"ரஜினி சாரும் என் அப்பாவும் ஃப்ரெண்ட்ஸ்" - நடிகர் ராஜ்கமல்
ரஜினிகாந்திற்கும், தனது தந்தைக்கும் இடையே இருந்த நட்பு குறித்தும், லிங்கா படத்தில் நடித்த அனுபவம் குறித்தும் நடிகர் ராஜ்கமல் ராணி ஆன்லைனுக்கு பேட்டி அளித்துள்ளார்.;
சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களின் நினைவில் எப்போதும் தன்னை பதிய வைத்துக் கொண்டிருக்கும் நடிகர் ராஜ்கமல், இந்த இரண்டு திரைகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் என்னென்ன, மக்கள் தன்னை ஒரு நடிகராக அடையாளம் காணும் அனுபவம் எப்படி இருக்கும் என தனது திரையுலக அனுபவங்களை பகிர்ந்துள்ள ராணி ஆன்லைன் உடனான நேர்காணலின் இரண்டாம் பகுதியை இங்கு பார்ப்போம்.
லிங்கா படத்தில் நடிகர் ராஜ்கமல்
ரஜினிகாந்த் உடன் நடித்தது குறித்து கூறுங்களேன்?
அது மிகப்பெரிய பாக்கியம். அந்த பெருமை முழுவதும் எனது இரண்டாவது குருநாதர் கே.எஸ். ரவிக்குமார் சாரைத்தான் சாரும். அடிக்கடி சிவாஜி சாரின் படத்தை டிவியில் போட்டுவிட்டு இந்த பாட்டு எப்படி எடுத்தார்கள் என்று தெரியுமா? எனக்கேட்டு, அதைப்பற்றி ஒரு மணிநேரம் பேசுவார். அவ்வளவு விஷயங்கள் சொல்லியுள்ளார். என் வாழ்க்கையில் அவர்செய்த மிகப்பெரிய செயல் என்றால் எங்கள் ராஜ்கமல் ஷூட்டிங் ஹவுஸை திறந்து வைத்ததுதான். அவர் திறந்து வைத்ததிலிருந்து நாங்கள் ரொம்ப நல்லா இருக்கோம். தொழில் நன்றாக செல்கிறது. இது அவர் ஆசிர்வதித்த வீடுதான். லிங்கா படத்தில் ஒரு சீன் இருக்கிறது, செய்கிறாயா எனக்கேட்டார். தலைவரோடு ஒரு ஃப்ரேமில் வந்தால் போதாதா என்றேன். முதலில் ரஜினி சார் எங்கள் ஃபிரேமில் இல்லை. நான், இயக்குநர் ரங்கநாதன், ரவி மரியாஸ், அனுஷ்கா என நான்கு பேர்தான் முதலில் ஃபிரேமில் இருந்தோம். நாங்கள் நடித்து முடித்ததற்கு பின் ரஜினி சார் வந்து, தோளை தட்டிக்கொடுத்து, நல்லா பண்ண, உன்னுடைய பெயர் என்ன எனக்கேட்டார்.
ராஜ்கமல் என சொன்னதும், நல்லாருக்கு, கமல் சார் பேரு என தோளில் தட்டினார். அது நன்றாக இருந்தது. அவரும், எங்க அப்பாவும் நண்பர்கள். அந்த ஃபோட்டோக்களை அவரிடம் காட்டியதும், அட திருச்சி கணேஷ் பையனா? சொல்லவே இல்லையே எனக்கேட்டார். ஷூட்டிங்கில் சொல்ல வாய்ப்பு கிடைக்கவில்லை எனக் கூறினேன். பின்னர் அப்பா எப்படி இருக்கிறார்? அப்பா ஒரு பெரிய செயின் வைத்திருப்பார். அதை நான் வாங்கி போட்டுக்கொள்வேன் எனக் கூறினார். பின்னர் அண்ணாமலை படத்தின்போது அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை காட்டினேன். அதை பார்த்துவிட்டு எவ்ளோ முடி பாருப்பா, இப்போ எல்லாம் போச்சு. அப்போ ராஜா சின்ன ரோஜாவில் உன்னை பார்த்தேன். இப்போது லிங்காவில் கூட நடிக்கிறீர்கள். ரொம்ப சந்தோஷம் எனக்கூறி என்னை ஷூட்டிங் முடியும்வரை நான்கு நாட்கள் அவருடனே வைத்திருந்தார். லிங்கா எனக்கு மிகப்பெரிய அனுபவம். சிம்ப்ளிசிட்டிதான் ரஜினி சார். அதை அவரிடம் இருந்து கற்றுக் கொள்ளலாம்.
தனது மனைவி லதாராவ் உடன் நடிகர் ராஜ்கமல் (இடது) - பிவி 999 படத்தில் ராஜ்கமல் (வலது)
ஜோடி நம்பர் 1 எப்படி நிகழ்ந்தது?
