2 மனைவிகளுடன் ஒரே வீட்டில் நடிகர் சரவணன்! முதல் மனைவி போலீசில் புகார்! என்ன ஆச்சு?
“பெண்கள் கலாச்சாரத்தை சீரழிப்பதாக கூறுகின்றனர். கலாச்சாரம் தான் பெண்களை காப்பாற்ற வேண்டும். பெண்கள் கலாச்சாரத்தை காப்பாற்ற தேவையில்லை. கலாச்சாரத்தை பாதுகாப்பது பெண்களின் வேலை அல்ல” என பேட் கேர்ள் படத்தின் இயக்குநர் வர்ஷா தெரிவித்துள்ளார்.;
திரைப்பட விநியோகஸ்தர், தயாரிப்பாளர், நடிகர் தற்போது துணை முதலமைச்சர் என பன்முகங்களை கொண்டவர்தான் உதயநிதி ஸ்டாலின். இந்நிலையில் உதயநிதியின் மகன் இன்பநிதி ரெட் ஜெயண்ட் மூவிஸின் சிஇஓவாக பொறுப்பேற்றுள்ளார். இதற்கு கோலிவுட்டில் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் தந்தையின் பாணியில் இன்பநிதி தனது சினிமா பயணத்தை தொடர்ந்து வருவதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அத்துடன், அஜித் படத்திற்கு எதிரான இளையராஜாவின் வழக்கு, பிக்பாஸ் சீசன் 9 அறிவிப்பு என இந்த வாரம் திரையுலகில் நடைபெற்ற சில சுவாரஸ்ய தகவல்களை காணலாம்.
கல்யாணி ப்ரியதர்ஷன் நடிப்பில் வெளிவந்துள்ள லோகா படத்தை பாராட்டிய பாலிவுட் பிரபலங்கள்
வெற்றி நடைபோடும் லோகா... பாலிவுட் பிரபலங்கள் பாராட்டு!
பிரபல நடிகர் துல்கர் சல்மானின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘லோகா சாப்டர் 1: சந்திரா’. கல்யாணி ப்ரியதர்ஷன், நஸ்லென் நடிப்பில் திரையரங்குகளில் அதிரடி வெற்றி பெற்றிருக்கிறது 'லோகா' திரைப்படம். ஓணத்தையொட்டி வெளியான இப்படம் மலையாளம் மட்டுமின்றி தமிழ், ஹிந்தி என அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. இப்படத்திற்கு திரை நட்சத்திரங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாலிவுட் பிரபலங்கள் ஆலியா பட், ப்ரியங்கா சோப்ரா, அக்ஷய் குமார் ஆகியோர் படக்குழுவினருக்கும், படத்திற்கும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். படம் தொடர்பாக பேசிய ஆலியா, “கிராமத்து தொன்மை மற்றும் மர்மத்தின் புதிய கலவை’! இந்த படத்திற்கு கிடைக்கும் அன்பினால் மகிழ்ச்சி அடைகிறேன். சினிமாவில் இதுபோன்ற படங்களுக்கு எப்போதும் ஆதரவு தர காத்திருக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். அதுபோல ப்ரியங்கா சோப்ராவும் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஹீரோ வந்துள்ளார். துல்கர் சல்மான் மற்றும் லோகாவின் முழு குழுவினருக்கும் வாழ்த்துகள். இந்தக் கதை ஏற்கனவே மலையாள இதயங்களை வென்றது. தற்போது ஹிந்தியிலும் அனைவரது மனதையும் வென்று வருகிறது. படத்தை எப்போதோ வாட்ச் லிட்ஸ்டில் சேர்த்துவிட்டேன். நீங்கள்?” எனக் குறிப்பிட்டுள்ளார்.
குட் பேட் அக்லிக்கு எதிராக இளையராஜா வழக்கு
‘குட் பேட் அக்லி’யில் இளையராஜா பாடலை பயன்படுத்த இடைக்காலத் தடை!
சமீப காலமாக தமிழ் திரையுலகில் பதிப்புரிமை மீறல் தொடர்பான வழக்குகள் அதிகரித்து வருகின்றன. இதில் பல்வேறு வழக்குகள் இசைஞானி இளையராஜாவால் தொடரப்பட்டதாகத்தான் இருக்கும். காரணம், வெளியாகும் பல புதிய படங்களில் அவர் இசையமைத்த பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும். இந்நிலையில் தன்னுடைய பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாக நடிகர் அஜித்குமார் நடித்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார் இசைஞானி இளையராஜா. இந்தப் படத்தில் தன்னுடைய பாடல்களை பயன்படுத்தியதற்கு ரூ.5 கோடி இழப்பீடு கோரி, அவர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். தனது பாடல்களைப் பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இளையராஜா சார்பில் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு, பாடல்களைப் பயன்படுத்த சட்டப்பூர்வ உரிமையாளரிடம் அனுமதி பெற்றதாக தயாரிப்பு நிறுவனம் பதிலளித்திருந்தது. ஆனால், அந்த உரிமையாளர் யார் என்பதைப் பற்றி அவர்கள் தெரிவிக்கவில்லை என்று இளையராஜா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், குட் பேட் அக்லி படத்தில் இளையராஜா பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.
