இரண்டாம் திருமணத்துக்கு தயாரான சமந்தா? - உறுதிப்படுத்திய ஃபோட்டோஸ்!
இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. கடந்த சில வருடங்களுக்கு முன்பு தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பெரும்பாலான முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்துவந்தார். ஆனால் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட முறிவு, உடல்நல பிரச்சினைகள் என அடுத்தடுத்து தனிப்பட்ட வாழ்க்கையில் சந்தித்த பல்வேறு சிக்கல்கள் மற்றும் சவால்களால் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இருந்தாலும் அவ்வப்போது படங்களில் நடித்துவரும் அவர், இனிமேல் தன்னால் தொடர்ந்து நடிக்கமுடியாது என்று கூறி தனது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். மேலும் தனது முன்னாள் கணவரின் திருமணத்திற்கு பிறகு எந்த நிகழ்ச்சிகளுக்கு சென்றாலும் உடனே எமோஷனலாகி அழுதுவிடுவதாக ஊடகங்களில் வீடியோக்கள் வெளியான நிலையில், அதுகுறித்து தற்போது விளக்கமளித்திருக்கிறார். இதனிடையே இந்தி இயக்குநர் ஒருவருடன் சமந்தா நெருங்கி பழகிவருவதாகவும் விரைவில் அவரை திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில், அதுகுறித்து அவர் எதுவும் வாய் திறக்கவில்லை. இனிமேல் நடிகையாக பார்க்க முடியாவிட்டாலும் திரைத்துறையில் ஒரு தயாரிப்பாளராக வலம்வர திட்டமிட்டிருக்கும் சமந்தா, அடுத்து என்ன செய்யப்போகிறார் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
அடுத்தடுத்து சந்தித்து வரும் சவால்கள்
சமந்தா திரைத்துறையில் அறிமுகமானதிலிருந்தே தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி ஹீரோயினாக வலம்வருகிறார். தன்னை செல்ஃப் மேட் வுமன் என்று அடையாளப்படுத்திக்கொள்ளும் சமந்தா அதற்கேற்றார்போல் நடந்தும்கொள்கிறார். தமிழ் திரையுலகில் ஒருசில ஹீரோக்களுடன் ஆரம்பத்தில் இணைத்து கிசுகிசுக்கப்பட்டாலும் சித்தார்த்துடன் காதலில் இருந்ததாகவும் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. அந்த பிரிவு குறித்த செய்தி அடங்குவதற்குள் தெலுங்கு ஹீரோ நாக சைதன்யாவுடன் காதலில் விழுந்தார். இவர்களுடைய காதல் திருமணத்தில் முடிந்த நிலையில் தென்னிந்திய திரையுலகின் நட்சத்திர ஜோடிகளில் ஒருவராக வலம்வந்தனர். ஆனால் இவர்களுடைய திருமண வாழ்க்கை ஒருசில ஆண்டுகளிலேயே தோல்வியில் முடிய இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
நாக சைதன்யாவுடனான பிரிவுக்கு பிறகு மையோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா
நாக சைதன்யா சமந்தாவை பிரிய நாகர்ஜுனா குடும்பம்தான் காரணம் என்று சொல்லப்பட்ட நிலையில், அவர்கள் ஜீவனாம்சமாக கொடுக்கவந்த பெரிய தொகையையும் மறுத்துவிட்டு அக்கினேனி குடும்பத்தைவிட்டு வெளியேறினார் சமந்தா. அதன்பிறகு மிகவும் கிளாமரான ரோல்களிலும், நெருக்கமான காட்சிகளிலும் நடித்துவந்த சமந்தாவுக்கு மையோசிட்டிஸ் என்ற நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவருடைய ரசிகர்கள் மிகுந்த வருத்தம் அடைந்தனர். இருந்தாலும் அதை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு திரைப்படங்களில் நடிக்க முயற்சித்தார். ஒரு கட்டத்தில் தீவிர சிகிச்சை எடுத்து முழுமையாக குணமடைந்தபிறகே நடிக்கவேண்டும் என்று துணிந்து முடிவெடுத்தார் சமந்தா. இருந்தாலும் ‘சிட்டாடல்’ என்ற வெப் தொடரில் மட்டும் நடித்துவந்தார். இந்நிலையில் சுமார் ஓராண்டு கால இடைவெளிக்கு பிறகு மலையாள சினிமாவில் நடிப்பதன்மூலம் மோலிவுட்டில் அறிமுகமாகிறார். உடல்நல குறைபாடு காரணமாக சிகிச்சை எடுத்துவந்தபோதிலும் அடிக்கடி ஃபோட்டோஷூட்கள் நடத்துவது, ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பாட்காஸ்ட்களை யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிடுவது என தன்னை பிஸியாக வைத்துக்கொள்கிறார். இதற்கிடையே தனது முன்னாள் கணவர் நாக சைதன்யா, நடிகை சோபிதாவை காதலித்து திருமணம் செய்துகொள்ள ஒட்டுமொத்த ரசிகர்களின் ஆதரவும் சமந்தா பக்கம் திரும்பியது. ரசிகர்களின் அன்புதான் தன்னை நல்ல நிலைமையில் வைத்திருப்பதாக எப்போதும் கூறும் சமந்தா, அதற்கேற்றார்போல் அவ்வப்போது புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறார். சமந்தா மீது கொண்டுள்ள அதீத அன்பால் ஆந்திராவைச் சேர்ந்த ரசிகர் ஒருவர் அவருக்கு கோவில் கட்டியநிலையில், தமிழ் ரசிகர்களும் கொஞ்சமும் குறைந்தவர்கள் இல்லை என்பதை காட்டும்விதமாக சமந்தா கலந்துகொண்ட நிகழ்ச்சிகளுக்கு சென்று அவரை உற்சாகப்படுத்தி வைப் செய்ய ஆரம்பித்திருக்கின்றனர் தமிழ் ரசிகர்கள்.
இயக்குநர் ராஜ் நிடிமொருவுடன் திருப்பதி கோவிலுக்கு சென்ற சமந்தா
சிட்டாடல் இயக்குநருடன் காதல் கிசுகிசு
ஏற்கனவே நாக சைதன்யாவுடனான காதலில் தோல்வியுற்ற சமந்தா இப்போது மீண்டும் காதலில் விழுந்திருப்பதாக பேசப்படுகிறது. ‘ஃபேமிலி மேன்’ மற்றும் ‘சிட்டாடல்’ போன்ற வெப் தொடர்களை இயக்கிய ராஜ் நிடிமொருவும் சமந்தாவும் அடிக்கடி ஒன்றாக ஊர் சுற்றுவது, புகைப்படங்களை வெளியிடுவது என்று இருப்பதால் இதுபோன்ற பேச்சுகள் உலாவருகின்றன. இருப்பினும் இருவர் தரப்பிலிருந்தும் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை. ராஜுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி, குழந்தைகள் இருப்பதால் இந்த காதலை விட்டுவிடுமாறு அவருடைய ரசிகர்கள் ஒருசிலர் சமந்தாவுக்கு அட்வைஸ் செய்துவருகின்றனர். ஆனாலும் சமந்தா அதையெல்லாம் காதில் வாங்குவதாக தெரியவில்லை. ஏனென்றால் சமீபத்தில் நடந்த விருது விழா ஒன்றில் அவருக்கு கேம் சேஞ்சர் ஆஃப் இந்தியன் சினிமா என்ற விருது வழங்கப்பட்டது. அப்போது அவருடைய ரசிகர்கள் மீண்டும் திருமணம் செய்துகொள்ள வேண்டாம் என்று கூற, அது தவறு என்று கூறிவிட்டார் சமந்தா. முன்பெல்லாம் காதல் மற்றும் திருமணம் என்று சொன்னாலே நோ என்று சொல்லிவந்த சமந்தா இப்போது தனது எண்ணத்தை மாற்றியிருக்கிறார் என்பது இந்த பதிலின்மூலம் தெரியவருவதாக கூறுகின்றனர் நெட்டிசன்கள். மேலும் ராஜ் உடனான காதலை உறுதிப்படுத்தும் விதமாக தனது தயாரிப்பு நிறுவனம் சார்பில் எடுக்கப்பட்ட திரைப்படத்தின் ரிலீஸுக்காக பூஜை செய்ய திருப்பதி கோவிலுக்கு இருவரும் ஒன்றாக சென்றுள்ளனர். அந்த புகைப்படங்கள்தான் தற்போது இணையங்களில் வைரலாக சுற்றிக்கொண்டிருக்கின்றன.