எல்லாவற்றிற்கும் காரணம் விஜய்டிவிதான். அந்த நேரத்தில் எனக்கும், லதாவுக்கும் வாய்ப்பு கொடுத்தது மிகப்பெரிய விஷயம். ஏனெனில் சேத்தன், தேவதர்ஷினி, விஜய் ஆதிராஜ், பிரேம், ஆதி, பரத் கல்யாண் என பெரிய பெரிய ஜாம்பவான்கள் இருந்தனர். இதில் சிறியவர்கள் என்றால் நானும், லதாவும்தான். எங்களுடன் சேர்ந்து ராகவ், ப்ரீத்தா. பயங்கரமான செட் அது. முதலில் எங்களை அழைத்தபோது லதா, இதெல்லாம் நமக்கு செட் ஆகுமா? எனக்கேட்டார். நான்தான், எல்லோரிடமும் பழகும் அனுபவம் கிடைக்கும் போலாம் எனக்கூறினேன். இவர்களை எல்லோரையும் ஸ்கீரினில்தான் பார்த்திருப்போம். அங்கு சென்றவுடன்தான் அவர்களுக்குள் இருக்கும் குழந்தை வெளிவந்தது. அதில் மூன்றாவது பாட்டு என் அப்பாதான் தேர்வு செய்துகொடுத்தார். என் அப்பாவுக்கு ஜெய் சார்போல ஜெமினி கணேசன் மீது ஒரு ஈர்ப்பு. அதனால் ‘தேன் நிலவு’ படத்தில் இருந்து ‘சின்ன சின்ன கண்ணிலே’ பாட்டைக் கூறினார். நான் இந்த பாட்டு கேட்டதே இல்லை எனக் கூறினேன். நல்லா இருக்கும் வை என கூறிவிட்டார். அந்த பாட்டுக்கு ஆடும்போதுதான் லதா கீழே விழுந்து காலை உடைத்து கொண்டார். இதில் என்னவென்றால் அதில் டைட்டில் வின் பண்ண பூஜாவை மறந்துவிட்டார்கள். ஆனால் நாங்கள் இப்போது எங்கு சென்றாலும் கால் நன்றாக இருக்கிறதா? என அனைவரும் கேட்கின்றனர். எங்களுக்குள் முன்னரே காதல் நிறைய இருந்தது. எல்லோருக்கும் தெரியவந்தது ஜோடி நம்பர் 1 மூலம்தான். ஜோடி நம்பர் 1-க்கு முன்னரே எங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டது. றெக்க கட்டிய மனசு சீரியலில் நானும், டிடி-யும்தான் இணை. எங்களை பிரிக்கும் கேரக்டர்தான் லதா ராவ். கேபி சாருக்கு லதாவையும் பிடிக்கும். அந்த சீரியலில் கடைசியில் எனக்கும், லதாவுக்கும்தான் கல்யாணம் நடக்கும். அப்போது சீரியல் பார்க்கும் எல்லோரும் நல்ல ஜோடி, நல்ல ஜோடி எனக்கூறுவதை கேட்டு, நான் ப்ரபோஸ் செய்தேன். லதா ஒத்துக்கிட்டாங்க. வீட்டிலும் எதுவும் சொல்லவில்லை. உனக்கு பிடித்திருந்தால் சரிதான் எனக் கூறிவிட்டார்கள்.
பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே! இந்த தலைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டது எப்படி?
முதலில் இன்னும் கொஞ்ச நேரம் என தலைப்பு வைத்திருந்தனர். தலைப்புதான் ரசிகர்களை உள்ளே கொண்டுவரும் என்ற அளவில் இன்றைய சினிமா உள்ளது. இதனால் இயக்குநர் வரதராஜனும், பட விநியோகஸ்தர் ஜினேணும் பிவி 999 என பெயர் வைத்தனர். பிவி 999 என்றால் என்ன எனக்கேட்டதற்கு, பென் விலை 999 எனக் கூறினார்கள். என்ன இது விவகாரமான படம் பெயராக இருக்கிறது. இதில் என்னப்போய் எனக் கேட்டேன்... நம்பி பண்ணுங்க. நல்லா இருக்கும் எனக் கூறினார்கள். அது இன்று உங்கள் மனதில் பதிந்துள்ளது என்றால் அந்த பெருமை அவர்களைத்தான் சாரும்.
கே. பாலச்சந்தர் இயக்கத்தில் பத்திற்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்த ராஜ்கமல்
சின்னத்திரைக்கும், வெள்ளித்திரைக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
இயக்குநர் கையாளும் விதம்தான் வேறுபட்டது என நான் நினைக்கிறேன். என்னை பொறுத்தவரை இந்த கேரக்டரை கொடுத்தார்களா, அதை நாம் நன்றாக செய்வோம். சின்னத்திரை என்றாலும் ஒன்றுதான், வெள்ளித்திரை என்றாலும் ஒன்றுதான். எதிலும் எந்த மாற்றமும் இல்லை.
கதாபாத்திரத்தை அப்படியே உள்வாங்கி நடிப்பது எப்படி?
