மீனாவை அழவைத்த ரஜினி! ரஜினியை போடா எனத் திட்டிய குஷ்பு! சாரி கேட்ட சூப்பர் ஸ்டார்! சீக்ரட்ஸ்!
சினிமாவில் 50-ம் ஆண்டை கொண்டாடும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவிக்கும் நிலையில், அவரைப்பற்றி பிரபலங்கள் கூறிய சுவாரஸ்ய தகவல்களை பார்ப்போம்.;
சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த், சினிமாத்துறையில் கால் பதித்து 50 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார். இந்த 50 ஆண்டுகள் என்பது அவரது நீண்ட பயணத்தை மட்டும் குறிக்கவில்லை. இத்தனை ஆண்டுகளாக அவர் திரைத்துறையை சூப்பர் ஸ்டாராக ஆட்சி செய்துள்ளார் என்பதை சேர்த்தே குறிக்கிறது. தனது 75 வயதிலும் சாதனை படைக்கும் ஒரு நடிகராக ரஜினிகாந்த் திகழ்கிறார். "சூப்பர் ஸ்டாரு யாருனு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும்" என்ற பாடலுக்கு ஏற்ப இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக ஜொலிக்கும் ரஜினிகாந்தின் திரைப்பயணத்தை பற்றியும், தனது சினிமா கேரியரில் தக் மொமண்ட் குறித்து அவரே பகிர்ந்து கொண்ட தகவலைப் பற்றியும், அவரைப்பற்றி பிரபலங்கள் பலர் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்ய தகவல்களைப் பற்றியும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
நண்பர்களுடன் சிவாஜி ராவ் - 'அபூர்வ ராகங்கள்' படத்தில் ரஜினி
தொழிலாளியாக, கூலியாக பயணத்தை தொடங்கிய ரஜினிகாந்த்!
கர்நாடக மாநிலம் பெங்களூருரில் 1950-ம் ஆண்டு, டிசம்பர் 12-ம் தேதி பிறந்த சிவாஜி ராவ் கெயிக்வாட்தான், பிற்காலத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியாக மாறினார். சிறிய வயதிலேயே பெற்றோரை இழந்த சிவாஜி ராவ், தனது அண்ணன், அண்ணியின் பராமரிப்பில் வளர்ந்தார். கர்நாடகாவில் உள்ள கவிபுரம் அரசு பள்ளியில் தனது கல்வியினை பயின்ற சிவாஜி ராவ், இயற்கையிலேயே ஸ்டைலும், முரட்டுத்தனமும், பிடிவாத குணமும் கொண்டவராக இருந்துள்ளார். அதன்பிறகு ஆஃபிஸ் ப்யூனாக தனது முதல் பணியை ஆரம்பித்த அவர், மூட்டை தூக்கும் தினக்கூலியாகவும், தச்சுப்பட்டறைத் தொழிலாளியாகவும் பணிபுரிந்திருக்கின்றார். பின்னர் கர்நாடக போக்குவரத்துக் கழகத்தில் கண்டக்டராக பணி செய்துள்ளார். அப்போதே அவரது ஸ்டைலை ரசித்தவர்கள் ஏராளம்.
ரஜினிகாந்தாக மாறிய சிவாஜி ராவ்...
தனது நண்பனுக்குள் அற்புதமான ஒரு நடிகன் இருக்கிறான் என்பதை அறிந்து சிவாஜி ராவுக்கு அரிதாரம் பூசி நடிகராக்கியது அவருடைய நண்பர் ராஜ் பகதூர்தானாம். பிறகு தமிழ்நாடு திரைப்படக் கல்லூரியில் நடிப்பு துறையில் பயின்ற சிவாஜி ராவ், இயக்குநர் கே. பாலசந்தரின் 'அபூர்வ ராகங்கள்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்தப் படத்திற்கு பிறகுதான் சிவாஜி ராவ், ரஜினியாக மாறினார். ரஜினியின் முதல் படம் 'அபூர்வ ராகங்கள்'. இந்த திரைப்படத்திற்காக அவர் பேசிய முதல் வசனம் "பைரவி வீடு இதுதானா? நான் பைரவியின் புருஷன்" என்பதுதான்.
கே. பாலசந்தர் படங்களில் தொடர்ந்து வில்லன் கதாபாத்திரங்களில் மிரட்டிய ரஜினிகாந்த்...
வில்லன்... கதாநாயகன்... சூப்பர் ஸ்டார்!
