அபார்ட்மென்ட் வாங்க போறீங்களா? இல்ல ஏற்கனவே அபார்ட்மென்ட்லதான் இருக்கீங்களா? இதை படிங்க!

Update:2025-05-13 00:00 IST
Click the Play button to listen to article

சென்னையில் இப்போது தனி வீடு வாங்குவது என்பது சாத்தியமில்லாத ஒன்றாகிவிட்டது. வீடு வாங்கும் அளவுக்கு சிலர் தங்கள் கையில் பணம் வைத்திருந்தாலும், வாங்குவதற்கு சென்னையில் இடம் இல்லை என்பதே நிதர்சனம். அவ்வாறு தனி வீடுதான் வேண்டும் என்பவர்கள் சென்னை புறநகர் பகுதிகள் மற்றும் சென்னைக்கு அருகாமையில் இடத்தை வாங்கி, வீட்டை கட்டிக்கொள்ள வேண்டியதுதான். ஆனால் ப்ராப்பர் சென்னையில்தான் எங்கள் இருப்பிடம் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், வேறு வழியின்றி அடுக்குமாடி குடியிருப்புகளையே நாடவேண்டிய சூழல் உள்ளது. எனவே சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் பெருகிவிட்டன. நிறைய அடுக்குமாடி குடியிருப்புகள் விற்பனைக்கும் தயாராக உள்ளன. இந்நிலையில், அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கும்போது எதையெல்லாம் முக்கியமாக கவனிக்க வேண்டும் என்று விளக்குகிறார் சுபஸ்ரீ ரியாலிடி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி திரு. சார்லஸ்.


அபார்ட்மென்ட் விற்கும் டெவலப்பர்கள் நிலத்தில் ஒரு சதுர அடியை கூட அவர்கள் வைத்துக்கொள்ளக் கூடாது

அபார்ட்மென்ட் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

நாம் ஒரு அபார்ட்மென்ட் வாங்கும்போது, அந்த இடம் உதாரணத்திற்கு, ஒரு ஏக்கரில் அமைந்துள்ளதாக எடுத்துக்கொள்வோம். இப்போது அந்த இடத்தில் 100 அபார்ட்மென்ட் கட்டப்பட்டு 100 பேர் அதனை வாங்குவதாக வைத்துக்கொண்டால், அதனை  விற்கும் டெவலப்பர்கள், அந்த 100 நபர்களுக்கும் இடத்தை முழுமையாக பிரித்துக் கொடுத்துவிட வேண்டும். ஒரு சதுர அடி கூட டெவலப்பர்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. இதனை UDS (Un Divided Shares) என்று அழைப்பார்கள். அதாவது மொத்தமாக இருக்கும் இடத்தைப் பிரித்துக்கொள்வது. ஆனால் அந்த இடம் மொத்தமாகவே இருக்கும். அந்த ஒரு ஏக்கரில் அமைந்திருக்கும் உங்களது இடம் 800 சதுர அடியாக கூட இருக்கலாம். நாம் வாங்கும் இடத்தில் உள்ள மொத்த நிலப்பரப்பையும் டெவெலப்பர்கள் நாம் வாங்கிய வீட்டின் அளவுக்கு ஏற்ப அதனை பிரித்து கொடுத்துவிட வேண்டும். அந்த நிலத்தில் ஒரு சதுர அடியை கூட அவர்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. உரிமையாளர்களின் பெயர்களுக்கு எல்லா இடத்தையும் டெவலப்பர்கள் மாற்றம் செய்து கொடுத்துவிட்டார்களா? என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

அதே போன்று டெரஸ் என்று அழைக்கக் கூடிய மொட்டைமாடி என்பது அனைவருக்குமே பொதுவானதாக இருக்க வேண்டும். ஒருவேளை அந்த மொட்டை மாடியில் வீடு கட்டுவதாக இருந்தால் அதனை சமன் செய்ய UDS நிலம் அங்கே இருக்கிறதா என பார்க்க வேண்டும். எத்தனை (நிலமதிப்பு) FSI-கள் அந்த இடத்திற்கு உள்ளது என்பதை மட்டுமல்ல, எத்தனை அடுக்குமாடிகள் கட்ட அவர்கள் அனுமதி பெற்றுள்ளனர் என்பதையும் கவனிக்க வேண்டும். அதே நேரத்தில் அனுமதி பெறாமல் கட்டப்பட்ட குடியிருப்புகளை நாம் வாங்கக்கூடாது. ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள வரையறைக்கு உட்பட்டு அந்த இடத்தில் அடுக்குமாடிகள் கட்டப்பட்டுள்ளதா என்று கவனித்து வாங்க வேண்டும்.


