மீண்டும் வைரலாகும் ஓவியா வீடியோ! விஜய் சேதுபதி மீது பாலியல் புகார்! என்ன நடக்கிறது கோலிவுட்டில்?
‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்திற்கு பிறகு வெளியான சூர்யாவின் எந்தப் படங்களும், அப்படத்தின் வசூலை தாண்டவில்லை என்பதுதான் உண்மை என இயக்குநர் பாண்டிராஜ் பேசியிருப்பது சூர்யா ரசிகர்களை பெரும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் சிக்கந்தர் பட தோல்விக்கு மொழிதான் காரணம் என இயக்குநர் முருகதாஸ் பேசியிருப்பதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இத்துடன் சேர்த்து, நடிகர் விஜய் சேதுபதி மீதான பாலியல் புகார், மீண்டும் வைரலாகும் ஓவியாவின் வீடியோ உள்ளிட்ட சினிமா துறையில் இந்த வாரம் நடைபெற்ற சில சுவாரசிய தகவல்களை காண்போம்.
விஜய் சேதுபதி மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்த ரம்யா மோகன்
தன் மீதான செக்ஸ் புகாருக்கு நடிகர் விஜய் சேதுபதி பதில்
ரம்யா மோகன் என்ற பெண், சில தினங்களுக்கு முன் எக்ஸ் தள பக்கத்தில் சில பதிவுகள் போட்டிருந்தார். அதில், கோலிவுட்டின் காஸ்டிங் கவுச் சம்பவங்களுக்கும் விஜய் சேதுபதிக்கும் தொடர்பு இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார். கடந்த சில ஆண்டுகளாக ஒரு பெண் விஜய் சேதுபதியால் பயன்படுத்தப்பட்டதாகவும், இப்போது அந்த பெண் மறுவாழ்வு மையத்தில் இருப்பதாகவும் அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. விஜய் சேதுபதியின் கேரவனுக்கு வருவதற்காக அந்த பெண்ணுக்கு ரூ.2 லட்சம் என்றும், கேரவன் ஓட்டுபவருக்கு ரூ.50 ஆயிரம் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்தப் பதிவு வைரலான சில மணி நேரங்களில் நீக்கப்பட்டது. இதற்கு மீண்டும் விளக்கம் கொடுத்த ரம்யா மோகன், சம்பந்தப்பட்ட பெண்ணின் பாதுகாப்பிற்காக பதிவுகளை நீக்கியதாக குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள விஜய் சேதுபதி, "என்னை பற்றி கொஞ்சம் தெரிந்தவர்களுக்கு கூட, இது உண்மை இல்லை என்று தெரியும். அவர்களே இதை பார்த்தால் சிரிப்பார்கள். இது போன்ற அசிங்கமான குற்றச்சாட்டுகள் என்னை பாதிக்காது. ஆனால் என் குடும்பத்தினர் இதனால் மன உளைச்சளுக்கு ஆளாகியிருக்கின்றனர்" என்று தெரிவித்துள்ளார். இது குறித்து சைபர் கிரைமில் விஜய் சேதுபதி தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பல்டி படத்தில் நடிகர் ஷேன் நிகம்
முத்தக் காட்சி அவசியமற்றது - நடிகர் ஷேன் நிகாம்!
மலையாளத்தில் புகழ்பெற்ற கும்பளாங்கி நைட்ஸ், ஆர்டிஎக்ஸ், இஷ்க் படப்புகழ் நடிகர் ஷேன் நிகாம், தமிழில் மெட்ராஸ்க்காரன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது கபடியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள ‘பல்டி’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் ஓணம் பண்டிகையையொட்டி இம்மாதம் 29ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள முத்தக் காட்சிகள் குறித்து பேசிய நடிகர் ஷேன் நிகாம், “என்னைப் பொறுத்தவரையில் முத்த காட்சிகள் என்பது அவசியமற்றது. காதலை வெளிப்படுத்த பல்வேறு வழிகள் உள்ளன. படத்திற்கு அந்த காட்சி அவசியம் என்று இயக்குநர் கூறினால், அதில் நான் நடித்துதான் ஆகவேண்டும். ஆனால் ஒரு படத்தை குடும்பத்துடன் அமர்ந்து எந்தவித சங்கடமும் இன்றி நான் பார்க்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து” என தெரிவித்துள்ளார். ஷேன் நிகாமின் இந்த கருத்தை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
கணவர் சரத்குமாருடன் மருத்துவமனையில் இருக்கும் நடிகை ராதிகா
நடிகை ராதிகா மருத்துவமனையில் அனுமதி!