இயக்குநர் சிகரம் கே. பாலசந்தரின் படங்களில் தொடர்ந்து நடிக்கும் வாய்ப்பை பெற்ற ரஜினி, 'மூன்றுமுடிச்சு', ‛அவர்கள்' உள்ளிட்ட படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி பிரபலமானார். இடையே, ரஜினியை குணச்சித்திர வேடத்தில் நடிக்கவைத்தவர் இயக்குநர் எஸ்.பி. முத்துராமன். எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் வெளியான 'புவனா ஒரு கேள்விக்குறி' திரைப்படத்தில் முழுக்க முழுக்க குணச்சித்திர வேடத்தில் தனது அழுத்தமான நடிப்பை மக்களின் மனங்களில் பதிய வைத்தார் ரஜினி. ரஜினி முழுமையாக கதாநாயகன் அவதாரம் எடுத்தப் படம் 'பைரவி'. ரஜினியை ஹீரோவாக்கியது தயாரிப்பாளர் கலைஞானம். பிறகு தயாரிப்பாளர்கள் கே.பாலாஜி, முக்தா சீனிவாசன் உள்ளிட்டோரும், தேவர் ஃபிலிம்ஸ், சத்யா மூவீஸ் போன்றவையும் ரஜினியை வைத்து பல படங்களை எடுத்தனர். அவற்றில் பெரும்பாலானவை வெற்றிப்படங்களாக அமைந்தன. ஹீரோவாக ரஜினி நடித்த முள்ளும் மலரும், பில்லா, முரட்டுக்காளை, ஜானி, தில்லுமுல்லு, மூன்று முகம் ஆகிய திரைப்படங்கள் அப்போது தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பினை பெற்றன. ஆறிலிருந்து அறுபது வரை திரைப்படத்தில், அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்த ரஜினியின் நடிப்பை, இன்றும் பாராட்டாதவர்கள் இருக்க மாட்டார்கள்.
வில்லன் கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்துவந்த ரஜினி, ஒரு கட்டத்தில் குணச்சித்தர வேடங்களில் நடித்து, பிறகு ஹீரோவாகி... கடின உழைப்பால் சூப்பர் ஸ்டாராக மாறினார். 1975-ல் சினிமாவில் காலடி எடுத்துவைத்த ரஜினி, 1970களின் கடைசியிலும், 1980களின் தொடக்கத்திலும் பல படங்களில், வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து, ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நெருக்கமான நடிகராக உருவானார். அந்த நெருக்கமும் ஈர்ப்பும்தான் அவரை படிப்படியாக சூப்பர் ஸ்டாராக உயர்த்தியது.
ஏன் ரஜினியை எல்லோருக்கும் பிடிக்கிறது?
அனைவரும் முதலில் சொல்வது ரஜினியின் ஸ்டைலைத்தான். ஆனால் ஸ்டைல் ஒன்றை மட்டும் வைத்து, இத்தனை ஆண்டுகள் ரசிகர்களை கட்டிப்போட முடியுமா? நிச்சயம் முடியாது. ரஜினியின் திரை வாழ்க்கையை எடுத்துக் கொண்டால், எளிய மனிதர்களுடன் பொருந்திப்போகக்கூடிய கதாபாத்திரங்களில் அவர் அதிகம் நடித்துள்ளார். சாமானிய மனிதர்களுக்கு பிடிக்கும் வகையில் கதாபாத்திரங்களை அதிகம் தேர்ந்தெடுத்து நடித்துள்ளார். திரையில் அவர் கதாபாத்திரங்கள், சாதாரண மனிதனை பிரதிபலிக்கும். உதாரணத்திற்கு கூலி, தொழிலாளி, ஆட்டோ ஓட்டுநர், பால் வியாபாரி, நண்பனுக்காக தோள் கொடுப்பவன் என ஏராளமான கதாபாத்திரங்களை சொல்லலாம்.
