பெரிய அப்பாடக்கர் மாதிரி பேசும் சுசித்ரா.. 48 வயதில் காதலில் விழுந்து ஏமாந்த கதை!
தான் இரண்டு வருடம் ரிலேஷன்ஷிப்பில் இருந்த ஒருவர் தன்னிடம் இருந்த பணத்தை ஏமாற்றிவிட்டதாக பாடகி சுசித்ரா தெரிவித்துள்ளார்.;
கடந்த சில நாட்களாகவே மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாவது திருமணம் தொடர்பான சர்ச்சைகள் பரவலாக பேசப்பட்டு வருகின்றன. மாதம்பட்டி ரங்கராஜ் தனது கருவை கலைக்கச் சொல்லி, அடித்து துன்புறுத்தியதாக அவரது இரண்டாவது மனைவி எனக் கூறிக்கொள்ளும் ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டா பரபரப்பு குற்றாச்சாட்டை முன்வைத்துள்ளார். இது ஒருபுறம் இருக்க, பாடகி சுசித்ராவோ, தன்னை ஒருவர் ஏமாற்றிவிட்டதாகவும், அவர் மீது காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதுபோன்ற பல பரபரப்பான சம்பவங்கள் திரைத்துறையில் நடந்துள்ளன. அவற்றை இந்த வாரம் சினி பைட்ஸ் பகுதியில் காணலாம்.
காதலர் ஏமாற்றியதாக வீடியோ வெளியிட்ட சுசித்ரா
48 வயதில் காதல்... பணம் சுருட்டல்... கதறும் சுசித்ரா!
தனது தனித்துவமான குரலாலும், பாடல்களாலும் ரசிகர்கள் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தவர் பாடகி சுசித்ரா. பாடகியாக மட்டுமின்றி, வானொலி அறிவிப்பாளர், தொகுப்பாளர், டப்பிங் கலைஞர் என பன்முகத்திறமை கொண்டவராக அவர் விளங்கினார். சினிமாவில் நல்ல இமேஜூடன் இருந்த சுசித்ராவின் வாழ்க்கை ‘சுச்சி லீக்ஸ்’ விவகாரத்திற்கு பிறகு, பெரும் அடிவாங்கியது. இந்த விவாகரத்தை தொடர்ந்து மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய சுசித்ரா, அண்மைக்காலமாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இந்நிலையில் சண்முகராஜ் என்பவர் தன்னை காதலிப்பாக கூறி, தன்னிடம் இருந்த பணம் முழுவதையும் ஏமாற்றிவிட்டதாக சுசித்ரா பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.
இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டுள்ள அவர், “நான் ஒருவரை காதலித்தேன், அவருடைய பெயர் சண்முகராஜ். என்னுடைய 48வது வயதில், கண்றாவி புடிச்ச ஒரு ரிலேஷன்ஷிப்புக்குள் நான் போய் மாட்டிக்கிட்டேன். என்னோட வாழ்க்கையில் எது எல்லாம் நடக்காது என்று நினைத்து இருந்தேனோ, இந்த 2 வருஷத்துல அது எல்லாமே நடந்துடுச்சு. ஒரு பேட்டியில் நான் அவரை திருமணம் செய்து கொண்டேன் என்று கூட சொல்லிவிட்டேன். ஏனென்றால் நாங்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருந்தோம். நான் எப்போதுமே பெரிய அப்பா டக்கர் போல பேசுவேன். ஆனால், அவனை உண்மையாக காதலித்ததால், என்னுடைய வாழ்க்கைக்காக நான் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்த அனைத்து பணத்தையும் அவன் சுருட்டி விட்டான். அவன் எவ்வளவு பணத்தை என்னிடம் இருந்து பறித்துக் கொண்டான் என்று நான் சொன்னால், நிச்சயமாக உங்களுக்கு தலை சுற்றிவிடும். இப்போதுதான் ஒரு தெளிவான முடிவுக்கு வந்து இருக்கிறேன். நான் சண்முகராஜ் மீது வழக்கு போட்டு இருக்கிறேன். அவனிடம் ஒரு பைசாவைக்கூட விட்டுவைக்க மாட்டேன். கடைசி பைசாவைக்கூட வாங்கிட்டுத்தான் அவனை விடுவேன்" என தெரிவித்துள்ளார்.
இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், நடிகை அனஸ்வரா ராஜன்
ஹீரோவாக அவதாரம் எடுக்கும் டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர்!
