இசை முதல் திருமணம்வரை! சமூக கட்டுப்பாடுகளை உடைத்த அசால்ட் நாயகன் சந்தோஷ் நாராயணன்!
தமிழ் சினிமாவில் இப்போது மிகவும் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்கிறார் சந்தோஷ் நாராயணன். தனது ரசிகர்களால் சநா என்று அன்பாக அழைக்கப்படுகிறார். இப்போது முன்னணி இசையமைப்பாளர்களாக அறியப்படுகிற பலர் மிக இளம்வயதிலேயே திரைத்துறைக்குள் வந்தவர்கள். ஆனால் சநாவிற்கு திரை வாய்ப்பானது அவ்வளவு எளிதில் கிடைத்துவிடவில்லை. பலதரப்பட்ட போராட்டங்களுக்கு பிறகு ஒருவழியாக சினிமா வாய்ப்பு கிடைக்க, அதனை இறுகப்பற்றிக்கொண்ட சநா, இப்போது பல முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்களின் படங்களுக்கு பணியாற்றி வருகிறார். சமீபத்தில் இவர் இசையமைத்த ‘ரெட்ரோ’ படத்தில் இடம்பெற்ற கனிமா பாடல்கூட தற்போது டிரெண்டிங்கில் இருக்கிறது. இயற்கையாகவே மிகவும் நகைச்சுவை தன்மைகொண்ட சந்தோஷ் சமூகத்தின் கட்டுப்பாடுகள் என்று சொல்பவைகளை தனது திருமணம், இசை, நண்பர்கள் என பலவற்றில் அசால்ட்டாக உடைத்து எறிந்துவிட்டு ஜாலியாக வைப் செய்யும் ஒருவர். வருகிற மே 15ஆம் தேதி பிறந்தநாளை கொண்டாடும் இவருடைய ஆரம்பகால போராட்டங்கள், காதல் திருமணம் மற்றும் திரை வளர்ச்சி குறித்து பார்க்கலாம்.
கானா பாடல்கள்மூலம் நன்கு அறியப்பட்டவர்!
திருச்சியை பூர்விகமாகக் கொண்டவர் சந்தோஷ் நாராயணன். அங்கு பள்ளி, கல்லூரி படிப்பை முடித்த இவருக்கு சிறுவயதிலிருந்தே இசையின்மீது ஆர்வம் இருந்ததால் வேலைக்கு செல்லாமல் எப்படியாவது இசைத்துறையில் சாதிக்கவேண்டும் என்ற குறிக்கோளோடு அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டார். ஆனால் மற்ற இசையமைப்பாளர்களை போன்று முதலில் சினிமாவில் மேடை நிகழ்ச்சிகள், டி.ஜே மிக்ஸ், நாட்டுப்புற இசைக்குழு என தன்னை ஈடுபடுத்தினார். சந்தோஷின் இசை ஆர்வத்தை புரிந்துகொண்ட அவருடைய அம்மா எப்போதும் அவருக்கு உறுதுணையாகவும், பக்கபலமாகவும் இருந்தார். எப்போதும் ‘இசைதான் நமக்கு சோறுபோடும்’ என்று சொல்லி சொல்லியே அவரை உற்சாகப்படுத்துவார் என்று சநாவே பலமுறை தனது அம்மா பற்றி கூறியிருக்கிறார். மேடை நிகழ்ச்சிகள் நடத்திவந்தபோது பல இசையமைப்பாளர்களை சந்திக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்திருக்கிறது. அப்படி முதலில் ‘நேனு மீக்கு தெலுசா?’ என்ற படத்திற்கு பின்னணி இசையமைக்கும் வாய்ப்பை பெற்றார். அதிலிருந்து கிடைத்ததுதான் ‘அட்டகத்தி’ வாய்ப்பு.