‘சுபம்’ படத்தின்மூலம் சமந்தாவின் தயாரிப்பாளர் அவதாரம்
ஆக்டிங் டூ தயாரிப்பு!
பொதுவாக திரைப்படத்தை தயாரிக்க தொடங்கிய பலர் படங்களிலும் நடிப்பார்கள். அதேபோல நிறைய நடிகர், நடிகைகளும் இயக்கம், தயாரிப்பு என அனைத்தையும் ஒரு கை பார்த்துவருகின்றனர். இந்த நிலையில், தனது உடல்நல பிரச்சினை காரணமாக சமந்தா இனிமேல் பெரும்பாலும் தயாரிப்பு பணிகளில் மட்டுமே ஈடுபடப்போவதாக தெரிவித்திருக்கிறார். இவர் ட்ராலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். இப்போது இந்நிறுவனம் சார்பில் ‘சுபம்’ என்ற திரைப்படம் தயாராகி மே 9ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது. இந்த படத்தை பிரவீன் காண்ட்ரேகுலா இயக்க, ஹர்ஷித் மல்கிரெட்டி, ஷாலினி கொண்டேபுடி, ஷ்ரியா கொந்தம், ஷ்ரவாணி உள்ளிட்ட தெலுங்கு பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். தனது முதல் படத்தை தயாரித்து முடித்த சந்தோஷத்தில் அதன் புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் சமந்தா. சமீபத்தில் விசாகபட்டினத்தில் நடந்த இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் சமந்தா கலந்துகொண்டபோது, “வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்கவேண்டிய சூழலுக்கு நாம் தள்ளப்படும்போதுதான் ஏதாவது செய்யவேண்டுமென தோன்றும். நான் சினிமாவை விட்டுவிட்டு ஒய்வில் இருந்தபோது நிறைய விஷயங்களை யோசித்தேன். மீண்டும் நடிக்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் எனக்கு சினிமாவைத் தவிர வேறு எதுவும் தெரியாததால் படங்களை தயாரிக்கலாம் என்று முடிவுசெய்தேன். எனது 15 ஆண்டுகால சினிமா அனுபவத்தை வைத்து தயாரிப்பு நிறுவனத்தை தொடங்க முடிவுசெய்தேன். சினிமாவில் நடிகையாக நான் கற்றுகொண்டதைவிட, தயாரிப்பாளராக நிறைய கற்றுக்கொண்டேன்” என்று பேசினார். இந்த நிகழ்ச்சியில் சமந்தா கண்கலங்கிய வீடியோக்கள் சமீபத்தில் மிகவும் ட்ரெண்டாகின. மேலும் மையோசிட்டிஸ் பிரச்சினைக்கு பிறகு பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது சமந்தா அடிக்கடி எமோஷனாலாகி அழுவதாக இணையங்களில் பல வீடியோக்கள் தொடர்ந்து பகிரப்பட்டு வருகின்றன. ஆனால், மையோசிட்டிஸ் பாதிப்புக்கு பிறகு தனது கண்கள் மிகவும் சென்சிட்டிவாக இருப்பதால் மட்டுமே பிரகாசமான லைட்டுகளை பார்க்கும்போது அடிக்கடி கண்ணீர் வருவதாகவும், மற்றபடி தனது வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் வீடியோ வெளியிட்டு விளக்கமளித்திருக்கிறார் சமந்தா.