங்கள்...
தமிழில் அவ்வளவாக படங்கள் நடிக்காவிட்டாலும், தெலுங்கு திரையுலகில் முக்கிய நடிகையாக வலம் வருகிறார் பிரகதி. தமிழ் திரையுலகில் அம்மா கதாபாத்திரம் என்றால் எப்படி சரண்யா இருக்கிறாரோ, அதுபோல தெலுங்கில் பிரகதி. ஒரே வருடத்தில் 27 படங்களில் நடித்துள்ளாராம்.
இன்றும் அதுபோன்ற மகிழ்ச்சி எங்கும் கிடைக்கவில்லை...
"மீண்டும் நடிப்பிற்கு திரும்பியபோது, சீரியல்களில் நடிக்க பலரிடம் வாய்ப்பு கேட்டுக் கொண்டிருந்தேன். அப்போது தயாரிப்பாளர் ப்ரித்விராஜ், இயக்குநர் மனோகர் ஒரு சீரியலில் நடிக்க என்னிடம் பேசினார்கள். கதை எல்லாம் சொல்லிவிட்டு முதலில் ரூ. 10 ஆயிரம் காசோலையை என்னிடம் கொடுத்தார்கள். அப்போது கையில் ஒரு ரூபாய் கூட காசு இல்லை. அதனை கொடுத்துவிட்டு அவர்கள் நிறைய பேசினர். ஆனால் அது எதுவும் எனது காதில் விழவில்லை. அவர்கள் போனதற்கு பின் அவ்வளவு அழுகை. எனக்கு நன்றி சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. ஏனென்றால் அது எனக்கு மற்றொரு ஜென்மம். அந்த செக்கை (cheque) வாங்கியபோது எனக்கு கிடைத்த சந்தோஷம், இதுவரை வேறு எங்கேயும் கிடைக்கவில்லை. இப்போது கோடி ரூபாயை என்னிடம் கொடுத்தாலும் அந்த சந்தோஷம் திருப்பிக் கிடைக்காது" என்று பிரகதி தெரிவித்துள்ளார்.
ஜிம்மில் பளு தூக்குதல் பயிற்சியில் நடிகை பிரகதி...
நடிகை மட்டுமல்ல...பளு தூக்குதல் வீராங்கனை...
நடிகை பிரகதி தான் ஜிம்மில் இருக்கும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது பகிர்வார். ரசிகர்கள் பலரும் அதனை சாதாரண ஜிம் வீடியோ என நினைத்துக் கொண்டிருக்கையில், தான் ஒரு தேசிய பளுதூக்கு வீராங்கனை என புதிய தகவலை அவர் தெரிவித்துள்ளார். இந்த வருடம், இந்தியா சார்பில் ஆசியப் போட்டிகளில் பங்கேற்க உள்ளதாகவும் பிரகதி கூறியுள்ளார்.