‘அட்டகத்தி’ படத்தின்மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான சந்தோஷ் நாராயணன்
அதற்கு முன்பே பல பாணிகளில் பாடல்கள் மற்றும் இசைகளை அமைத்து பழக்கப்பட்டிருந்த சந்தோஷ், இந்த படத்தில் கானா கலந்த பாணியில் பாடல்களை இயற்றினார். ஆடி போனா ஆவணி மற்றும் நடுகடலுல கப்பல இறங்கி போன்ற பாடல்கள் மிகவும் ஹிட்டடித்தன. இப்போது பலராலும் நன்கு அறியப்படுகிற கானா பாலாவை இந்த பாடல்கள்மூலம் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தியும் சந்தோஷ்தான். சந்தோஷின் இந்த புதிய முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததுடன், பலதரப்புகளிலும் பாராட்டுகளையும் பெற்றார். அதனைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் முதலில் வெளியான ‘உயிர் மொழி’ மற்றும் ‘பீட்சா’ ஆகிய படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பை பெற்றார். இந்த படங்களில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இசைக்குழுவுடன் இணைந்து பணியாற்றியதால் உலகளவில் இவருடைய இசை நன்கு அறியப்பட்டதாக மாறியது. அதன்பிறகு தமிழ், தெலுங்கு என ஒரு சில படங்களுக்கு மாறி மாறி இசையமைத்துவந்த சநா, தமிழ்ப்படங்களில் தனது முழு கவனத்தையும் செலுத்த ஆரம்பித்தார்.
தாமதமான வாய்ப்புகளும் துரித வளர்ச்சியும்
இசையமைப்பாளராக அறிமுகமான முதல் ஓரிரு படங்கள் சந்தோஷிற்கு மக்கள் மத்தியில் நற்பெயரை பெற்றுத்தந்தாலும் இவருடைய கெரியரில் மிகவும் முக்கியமான படமாக பார்க்கப்பட்டது ‘குக்கூ’. இந்த படத்தில் கதை எந்த அளவிற்கு உணர்ச்சிப்பூர்வமாகவும், பார்ப்போரை கண்கலங்க வைக்கும்விதமாகவும் அமைந்ததோ அதே அளவிற்கு பின்னணி இசையும் படத்திற்கு மிகவும் பக்கபலமாக அமைந்தது. இந்த படத்திற்கு பிறகு, சந்தோஷ் இதுவரை தயாரித்ததிலேயே சிறந்த இசை இதுதான் என்று பலராலும் பாராட்டப்பட்டார். குறிப்பாக, இதில் இடம்பெற்ற மனசுல சூரக்காத்தே பாடல் டியூன்ஸ் என்ற அகில இந்திய தரவரிசையில் முதலிடத்தை பெற்றது. இப்படி சினிமா வாய்ப்பு கிடைக்க தாமதமான போதிலும் சந்தோஷின் திறமைக்கான அங்கீகாரம் என்பது வெகுவேகமாகவே கிடைத்தது. தொடர்ந்து ‘இறுதிச்சுற்று’, ‘காஷ்மோரா’, ‘காதலும் கடந்துபோகும்’, ‘இறைவி’, ‘கபாலி’, ‘கொடி’ போன்ற பல பெயர்சொல்லும் படங்களுக்கு இசையமைத்தார்.
கடந்த ஆண்டு ரீ-டிரெண்டான காகித கப்பல் பாடல்
இவற்றில் ‘இறைவி’ படத்தில் இடம்பெற்ற ‘காதல் கப்பல்’ பாடல் கடந்த ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு சோஷியல் மீடியாக்களில் ரீ-டிரெண்டானது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து சினிமாக்களில் மட்டுமே கவனம் செலுத்திவந்த சந்தோஷிற்கு தனது பழைய வாழ்க்கையை நினைவுகூறும்விதமாக, மீண்டும் சாலை மற்றும் மேடை நிகழ்ச்சிகளை நடத்தலாம் என்ற எண்ணம் கொரோனா காலகட்டத்தில் உருவானது. அந்த எண்ணத்தை செயலாக்க பல முயற்சிகளை எடுத்து ஒரு வழியாக மேடை நிகழ்ச்சியையும் இலங்கையில் நடத்தினார். சநாவே எதிர்பாராதவிதமாக ஆயிரக்கணக்கான மக்கள் அந்த நிகழ்ச்சிக்கு வர, மிகவும் எமோஷனலான அவர் ஆடல், பாடல் என வந்தோரை கொண்டாட்டத்தில் மூழ்கடித்துவிட்டார். இப்படி சினிமாவுக்கு முன்பு சந்தோஷின் மேடை நிகழ்ச்சிகளுக்கு இருந்த வரவேற்பைவிட சினிமாவிற்கு பின்பான நிகழ்ச்சிகள் மிகுந்த வரவேற்பை பெற்றன.
