இயக்குநர்களில் சூப்பர் ஸ்டார் இவர்தான்! ஸ்ரீதர் ஒரு சகாப்தம்...
சினிமாவின் இலக்கணங்களை மாற்றி எழுதிய சகாப்தம், தமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டார் இயக்குநர், இப்படிப் பல பெருமைகளுக்கு சொந்தக்காரர் இயக்குநர் ஸ்ரீதர்.;
கண்ணதாசனின் கவிதை வரிகளை திரையில் செதுக்கிய சிற்பி, சினிமாவின் இலக்கணங்களை மாற்றி எழுதிய சகாப்தம், தமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டார் இயக்குநர், இப்படிப் பல பெருமைகளுக்கு சொந்தக்காரர் இயக்குநர் ஸ்ரீதர். ஜூலை 22 ஆம் தேதி அவரது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ் திரையுலகின் மறக்க முடியாத ஆளுமைகளில் ஒருவரான அவரது வாழ்க்கை, சாதனைகள், மற்றும் திரைப் பங்களிப்புகள் பற்றி இந்த தொகுப்பில் விரிவாகப் பார்ப்போம்.
ஸ்ரீதரின் சினிமா பிரவேசம்
சி. வி. ஸ்ரீதர் ஜூலை 22, 1933 அன்று சென்னைக்கு அருகே உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் சித்தாமூரில் பிறந்தார். பள்ளிப் பருவத்திலேயே நாடகங்கள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த அவர், பல நாடகங்களுக்கு கதை, வசனம் எழுதி, பள்ளி மேடைகளில் அரங்கேற்றியதோடு, தாமே நடித்தும் வந்தார். அவரது எழுத்துத் திறமையையும், நடிப்புத் திறமையையும் பள்ளி நிர்வாகமும் நண்பர்களும் பாராட்டினர். தனது 18-வது வயதில் 'ரத்தபாசம்' என்ற நாடகத்தை எழுதி, அதை ஏ.வி.எம் நிறுவனத்திடம் கொண்டு சென்றபோது அவருக்கு ஏமாற்றமே கிடைத்தது. இருப்பினும், மனம் தளராமல் டி.கே.எஸ். பிரதர்ஸிடம் தனது கதையை வழங்கினார். அதைப் படித்துப் பார்த்த அவர்கள் வியந்து, அதை நாடகமாக அரங்கேற்றினர்.
டி.கே.எஸ். பிரதர்ஸ் மற்றும் இயக்குநர் ஸ்ரீதர்
இந்த நாடகம் பெரும் வரவேற்பைப் பெற்றதால், 1954-ல் 'ரத்தபாசம்' திரைப்படம் ஸ்ரீதரின் கதை, வசனத்தில் உருவானது. இது தெலுங்கு, இந்தி மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு மூன்று மொழிகளிலும் மாபெரும் வெற்றி பெற்றது. இதன் மூலம் வசனகர்த்தாவாக தனது திரைப் பயணத்தைத் தொடங்கிய ஸ்ரீதர், தொடர்ந்து 'எதிர்பாராதது', 'உத்தமபுத்திரன்', 'அமரதீபம்' போன்ற பல படங்களுக்கு கதை, வசனம் எழுதினார். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட ஒருவர் தமிழில் இவ்வளவு வெற்றிகரமான கதை வசனகர்த்தாவாக உயர்ந்தது அன்று திரையுலகில் மிகப்பெரிய சாதனையாகப் பார்க்கப்பட்டது. கதை வசனகர்த்தாவாக தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த ஸ்ரீதர், இயக்குநராகும் தனது ஆசையை வெளிப்படுத்தினார். நண்பர்களுடன் இணைந்து 'வீனஸ் பிக்சர்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி, தனது கதை, வசனத்தில் உருவான 'கல்யாண பரிசு' படத்தை தானே இயக்கப் போவதாகக் கூறினார். ஆரம்பத்தில் நண்பர்கள் தயங்கினாலும், ஸ்ரீதரின் உறுதியைக் கண்டு சம்மதித்தனர்.