அண்மையில் நடிகர் சசிகுமார், சிம்ரன் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அறிமுக இயக்குநரின் இயக்கத்தில் உருவான இப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்ததாகவும் கூறப்பட்டது. மேலும் இந்திய சினிமாவின் பல முக்கிய இயக்குநர்கள் இந்தப் படத்தை பார்த்துவிட்டு, படத்தின் இயக்குநரான அபிஷன் ஜீவிந்தை பாராட்டினர். ரஜினிகாந்த், சூர்யா, என நடிகர்கள் பலரும் படத்தை பாராட்டியிருந்தனர். இதனால் மேலும் பிரபலமடைந்தார் அபிஷந்த். இந்நிலையில் எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார் அபிஷந்த். நாயகியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடிக்கிறார். இயக்குநர் குறித்த தகவல் வெளியாகாத நிலையில், ஷான் ரோல்டன் இசையமைக்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சின்னத்திரை நடிகை ஸ்வேதா
என் காதலன் எனக்கூறினால் நம்பிவிடாதீர்கள்... சின்னத்திரை நடிகை ஸ்வேதா வேண்டுகோள்!
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் ‘சின்ன மருமகள்’ எனும் தொடரில் கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை ஸ்வேதா. இவர் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருப்பார். இந்நிலையில், நடிகை ஸ்வேதாவின் காதலன் எனக்கூறி சமூக வலைத்தளங்களில் வீடியோக்களையும், சில யூடியூப் சேனல்களுக்கு நேர்காணல்களையும் அளித்து வரும் நபர் குறித்து நடிகை ஸ்வேதா இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நான் ஒரு விஷயத்தை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். என் கணவர் எனக் கூறிக்கொண்டு சமூக வலைத்தளத்தில் ஒருவர் செயல்பட்டு வருகிறார்.
அவர் மோசடியான நபர். அவர் மீது ஏற்கனவே வழக்குப்பதிவு செய்து, சட்டப்படியான நடவடிக்கை எடுத்துள்ளேன். காவல்துறையினரும் அவரைத் தேடி வருகின்றனர். அவர் என் பெயரைக் குறிப்பிட்டு, நாங்கள் காதலித்ததாகவும், திருமணம் செய்துகொண்டதாகவும், நடக்காத விஷயங்களை கதைகளாக உருவாக்கி பேசி வருகிறார். துரதிஷ்டவசமாக ஒருகாலத்தில் அவரை நம்பினேன். ஆனால், அவருடைய உண்மையான சுபாவத்தையும் குற்றப்பின்னணியும் தெரிந்த பிறகு விலகிவிட்டேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், தனது புகழ் அல்லது கண்ணியத்துக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், அந்த நபருக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ உதவுவோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.
விஷால் - சாய் தன்ஷிகா நிச்சயதார்த்த க்ளிக்ஸ்
எளிமையாக நடந்த விஷால் - சாய் தன்ஷிகா நிச்சயதார்த்தம்!
யோகிடா பட நிகழ்ச்சியில் நடிகை சாய் தன்ஷிகாவை திருமணம் செய்துகொள்ளப் போவதாக, நடிகர் விஷால் அறிவித்தார். நடிகர் சங்க கட்டிடம் திறந்தால்தான் திருமணம் என உறுதியாக விஷால் கூறியதால், தாமதமான கட்டிட சங்க பணிகளால் விஷால் திருமணம் நடைபெறுமா? என ரசிகர்கள் மனதில் கேள்வி எழுந்து வந்தது. இதனிடையே அண்மையில் திருமணம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த விஷால், ‘ஆகஸ்ட் 29-ம் தேதி நல்ல தகவலை சொல்லுவேன்’ எனத் தெரிவித்திருந்தார். அந்த வகையில் அன்றைய தினம் சென்னை அண்ணா நகரில் உள்ள விஷால் இல்லத்தில் விஷால் - சாய் தன்ஷிகா திருமண நிச்சயதார்த்தம் குடும்பத்தினர் முன்னிலையில் எளிமையாக நடைபெற்றது. இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தன்னை ஏமாற்றியதாக மாதம்பட்டி ரங்கராஜ் மீது புகார் கொடுத்த ஜாய் கிரிசில்டா
“கருவை கலைக்கச் சொல்லி அடித்தார்” - ஜாய் கிரிசில்டா
மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை இரண்டாம் திருமணம் செய்துகொண்டதாக அண்மைக்காலமாக சமூக வலைத்தளப் பக்கங்களில் புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டுவரும் ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டா, சில தினங்களுக்கு முன்னர் போலீசில் புகார் அளித்துள்ளார். புகார் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் ஆனவர் என்பது தனக்கு தெரியாது என்றும், பின்னர் அவர் திருமணம் ஆனவர் என தெரியவந்தபோது, தான் ஜூடீஷியல் செப்பரேஷனில் இருப்பதாக அவர் கூறியதாகவும், 2 வருடங்களுக்கு முன்னர் அவர் தன்னை இரண்டாம் திருமணம் செய்துகொண்டதாகவும்" தெரிவித்தார். மேலும் தான் கர்ப்பம் அடைந்த நிலையில், அதனை கலைக்கச் சொல்லி அவர் தாக்கியதாகவும், தற்போது தன்னுடன் எந்த தொடர்பிலும் அவர் இல்லை என்றும், தன் வயிற்றில் வளரும் அவரின் குழந்தைக்கு ஒரு வழி சொல்ல வேண்டும் என்றும் கிரிசில்டா கூறினார்.
