சாவித்திரியை நான் அபகரிக்கவில்லை! வாழ்வுதான் கொடுத்தேன்! - ஜெமினி கணேசன்
நரசு என்னை கூர்ந்து பார்த்தார், எனது தடுமாற்றத்தை புரிந்து கொண்டவர் போல, புரிகிறதப்பா, கொஞ்ச நாளாகவே உன் மனதில் இப்படியொரு சலனம் இருப்பது எனக்குத் தெரியும்.;
(12-07-1981 தேதியிட்ட ராணி இதழில் வெளியானது)
நரசு என்னை கூர்ந்து பார்த்தார், எனது தடுமாற்றத்தை புரிந்து கொண்டவர் போல, புரிகிறதப்பா, கொஞ்ச நாளாகவே உன் மனதில் இப்படியொரு சலனம் இருப்பது எனக்குத் தெரியும். சாவித்திரிக்கு உன் மனதில் இடம் கொடுப்பது தப்பு இல்லை. ஆனால், இதன் காரணமாக எவ்வளவு பேர் மனவருத்தம் அடைவார்கள் என்பதை யோசித்துப்பார். விருந்து என்றால், வந்து மாலை போட்டு கை தட்டுவதற்கு நிறைய பேர் ஆசைப்படுவார்கள்.
உனது எதிர்காலத்தைப் பற்றி அவர்கள் அக்கறைப்படமாட்டார்கள். இது எல்லாம் இளம்பிள்ளை வாதம் போல. இளம்பிள்ளை பிடிவாதம்!. என் மாதிரி வயதான பிறகுதான், ஆகா எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டோம் என்பது புரியும். அப்போது, எல்லாமே காலங்கடந்துவிடும். ஏனென்றால், கடிகாரத்தை திருப்பி வைக்க முடியாது. ஆனால் ஒன்று உங்கள் தலையெழுத்து இப்படித்தான் என்றால், ஆண்டவனால் கூட ஒன்றும் செய்ய முடியாது. ஏனென்றால், பரமசிவனைக் கூட சனியன் பிடித்து ஆட்டினார் என்று புராணம் சொல்லுகிறது என்று ஒரு நீண்ட பிரசங்கமே செய்தார்.
நாகிரெட்டி
எங்கள் மீது அக்கறை அதிகம் கொண்ட விஜயா ஸ்டூடியோ அதிபர்கள் நாகிரெட்டி, சக்கரபாணி ஆகிய இருவரிடமும் சென்றோம். நீங்கள் இருவரும் இணைய வேண்டும் என்று கடவுள் எழுதிவிட்டான் போல் இருக்கிறது. நன்றாக இருங்கள் என்று வாழ்த்தினார்கள். இவ்வளவு பிரச்சனைக்கு பிறகு, 1956-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சாவித்திரியை என்னவளாக ஏற்றுக் கொண்டதோடு, அவள் தாயார் மற்றும் சுற்றத்தாரை பராமரிக்கும் பொறுப்பையும் நான் ஏற்றுக்கொண்டேன்!
ஜெமினி கணேசன் வாழ்க்கையில் அக்கறை காட்டிய விஜயா ஸ்டூடியோ அதிபர்கள் நாகிரெட்டி, சக்கரபாணி
நாங்கள் அப்போது அபிராமபுரத்தில் இருந்தோம்!. நடிகையை அடிமையாக்கிக் கொண்டு, வாழ்க்கையை வளமாக்கிக் கொள்கிறவர்கள் இல்லாமல் இல்லை. ஆனால், சாவித்திரியும், நானும் இணைந்தபோது, அவள் பேரில் கடன்தான் இருந்தது. அதனால், முதல் வேலையாக கடன் அடைப்பில் ஈடுபட்டோம். அதோடு, சாவித்திரியை இன்னும் பெரிய நடிகை ஆக்குவதிலும், அவளுக்கு பொருளும், புகழும் சேருவதிலும் பெரும் முயற்சி எடுத்தேன். வெறும் வாயை மெல்லுபவர்கள், பாவம், சாவித்திரி! ஜெமினியிடம் போனாள், அம்போ என்று ஆகிவிட்டாள் என, நாளை பேசக் கூடாதே!