வெற்றிகளின் சிகரம் ஸ்ரீதர்
1959 ஆம் ஆண்டு வெளியான 'கல்யாண பரிசு' திரைப்படத்தின் மூலம் ஸ்ரீதர் இயக்குநராகத் தடம்பதித்தார். ஜெமினி கணேசன், விஜயகுமாரி நடிப்பில், சரோஜா தேவியை கதாநாயகியாக அறிமுகப்படுத்திய இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. பாடகர் ஏ.எம். ராஜாவை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய இந்தப் படத்தில், "காதலிலே தோல்வியுற்றான்" போன்ற பாடல்கள் இன்றும் ரசிக்கப்படுகின்றன. இப்படம் இந்தியில் 'நஜ்ரானா' என்ற பெயரில் ராஜ்கபூர், வைஜயந்தி மாலா நடிப்பில் ரீமேக் ஆகி, ஸ்ரீதரை அகில இந்திய அளவில் புகழ்பெறச் செய்தது. அன்றைய பத்திரிகைகள் இவரை 'தென்னாட்டு சாந்தாராம்' என்று புகழ்ந்தன. 'கல்யாண பரிசு' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, 'மீண்ட சொர்க்கம்', 'விடி வெள்ளி' போன்ற படங்களை இயக்கினார் ஸ்ரீதர். இதில் 'மீண்ட சொர்க்கம்' அவருக்கு ஓரளவு நல்ல பெயரைப் பெற்றுத் தர, 'விடி வெள்ளி' 100 நாட்கள் ஓடி அவரது புகழை மேலும் கூட்டியது. பின்னர் 1960 இல் சொந்தமாகப் படம் தயாரிக்க விரும்பிய ஸ்ரீதர், 'சித்ராலயா' என்ற நிறுவனத்தைத் தொடங்கி, அதன் முதல் படமாக 'தேன் நிலவு' திரைப்படத்தை உருவாக்கினார். காஷ்மீரில் படமாக்கப்பட்ட முதல் தமிழ்ப் படம் என்ற பெருமையோடு, ஜெமினி கணேசன் வைஜயந்தி மாலா நடித்த இப்படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் சூப்பர்ஹிட் ஆகின. இருந்தும் வசூலில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதன் காரணமாக சிறிது காலம் படத் தயாரிப்பை கைவிட்ட ஸ்ரீதர், 'சுமைதாங்கி', 'போலீஸ்காரன் மகள்' போன்ற வெற்றிப் படங்களை பிற தயாரிப்பு நிறுவனங்களுக்காக இயக்கினார்.
'கல்யாண பரிசு' படத்தில் ஜெமினி கணேசன், விஜயகுமாரி
பின்னர், ஸ்ரீதர் சிறிய பட்ஜெட்டில் 'நெஞ்சில் ஓர் ஆலயம்' படத்தைத் தயாரிக்க முடிவெடுத்தார். விஜயா - வாஹினி ஸ்டூடியோவின் ஒன்பதாவது தளத்தில் அமைக்கப்பட்ட ஆஸ்பத்திரி செட்டில், வெறும் 22 நாட்களில் படமாக்கப்பட்ட இந்தப் படம் தமிழ்த் திரையுலகில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. ஒரே செட்டில், இவ்வளவு குறுகிய காலத்தில் ஒரு படம் எடுக்கப்பட்டது இதுவே முதல்முறை. கன்னட நடிகர் கல்யாண்குமார், நாகேஷின் சிபாரிசில் இப்படத்தில் தமிழில் அறிமுகமானார். தேவிகா மட்டுமே பிரபல நடிகையாக இருந்த இந்தப் படத்தில், கண்ணதாசன் - எம்.எஸ்.விஸ்வநாதன் கூட்டணியில் அனைத்துப் பாடல்களும் பெரும் வெற்றி பெற்றன. நாடகக் குழுவில் இருந்த முத்துராமனை அவரது கண்களுக்காகவே இரண்டாம் ஹீரோவாக இப்படத்தில் தேர்ந்தெடுத்தார் ஸ்ரீதர். நேர்த்தியான கதை சொல்லல், உணர்ச்சி மிகுந்த வசனங்கள், கிளைமாக்ஸில் எதிர்பாராத திருப்பம் எனப் பல சிறப்பம்சங்கள் இந்தப் படத்தில் இருந்தன. குறிப்பாக, முத்துராமன் மற்றும் தேவிகா நடித்த "சொன்னது நீதானா" பாடலின் படமாக்கமும், படத்தொகுப்பும் பெரிதும் பாராட்டப்பட்டன. இருந்தும் ஆரம்பத்தில் விநியோகஸ்தர்கள் இப்படத்தை வெளியிட தயங்கியங்கியதால், ஸ்ரீதரே சொந்தமாக வெளியிட்டார். அவர் எதிர்பார்த்தது போலவே படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று சென்னை, மதுரையில் 25 வாரங்கள் ஓடி வெள்ளி விழா கண்டது. இது 'சித்ராலயா' நிறுவனத்திற்கும், ஸ்ரீதருக்கும் திரைப்படத் துறையில் மேலும் மதிப்பை கூட்டியது. இந்தப் படம் இந்தியில் 'தில் ஏக் மந்திர்’ என்ற பெயரில் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியாகி அங்கும் சூப்பர் ஹிட் ஆனது. மேலும் 'நெஞ்சில் ஓர் ஆலயம்' படத்திற்காக ஸ்ரீதர் தேசிய விருதையும் வென்றார்.