ஸ்டைல், வில்லத்தனம், ஹீரோ, காமெடி என நடிப்பின் அனைத்து பிரிவிலும் கலக்கிய ரஜினி
இதனை வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால், எம்ஜிஆர் ஃபார்முலா கதாபாத்திரங்களை ரஜினி பக்காவாக ஃபாலோ செய்தார். அதாவது, தனது ரசிகர்கள் இதைத்தான் விரும்புவார்கள் என்பதை நன்கு அறிந்து அதற்கேற்ப கதைகளை தேர்வு செய்து நடித்தது. அண்ணாமலை, உழைப்பாளி, முத்து, பாட்ஷா, மன்னன், அருணாச்சலம், சிவாஜி, தற்போது கூலி என, மேற்குறிப்பிட்ட படங்கள் எல்லாம் அந்த வகையை சேர்ந்தவைதான். அத்துடன் பாடல்களும் சாமானியர்களை, உறவுகளை மையப்படுத்தி இருப்பதுபோல் வைப்பது. அத்தனைக்கும் மேல், ஸ்டைல், வில்லத்தனம், ஹீரோயிசம், காமெடி, யதார்த்த நடிப்பு, மரியாதை, உழைப்பு, எளிமை, தன்னை வெளிப்படுத்தும் திறன் என அனைத்தும் சேர்ந்த மேஜிக் கலவையாக தன்னை மெருகேற்றிக்கொண்டதே, குழந்தை முதல் பெரியவர்கள் வரை ரஜினியை பிடிக்க முக்கிய காரணம்.
ரஜினியின் திரைப்பட வாழ்க்கையில் தக் மொமண்ட்
நடிகர் ரஜினிகாந்தின் 16 வயதினிலே படம் ரிலீசாகிய சமயத்தில், ஏ.வி.எம் ஸ்டுடியோவில் ஒரு முன்னணி தயாரிப்பாளர் ஒருவர், தனது புதிய படத்திற்கு ரஜினிகாந்தையும் ஒரு கேரக்டரில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார். அப்போது ரஜினி அவரிடம் 10 ஆயிரம் சம்பளம் கேட்டுள்ளார். இறுதியில் 6 ஆயிரம் ரூபாயாக சம்பளத்தை பேசிய தயாரிப்பாளரிடம், அட்வான்ஸ் கேட்டுள்ளார் ரஜினி. ஆனால் படம் தொடங்கும்வரை அட்வான்ஸ் தராமல் இழுத்தடித்துள்ளார், அந்த தயாரிப்பாளர். அட்வான்ஸ் பணத்தை தந்தால்தான் மேக் அப் போடுவேன் என சொல்லிட்டாராம் ரஜினி. உடனே அங்கு வந்த தயாரிப்பாளர், ரஜினியை பார்த்து, ‘ஏண்டா நீ என்ன அவ்ளோ பெரிய ஆக்டரா? இப்பதான் கொஞ்சம் நடிச்சிட்டு வர... பணம் கொடுக்கலனா மேக்கப் போட மாட்டியா? உன்னமாதிரி எத்தனை பேர நான் பாத்திருப்பேன்! உன்னையெல்லாம் ரோட்ல அலைய விடணும்.. போடா.. உனக்கு கேரக்டரும் கிடையாது, கூட்டிட்டு போய்விட காரும் கிடையாது என்று சொல்லி அவமானப்படுத்தி, ஷூட்டிங் செட்டிலிருந்து துரத்திவிட்டாராம். அதனால் மனம் உடைந்து ரோட்டில் கவலையுடன் நடந்து சென்று கொண்டிருந்தபோது, ரஜினியின் மனதில் ஓடியதெல்லாம் ஒன்றே ஒன்றுதானாம். இதே கோடம்பாக்கம் ரோட்ல வெளிநாட்டு கார்ல வந்து ஏவிஎம் ஸ்டுடியோல, அதே தயாரிப்பாளர் முன்னாடி கால் மேல கால்போட்டு உட்கார வேண்டும் என்பதுதானாம். அதைமட்டும் செய்யல... நான் ரஜினிகாந்த் இல்லை என்று சபதம் எடுத்தாராம்.
சொன்னதைப் போலவே அடுத்தடுத்து படங்களில் நடித்து அதன்மூலம் வந்த வருமானத்தை வைத்து 2 ஆண்டுகளில் இட்டாலியன் ஃபியட் என்ற வெளிநாட்டு காரை நான்கரை லட்சத்துக்கு வாங்கி உள்ளார் ரஜினி. வாங்கியது வெளிநாட்டுக் கார் என்பதால் அதற்காக வெளிநாட்டு ஓட்டுநரையே வேலைக்கு வைத்து, அந்தக் காருடன் ஏவிஎம் சென்றுள்ளார். காலை 8 மணியளவில், ஓட்டுநரிடம் விட்றா வண்டிய ஏவிஎம்-க்குனு சொன்னதாகவும், தன்னை அவமானப்படுத்திய தயாரிப்பாளரின் கார் எங்கு நின்றதோ, அங்கேயே தனது காரையும் நிற்க வைத்து, கீழ இறங்கி வண்டி மேல ஸ்டைலா சாய்ந்து நின்று, அந்த தயாரிப்பாளர் முன் கெத்தாக சிகரெட் பிடித்ததாகவும், அதனை பார்த்து அங்கு கூட்டம் கூடிவிட்டதாகவும், தான் வாங்கிய முதல் கார் அனுபவத்தை ரஜினி பல இடங்களில் பகிர்ந்து கொண்டுள்ளார். ரஜினியின் இந்த தக் மொமண்ட், அனைவருக்கும் ஏதோ ஒரு விதத்தில் நம்பிக்கை அளிக்கும்.
