அஜித், விஜய், சூர்யா என மீண்டும் கோல்டன் பீரியடுக்கு திரும்பும் தமிழ் சினிமா!

Update:2025-05-06 00:00 IST
Click the Play button to listen to article

தமிழ் சினிமாவில் அண்மையில் வெளியான அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், கடந்த வாரம் வெளியான நடிகர் சூர்யாவின் ரெட்ரோ படமும் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது. இதனால் அஜித் மற்றும் சூர்யாவின் ரசிகர்கள் குஷியில் இருக்க, ஆக்ச்சுவல் குஷியின் நாயகன் விஜய்யின் ரசிகர்களும், தளபதியின் ஜன நாயகன் பட டீசர் ஜூன் 22-ல் வெளியாவதை எதிர்பார்த்து மகிழ்ச்சியில் உள்ளனர். இவ்வாறு அஜித், விஜய், சூர்யா என தமிழ் திரைத்துறை களைகட்டுவது, பார்க்கவே ஆனந்தமாக இருப்பதாக சினிமா ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.


ஜூன் 22-ஆம் தேதி ஜன நாயகன் டீசர் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு 

எதிர்பார்ப்புகளை கிளப்ப வரும் விஜய்யின் ஜன நாயகன் டீசர்

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான தளபதி விஜய்யின் நடிப்பில், எச். வினோத் இயக்கத்தில் உருவாகிவரும் ஜன நாயகன் திரைப்படத்தின் டீசர், வருகின்ற ஜூன் மாதம் விஜய்யின் பிறந்த நாளான 22-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த தகவலை படக் குழு அறிவித்துள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு 60 சதவீதம் முடிந்துள்ள நிலையில், படத்தில் முக்கியமாக இடம் பெறவிருக்கும் ஒரு பரபரப்பான சண்டைக்காட்சியை படக்குழு விரைவில் படமாக்கவுள்ளது. பெரும் ஆக்‌ஷனுடன் சமூக பிரச்சினைகளைப் பற்றி பேசும் படமாக அமைந்துள்ள ஜன நாயகன், நடிகர் விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து அவர்கள் கொண்டாடும் வகையில் இருக்கும் என படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2026 ஜனவரி 9ந் தேதியன்று இப்படம் திரைக்குவரும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


தவெக தலைவர் விஜய்க்கு நடிகர் அஜித் குமார் வாழ்த்து

விஜய்க்கு அஜித் வாழ்த்து

ஆரம்பத்தில் அஜித், விஜய் ரசிகர்கள் இடையே மோதல் இருந்துவந்த சூழலில், நடிகர்கள் இருவரின் நடவடிக்கையால், நிதர்சனத்தை புரிந்துகொண்டு அவர்களது ரசிகர்களும் நட்பு பாராட்ட தொடங்கிவிட்டனர். பத்ம பூஷண் விருது வாங்கிய அஜித் குமாருக்கு, அவரது ரசிகர்கள் மட்டுமன்றி விஜய் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், விஜய்க்கு அஜித் குமார் வாழ்த்து கூறியுள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகர் அஜித், நடிகர்கள் அரசியலில் ஆர்வம் காட்டுவது அவர்களது விருப்பம் என்று குறிப்பிட்டு தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும், "அரசியலுக்குள் ஒருவர் நுழைவது 100 சதவீதம் துணிச்சலான முடிவு என்றும், எனக்கு அரசியல் லட்சியம் கிடையாது என்றும், ஒரு நாட்டையோ மாநிலத்தையோ தனது தோள்களில் சுமப்பது உண்மையில் மிகப்பெரிய பொறுப்பு" என்றும் அஜித் கூறினார்.


ரெட்ரோ திரைப்படத்தில் நடிகர் சூர்யா

"கங்குவா" இழப்பை சரிகட்ட களம் இறங்கியுள்ள "ரெட்ரோ" 

நடிகர் சூர்யாவின் நடிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளியான "கங்குவா" திரைப்படம், விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல் வணிக ரீதியாகவும் பெருத்த அடி வாங்கியது. இந்தநிலையில்தான் சூர்யாவின் 44ஆவது படமான ரெட்ரோ கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியது. வெகு நாட்களுக்கு பிறகு சூர்யா நடிப்பில் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் விதத்தில் ரெட்ரோ படம் அமைந்திருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். அத்துடன் நடிகர் சூர்யாவின் கம்பேக் படம் இது என்றும் சூர்யாவின் தீவிர ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்க பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன். தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான திரையரங்கிள் ஹவுஸ் ஃபுல் ஷோக்களாக ரெட்ரோ ஓடிவருகிறது. மேலும் படம் வெளியான 24 மணி நேரத்தில் 2.50 லட்சத்திற்கும் மேல் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.