ஸ்ரீதரின் சாதனை சரித்திரம்
'நெஞ்சில் ஓர் ஆலயம்' படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, கல்யாண்குமார்-தேவிகா இணையரை மீண்டும் இணைத்து 'நெஞ்சம் மறப்பதில்லை' என்ற திரைப்படத்தை இயக்கினார். தமிழ்த் திரையுலக வரலாற்றில் புனர்ஜென்மக் கதையைச் சொல்லி மிகப்பெரிய வெற்றி பெற்ற முதல் படம் இதுவே ஆகும். இதில் நம்பியாரின் வில்லத்தனமான நடிப்பு மிரட்டலாக அமைந்தது. பின்னர், புகழ்பெற்ற புல்லாங்குழல் மேதை ஃப்ளூட் மாலியின் வாழ்க்கையால் ஈர்க்கப்பட்டு, 'கலைக் கோயில்' என்ற கலைநயம் மிக்க படத்தை ஸ்ரீதர் எடுத்தார். ஆனால், இது மூன்று வாரங்கள் மட்டுமே ஓடி, எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதன் தொடர்ச்சியாக, தீவிரமான கதைக்களங்களில் இருந்து விலகி, நகைச்சுவை கலந்த காதல் கதையை, கலர் படமாக எடுக்க ஸ்ரீதர் முடிவு செய்தார். அதன் விளைவாக உருவானதுதான் 'காதலிக்க நேரமில்லை'. இது தமிழின் முதல் ஈஸ்ட்மேன் கலர் படம் என்ற பெருமையைப் பெற்றது. விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் நகைச்சுவை, சூப்பர் ஹிட் பாடல்கள் என இந்தப் படம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. ரவிச்சந்திரன், காஞ்சனா போன்ற நட்சத்திரங்கள் இந்தப் படத்தின் மூலம் அறிமுகமானார்கள். டி.எஸ்.பாலையா மற்றும் நாகேஷின் நகைச்சுவைக் காட்சிகள், குறிப்பாக நாகேஷ் பாலையாவிடம் கதை சொல்லும் காட்சி, தமிழ் சினிமாவின் கிளாசிக் காட்சிகளில் ஒன்றாக இன்றும் போற்றப்படுகிறது.
'நெஞ்சில் ஓர் ஆலயம்' படத்தில் கல்யாண்குமார்-தேவிகா
'காதலிக்க நேரமில்லை' படத்திற்குப் பிறகு, ஜெயலலிதா, நிர்மலா, ஸ்ரீகாந்த், மூர்த்தி ஆகியோரை அறிமுகப்படுத்தி ஸ்ரீதர் இயக்கிய திரைப்படம் 'வெண்ணிற ஆடை'. கதை அமைப்பு, பாடல்கள், காதல் காட்சிகள் என மிக நேர்த்தியாக எடுக்கப்பட்ட இந்தப் படம், வெளியானபோது சென்னை மவுண்ட் ரோட்டில் ஆனந்த் தியேட்டரில் அட்வான்ஸ் புக்கிங்கிற்காக மக்கள் நீண்ட வரிசைகள் நின்றது ஒரு சாதனையாகும். ஹேமமாலினியை இந்தப் படத்தில் அறிமுகப்படுத்த நினைத்த ஸ்ரீதர், ஆனால் அந்த கதாபாத்திரத்திற்கு அவர் பொருத்தமாக இல்லை எனக் கருதி நிராகரித்தது குறிப்பிடத்தக்கது. பின் சிவாஜியுடன் 'நெஞ்சிருக்கும் வரை', 'ஊட்டி வரை உறவு' போன்ற வெற்றிப் படங்களில் பணியாற்றிய ஸ்ரீதர், எம்.ஜி.