"பக்த பிரகலாதா" படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ரோஜாரமணி, குமரியாகிவிட்டார்!
ரோஜாரமணி, ஐந்து வயதில் நடிக்கத் தொடங்கினார். அவர் நடித்த முதல் படம், "பக்தபிரகலதா" என்ற தெலுங்குப் படம்!;
(27-01-1974 தேதியிட்ட ராணி இதழில் வெளியானது)
"மின்னுவது எல்லாம் பொன்னல்ல’’
சினிமா உலகில் நுழைந்தவர்கள் எல்லாம் நடிகை ஆகிவிடுவது இல்லை. ஆனால், ரோஜாரமணியின் கதை வேறு! ரோஜாரமணி, ஐந்து வயதில் நடிக்கத் தொடங்கினார். அவர் நடித்த முதல் படம், "பக்த பிரகலதா" என்ற தெலுங்குப் படம்! தெலுங்குப் படத்தில் நடித்துக் கொண்டு இருக்கும்பொழுதே, தமிழ்ப் படங்களில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார். இப்பொழுது தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிப் படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறார். குழந்தை நட்சத்திரமாக அல்ல; குமரி நட்சத்திரமாக கதாநாயகியாக!
பருவ காலம்
ரோஜாரமணி கதாநாயகியாக நடிக்கும் முதல் தமிழ்ப் படம், "பருவகாலம்!" இந்தப் படத்தில், கற்பை இழந்து தவிக்கும் அபலைப் பெண்ணாக, ரோஜாரமணி நடிக்கிறார்.
குழந்தை நட்சத்திரத்தில் இருந்து குமரியாக ரோஜாரமணி
நிருபர்: இதுவரை எத்தனை படங்களில் நடித்து இருக்கிறீர்கள்?
ரோஜா: தமிழ், தெலுங்கு, மலையாளம் எல்லாம் சேர்ந்து நாற்பதுக்கும் மேல் இருக்கும். தெலுங்குப் படங்கள்தான் அதிகம்.
வாய்ப்புத் தேடி போகவில்லை
நிருபர்: உங்களுக்குப் பின்னால் வந்தவர்கள் எல்லாம், தமிழ்த் திரை உலகில் வேகமாக முன்னுக்கு வந்து கொண்டிருக்கும்பொழுது, உங்களுக்கு ஏன் அதிகப் படங்கள் இல்லை?
ரோஜா: நான் இதுவரை யாரிடமும் வாய்ப்புத் தேடிப் போகவில்லை. எனக்கு தெலுங்கு படங்கள் அதிகம் இருக்கின்றன. அடுத்து மலையாளப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். நான் கதாநாயகியாக நடித்த "செம்பருத்தி" என்ற மலையாளப் படத்தைத்தான் "பருவகாலம்" என்று தமிழில் தயாரிக்கிறார்கள். "செம்பருத்தி"யில் நான் செய்த பாத்திரத்தை "பருவகால"த்திலும் தந்து இருக்கிறார்கள். இப்பொழுது நடிகர் பாலாஜி தயாரிக்கும் தமிழ்ப் படத்திலும், மற்றொரு படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறேன்.
நிருபர்: எந்த மொழிப் படத்தில் நீங்கள் சிறந்து விளங்க நினைக்கிறீர்கள்?
ரோஜா: என்னை முதன் முதலில் சினிமா உலகுக்கு அறிமுகப்படுத்திய, தெலுங்கு சினிமா உலகில்தான் என் கவனம் அதிகமாக பதிந்து இருக்கிறது.
பணம் மட்டும் வேண்டாம்
நிருபர்: உங்கள் நோக்கம் என்ன?
ரோஜா: நான் தேர்ந்தெடுத்துள்ள நடிப்புத் தொழிலில் சாதனைகள் புரிய வேண்டும் என்பதே என் நோக்கம். கூலி இல்லாமல் யாரும் வேலை செய்வது இல்லை. நடிப்பதால், எனக்கு பணமும் கிடைக்கிறது. பணம் கிடைக்கிறது என்பதற்காக எந்தப் பாத்திரத்தையும் ஏற்று நான் நடிக்கத் தயாராக இல்லை. அதிகப் பணம் வேண்டுமா? நல்ல பாத்திரம் வேண்டுமா?' என்று என்னிடம் கேட்டால், நல்ல பாத்திரத்தைத்தான் தேர்ந்து எடுப்பேன். பணம் கிடைத்தால் போதும் என்று நான் நினைத்திருந்தால், இப்பொழுது அதிக தமிழ்ப் படங்களில் நான் நடித்துக் கொண்டு இருப்பேன்.
இந்திப் படம்
நிருபர்: இந்திப் படங்களில் நடிக்கும் எண்ணம் உண்டா?
ரோஜா: இதுவரை நான் யாரிடமும் வாய்ப்புத் தேடி அலையவில்லை. ஜெயகவுசல்யா நடித்த "பிரபாத்" என்ற இந்தி படத்தில் நடிக்க, அதன் தயாரிப்பாளர் ராம்தயாள் முதலில் என்னைத்தான் அழைத்தார், “இரண்டு ஆண்டு ஒப்பந்தம், பம்பாயில் தங்க வேண்டும்" என்று அவர் சொன்னதால், நான் ஒப்புக் கொள்ளவில்லை. ஒரு படத் தயாரிப்பாளரிடம் இரண்டு ஆண்டு ஒப்பந்தத்தில் இருந்து இரண்டு படங்கள் நடிப்பதைவிட, வெளியில் இருந்து 12 படங்களில் நடிக்கலாம் அல்லவா?
ரோஜாரமணிக்கு பிடித்த நடிகர் சிவாஜி கணேசன்
நிருபர்: உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்ச்சி எதுவும் நடந்தது உண்டா?
ரோஜா: நான் "பக்த பிரகலாதா" படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட நாளையும், அந்த படத்திற்காக ஜனாதிபதியிடம் பரிசு பெற்ற நாளையும் மறக்க முடியாது.
நிருபர் : தமிழ் நடிகர் நடிகைகளில் உங்களுக்கு பிடித்தமானவர்கள் யார்?
ரோஜா: பிடித்தமான நடிகர் சிவாஜி கணேசன், நடிகை யார் என்று சொல்லமாட்டேன்.
நிருபர்: எதற்காக?
ரோஜா: உண்மையைக் சொன்னால் சிலருக்கு கோபம் வந்துவிடும், அந்தத் தொல்லை எதற்கு?
நிருபர்: உங்கள் பொழுதுபோக்கு என்ன?
ரோஜா: நல்ல படம் எதுவும் வந்தால் போய்ப் பார்ப்பேன். அது இல்லாவிட்டால், இருக்கவே இருக்கிறது, என் டிரான்சிஸ்டர் ரேடியோ!