மலையாளப் படத்தில் கவர்ச்சிக் கன்னியாக திகழ்ந்த சுஜாதா தமிழுக்கு வருகிறார்!
மலையாளப் படத்தில் கவர்ச்சிக் கன்னியாக திகழ்ந்த சுஜாதா, இப்பொழுது தமிழ்ப் படங்களிலும் நடித்து வருகிறார்.;
(26-05-1974 தேதியிட்ட ராணி இதழில் வெளியானது)
"ஆடையைக் குறைத்து ஆபாசமாக நடிப்பதுதான் 'புதிய அலை' ('நியூவேவ்' ) என்றால், அதை நான் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டேன்!" என்கிறார், புதுமுகம் சுஜாதா.
மலையாளப் படத்தில் கவர்ச்சிக் கன்னியாக திகழ்ந்த சுஜாதா, இப்பொழுது தமிழ்ப் படங்களிலும் நடித்து வருகிறார்.
சுஜாதாவை "ராணி" நிருபர் பேட்டி கண்டார்.
நிருபர்: தமிழ்ப் படங்களில் நடிக்க வந்து இருக்கிறீர்களே! மலையாளப் பட உலகம் வெறுப்புத் தட்டிவிட்டதா?
சுஜாதா: தமிழ்ப் படங்களில் நடிக்க வேண்டும் என்று விருப்பம் ஏற்பட்டதால், மலையாளப் படத்தில் வெறுப்பு ஏற்பட்டுவிட்டது என்பது அல்ல! நடிப்புத் தொழிலுக்கு வந்தவர்கள், நிச்சயமாக ஒரு மொழிக்கு மட்டும் சொந்தக்காரர்களாக இருக்க முடியாது!
நிருபர்: ஒரு மொழியில் இருந்து மற்றொரு மொழிக்கு நடிகைகள் வருவதுபோல், நடிகர்கள் வருவது இல்லையே!
சுஜாதா: அதற்கு நான் என்ன சொல்ல முடியும்? நடிகைகளுக்கு அழைப்பு வருகிறது. வருகிறோம். அதற்கு மேல் ஒன்றும் சொல்ல முடியாது!
மலையாள படம் ஒன்றில் மார்டன் லுக்கில் சுஜாதா
மொழித் தகராறு
நிருபர்: உங்களால் சரளமாக தமிழில் பேசி நடிக்க முடிகிறதா?
சுஜாதா: எனக்கு ஓரளவு தமிழ் பேசவரும். இப்போது வேகமாக தமிழ்ப் படித்து வருகிறேன். எப்பொழுதுமே, நடிப்புக்கு மொழி குறுக்கே நிற்பது இல்லை!
நிருபர்: மலையாளப் படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்து வந்த நீங்கள், தமிழ்ப் படங்களில் அப்படி நடிப்பீர்களா?
சுஜாதா: கவர்ச்சி காட்டி நடிப்பதும் நடிக்காததும், கொடுக்கப்படும் பாத்திரத்தைப் பொறுத்தது. "இரவு விடுதி"யில் ஆடும் பாத்திரம் கிடைத்தால், பதினாறு முழச் சேலை கட்ட முடியாது. ஒரு முழத் துண்டுதான் தேவை. அதே போல், குடும்பப் பெண் வேடத்தில் துண்டுக்கு வேலை இல்லை. பொதுவாக, ஒரு புதுமுகத்துக்கு இளமையும் கவர்ச்சியும் இருந்தால், படத் தயாரிப்பாளர்கள் கவர்ச்சிப் பாத்திரங்களைத்தான் தருகிறார்கள். அந்த வகையில், அநேக மலையாளப் படங்களில் நான் கவர்ச்சிப் பாவையாக நடித்தது உண்டு. தமிழில் எப்படிப் பாத்திரம் கிடைக்கிறதோ, அதற்கு ஏற்றாற்போல் நடிக்கத் தயங்க மாட்டேன்!
தமிழ் மற்றும் மலையாள படங்களில் சுஜாதா
புதிய அலை
நிருபர்: "புதிய அலை" ("நியூவேவ்”) படங்களில் இதுவரை நடித்து இருக்கிறீர்களா?
சுஜாதா: "புதிய அலை" என்றால் என்ன அர்த்தம் என்று எனக்குத் தெரியவில்லை. ஆடையைக் குறைத்து, ஆபாசமாக நடிப்பதுதான் "புதிய அலை" என்றால், நான் ஏராளமான படங்களில் அப்படி நடித்து இருக்கிறேன். ஆனால், ஆபாசமாக நடிக்க வைத்து படம் எடுப்பதுதான் "புதிய அலை" என்பதை நான் நம்பத் தயாராக இல்லை!
நிருபர்: மலையாளப் படத்தில் இருந்து தமிழுக்கு வந்து இருக்கிறீர்களே! தமிழில் ஏதாவது வேறுபாடு காணுகிறீர்களா?
சுஜாதா: இக்கரைக்கு அக்கரை பச்சை! அங்கு என்ன நடக்கிறதோ, அது இங்கே தொடருகிறது! எனக்கு எல்லாமே பழக்கமாகிவிட்டது!
அழகான புன்னகையுடன் குடும்ப பாங்கான தோற்றத்தில் சுஜாதா
விஜயஸ்ரீ
நிருபர்: தற்கொலை செய்து கொண்ட விஜயஸ்ரீயை உங்களுக்கு நன்றாகத் தெரியுமா?
சுஜாதா: அவர் மலையாளப் படங்களில் நடித்துக் கொண்டு இருந்ததால், எனக்குத் தெரியும். பழகுவதற்கு இனிமையானவர்!
நிருபர்: விஜயஸ்ரீ மரணத்துக்கு மலையாளப் படத் தயாரிப்பாளர்தான் காரணம் என்கிறார்களே! அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?
சுஜாதா: தயவு செய்து என்னை வம்பில் மாட்டிவிடாதீர்கள். அந்த அளவுக்கு எனக்கு எதுவும் தெரியாது!
நிருபர்: காதல், ரகசிய திருமணம், மறுமணம் என்ற பேச்சு நடிகைகள் இடையே பலமாக அடிபடுகிறதே! உங்களுக்கு ஏதாவது அனுபவம் உண்டா?
சுஜாதா: நான் இன்னும் காதலிக்கவே இல்லை! அதனால் ரகசிய திருமணம், மறுமணத்துக்கு அவசியம் இல்லை. அப்படி யாரையாவது, எப்போதாவது காதலிக்கத் தொடங்கினால், உங்களிடம் சொல்லுகிறேன்.
நிருபர்: இப்போது என்ன சொல்லுகிறீர்கள்?
சுஜாதா: தமிழ்ப் பட ரசிகர்கள் என்னையும் தங்களில் ஒருத்தியாக ஏற்றுக்கொண்டு, எனக்கு ஆதரவு தரவேண்டும் என்பதே இப்போதைக்கு நான் வேண்டிக் கொள்வது!