தனுஷ் மீது பார்த்திபனுக்கு இவ்வளவு அன்பா! ஏன் இந்த பாசம்?

தமிழ் சினிமாவில், பார்த்திபன் என்ற பெயர், வழக்கமான எல்லைகளைத் தாண்டி, புதிய பாதைகளைத் தேடும் கலைஞனின் அடையாளமாக கருதப்படுகிறது.;

Update:2025-08-26 00:00 IST
Click the Play button to listen to article

தமிழ் சினிமாவில், பார்த்திபன் என்ற பெயர், வழக்கமான எல்லைகளைத் தாண்டி, புதிய பாதைகளைத் தேடும் கலைஞனின் அடையாளமாக கருதப்படுகிறது. இவரது படைப்பாற்றல், தனித்துவமான சிந்தனை, அபாரமான நடிப்பு திறன் ஆகியவை அவரை ஒரு தனித்துவமான ஆளுமையாக நிலை நிறுத்தியுள்ளன. அதே போல, நடிகர் தனுஷ், தனது கடின உழைப்பு, நடிப்பு திறன் மற்றும் பன்முகத் திறமையால், தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக உயர்ந்துள்ளார். இவ்விருவரும் அறிமுகமான காலம் வெவ்வேறாக இருந்தாலும், இவர்களுக்கு இடையிலான நட்பு, திரைத்துறையில் அரிதான ஒரு பிணைப்பாக பார்க்கப்படுகிறது. பார்த்திபனின் சமீபத்திய சமூக ஊடகப் பதிவு, தனுஷுடன் மீண்டும் இணைந்த அனுபவத்தைப் பற்றிப் பகிர்ந்து, அவர்களின் சினிமா பயணத்தில் நிகழ்ந்த சில முக்கியமான தருணங்களை நினைவுப்படுத்தியது. இந்தப் பயணத்தில், இவர்களுக்கு இடையே சில பட வாய்ப்புகள் தவறியிருந்தாலும், இருவரும் ஒருவரை ஒருவர் மதிக்கும் கலைஞர்களாக, பல சாதனைகளை தொடர்ந்து நிகழ்த்தி வருகின்றனர். அதன் வெளிப்பாடாகதான் பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு தவறவிட்ட ஒரு அற்புத வாய்ப்பை ‘இட்லி கடை’ படத்தின் மூலம் மீண்டும் இறுக பற்றி பிடித்து இருக்கிறார் நடிகர் பார்த்திபன். இது குறித்த விரிவான தகவலை இந்த தொகுப்பில் காணலாம்.

கை நழுவிப் போன தேசிய விருது

நடிகர் பார்த்திபனின் சமீபத்திய 'X' பதிவு, ரசிகர்களுக்குப் பல பழைய நினைவுகளை கிளறிவிட்டுள்ளது. அதில் அவர் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கிய 'ஆடுகளம்' படத்தில் நடிக்க முடியாமல் போனது குறித்து வருத்தத்துடன் குறிப்பிட்டிருந்தார். இந்தப் படம், நடிகர் தனுஷின் திரை வாழ்வில் ஒரு மைல்கல்லாக அமைந்தது. இந்தத் திரைப்படத்தில், சேவல் சண்டை நடத்தும் 'பேட்டைக்காரன்' என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடிக்கவிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், சில தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த வாய்ப்பை அவர் இழந்தார். பின்னர் அந்தக் கதாபாத்திரத்தில் நடிகர் ஜெயபாலன் மிக அற்புதமாக நடித்து, தனது சிறந்த பங்களிப்புக்காக ரசிகர்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றார். 'ஆடுகளம்' திரைப்படம், 2011ஆம் ஆண்டு வெளியாகி, விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர் என ஆறு தேசிய விருதுகளை வென்று, தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்தது. இந்த வெற்றியில் ஜெயபாலனின் நடிப்பு மிக முக்கிய பங்கு வகித்தது. ஒருவேளை பார்த்திபன் அந்த பாத்திரத்தில் நடித்திருந்தால், அது அவரது கலை பயணத்தில் ஒரு புதிய பரிமாணத்தை தந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.