நல்ல விமர்சனங்களை பெற்றுவரும் மதராஸி
எப்படி இருக்கிறது மதராஸி? கம்பேக் கொடுப்பாரா முருகதாஸ்?
முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், விக்ராந்த் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி, செப். 5ஆம் தேதி வெளியான படம் மதராஸி. அமரனுக்கு பின்பு வெளியாகும் படம் என்பதாலும், தர்பாருக்கு பிறகு ஏ.ஆர். முருகதாஸ் தமிழில் மீண்டும் ரீ-எண்ட்ரி கொடுத்திருப்பதாலும் இப்படம் மீது எதிர்பார்ப்பு எழுந்தது. மேலும் சமீபத்திய முருகதாஸின் படங்கள் அனைத்தும் தோல்வியை தழுவிய நிலையில் இப்படத்தின் மூலம் கம்பேக் கொடுப்பாரா? எனவும் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் படம் தேவையான அளவு நல்ல விமர்சனங்களையே பெற்றுவருகிறது. எதிர்பார்த்த அளவு இல்லை என்றாலும், சென்றால் ஏமாற்றம் இல்லை என ரசிகர்கள் கூறிவருகின்றனர். சிவகார்த்திகேயனின் ஆக்ஷன் பாணியில் உருவாகியுள்ள இப்படம், ‘கஜினி’, ‘துப்பாக்கி’ அளவு இல்லாவிட்டாலும் முருகதாஸை தொடர் சறுக்குப்படியில் இருந்து மீட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.
பிக்பாஸ் 9 சீசனை தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதி
மீண்டும் விஜய் சேதுபதி - பிக்பாஸ் 9 அறிவிப்பு!
இந்தியாவில் அதிக பார்வையாளர்களை கொண்ட ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று ‘பிக்பாஸ்’. ஹிந்தி, மலையாளம், தமிழ் என இந்தியாவின் பிரதான மொழிகளில் இந்த நிகழ்ச்சி எடுக்கப்பட்டு, ஒளிபரப்பப்பட்டு வருகிறது. தமிழில் கடந்த 2017ஆம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. அதன்பின் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் அடுத்தடுத்த சீசன்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இதுவரை 8 சீசன்கள் முடிவடைந்துள்ளன. 8வது சீசனை பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். இந்நிலையில் 9வது சீசன் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த சீசனை யார் தொகுத்து வழங்குவார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில், இதையும் விஜய் சேதுபதிதான் வழங்கவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.75 கோடி விஜய் சேதுபதிக்கு சம்பளம் பேசப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
ரெட் ஜெயண்ட் சிஇஓவான உதயநிதி மகன்...
ரெட் ஜெயண்ட் பொறுப்பை கையிலெடுத்த இன்பநிதி!
‘பவர் பாண்டி’, ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படங்களை தொடர்ந்து, தனுஷ் இயக்கி நடிக்கும் படம் ‘இட்லி கடை’. இப்படம் அக். 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இட்லி கடை படத்தின் தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இந்நிலையில் உதயநிதி மகன் இன்பநிதிக்கு ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் சிஇஓ பதவி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இன்பநிதி விநியோகஸ்தராக வெளியிடும் முதல் படம் இட்லி கடை ஆகும். இதைத்தொடர்ந்து பட தயாரிப்பிலும் இன்பநிதி ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிஇஓவாக பொறுப்பேற்றுள்ள இன்பநிதிக்கு தனுஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார். உதயநிதியின் திரைப்பயணமும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வழியாகத்தான் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
கொலைமிரட்டல் விடுப்பதாக நடிகர் சரவணன் மீது முதல் மனைவி புகார்
‘கொலைமிரட்டல்’ - பருத்திவீரன் சரவணன் மீது மனைவி புகார்!
