காது கேட்காமல் போக காரணங்கள் என்ன? செவித்திறன் குறைபாட்டை சரிசெய்ய முடியுமா?

6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு காக்லியர் இம்பிளாண்ட் அறுவை சிகிச்சையை முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக செய்துகொள்ளலாம்.;

Update:2025-09-16 00:00 IST
Click the Play button to listen to article

காது, மூக்கு, தொண்டையில் பொதுவாக எழும் பிரச்சனைகள் என்னென்ன? காதுகள் மெல்ல மெல்ல செவித்திறனை இழப்பதற்கான காரணங்கள் என்னென்ன? காக்லியர் இம்பிளாண்ட் என்றால் என்ன? பிறக்கும்போதே செவித்திறன் குறைவாக இருக்கும் குழந்தைகளை குணப்படுத்த முடியுமா? அவர்களுக்கு அரசுத்தரப்பில் வழங்கப்படும் சலுகைகள் என்னென்ன? என்பன குறித்து விளக்கமாக பேசியுள்ளார் ENT ஸ்பெஷலிஸ்டு மருத்துவர் வருண்குமார். மக்களின் சந்தேகங்கள் தொடர்பாக ராணி ஆன்லைனுக்கு அவர் அளித்த நேர்காணலை இங்கு காணலாம்.


காதுகளில் பட்ஸ் போடுவதால் இன்ஃபெக்‌ஷன் ஆகுமே தவிர சுத்தமாகாது - மருத்துவர் வருண்குமார்

காது, மூக்கு, தொண்டையில் பொதுவாக எழும் பிரச்சனைகள் என்னென்ன?

காது, மூக்கு, தொண்டை மூன்றும் ஒன்றுக்கொன்று இணைந்தவை. இதில் ஏதாவது ஒரு உறுப்பில் பிரச்சனை என்றாலும் மற்ற இரண்டு உறுப்புகளிலும் பிரச்சனை வரும். பொதுவாக காதில் பிரச்சனை என வருபவர்கள் வலி அல்லது சீழ்வடிதலுடன் வருவார்கள். சிலநேரங்களில் பூஞ்சை தொற்று இருக்கும். அதுபோல மூக்கில் அலர்ஜி தொந்தரவு வரலாம். மூக்கில் கட்டி வளரலாம், தசை வளரலாம். அடினாய்டு(நிணநீர் திசுக்கள்) எனக்கூறப்படும் தசை வளரலாம். இஎன்டி பிரச்சனை என்றாலே டான்சில்தான் என நினைப்பார்கள். அதைத்தாண்டி நிறைய சிகிச்சைகள் கொடுக்கிறோம். குறட்டை சிகிச்சைகள், குரல் நாணத்தில் இருக்கும் கட்டிகளை நீக்குவது, புற்றுநோய் கட்டிகளை அகற்றுவது என இஎன்டி பிரச்சனைகள் நிறைய இருக்கின்றன.

டான்சில் எதனால் வருகிறது?

தொண்டையில் இருப்பது டான்சில். மூக்குக்கு பின்புறம் இருப்பது அடினாய்டுகள். இவற்றின் வேலை தொற்றுகளை எதிர்த்து போராடுவதுதான். உதாரணத்திற்கு, மூக்கில் ஏதாவது கிருமிகள் நுழைகிறது என்றால், முதலில் அவற்றை தடுப்பது அடினாய்டுகள்தான். அதுபோல டான்சில், சாப்பிடும் பொருட்களிலிருந்து தொண்டைக்கு செல்லும் கிருமிகளை தடுக்கும். சிறுவயதில் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி சரியாக உற்பத்தி ஆகாததால் ஆரம்பத்தில் இந்த டான்சில் வித்தியாசமாக இருக்கும். ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் டான்சில் பிரச்சனையோ, சளி தொல்லையோ வராது. ஐஸ்கிரீம் மாசுபட்டதாக இருந்தால், கண்டிப்பாக டான்சிலில் கிருமி தொற்று ஏற்படும்.


இதயத்திற்கு பேஸ்மேக்கர் போல காதுக்கு காக்லியர் இம்பிளாண்ட்

டான்சில்ஸ் அழற்சி மூளையை பாதிக்குமா?

டான்சில்ஸ் தசையால் மூளை பாதிக்கப்படும் எனக்கூறுவது தவறான கருத்து. சிலநேரங்களில் இதை கண்டுகொள்ளாமல் இருந்தால், கழுத்தில் செல்லும் தசைகளில் தொற்று பரவி மூச்சுத்திணறல் ஏற்படுவதோடு, சாப்பிட முடியாதது, குரல்மாற்றம் போன்றவையும் ஏற்படும். இதனால் மூளைக்கு எந்த பாதிப்பும் இல்லை. 

கொஞ்சம் கொஞ்சமாக செவிதிறன் குறையக் காரணம் என்ன?