முத்து திரைப்படத்தில் நடிகை மீனாவுடன் நடிகர் ரஜினிகாந்த்
ரஜினி குறித்து நட்சத்திரங்கள் பகிர்ந்த சுவாரஸ்யங்கள்!
ரஜினிகாந்த் குறித்து பேசியுள்ள மீனா, "முத்து பட நேரத்தில் பவுன்சர்ஸ் என யாரும் இல்லை. ஒரு நாள் ஷூட்டிங்கின்போது மக்கள் கூட்டம் எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தது. மிகப்பெரிய கூட்டம். அங்கிருந்து செல்ல, நான் எழுந்து நிற்பதற்குள் ரஜினி சார் வெகு தூரம் நடந்து சென்று விட்டார். அதன் பின்னர் அந்த மக்களிடம் இருந்து என்னை உதவியாளர்களும் லைட் மேன்களும்தான் காப்பாற்றினார்கள். அப்போது நான் அழுதேவிட்டேன். ரவிக்குமார் சாரும் அங்கு இல்லை. அதன் பின்னர் இவர்கள் எல்லாம் இருந்த இடத்திற்கு வந்து அமர்ந்து கொண்டேன். யாரிடமும் பேசவில்லை. அப்போது ரவிக்குமார் சார், என்ன ஆச்சு என்றுதான் கேட்டார். நான் அழுதுவிட்டேன். அதன் பின்னர் ரவிக்குமார் சாரும் ரஜினி சாரும் என்னை சமாதானப்படுத்தினார்கள். ரஜினி சார் வழக்கமாகவே வேகமாகத்தான் நடப்பார். அவரது மனைவியால் கூட அவருக்கு இணையாக நடக்க முடியாது. இதை நானே அவரிடம் கூறியுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார். மீனாவின் பேட்டி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
தர்மத்தின் தலைவன் திரைப்பட சமயத்தில், ஷூட்டிங் முடிந்து நடிகர் ரஜினிகாந்த் எல்லோருக்கும் bye என்று சொன்னாராம். பதிலுக்கு நடிகை குஷ்பு, தனது கையால் bye சொல்லியபடியே, வார்த்தையால் எதிர்பாராவிதமாக போடா என்று சத்தமாக சொல்லிவிட்டாராம். எல்லோரும் அப்படியே திகைத்துவிட்டார்களாம். இச்சம்பவம், இன்றும் தங்கள் அனைவராலும் சிரித்தப்படி பேசப்படும் ஒரு விஷயம் என்று குஷ்பூ தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தை போல தானும் வேகமாக பேசுவதால், தன்னை லேடி சூப்பர் ஸ்டார் என்று அப்போது திரைப்படத்துறையினர் அழைத்ததாகவும், அதனை கேள்விப்பட்ட ரஜினி, தன்னை நேரில் பார்த்தபோது, என்ன... நீங்க லேடி சூப்பர் ஸ்டாராமே என்று கேட்டதாகவும், பாராட்டியதாகவும் நடிகை ஊர்வசி பகிர்ந்துள்ளார்.
இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரின் படம் ஒன்றிற்கு, 9 மணி படப்பிடிப்புக்கு 9.05 மணிக்கு, 5 நிமிடங்கள் தாமதமாக வந்த ரஜினி, நேராக எஸ்.ஏ. சந்திரசேகரிடம் சென்று, சாரி சந்திரசேகர்... லேட்டா வந்துட்டேன்... நாளைக்கு சரியா வந்துடுறேன் என்றாராம். பின்னர் படிப்பிடிப்பின் இடைவேளையின்போது மீண்டும் சாரி சந்திரசேகர்... லேட்டா வந்துட்டேன்... நாளைக்கு சரியா வந்துடுறேன் என்று சொன்னாராம். அன்றைய தினம் ஷூட்டிங் முடிந்து அனைவரும் கிளம்பியபோது, மீண்டும் சாரி சந்திரசேகர்... லேட்டா வந்துட்டேன்... நாளைக்கு சரியா வந்துடுறேன் என்று சொன்னாராம். யார் இப்படி சொல்வார்கள்? என்று அந்த சம்பவத்தை இப்போது நினைவுகூர்ந்துள்ளார், இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர்.