ஆருக்காக 'அன்று சிந்திய ரத்தம்' என்ற படத்தைத் தொடங்கினார். இருந்தும் ஒரு நாள் படப்பிடிப்புக்குப் பிறகு, சில காரணங்களால் படம் கைவிடப்பட்டது. அதன்பிறகுதான் சிவாஜிக்காக 'சிவந்த மண்' கதையை எழுதினார் ஸ்ரீதர். சித்ராலயா பேனரில் மிகப் பெரிய பட்ஜெட்டில், தமிழிலும் இந்தியிலும் ('தர்த்தி' என்ற பெயரில்) ஒரே நேரத்தில் இப்படம் எடுக்கப்பட்டது. ஐரோப்பிய நாடுகளில் அதிக நாட்கள் படமாக்கப்பட்ட முதல் தமிழ்ப் படம் என்ற பெருமையோடு. ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, பாரீஸ், லண்டன் ஆகிய நகரங்களில் இப்படம் படமாக்கப்பட்டது. பிரம்மாண்டமான செட்டுகள், வாஹினி ஸ்டூடியோவில் உருவாக்கப்பட்ட ஒரு பெரிய நதி என பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படம், 'பட்டத்து ராணி பார்க்கும் பார்வை வெற்றிக்கு தான்...' போன்ற பாடல்களுக்காக இன்றும் பேசப்படுகிறது. இங்கு தமிழில் 100 நாட்கள் ஓடி இப்படம் ஓரளவு வெற்றி பெற்றாலும், இந்தியில் 'தர்த்தி' சரியாக ஓடாததால், ஸ்ரீதர் முதன் முறையாக மிகப் பெரிய நஷ்டத்தைச் சந்தித்தார். அதிலிருந்து மீள அவருக்குப் பல வருடங்கள் ஆகின.
'காதலிக்க நேரமில்லை' மற்றும் 'சிவந்த மண்' பட காட்சிகள்
அடுத்த தலைமுறை நடிகர்களுடன்
எம்.ஜி.ஆருடன் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீதர் இணைந்து பணியாற்றிய 'உரிமைக்குரல்' திரைப்படம், 1974-ல் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இந்தப் படம் ஸ்ரீதருக்கு கணிசமான லாபத்தை தந்ததுடன், இதில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றியடைந்தன. குறிப்பாக, "விழியே கதை எழுது", "நேரம் நல்ல நேரம்" போன்ற பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தன. இதைத் தொடர்ந்து, சடையப்ப செட்டியாருக்காக எம்.ஜி.ஆரை வைத்து ஸ்ரீதர் இயக்கிய மற்றொரு வெற்றிப் படம் 'மீனவ நண்பன்'. 1977 ஆம் ஆண்டு வெளிவந்த இப்படமும் ஓரளவு வெற்றி பெற்றதை தொடர்ந்து, 70களின் இறுதியில் அடுத்த தலைமுறை நடிகர்களுடன் இணைந்து பணியாற்ற துவங்கினார் ஸ்ரீதர். அதில் முதலாவதாக கமல், ரஜினி, ஸ்ரீப்ரியா, ஜெயசித்ரா ஆகியோரை வைத்து ஸ்ரீதர் இயக்கிய 'இளமை ஊஞ்சலாடுகிறது' திரைப்படம் வியாபார ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்தப் படம் அந்த சமயம் ஒரு புதிய காதல் அலையை உருவாக்கி இளைஞர்களை பெரிதும் கவர்ந்தது. பின்னர் தொடர்ந்து 1981-ல் நடிகர் முத்துராமன் மகன் கார்த்திக் மற்றும் ஜெமினி கணேசனின் மகள் ஜெயா ஆகியோரை வைத்து ஸ்ரீதர் இயக்கிய 'நினைவெல்லாம் நித்யா' திரைப்படமும் அவருக்கு மிகுந்த திருப்தியை அளித்த வெற்றிப் படமாக அமைந்தது. இந்தப் படம் அவரது தனித்துவமான கதைக்களத்தால் பேசப்பட்ட அதே வேளையில் படத்தின் பாடல்களும் சூப்பர்ஹிட் ஆகின.