இதனை பிரெஸ்பைகுசிஸ் எனக்கூறுவோம். பார்வைத்திறன் எப்படி 40 வயதில் பாதிக்கப்பட்டு, கண்ணாடி போடுகிறோமோ, அதுபோலத்தான் காதில் இருக்கும் நரம்பும் பாதிக்கப்படும். வயது காரணமாக காதில் இருக்கும் நரம்புகள், செவித்திறனில் இருக்கும் சின்ன சின்ன சிறுமுடிகள் அதன் தன்மையை இழக்கும். அப்போது கொஞ்சம், கொஞ்சமாக காதின் கேட்கும் திறன் குறையும். முழுவதுமாக கேட்காமல் போகாது. சிலருக்கு கண்ணாடி போடவில்லை என்றாலும், கண்பார்வை நன்றாகத்தான் இருக்கும். சிலருக்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற காரணங்களாலும், சிலர் போதைப்பொருட்களுக்கு அடிமையாக இருப்பதாலும் காதின் திறன் குறைந்துகொண்டே வந்து ஒருநிலையில் முழுவதும் கேட்காமல் போய்விடும். இதற்குபெயர் பிரெஸ்பைகுசிஸ். இது நரம்பு தளர்ச்சியால் வருகிறது. 

பிரெஸ்பைகுசிஸ் (Presbycusis) அறிகுறிகள் என்னென்ன?

பொதுவாக 40 வயதுக்கு மேல்தான் பிரெஸ்பைகுஸிஸ் வரும். ஒரு நான்கைந்து வருடங்களுக்கு முன்புவரை நன்றாக காதுகேட்டது. இப்போது படிப்படியாக குறைகிறது. கேட்கிறது, ஆனால் என்ன சொல்கிறார்கள் என புரியவில்லை. அருகில் இருந்தால் கேட்கிறது, தூரமாக இருந்தால் கேட்கவில்லை என சொல்வார்கள். அவர்களுக்கு பார்த்தால் காது ஜவ்வு நன்றாக இருக்கும். ஆனால் சோதனை செய்துபார்த்தால், நரம்புகள் பாதிக்கப்பட்டிருக்கும். இரண்டு வழியாக காதுகள் கேட்கும். ஒன்று நரம்பியல் வழியாக, மற்றொன்று எலும்பியல் மூலமாக. எலும்பு லாரி பிஸ்டன் போல நகரும். அதில் ஏதேனும் பாதிப்புகள் இருந்தால், அதனை Conductive hearing loss (கடத்தும் செவித்திறன் இழப்பு) எனக் கூறுவோம். நரம்பு பிரச்சனை வந்தால், Sensorineural Hearing Loss எனக் கூறுவோம். இந்த சென்சரிநியூரல் பிரச்சனை இருப்பவர்கள்தான் மேற்கூறிய அறிகுறிகளுடன் வருவார்கள். நான் அறுவை சிகிச்சை செய்து கொள்கிறேன், எனக்கு காது கேட்கவேண்டும் என சிலர் கூறுவார்கள். ஆனால் நரம்பு போய்விட்டது என்றால் ஒன்றும் செய்ய இயலாது. வேண்டுமென்றால் ஹியரிங் மெஷின் வைத்தும் கேட்கவில்லையென்றால், cochlear implant (செவிப்புலன் நரம்புகளை நேரடியாகத் தூண்டும் மின்னணு சாதனம்) சிகிச்சை செய்யலாம்.


ஹியரிங் பட்ஸ் உள்ளிட்டவற்றை தொடர்ந்து பயன்படுத்தினாலும் செவித்திறன் குறையத்தொடங்கும்

‘cochlear implant’ என்றால் என்ன?

இதயத்திற்கு எப்படி பேஸ்மேக்கரோ, அதுபோலத்தான் காதுக்கு காக்லியர் இம்பிளாண்ட். காதில் சிறுசிறு முடிகள் இருக்கும். அந்த முடியின் உணர்திறன் போய்விட்டது என்றால், மின்னணு சாதனம் ஒன்றை உள்ளே வைத்து குறைபாட்டை சரி செய்வோம்.  வெளியில் காந்தம்போல வைத்துவிடுவோம். இது எல்லாம் மயக்கத்தில் இருக்கும்போது செய்வோம். இது தமிழ்நாட்டின் அரசு திட்டங்களில் கூட உள்ளது. அந்த மின்னணு சாதனம் காதில் நன்கு செட் ஆகிவிட்டது என்றால் கொஞ்ச நாட்களுக்குப் பின் முடுக்கி விடுவோம். அதன்பின் கேட்கும் கருவி ஒன்றை காதுக்கு பின்னால் வைப்போம். 

தொடர்ந்து பட்ஸ் பயன்படுத்துவது ஆரோக்கியமானதா?