திரைத்துறையில் இருப்பவர்களை எப்போது பார்த்தாலும் ஐஸ்வர்யமாக இருங்கள்... ஆரோக்கியமாக இருங்கள்... என்று ரஜினி கூறுவாராம். ஏனென்றால் இரண்டும்தான் முக்கியம் என்றும், ஆனால் பல நட்சத்திரங்கள் ஆரோக்கியத்தில் கோட்டை விட்டுவிடுகின்றனர் என்றும் தன்னிடம் ரஜினி தெரிவித்ததாக பாடலாசிரியர் பா. விஜய் கூறியுள்ளார்.
சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் ரஜினிக்கு கமல்ஹாசன் வாழ்த்து
ரஜினிகாந்த் 50 !
திரையுலகில் அறிமுகமாகி 50 ஆண்டுகள் நிறைவு செய்திருக்கும் ரஜினிக்கு, சினிமா நட்சத்திரங்கள், அரசியல் பிரமுகர்கள், நண்பர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
திரைப்பட உலகில் புகழ்மிக்க 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு வாழ்த்துகள். அவரது பயணம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது, அவரது நடிப்பில் பலவகையான பாத்திரங்கள் தலைமுறைகள் கடந்து மக்கள் மனங்களில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. வரும் காலங்களில் அவரது தொடர்ச்சியான வெற்றிக்கும் நல்ல ஆரோக்கியத்திற்கும் வாழ்த்துகிறேன் என பிரதமர் நரேந்திர மோடி, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நடிகரும் மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன் எம்.பி, "சினிமாவில் அரை நூற்றாண்டு கால திறமையைக் குறிக்கும் வகையில், என் அன்பு நண்பர் ரஜினிகாந்த் இன்று சினிமாவில் 50 ஆண்டுகளைக் கொண்டாடுகிறார். நமது சூப்பர் ஸ்டாரை பாசத்துடனும் பாராட்டுடனும் கொண்டாடுகிறேன், மேலும் இந்தப் பொன் விழாவிற்கு ஏற்றவாறு கூலி படம் உலகளாவிய வெற்றியைப் பெற வாழ்த்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
“எவ்வளவு வயசானாலும் அந்த ஸ்டைல் குறையவே இல்ல ரஜினி சாருக்கு... அவருடன் பணியாற்றிய ஒவ்வொரு நாளும் கத்துக்கொண்டே இருப்பேன். இந்தியாவின் சூப்பர் ஸ்டார் அவர்” என்று நடிகை குஷ்பூ வாழ்த்தியுள்ளார்.
திரையுலகில் 50 ஆண்டுகள் சிறப்பாக நிறைவு செய்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாருக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகள். எப்போதும் போல உங்கள் பயணம் எங்களுக்கு எல்லாம் ஒரு பெரும் உத்வேகம் என்று யோகி பாபு பதிவிட்டுள்ளார்.
ரஜினி நன்றி அறிக்கை
தனது 50 ஆண்டு கால திரையுலக பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.
அந்த அறிக்கையில் ரஜினிகாந்த், “எனது 50 ஆண்டு கால திரையுலகப் பயணத்தை ஒட்டி என்னை மனமார வாழ்த்திய என் நண்பரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாரதிய ஜனதா கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன், நண்பர் அண்ணாமலை, சசிகலா அம்மையார், தினகரன், பிரேமலதா அம்மையார் மற்றும் பல அரசியல் நண்பர்களுக்கும், கமல்ஹாசன், மம்மூட்டி, மோகன்லால், வைரமுத்து, இளையராஜா உள்ளிட்ட அனைத்து திரையுலக நண்பர்களுக்கும் என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியிருந்தார். வரும் டிசம்பர் 12-ம் தேதி தனது பிறந்த நாளன்று தனது சுயசரிதையையும் வெளியிட திட்டமிட்டு இருக்கிறாராம் ரஜினிகாந்த்!