கடன் தீர்ந்தது
சாவித்திரி, நட்சத்திர வாழ்க்கைக்கு உயர்ந்ததும், முன்பு என்னை சாடியவர்கள் எல்லாம் சரண் அடைந்தார்கள். தெலுங்கு மக்கள் என்னை "ஜென்டில்மேன்" என்றார்கள். "எங்கள் ஆந்திரதேச மாப்பிள்ளை" என்று செல்லமாக அழைத்தார்கள். தமிழ் திரை உலகில் உள்ளவர்கள் எங்களை "முன்னோடியான தம்பதிகள்" என்று புகழ்ந்தார்கள். படத்துக்கு எங்கள் இருவரையும் சேர்த்து ஒப்பந்தம் செய்தால், சலுகையும் கிடைக்கும். படமும் சீக்கிரம் நல்லபடியாக முடியும் என்று தயாரிப்பாளர்கள் முடிவு செய்தார்கள், பணமும் புகழும் குவியத் தொடங்கியது. ஒரே வருடத்தில் எல்லாக் கடனையும் அடைத்தோம்!
நட்சத்திர நடிகையாக சாவித்திரியை உயர்த்திய ஜெமினி!
அந்த வேகத்தில் மாம்பலம் சாலையில், சாவித்திரியின் பெயரில் ஓர் அழகான வீடு எழுப்பத் தொடங்கினேன். அந்த வீட்டுக்கு என்ஜினியர், சூப்பர் வைசர், திட்டம் தீட்டுபவர் எல்லாம் நான்தான். அதில் உள்ள ஒவ்வொரு செங்கலும் என் கண் முன்னால் வைத்து கட்டப்பட்டது!. சாவித்திரி பெரியப்பா சவுத்திரியின் ஆசி வேண்டும் என்பதற்காக, அவருக்கு சில வசதிகள் செய்து கொடுத்து, அவரை ஒரு திரைப்பட முதலாளி ஆக்கினோம்.
கிரகப்பிரவேசம்
சாவித்திரி ஏழைக் குடும்பத்தில் பிறந்தவளாக இருந்தாலும், அவளுக்கு பணத்தின் அருமை எப்பொழுதும் தெரிந்தது இல்லை. ஒருநாள், "என் சொத்தை எல்லாம் உங்கள் பேரிலேயே வைத்துக் கொள்ளுங்கள், பாதுகாப்பாக இருக்கும்" என்று என்னிடம் சொன்னாள். (அந்தப் பேச்சைக் கேட்டு இருந்தால் எல்லாம் உருப்படியாக நடந்து இருக்குமோ என்று இப்போது எண்ணுகிறேன்.) அதற்கு நான், "அசடே! அது தவறு, அவரவர் சொத்து அவரவர் பேரில் இருப்பதுதான் நல்லது. நாம் அன்பை பரிமாறிக் கொள்வது வேறு, பணம் வேறு. எனக்கு வேறு குடும்ப கவலைகள் இருக்கின்றன.
ஆகையால், தனித்தனியாக சொத்து இருந்தால், தனித்தனியாக வருமான வரி கட்டுவதுதான் சரி. மேலும், உன்னை சொத்துக்காகவா சேர்த்துக் கொண்டேன். அப்படி நீ நினைக்காவிட்டாலும், ஊர் வாயை அடைக்க முடியாது. எனக்கு திடீர் என்று ஏதாவது ஆகிவிட்டால் நீ குழம்பக்கூடாது" என்று கூறிவிட்டேன்.