'இட்லி கடை' திரைப்படத்தில் நடித்தது குறித்து பார்த்திபனின் எக்ஸ் பதிவு

இதேபோல், தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாக இருந்த மற்றொரு கனவு படமான ‘சூதாடி’ திரைப்படமும் படப்பிடிப்புக்கு சில நாட்கள் முன்பு கைவிடப்பட்டது. இந்தப் படத்தில் நடிகை மீனாட்சி, சமந்தா ஆகியோருடன் பார்த்திபன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தார். ‘ஆடுகளம்’ படத்திற்குப் பிறகு, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தப் படம், நிதி நெருக்கடி மற்றும் சில தவிர்க்க முடியாத காரணங்களால் முழுமையடையாமல் துவக்கத்திலேயே நிறுத்தப்பட்டது. இது குறித்தும் பார்த்திபன் சமீபத்திய தனது பதிவில், “இணைந்து நடித்த ‘சூதாடி’ இடையில் நின்று போனது” என்று குறிப்பிட்டிருந்தது, அந்தப் படத்தின் மீதான ஏமாற்றத்தை வெளிப்படுத்தியது. இந்த இரு பட வாய்ப்புகளும் கைநழுவி போன நிகழ்வு, பார்த்திபன் மற்றும் தனுஷின் கலைப் பயணத்தில் ஒரு துரதிர்ஷ்டவசமான இடைவெளியை அப்போது ஏற்படுத்தி இருந்தாலும், இந்தப் பிணைப்பு வேறு வடிவங்களில் மீண்டும் உருவெடுத்தது.

புதிய பரிமாணத்தில் பார்த்திபன்

‘ஆடுகளம்’ மற்றும் ‘சூதாடி’ போன்ற படங்களில் வாய்ப்புகள் கைநழுவிப் போனாலும், பார்த்திபன் தனது தனித்துவமான நடிப்பால் தனுஷை மட்டுமல்ல அவரது குடும்பத்தை சேர்ந்த பலரையும் ஈர்த்திருந்தார். அதன் வெளிப்படாகத்தானோ என்னவோ தனுஷின் சகோதரர் செல்வராகவன் இயக்கி, பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய படமான ‘ஆயிரத்தில் ஒருவன்’-ல், சோழ மன்னனாக பார்த்திபன் நடித்திருந்தார். படத்தின் மையக் கருவானது, சோழர்கள் எடுத்து சென்ற சிலையையும், அவர்களது கடைசி வாரிசையும் கண்டுபிடிப்பதுதான். அந்த வகையில் இப்படத்தில் சோழ மன்னனின் கதாபாத்திரம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதனை உணர்ந்து பார்த்திபன் அந்த கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியிருந்த விதம் பலரையும் மெய் சிலிர்க்க வைத்திருந்தது. குறிப்பாக அவரின் கம்பீரமான தோற்றம், அழுத்தமான வசன உச்சரிப்பு மற்றும் கதாபாத்திரத்தின் ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்தும் விதம் ஆகியவை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் இவரது நடிப்பு, படத்தின் கதை கருவுக்கு ஒரு புதிய பரிமாணத்தை அளித்ததால். இந்த படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான ஃபிலிம்பேர் விருது பார்த்திபனுக்கு கிடைத்தது.


'ஆயிரத்தில் ஒருவன்' மற்றும் 'நானும் ரௌடிதான்' திரைப்படங்களில் பார்த்திபன்

அதன்பிறகு, தனுஷின் 'வொண்டர்பார் ஃபிலிம்ஸ்' தயாரிப்பில் உருவான 'நானும் ரௌடிதான்' திரைப்படத்தில், பார்த்திபன், 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் நடித்த சோழ அரசனுக்கு முற்றிலும் மாறான ஒரு வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். இதில் ‘கிள்ளிவளவன்’ என்ற அந்த கதாபாத்திரத்தில், ஒரு ரௌடியாக பார்த்திபன் வெளிப்படுத்திய நடிப்பு, பெரும் பாராட்டைப் பெற்றது. குறிப்பாக இந்த படத்தில் அவரது டைமிங் சென்ஸ், நகைச்சுவை உணர்வு மற்றும் ஸ்டைலான தோற்றம் ஆகியவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. மேலும் இந்த மாறுபட்ட கதாபாத்திரம், ஒரு நடிகராக பார்த்திபனின் பன்முகத்திறமையை மீண்டும் நிரூபித்து பல பட வாய்ப்புகளை அவருக்கு பெற்று தந்தது. இருப்பினும் இப்படத்தில் தனுஷ் ஒரு தயாரிப்பாளராக மட்டுமே இருந்ததால், பார்த்திபனும், தனுஷும் இந்தப் படத்திலும் இணைந்து நடிக்கவில்லை.