ஆரம்பகாலத்தில் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகியிருந்தாலும், போதிய வாய்ப்புகள் இல்லாததால், கிடைக்கும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருபவர் நடிகர் சரவணன். கார்த்தியின் முதல் படமான பருத்தி வீரன் படத்தின் ‘சித்தப்பா’ கதாபாத்திரத்தின் மூலம் பெரும் கவனம் ஈர்த்தார். தற்போதுவரை அந்த கதாபாத்திரம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் சரவணன் மீது அவரது முதல் மனைவி ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில் தனது கணவர், இரண்டாவது மனைவியுடன் சேர்ந்து தன்னை அடித்து, துன்புறுத்தி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் இதற்கு நடிகர் சரவணன் மறுப்பு தெரிவித்து, தனது வளர்ச்சி பிடிக்காமல் முதல் மனைவி இப்படி செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார். நடிகர் சரவணன், சூர்யஸ்ரீ (53) என்பவரை காதலித்து 2003ல் திருமணம் செய்து கொண்டார். பின், 2019ல், ஸ்ரீதேவி என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். மௌலிவாக்கத்தில், இரண்டு மனைவிகளுடன் ஒரே குடியிருப்பில் நடிகர் சரவணன் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான்
“அதிகமாக வேலைசெய்யும்போது வாழ்க்கையை இழக்கிறோம்” - ஏ.ஆர். ரகுமான்!
உலக புகழ்பெற்ற இசையமைப்பாளர்களில் ஒருவர் ஆஸ்கர் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான். கிட்டத்தட்ட 32 வருடங்களாக தனது இசைப்பணியை உலகுக்கு தந்து வருகிறார். தனது இசையால் எப்போதும் ரசிகர்களை மகிழ்வித்துவரும் ஏ.ஆர். ரகுமான், கடந்தாண்டு விவாகரத்து செய்தியை பெரும் இடியாக இறக்கினார். தனது மனைவி சாய்ரா பானுவுக்கும், தனக்கும் இடையே நிரப்ப முடியாத அளவிற்கு இடைவெளி வந்துவிட்டதாக தெரிவித்திருந்தார். இச்செய்தி ரசிகர்களையும், திரையுலகினரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. தனது விவாகரத்துக்கு பிறகு, தான் பங்கேற்கும் பல நேர்காணல்களில் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சில தகவல்களை பகிர்ந்து வருகிறார் ஏ.ஆர். ரகுமான். இந்நிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் அவர் பேசியுள்ளது பெரும் கவனம் ஈர்த்துள்ளது. “சில நேரங்களில் நாம் நிறைய திட்டங்களைத் தீட்டுகிறோம். ஆனால் எல்லாம் ரத்தாகி விடுகிறது. நான் என் வேலையில் தண்ணீரைப் போல காலவோட்டத்தில் ஓடினேன். முன்பெல்லாம் நான் வெறிபிடித்தவன் போல வேலை செய்வேன். அப்படி இருக்கும் போது நாம் சில நேரங்களில் வாழ்க்கையை இழந்துவிடுகிறோம். இப்போது நான் குடும்பத்துடன் நேரம் செலவிடவும், தனிப்பட்ட வாழ்க்கையை அனுபவிக்கவும் வேலைப்பளுவைக் குறைத்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
பேட் கேர்ள் படத்தின் இயக்குநர் வர்ஷா பரத்
“பெண்கள் கலாச்சாரத்தை காப்பாற்ற தேவையில்லை” - இயக்குநர் வர்ஷா!
வெற்றிமாறன் தயாரிப்பில் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பேட் கேர்ள்’. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் பேசிய படத்தின் இயக்குநர் வர்ஷா பரத், “மண்ணையும், பொன்னையும் காப்பத்துவோம்னு சொல்பவர்கள்தான், இந்த திரைப்படத்தை எடுத்தவர்கள், தயாரித்தவர்கள் மற்றும் என்னை ஆதரித்தவர்களின் குடும்ப பெண்களின் புகைப்படங்களை தவறாக சித்தரித்துள்ளனர். இதில் இருந்தே அவர்களின் அரசியல் என்ன என்பது தெரியும். அவர்கள் மனநிலை சரியில்லாமல் உள்ளனர். பெண்கள் முடிவெடுப்பவர்களாக இருப்பதுதான் இங்கு பிரச்சனையாக உள்ளது. பெண்கள் sex object ஆக இருக்கும்வரை எந்தவொரு பிரச்சனையும் இல்லை. Sexual being ஆக இருப்பதுதான் அவர்களுக்கு பிரச்சனையாக உள்ளது. பெண்கள் கலாச்சாரத்தை சீரழிப்பதாக கூறுகின்றனர். கலாச்சாரம்தான் பெண்களை காப்பாற்ற வேண்டும். பெண்கள் கலாச்சாரத்தை காப்பாற்ற தேவையில்லை. கலாச்சாரத்தை பாதுகாப்பது பெண்களின் வேலை அல்ல. கலாச்சாரம்தான் பெண்களை பாதுகாக்க வேண்டும்” என்றார். இவரின் இந்த பேச்சு பலரிடத்திலும் பெரும் பாராட்டுகளை பெற்று வருகிறது.