அபார்ட்மென்டை ரெஜிஸ்டர் செய்யும்போதே சாவியை பெற்றுக்கொள்வது சிறப்பு 

மறுவிற்பனை அபார்ட்மென்ட்களை வாங்கக் கூடிய நபர்களுக்கு நீங்கள் கூறும் ஆலோசனை என்ன?

முதலில் நீங்கள் வாங்கக் கூடிய அபார்ட்மென்டின் உரிமை யார் பெயரில் உள்ளது என்பதை பார்க்க வேண்டும். அடுத்ததாக EC செய்து பார்க்கும்போது, நாம் வாங்கக்கூடிய அபார்ட்மென்டின் தற்போதைய சரியான உரிமையாளர் யார் என்பதை நாம் தெரிந்துகொள்ளலாம். கடைசியாக அந்த அபார்ட்மென்டை வாங்கிய நபரின் விவரங்கள் அதில் இருக்கும். அந்த நபரின் பிள்ளைகளின் வாரிசு சான்றிதழ்களை நீங்கள் கேட்டுபெற்று, அனைத்து உரிமையாளரின் கையொப்பத்துடன் நீங்கள் வாங்குவது நன்மை தரும்.

அடுத்து அவர்கள் அந்த அபார்ட்மென்ட் மீது ஏதேனும் வங்கி கடன் வாங்கியுள்ளார்களா? என பார்க்க வேண்டும். அப்படியிருந்தால் அதனை அடைத்துள்ளார்களா என்பதையும் சரி பார்க்கவேண்டும். அடுத்து அபார்ட்மென்டின் ஆசோஸியேஷனுக்கு சென்று அவர்களுக்குரிய அந்த அபார்ட்மென்டின் கட்டிட பராமரிப்பு தொகையை செலுத்தியுள்ளார்களா? என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும். அதுதவிர தனியார் நிதி நிறுவனங்களில் அந்த அபார்ட்மென்ட் அடகு வைக்கப்பட்டுள்ளதா என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும். அதேபோன்று நீங்கள் வாங்கும் அந்த அபார்ட்மென்டில் தற்போது குடியிருக்கும் நபர்கள் யாரேனும் இருந்தால், அவர்களை அங்கிருந்து காலி செய்ய சொல்லிவிட்டு பிறகு வாங்க வேண்டும். அந்த அபார்ட்மென்டை ரெஜிஸ்டர் செய்யும்போது முழு பணத்தையும் கொடுத்து பரிவர்த்தனையை முடித்து, அவர்களிடமிருந்து சாவியை உடனே பெற்றுக்கொள்ளுங்கள்.


நிலமோசடி குற்றங்கள் தற்போது குறைந்துள்ளன - சார்லஸ்

ஒரே இடத்தை போலி ஆவணங்கள்மூலம் பலருக்கு விற்கும் நிலமோசடியில் ஏமாறாமல் தப்பிக்க என்ன வழி?

இதுபோன்ற மோசடிகள் நடைபெறுவது என்பது தற்போது வெகு குறைவு என்று சொல்லலாம். முந்தைய காலகட்டங்களில் இதுபோன்ற நில மோசடிகள் நடந்துள்ளன. ஆனால் தற்போது நிலம் வாங்குவதற்கும், விற்பதற்கும் அரசு பல திடமான விதிமுறைகளையும் நெறிமுறைகளையும் வகுத்துள்ளது. ஆதார்கார்டு, பான்கார்டு போன்றவற்றை வைத்தே அனைத்து பரிவர்த்தனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. ஆதார்கார்டின் மூலம் நீங்கள் உங்களது கைரேகையை வைத்தால் மட்டுமே அதனை பதிவு செய்யமுடியும். அப்படி உங்களுக்கு சந்தேகம் இருந்தால் EC செய்து பார்த்து தெரிந்து கொள்ளலாம். அப்போது நிலத்திற்கு யார் உண்மையான சொந்தக்காரர் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். இத்தனை கட்டுப்பாடுகள் இருப்பதால் நிலமோசடி குற்றங்கள் நடக்க வாய்ப்புகள் குறைவு என்பதே உண்மை.

Tags:    

மேலும் செய்திகள்