சினிமா, சின்னத்திரை என்று ஒரு கலக்கு கலக்கிய நடிகை ராதிகா தற்போது, அரசியலிலும் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் ராதிகா சரத்குமார் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த செய்தி திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை ராதிகா விரைவில் குணமடைந்து திரும்ப வேண்டும் என ரசிகர்கள் பலரும் சமூக ஊடகங்களில் பிரார்த்தனைகள் மற்றும் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
தொழிலதிபரிடம் ரூ. 5 மோசடி செய்த வழக்கில் நடிகர் பவர்ஸ்டார் கைது
பணமோசடி... நடிகர் பவர்ஸ்டார் கைது!
‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் பிரபலமானவர் பவர்ஸ்டார் சீனிவாசன். சந்தானத்துடன் இவர் இணைந்து நடித்த காட்சிகள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வந்தார். தற்போது, ‘பர்ஃபியூம்’ என்ற புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் பவர்ஸ்டார் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2013ஆம் ஆண்டு தொழிலதிபர் ஒருவரிடம் ரூ.1000 கோடி கடன் வாங்கித் தருவதாக கூறி, அவரிடம் இருந்து ரூ.5 கோடி பெற்றுள்ளார். பின்னர் கடன் எதுவும் வாங்கித் தராமால் ஏமாற்றி வந்த பவர் ஸ்டார் மீது அந்த தொழிலதிபர் புகார் அளிக்க, அப்போதே கைது செய்யப்பட்ட பவர்ஸ்டார், இந்த வழக்கு தொடர்பாக பீகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இதனைத்தொடர்ந்து ஜாமினில் வெளிவந்த சீனிவாசன் மீது பல மோசடி புகார்கள் பதியப்பட்டன. மேலும் விசாரணையில் பல இடங்களில் இவர் இதுபோல மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. பணமோசடி தொடர்பாக சென்னையிலும் இவர்மீது 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லி தொழில் அதிபரை ஏமாற்றிய வழக்கில் பவர்ஸ்டார் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது. ஆனாலும் அவர் ஆஜராகாமல் இருந்து வந்த சூழலில், டெல்லி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அடுத்து, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பவர்ஸ்டார் சீனிவாசனை கைது செய்து, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடிகர் தர்ஷனின் ரசிகர்கள் மீது புகாரளித்த ரம்யா
நடிகை ரம்யாவுக்கு கொலைமிரட்டல் விடுக்கும் தர்ஷன் ரசிகர்கள்!
தனது ரசிகர் ரேணுகாசுவாமியை கொலை செய்த வழக்கில் நடிகர் தர்ஷனுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் சமீபத்தில் ஜாமின் வழங்கியது. இதற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த கண்டனத்திற்கு வரவேற்பு தெரிவித்து நடிகை ரம்யா சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை போட்டிருந்தார். இதனால் தர்ஷனின் ரசிகர்கள் பலரும் ரம்யாவிற்கு மெசேஜ் வாயிலாகவும், ஃபோன் செய்தும் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். மேலும் மீம்ஸ் மூலம் ரம்யாவை ஆபாசமாக சித்தரித்து மெசேஜ்களை அனுப்புவதை வாடிக்கையாக வைத்து வந்துள்ளனர். இதுதொடர்பாக தனது இன்ஸடாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை பதிவிட்ட ரம்யா, ரேணுகாசுவாமியின் மெசேஜ்களுக்கும், தர்ஷன் ரசிகர்களின் மெசேஜ்களுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. ஏனெனில் இவர்களின் மனநிலை அனைத்தும் பெண்களை பாலியல் வன்கொடுமை, பாலியல் அச்சுறுத்தல், கொலை செய்யும் தன்மையை கொண்டவையாகவே இருக்கின்றன” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதனைத்தொடர்ந்தும் அவருக்கு மிரட்டல்கள் விடுக்கப்பட்ட நிலையில், பெங்களூரு மாநகர காவல் ஆணையர் மற்றும் சைபர் கிரைம் போலீசாரிடம், இன்ஸ்டாகிராம் மூலம் தனக்கு கொலை மிரட்டல் விடுத்த 43 நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி ரம்யா புகார் அளித்தார். சைபர் கிரைம் போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே இதுபோன்ற செயல்கள் செய்வதை தனது ரசிகர்களிடம் சொல்லி தர்ஷன் நிறுத்த வேண்டும் எனவும் ரம்யா தெரிவித்தார். திவ்யா ஸ்பந்தனா என்ற இயற்பெயர் கொண்ட நடிகை ரம்யா, தமிழ் மொழியில் பொல்லாதவன், கிரி ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சோனி மியூசிக் நிறுவனத்திற்கு எதிரான இளையராஜாவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்
இளையராஜா மனு தள்ளுபடி!