விஜயகாந்தின் இளையமகன் சண்முக பாண்டியன் நடித்துவரும் 'படைத்தலைவன்' திரைப்படம் செப்டம்பரில் வெளியாகிறது 

செப்டம்பர் மாதம் திரைக்குவரும் கேப்டன் மகனின் திரைப்படம்

விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் திரைப்படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் முதல் படமாக சகாப்தம் வெளியானது. பின்னர் மதுரை வீரன் என்ற படத்தில் நடித்தார். அதன்பின் தந்தை விஜயகாந்துடன் இணைந்து தமிழன் என்று சொல் படத்தில் நடித்து வந்தார். ஆனால் அப்படம் விஜயகாந்த் மறைவு காரணத்தால் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது 'படைத்தலைவன்' என்ற படத்தில் நடித்து வருகிறார் சண்முக பாண்டியன். இப்படத்தை இயக்குநர் அன்பு இயக்க, இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆண்டு விஜயகாந்த் பிறந்தநாளை ஒட்டி வெளியிடப்பட்ட சூழலில், தற்போது படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் வரும் செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 


பரோட்டா சூரியின் அடுத்த படமான மாமன் திரைப்படத்தின் போஸ்டர்

நடிகர் சூரியின் மாமன் திரைப்படம்

"வெண்ணிலா கபடிக்குழு" படத்தின் மூலம் "பரோட்டா சூரியாக" களம் இறங்கி பல படங்களில் பல நடிகர் நடிகையரோடு காமெடியில் கலக்கிவிட்டு, படிப்படியாக உயர்ந்து விடுதலை படத்தின் மூலம் தன்னை கதாநாயகனாக மெருகேற்றிக்கொண்டவர்தான் நடிகர் சூரி. அடுத்து அவர் கதாநாயகனான நடிக்கும் மாமன் திரைப்படம் வரும் 16ஆம் தேதியன்று திரைக்கு வருகிறது. இப்படத்தை பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ளார். சூரிக்கே உரித்தான நடிப்பில், குடும்ப பாணியில் மாமன் திரைப்படம் ரெடியாகி இருப்பதாக படக்குழு கூறியுள்ளது. படத்தில் சூரி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி லீட் ரோலில் நடிக்க, நடிகர் ராஜ்கிரண், பால சரவணன், ஸ்வாசிகா, பாபா பாஸ்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹேஷாம் அப்துல் வஹாப், படத்திற்கு இசையமைத்துள்ளார். எதார்த்தமான, குடும்பபாங்கான, காமெடியுடன் கூடிய கதையம்சத்துடன் உருகியுள்ள மாமன் திரைப்படம், பொதுமக்களின் பேராதரவுடன் பெரும் வெற்றி பெரும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.


"டிடி நெக்ஸ்ட் லெவல்" படத்தில் சந்தானம் மற்றும் மொட்டை ராஜேந்திரன்

காமெடியும் திகிலும் நிறைந்த டிடி நெக்ஸ்ட் லெவல்

நகைச்சுவையும் ஹாரரும் கலந்த "தில்லுக்குத் துட்டு" என்ற படத்தையடுத்து, அதே பாணியில் நடிகர் சந்தானம் நடித்துள்ள படம்தான் "டிடி நெக்ஸ்ட் லெவல்" (டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்). ஆங்கில படத்தலைப்பை கொண்ட இந்தப் படத்தை எஸ். பிரேம் ஆனந்த் எழுதி இயக்கியுள்ளார். தி ஷோ பீப்பிள் மற்றும் நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் என்ற திரைப்பட நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடிக்க முக்கிய வேடங்களில் கௌதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன், கீதிகா திவாரி, யாஷிகா ஆனந்த், கஸ்தூரி சங்கர், நிழல்கள் ரவி, மாறன் மற்றும் ராஜேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதனால் ரசிகர்களிடையே படத்திற்கு எதிர்பார்ப்பு எகிரியுள்ளது. "டிடி நெக்ஸ்ட் லெவல்" திரைப்படத்தை வரும் மே 16 அன்று திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். நடிகர் சந்தானத்தின் ரசிகர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பினரையும் கவரக்கூடிய நகைச்சுவை கலந்த திகில் திரைப்படமாக இந்தபடம் அமையும் என்று கூறப்பட்டுள்ளது. 


தாதா சாகேப் பால்கே திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதைப்பெறவுள்ள அர்ஜுன் தாஸ்

அர்ஜுன் தாசுக்கு சிறந்த நடிகருக்கான விருது

'கைதி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான அர்ஜுன் தாஸ், அதில், லைஃப் டைம் செட்டில்மெண்ட் என்ற வசனத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இதனைத்தொடர்ந்து 'மாஸ்டர்', 'விக்ரம்' ஆகிய படங்களில் வில்லனாக நடித்திருந்தார். அண்மையில் வெளியான அஜித் குமாரின் 'குட் பேட் அக்லி' படத்திலும் வில்லனாக நடித்துள்ளார். இந்நிலையில், அர்ஜுன் தாசுக்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான க்ரைம் திரில்லரான 'ரசவாதி' படத்தில் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடித்திருந்தார். இப்படத்தில் அவரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இப்படத்திற்காகதான் தற்போது அர்ஜுன் தாஸ், தாதா சாகேப் பால்கே திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை பெறுகிறார். இந்த விருது 'ரசவாதி' படத்திற்காக அர்ஜுன் தாஸ் பெறும் 2-வது விருதாகும். முன்னதாக, நியூஜெர்சி இந்திய மற்றும் சர்வதேச திரைப்படவிழாவில் இப்படத்திற்கு ஏற்கனவே சிறந்த நடிகருக்கான விருது அர்ஜுன் தாசுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்