காதலும் திருமணமும்
சந்தோஷ் நாராயணனின் இசை மட்டும்தான் வித்தியாசமாக இருக்கும் என்பதைத் தாண்டி, சமூகத்தின்மீதான அவருடைய பார்வையும், சிந்தையும்கூட வேறாகத்தான் இருக்கிறது என்பதை அவரே பலமுறை தனது பேட்டிகளில் வெளிப்படுத்தியிருக்கிறார். சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்னரே காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் இவருடைய காதல் கதை சற்று வித்தியாசமானது. பெரும்பாலும் பிரபலங்கள் மற்றும் சினிமாத்துறையை சேர்ந்தவர்கள் இரண்டாவது திருமணம் செய்துகொள்வது இயல்புதான் என்றாலும், ஏற்கனவே திருமணமாகி 13 வயதில் ஒரு பெண் குழந்தையும், மகனும் இருக்கும் மீனாட்சி என்பவரை இவர் திருமணம் செய்துகொண்டார். இவர்களுடைய காதல் சற்று வித்தியாசமானது. இசைக்குழு என்பதால் பெரும்பாலும் நண்பர்கள் குழுவுடனே சேர்ந்து பயணித்துவந்த சந்தோஷ், ஒருமுறை தனது நண்பரை ப்ராங்க் செய்வதற்காக தனக்கு வேலையில் உதவியாக இருந்த மீனாட்சி என்பவரிடம் கேட்டிருக்கிறார். அப்போது இருவருக்குமிடையே நல்ல புரிதல் ஏற்பட அதுவே பின்னாளில் காதலாக மாறியிருக்கிறது. 2007 - 2008 சமயத்தில் இலங்கையில் போர் வெடித்ததால் அங்கிருந்த பலர் ஆஸ்திரேலியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். அங்கு செல்லும் முன்பே மீனாட்சி தனது காதலை சந்தோஷிடம் வெளிப்படுத்தி இருக்கிறார். அப்போது அதை சந்தோஷால் புரிந்துகொள்ள முடியவில்லை.
மனைவி மீனாட்சியுடன் சந்தோஷ் - கனிமா பாடலில் சந்தோஷின் சிறப்பு தோற்றம்
அழுதுகொண்டே ஆஸ்திரேலியா சென்ற மீனாட்சி, தொடர்ந்து சந்தோஷிடம் பேசிவந்துள்ளார். அப்போதுதான் தனக்கும் அவர்மீது காதல் இருப்பதை சந்தோஷ் புரிந்துகொண்டார். அந்த சமயத்தில் பல்வேறு பொருளாதார சிக்கல்களுக்கு நடுவே அவரை பார்க்கவே மிகவும் சிரத்தை எடுத்து ஆஸ்திரேலியாவுக்கு சென்றுவருவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார் சந்தோஷ். ஒரு கட்டத்தில் தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு சந்தோஷை திருமணம் செய்துகொள்வது என முடிவெடுத்தார் மீனாட்சி. இதுகுறித்து தனது முதல் கணவரிடம் தெரிவிக்க, அதுவே மிகப்பெரிய பிரச்சினையாக வெடித்திருக்கிறது. அதற்கு நடுவே குழந்தைகளின் வாழ்க்கையையும் பார்க்கவேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட, அவை அனைத்தையும் ஒரு கட்டத்தில் சுமுகமாக முடித்துவைத்து அவரை திருமணம் செய்திருக்கிறார். இப்படி திருமணம் செய்துகொண்டாலும் எங்கு சென்றாலும் தனது குடும்பத்துடன் செல்வதையும் அவர்களுக்கான அங்கீகாரத்தை பெற்றுத்தருவதிலும் மிகவும் கவனமுடன் செயல்பட்டு வருகிறார் சநா. அதேபோல் திரைத்துறையில் முன்னணி இசையமைப்பாளராக உருவானபிறகு, தனது மகள் "தீ"க்கும் சினிமாவில் பாடும் வாய்ப்பு கிடைக்க, அவரை உற்சாகப்படுத்தும் நோக்கில் அவருக்கு உறுதுணையாக இருந்துவருகிறார் சந்தோஷ் நாராயணன். சமீபத்தில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கி, சூர்யா நடிப்பில் வெளிவந்திருக்கும் ‘ரெட்ரோ’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. எப்போதும் தனது பாடல்கள் உடனடியாக ஹிட்டாகாவிட்டாலும், ஒருசில ஆண்டுகள் கழித்து திடீரெனதான் ரீ-டிரெண்ட் செய்யப்படும். ஆனால் இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘கனிமா’ பாடல் வெளியானவுடனேயே சூப்பர் ஹிட்டடித்திருக்கிறது ஆச்சர்யம் என்பதோடு, முதலில் அந்த பாடல் மொக்கையாக இருந்ததாகவும் வெளிப்படையாகவே கூறியிருக்கிறார் சந்தோஷ்.