அனுமதி இல்லாமல் தனது பாடல்களை படங்களில் பயன்படுத்துவோர் மீது இளையராஜா வழக்கு தொடர்ந்து வருகிறார். இதனிடையே இளையராஜா இசையமைத்த பாடல்களில் 536 ஆல்பங்கள் சோனி மியூசிக் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்திடம் உள்ளது. இதில், 228 ஆல்பங்கள் பொதுமக்களுக்குக் கிடைத்ததாகவும், இதனால் சோனி மியூசிக் நிறுவனத்தின் ஒலிப்பதிவு பதிப்புரிமையை இளையராஜா நிறுவனம் மீறியதாகவும் இளையராஜா மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. ஆனால் அந்த பாடல்களுக்கான உரிமை தங்களிடம் தான் இருப்பதாக இளையராஜா தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.
இந்நிலையில், பதிப்புரிமையை மீறிய குற்றத்திற்காக ரூ. 1.5 கோடி நஷ்ட ஈடு கோரி, இளையராஜா நிறுவனத்தின் மீது மும்பை உயர் நீதிமன்றத்தில் சோனி நிறுவனம் 2022 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், வழக்கின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி, இளையராஜா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கானது தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதிகள் கே. வினோத் சந்திரன் மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
எதற்கும் துணிந்தவன் படத்தில் நடிகர் சூர்யா - இயக்குநர் பாண்டிராஜ்
“என் படத்தின் வசூலை சூர்யாவின் எந்த படமும் தாண்டவில்லை” - பாண்டிராஜ்!
பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன், யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில், சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியான திரைப்படம் ‘தலைவன் தலைவி’. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இயக்குநர் பாண்டிராஜ் தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நேர்காணலில் பேசிய பாண்டிராஜ், “சூர்யா நடித்த ’எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்திற்கு, விமர்சனரீதியாக நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை. இருந்த போதிலும் வசூல்ரீதியில் அந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. கடைக்குட்டி சிங்கம் படத்திற்காக கொடுத்த உழைப்பை விட, அதிகளவு சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்திற்காக உழைத்தோம். படப்பிடிப்பு சமயத்தில் கொரோனா தொற்றால் கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் அந்த படத்திற்கு செலவழித்து இருக்கிறோம். இருந்த போதிலும் ஒரு சில விஷயங்கள் சேர்ந்து அமைந்து நடக்க வேண்டும்.
அப்போதுதான் அது மாபெரும் வெற்றி படமாக மாறும், அது மாதிரியாக நடக்காதபட்சத்தில் அதற்கான பொறுப்பானது இயக்குநரை சார்ந்தது. அதை நான் ஒப்புக் கொள்கிறேன். அதே வேளையில் அடுத்ததாக வெளியான சூர்யாவின் படங்கள், எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் வசூலை தாண்டவில்லை என்பதுதான் உண்மை” எனப் பேசியிருந்தார். இது சூர்யாவின் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பின்வந்த ‘கங்குவா’, ‘ரெட்ரோ’ படங்கள் எதற்கும் துணிந்தவன் படத்தைவிட நல்ல வசூலையே பெற்றன என அவர்கள் கூறுகின்றனர்.
ஹிந்தி தெரியாததே சிக்கந்தர் பட தோல்விக்கு காரணம் - முருகதாஸ்
மொழியே காரணம்... ‘சிக்கந்தர்’ தோல்வி குறித்து ஏ.ஆர். முருகதாஸ் பேச்சு!