‘சிவாஜி’-யில் வில்லனாக நடிக்க பயந்ததாக சத்யராஜ் பேச்சு
“வில்லனாக நடிக்க பயந்தேன்” - நடிகர் சத்யராஜ்!
அண்மையில் வெளியான கூலி திரைப்படத்தில் ரஜினியுடன், சத்யராஜ் நடித்திருந்தார். கிட்டத்தட்ட 39 ஆண்டுகளுக்குப் பின் இருவரும் சேர்ந்து நடித்தனர். ஆனால், கூலி திரைப்படத்திற்கு முன்பே இயக்குநர் ஷங்கர், சிவாஜி திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க சத்யராஜிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், சில காரணங்களால் சத்யராஜ் அப்படத்தில் நடிக்கவில்லை. சத்யராஜ் மற்றும் ரஜினி இடையே இருக்கும் அரசியல் மற்றும் கருத்து வேறுபாடுகள் இதற்கு காரணமாக கூறப்பட்டது. இந்த நிலையில், இதுதொடர்பாக நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள நடிகர் சத்யராஜ், “சிவாஜி திரைப்படத்தின்போது நான் மார்க்கெட் இழந்த நடிகராக இருந்தேன். நாயகனாக நடித்த படம் ஓடாதா என்றும், மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்கிற முனைப்பிலும் இருந்தேன். அப்போதுதான், சிவாஜி பட வாய்ப்பு வந்தது. நான் ஷங்கரிடம் நிலைமையைச் சொல்லி வில்லனாக நடித்தால் மீண்டும் மார்க்கெட் போகும் என்றேன். இதுதான் நடந்தது. ஆனால், நிறைய பேர் வேறு மாதிரி எழுதினர்” எனத் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் குறித்து விஜய் பேசியதில் தவறில்லை - இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார்
“முதலமைச்சரை அங்கிள் எனக்கூறியதில் தவறில்லை”- இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார்!
தவெக இரண்டாவது மாநாடு மதுரை பாரபத்தியில் நடைபெற்றது. இதிலும் முதல் மாநாட்டைப் போல லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டனர். இதில் பேசிய விஜய், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அங்கிள் என பேசியிருந்தார். இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாரிடம் விஜய்யின் இந்தப் பேச்சுத் தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “எனக்கும், அரசியலுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது. அனுபவமும் கிடையாது. ஆனால் விஜய் பேசியது எதுவும் தவறாகத் தெரியவில்லை. அவர் நேரில் பார்த்தாலும் வணக்கம் அங்கிள், எப்படி இருக்கீங்க அங்கிள் என்றுதான் பேசுவார். அதைத்தான் அன்று பப்ளிக்கில் சொல்லி இருக்கிறார். அதற்கு வேறு ஒரு பொருளை எடுத்துக்கொண்டு பலரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அது தவறான வார்த்தையே கிடையாது. அன்றைக்கு தொண்டர்களை ஜாலிப்படுத்துவதற்காக அப்படி பேசி இருக்கலாம். இதை விட்டுவிட்டு... நாட்டுக்கு என்ன நல்லதோ அதை செய்ய வேண்டும்” என்று கே.எஸ். ரவிக்குமார் கூறியுள்ளார்.
மனுஷி படத்தின் சில காட்சிகளை நீக்க நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு
படம் பார்த்த நீதிபதி... மனுஷி பட காட்சிகளை நீக்க உத்தரவு!
நடிகை ஆண்ட்ரியா நடிப்பில், வெற்றிமாறன் தயாரித்துள்ள மனுஷி திரைப்படத்தில் உள்ள 37 காட்சிகளை நீக்கக்கோரி, தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்க மறுத்தது. இதை எதிர்த்து பட தயாரிப்பாளர் வெற்றிமாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதனையடுத்து ஆட்சேபனைக்குரிய காட்சிகள் என தணிக்கை வாரியம் சுட்டிக்காட்டிய காட்சிகள், வசனங்கள் சரியானவையா? என ஆய்வு செய்ய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அண்மையில் படத்தை பார்த்தார். இதனைத்தொடர்ந்து வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர சில காட்சிகளை குறிப்பிட்டு, அதனை நீக்கிவிட்டு தணிக்கை வாரியத்திற்கு அனுப்ப உத்தரவிட்டார். மேலும் இரண்டு வாரங்களில் தணிக்கை வாரியம் முடிவெடுத்து சான்றிதழ் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.