‘இட்லி கடை’யில் ஒரு மினி இட்லி

இவ்வாறாக நடிகர் பார்த்திபனும், தனுஷும் இணைந்து பல படங்களில் பணியாற்ற வாய்ப்புகள் அமையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 14 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த எதிர்பார்ப்பு தற்போது நிஜமாகியுள்ளது. அதன்படி தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தில், தற்போது பார்த்திபன் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்துள்ளன. இந்த படத்தில் பார்த்திபன் ஒரு கெளரவ வேடத்தில், அதாவது அவர் கூறியுள்ள பாணியிலேயே 'மினி இட்லி' யாக நடித்து இருக்கிறார். இதுகுறித்து பார்த்திபன் தனது X சமூக வலைத்தளத்தில், 'ஆடுகளம்', 'சூதாடி' போன்ற வாய்ப்புகள் தவறிப் போனாலும், 'இட்லி கடை'யில் ஒரு சிறிய 'மினி இட்லி'யாக கெளரவ வேடத்தில் நடிக்க அவரே அழைத்த போது, மறுக்காமல் ஒப்புக் கொண்டேன் என்று பதிவிட்டுள்ளார். இது தனுஷ், பார்த்திபன் மீது கொண்டிருக்கும் மதிப்பை வெளிப்படுத்துவதோடு, பார்த்திபனின் நீண்ட நாள் கனவும் நிஜமாகியிருப்பதையும் காட்டுகிறது.


'ஆடுகளம்' படத்தில் தனுஷுடன் நடிப்பதை தவறவிட்ட நடிகர் பார்த்திபன்

இந்த ‘இட்லி கடை’ படம், வரும் அக்டோபர் 1-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் வித்தியாசமான முறையில் நடந்து வருகின்றன. அதாவது சாலையோர இட்லி கடைகளில் படத்தின் விளம்பரங்கள் ஒட்டப்பட்டு, பொதுமக்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்தகைய முயற்சி கூட பார்த்திபனின் பாணியை நமக்கு நினைவுப்படுத்துகிறது. இந்தப் படத்தில் தனுஷ், நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

கலைஞர்ககளின் நிஜமான நட்பு!

பார்த்திபன் மற்றும் தனுஷ் இடையேயான நட்பு என்பது வெறும் தொழில்முறைக்கு மட்டுமல்ல அது அதற்கும் அப்பாற்பட்டது. காரணம் பொதுவாகவே பார்த்திபன் திறமையான நபர்களை ரசிக்க கூடிய கலைஞர். அதன்படி தனுஷின் திறமையையும், கடின உழைப்பையும் பல மேடைகளில் பார்த்திபன் பாராட்டிப் பேசியிருக்கிறார். மேலும் தனுஷ், ஒரு கலைஞனாக, ஒரு தயாரிப்பாளராக, ஒரு இயக்குநராக, பன்முகத் திறமையாளராக வளர்ந்துள்ளதைப் பார்த்திபன் வியந்தும் பார்க்கிறார். அதன் வெளிப்பாடாகத்தான் தனது சமீபத்திய பதிவில், “இரும்பினும் சக்தி கொண்ட இதயத்தோடு, எறும்பினும் சுறுசுறு உழைப்போடு, சகலகலா வல்லவனாக, அகில இந்திய நட்சத்திரமாக தனுஷ் மிளிரினால் அது ஆச்சர்யமில்லை” என்று குறிப்பிட்டு, தனுஷின் திறமையை புகழ்ந்து தெளிவாகப் பதிவு செய்திருந்தார். அதேபோல், தனுஷும் பார்த்திபனின் கலைத்திறமையையும், தனித்துவமான அணுகுமுறையையும் மதித்துப் போற்ற கூடிய நபர். இதனால்தான் பார்த்திபன் போன்ற ஒர் அனுபவமிக்க, திறமையான கலைஞரை அன்றைய ‘ஆடுகளம்’ துவங்கி பல படங்களில் பயன்படுத்த முயற்சித்திருந்தார். தற்போது 14 ஆண்டுகளுக்கு பிறகும் தனது ‘இட்லி கடை’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க அழைத்தது, தனுஷ், பார்த்திபனின் மீது கொண்டிருக்கும் மதிப்பை உணர்த்துகிறது. அந்த வகையில் இந்தப் படத்தின் மூலம், தனுஷ் மற்றும் பார்த்திபன் மீண்டும் இணைந்து, ரசிகர்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவத்தை கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்