இயக்குநர் முருகதாஸ் பாலிவுட் ஸ்டார் சல்மான்கானை வைத்து சமீபத்தில் இயக்கிய சிக்கந்தர் படம் போதிய வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் இப்படத்தின் தோல்விக்கு, தனக்கு ஹிந்தி மொழி தொடர்பான புரிதல் இல்லாததே முக்கிய காரணம் என முருகதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசிய முருகதாஸ், “நம்ம தாய்மொழியில் படம் எடுக்கும்போது, ஒரு வலிமை கிடைக்குது. இங்க நடக்கற விஷயங்கள், ட்ரெண்ட்ஸ், இளைஞர்கள் என்ன விரும்பறாங்கன்னு நமக்கு தெரியும். ஆனா, ஹிந்தி மாதிரி ஒரு புது மொழிக்கு மாறும்போது, அந்த புரிதல் இல்லை. ஸ்க்ரிப்டை எழுதி, முதல்ல ஆங்கிலத்துல மொழிபெயர்ப்பாங்க, பிறகு இந்தியில் மொழிபெயர்ப்பாங்க. இதனால, செட்ல என்ன நடக்குதுன்னு துல்லியமா புரியறது கஷ்டம். இது ஒரு கை இல்லாத உணர்வு மாதிரி இருக்கு” என தெரிவித்துள்ளர். இது இணையத்தில் பெரும் விவாதத்தை தூண்டியுள்ளது.
மலையாள புகழ் ராப் பாடகர் வேடன்
ராப் பாடகர் வேடன்மீது பாலியல் வன்கொடுமை புகார்!
கேரளாவைச் சேர்ந்த பிரபல ராப் பாடகர் வேடன்மீது, மருத்துவர் அளித்த பாலியல் வன்கொடுமை புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 2021 முதல் மார்ச் 2023 வரை தன்னை திருமணம் செய்வதாக உறுதி அளித்து, வேடன் பலமுறை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும், மேலும் தன்னிடம் இருந்து பல முறை பணம் பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எர்ணாகுளத்தில் உள்ள திருக்காக்கரை போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். வேடன்மீது புகார்கள் வருவது இது ஒன்றும் புதிதல்ல. கடந்த ஏப்ரல் மாதம் கூட கஞ்சா வைத்திருந்ததாக கூறி கைது செய்யப்பட்டார். அந்த வழக்கை தொடர்ந்து புலிப்பல் கொண்ட செயின் அணிந்திருந்ததாக வனத்துறையால் கைது செய்யப்பட்டார். இதுபோக கடந்த மே மாதம் வேடன் தனது பாடல்கள் மூலம் பிரதமர் மோடி மீது அவதூறு கருத்துகளைப் பரப்புவதாகவும், சாதிப் பிரிவினையை ஏற்படுத்துவதாகவும் கேரளாவைச் சேர்ந்த பாஜக பிரமுகர் ஒருவர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கடிதம் எழுதி புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
80ஸ் கதாநாயகிகள் லுக்கில் ஓவியா
மீண்டும் வைரலாகும் ஓவியா வீடியோ
கேரளாவை பூர்வீகமாக கொண்ட ஓவியாவுக்கு தமிழ்நாட்டில்தான் ரசிகர்கள் பட்டாளம் அதிகம். கங்காரு என்ற மலையாளப் படத்தின் மூலம் அறிமுகமான ஓவியாவுக்கு தனது தொடக்க காலத்தில் மிகப்பெரிய வெற்றியை ஈட்டிக் கொடுத்த படம் என்றால், தமிழில் அவர் நடித்த களவாணி தான். அதற்கடுத்து பல படங்கள் நடித்த ஓவியாவுக்கு பெரிய ஹிட் எதுவும் அமையாத நிலையில், பிக் பாஸில் கலந்துகொண்டார். அதில் அவருக்கு பெரும் ஆதரவு கிடைத்தபோதும், அதன் பின்னர், சில தவறான படங்களில் கமிட் ஆகி இமேஜை இழந்தார். சில மாதங்களுக்கு முன்னர், இணையத்தில் பரவிய வீடியோ ஒன்றில் இருக்கும் பெண் ஓவியாதான் என பலரும் கூறினார்கள். இது தொடர்பாக அவர் போலீசில் புகார் அளித்தார்.
இந்நிலையில் அண்மையில் ஓவியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளது. அந்த வீடியோவில் வின்டேஜ் கதாநாயகிகள் போல உடை அணிந்து, பகலில் ஓர் இரவு படத்தில் இடம் பெற்ற இளமை எனும் பூங்காற்று பாடலுக்கு நடனமாடியுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.