திரைப்பட காட்சி ஒன்றில் சாவித்திரி - ஜெமினி
எனக்கு, "ஜெமினி கெட்டிக்காரர்" என்று ஒரு பட்டப்பெயர் உண்டு. அனால், எனக்கு தொழில் சாமர்த்தியம் அறவே கிடையாது. கணக்குப் பார்த்து, கணக்கு எழுதி பழக்கமில்லை. ஆற்றில் போட்டாலும் அளந்துபோடு என்பது முதுமொழி. ஆனால், எனக்கு காசை அளக்கவும் தெரியாது; கப்சா விடவும் தெரியாது. படத் தயாரிப்பாளரிடம் என்ன ஒப்பந்தம்? எவ்வளவு பாக்கி என்பது கூட எனக்கு மறந்துவிடும். இப்படி பல லட்சங்களை நாங்கள் இழந்து இருக்கிறோம். அதனால் சாவித்திரிக்கு, வாடகை முதலியவற்றில் இருந்து மாதம் ரூ.10 ஆயிரம் வருமானம் வரும்படி ஒரு ஏற்பாடு செய்து வைத்தேன். எல்லாம் முடிந்து, 1958-ம் ஆண்டு மத்தியில் அபிபுல்லா சாலையில் கட்டிய புதிய வீட்டுக்கு கிரகப் பிரவேசம் செய்தோம்.
நான் ராமன் அல்ல! கிருஷ்ணன்!
நான் ராமன் அல்ல, ராவணனும் அல்ல, கிருஷ்ணன் என்று வேண்டுமானால் சொல்லி விட்டுப்போங்கள். ராவணன் சீதையைத் தூக்கிக் கொண்டு போனதுபோல, நான் சாவித்திரியை அபகரிக்கவில்லை. வாழ்வுதான் கொடுத்தேன்!. அந்த வாழ்வு உண்மையானது. நான் காட்டிய அன்பு தூய்மையானது!. ஆனாலும் நான் செய்தது சரியா?
தாய்க்குப்பின் தாரம் என்பது முதுமொழி. தாய்க்கு சமமாக தாரம் அமைய வேண்டும் என்று எண்ணுவது இயற்கை. தாய் இல்லாக் குறையைப் போக்க வேண்டியவள் தாரம்!. அதே நேரம், ஒருவருக்கு ஒரு தாய்தான் இருக்க முடியும் என்பதைப் போல, ஒருவருக்கு ஒரு தாரம்தான் இருக்க முடியும் என்பதை ஜீரணித்துக் கொள்வது சிலருக்கு கடினமாக இருக்கலாம். ஆனால், இந்த உண்மையை உணர்ந்தவர்களின் வாழ்க்கைதான் நல்லபடியாக அமைந்து இருக்கிறது!.
'மாய சுந்தரி' திரைப்படத்தில் ஜெமினி - சாவித்திரி
எத்தனையோ ஜமீன்தார்கள், நவாப்புகள், அரசர்கள் நாற்றுக்கணக்கான மனைவிகள் வைத்துக்கொண்டு இருந்தார்கள் என்று நாம் படித்து இருக்கிறோம். அவர்களை "ஐயோ பாவம்" என்று சொல்லுவதா? இல்லை "அடி சக்கை" என்று நாக்கைத் தொங்க விடுவதா?
ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவி பொறுப்பை ஏற்றுக் கொண்டவர்கள் மகிழ்ச்சியாக இல்லையா? என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், அது மிகக் குறைவே!. இரண்டு மனைவி, மூன்று மனைவி என்று போகிறவன், இங்கே, அங்கே என்று அலைந்து, அன்பைப் பங்கிட்டு, மறைமுகமாக தன் ஆயுளை குறைத்துக் கொள்கிறான் என்பதே உண்மை!.
ஜெமினி சார்! எப்போது இருந்து சார் இந்த வேதாந்தம் என்று கேட்கிறீர்களா? பத்து ஆண்டாகத்தான் சார். இது என் புத்திக்கு எட்டியது!. அனுபவம் புதுமை அல்ல; பழமை.
(தொடரும்)