முதலிலேயே கே. பாலச்சந்தர் சார் நிறைய சொல்லிக் கொடுத்துவிட்டார். இதுதான் அளவு, அதைத்தாண்டி போகாதே. ராஜ்கமல் என்பவனை மறந்துவிடு. செருப்பை கழட்டி வெளியே போட்டியா, அதுதான் ராஜ்கமல். நீ உள்ளே வரும்போது சிவக்கிருஷ்ணனாக உள்ளே வா எனக்கூறுவார். அஸ்வத்தாமன்தான் உள்ளே வரணும். ராஜ்கமல் வெளியே போயிடனும். நான் எங்கு போனாலும் ஷூட்டிங் இடத்தை தொட்டு வணங்கிவிட்டுதான் செல்வேன். அந்த செட் முடிந்து ட்ரெஸ்ஸை கழற்றும்வரை நான் சிவராமன்தான். அதற்குபின்தான் ராஜ்கமல். முதலிலேயே நம் கெட்டப் எப்படி இருக்க வேண்டும் என்பதை ரைட்டரிடம் கேட்டுக் கொள்வோம். அதற்கேற்றவாறு நம் லுக்கை மாற்றிக்கொண்டு 50 சதவீதம் நடித்தாலே போதும். நம்மை பெரிய நடிகன் எனக்கூறிவிடுவார்கள். அந்த சீரியல் முடியும்வரை அந்த கேரக்டராகவே இருப்பதுதான் நல்லது. அங்கு ராஜ்கமலை உள்ளே கொண்டுவரக்கூடாது. நடிக்க வேண்டாம், கேரக்டரை புரிந்துகொண்டால் போதும்.
பொதுஇடங்களில் பொதுமக்கள் உங்களை அடையாளம் கண்டு பேசும் அனுபவம் எப்படி இருக்கும்?
இப்போது வீட்டுக்கு வெளியே போனால் கூட தம்பி சிவராமன் எப்படி இருக்க எனக் கேட்பார்கள். இது அனுபவம் இல்லை வாழ்வாதாரம். சிவராமன் என யார் கூப்பிட்டாலும் திரும்பிவிடுவேன். சிவானு கூப்பிட்டா திரும்பிவிடுவேன். ஒன்றரை வருடங்களுக்கு முன்பு சரவணா எனக் கூப்பிட்டிருந்தால் திரும்பிவிடுவேன். எல்லோருக்கும் தெரிந்தது சிவராமன்தான். அந்த பதிவு கிடைத்ததே மிகப்பெரிய விஷயம். குழந்தைகள் எல்லாம் பார்க்கும்போது ட்ரைவர் அண்ணா எனக்கூப்பிடுவார்கள். ஆனந்தராகம் என ஒரு தொடரில் நடித்தேன். அப்போது சந்தோஷ் எனக் கூப்பிடுவார்கள். அந்தமாதிரியான அனுபவங்கள் தினந்தோறும் கிடைத்துக்கொண்டேதான் இருக்கும்.
எதிர்கால கனவு என்ன?
நடித்துக் கொண்டே இருக்கணும். வேறு எதுவும் இல்லை. யாராவது ஒருவரிடம் நடித்துக்கொண்டே இருக்கவேண்டும். ஷங்கர், கௌதம் கிட்டதான் நடிக்க வேண்டும் என்று இல்லை. இப்போது என்னை சரவணன் என்னும் இயக்குநர் இயக்கிக்கொண்டு இருக்கிறார். அவரை திருப்தி செய்தால்போதும். நான் சிறந்த நடிகன். ஜெய்சங்கர் சார் குணம்தான் என்னிடமும். தயாரிப்பாளர்தான் ராஜா, தெய்வம். அவரிடம் பணம் இருந்தால் கொடுத்துவிடுவார், இல்லை என்றால் விட்டுவிடு. கொஞ்சம் பணம் வாங்கிக்கோ. நீ என்ன மூட்டை தூக்குனியா, பயங்கரமா கஷ்டப்பட்டியா, போனா சாப்பாடு தராங்க, ட்ரெஸ் தராங்க, நடிக்கிற, அவ்வளவுதான். பத்தாயிரம் கம்மியா வாங்கினால் அந்த தயாரிப்பாளரின் மனதில் நீ சென்றுவிடுவாய். அவரிடம் பணம் வந்ததும் அவர் முதலில் கூப்பிடுவது நீயாகத்தான் இருப்பாய். அதனால்தான் வெள்ளிக்கிழமை நாயகனாக ஜெய்சங்கர் இருந்தார். எல்லோரும் செக்கை பற்றி பேசுகிறார்கள். அதெல்லாம் இருந்ததால்தான் அவர் இவ்வளவு பிஸியாக இருந்தார். முதலில் விட்டுவிட்டார். இரண்டாவது முரட்டுக்காளையில் ஆரம்பித்து, போய்கிட்டே இருந்தார். அத்தனை படங்கள், ரஜினி, கமல் உடன். அதற்கு காரணம் அவரின் மனநிலை. அதைத்தான் நானும் பின்பற்றி வருகிறேன். எனக்கு இப்படித்தான் வேண்டும், அப்படித்தான் வேண்டும் என்றெல்லாம் இல்லை. தினமும் நடிக்க வேண்டும். நடித்துக்கொண்டே இருக்கணும்.