'உரிமை குரல்' மற்றும் 'துடிக்கும் கரங்கள்' பட காட்சிகள்
பிறகு 1983-ல் ரஜினி, ராதா, ஜெய்சங்கர் நடித்து வெளியான 'துடிக்கும் கரங்கள்' படமும் மிகப்பெரிய ஹிட்டானதை தொடர்ந்து, ஒரு நடிகைக்கும் அவர் மகளுக்கும் இடையே நடைபெறும் மனப் போராட்டத்தைச் சித்தரிக்கும் 'ஆலய தீபம்', ஸ்ரீதரின் சிறந்த படங்களான 'கல்யாணப் பரிசு', 'நெஞ்சில் ஓர் ஆலயம்' படங்களுக்கு இணையாக பேசப்பட்டது. பின்னர் சென்னை தேவி குரூப் ஆப் தியேட்டர்ஸ் தயாரித்த 'தென்றலே என்னைத் தொடு' படத்தை இயக்கிய ஸ்ரீதர் நடிகர் மோகனுடன், புதுமுகமாக நடிகை ஜெயஸ்ரீயை அறிமுகப்படுத்தினார். இனிமையான காதல் கதையான இந்தப் படமும் வெள்ளி விழா கண்டு, பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகின. தொடர்ந்து கமல் - அம்பிகா நடித்த 'நானும் ஒரு தொழிலாளி' படத்தை ஸ்ரீதர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளிலும் எடுத்தார். ஆனால் படம் கை கொடுக்கவில்லை, ஏகப்பட்ட நஷ்டம் ஏற்பட்டது. ஒரு இடைவெளிக்கு பிறகு மீண்டும் விக்ரம், ரோகிணி இருவரையும் நடிக்க வைத்து 'தந்துவிட்டேன் என்னை' என்ற படத்தை இயக்கினார் ஸ்ரீதர். இந்தப் படத்தின் மூலமாகத்தான் விக்ரம் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்தப் படம் தோல்வி படமாக அமைந்ததோடு, ஸ்ரீதர் இயக்கிய கடைசி படமும் இதுதான்.
சரித்திர நாயகனின் அழியாத புகழ்
இருவேறு தோற்றங்களில் இயக்குநர் ஸ்ரீதர்
'அலை கடலில் சிறு தோணி, கலை உலகில் எங்கள் புதிய பாணி' என்ற அடையாள வாசகத்தைக் கொண்டிருந்த ஸ்ரீதரின் சித்ராலயா நிறுவனம், வியாபார அலைகளுக்கு மத்தியில் சவால்களைச் சந்தித்தபோதும், அவரது கலைப் பங்களிப்பு அழியாதது. சூப்பர் ஸ்டார் நடிகர்களுக்கு இணையான வரவேற்பைப் பெற்ற முதல் இயக்குநர் என்ற பெருமை ஸ்ரீதருக்கு உண்டு. எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற நட்சத்திரங்களின் கைகளில் இருந்த தமிழ்த் திரையுலகை இயக்குநர்களின் பக்கம் திருப்பியவர் அவரே. புதுமுகங்களை மட்டுமே வைத்து எடுக்கப்பட்ட 'வெண்ணிற ஆடை', 22 நாட்களில் ஒரே செட்டில் படமாக்கப்பட்ட 'நெஞ்சில் ஓர் ஆலயம்', நடிகர்களுக்கு மேக்கப் போடாமல் எடுக்கப்பட்ட 'நெஞ்சிருக்கும் வரை', முதன்முதலில் வெளிநாட்டில் படமாக்கப்பட்ட 'சிவந்த மண்', முதல் ஈஸ்ட்மென் கலர் படமான 'காதலிக்க நேரமில்லை' எனத் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் பல சாதனைகளைத் தொடங்கி வைத்தவர் ஸ்ரீதர். தனது வாழ்நாள் முழுவதும் திரைப்பட கலைக்கே தன்னை அர்ப்பணித்த அவர், பல புதுமைகளையும், புதிய பரிமாணங்களையும் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார். அவரது திறமை, உழைப்பு மற்றும் தொலைநோக்குச் சிந்தனை அவரை ஒரு மாபெரும் ஆளுமையாக மாற்றியதுடன், அவரது படங்கள் இன்றும் தமிழ் சினிமா வரலாற்றில் அழியாப் புகழோடு நிலைத்து நிற்கின்றன. இத்தகைய கலை பொக்கிஷமான இயக்குநர் ஸ்ரீதரின் பிறந்தநாளில், அவரது கலைப் பணிக்கு மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவிப்போம்!