காதில் அழுக்கு சேருவது (குருமி) இயல்பான ஒன்று. பாக்டீரியா உள்ளிட்ட கிருமிகளை அழிக்கக்கூடிய சக்தி கொண்டதுதான் இந்த குருமி. சிலர் இந்த அழுக்கை சுத்தம் செய்யமாட்டார்கள். ஏனென்றால் அதுவே சுத்தப்படுத்திக் கொள்ளும். சிலருக்கு காது கேட்கவில்லை, காதில் வலி உள்ளது, காது அடைத்ததுபோல உள்ளது என்றால் மட்டுமே குருமியை சுத்தம் செய்வோமே தவிர, அதனால் வேறு எந்த பிரச்சனையும் இல்லை. வீட்டில் எல்லாம் குளித்துவிட்டு வந்த உடனே காதை குடைவார்கள். ஈரத்தில் காட்டன் பட்ஸை போட்டால் இன்ஃபெக்‌ஷன் ஆகுமே தவிர, காது சுத்தமாகாது. சிலநேரங்களில் சிலருக்கு குருமியே இருக்காது. அவர்கள் காதில் வேகமாக பட்ஸ் போடும்போது ஜவ்வில் இடித்துவிடுவார்கள். அப்போது செவித்திறன் பாதிக்கப்படும். 

செவிப்பாறை கிழிதலுக்கு உடனடி தீர்வு உள்ளதா?

காதில் அடித்தோ, அறைந்தோ, விபத்திலோ காதின் ஜவ்வு கிழிகிறது என்றால் அதனை க்ரீவியஸ் ஹர்ட் (Grievous hurt - உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் ஒரு மோசமான நிலை) எனக் கூறுவோம். அதாவது இது மெடிக்கோ லீகல் கேஸ் (Medico-Legal Case) ஆகும். இதற்காக போலீஸுக்கு போகிறார்களா இல்லையா? என்பதை முதலில் பார்க்கவேண்டும். அப்படிப்போனால் கண்டிப்பாக வலுவான ஆதாரமாக இருக்கும். இரண்டாவது, அறையும் வேகத்திற்கு ஜவ்வு மட்டும்தான் கிழிந்ததா அல்லது உள்ளே உள்ள பிஸ்டன் உடைந்ததா என்பதை பார்க்கவேண்டும். அது உடைந்திருந்தால் காது கேட்கும் திறன் குறையும். அடித்த உடன் காதில் இருந்து ரத்தம் வந்தது, சத்தம் வந்தது, காதின் கேட்கும் திறன் குறைவாக இருக்கிறது என்றால், நாம் செய்யும் பெரிய தவறு காதில் தண்ணீர் ஊற்றுவது, சொட்டுமருந்து, எண்ணெய் ஊற்றுவது. இதை செய்யக்கூடாது. காதின் ஜவ்வு கிழிந்து ஓட்டையே விழுந்தாலும், அப்படியே விடவேண்டும். இதற்கு தீர்வு மருந்துதான். வலிக்கு மருந்து கொடுக்கலாம். ரத்தம் வந்தால் இன்ஃபெக்‌ஷன் ஆகாமல் இருப்பதற்கு மருந்து கொடுக்கலாம். இதை இரண்டையும் செய்தாலே ஒரு மாதத்தில் இருந்து மூன்று மாதங்களுக்குள் காதில் ஜவ்வு கூடிவிடும். மூன்று மாதம் கழித்தும் ஓட்டை இருந்தால் அதன்பின் சிகிச்சை செய்யலாம். 

காதில் சீழ்பிடிப்பது ஏன்?

காதில் செவிப்புலன் குழாய் (auditory tube) ஒன்று இருக்கும். இது காதுக்கு செல்லும் காற்றின் அழுத்தத்தை சீராக்கும். மலையேறும்போது, விமானத்தில் செல்லும்போது காது அடைக்கிறது எனக்கூறுவோம். அது இந்த குழாயால்தான். சிலநேரங்களில் சளியாலோ, காற்றின் அழுத்தத்தாலோ இந்த குழாய் அடைத்துக்கொள்ளும். அதையும் தாண்டி நாம் மூக்கை உறியும்போதும், அளவுக்கு அதிகமான பிரஷர் கொடுத்து அதனை சரி செய்ய முயலும்போதும் நடுக்காதில் இன்ஃபெக்‌ஷன் உட்கார்ந்து கொள்ளும். அதில் தண்ணீர், சளி அதிகம் ஏறும்போது, அவை ஜவ்வை கிழித்துக்கொண்டு வெளியே வந்துவிடும். அது சீழாக வரும். இதுவே பால் குடிக்கும் குழந்தைகளை பால்குடித்த உடன் படுக்கவைத்து விட்டால், பால் எகுத்துக்கொண்டு வந்து காதுக்கு செல்லும் டியூப் அடைத்துக்கொள்ளும். அப்போது இன்ஃபெக்‌ஷன் ஆகிவிடும். அதனால்தான் சொல்வோம் பால்கொடுக்கும் போது நேராக உட்கார்ந்து கொடுக்க வேண்டும் என்று. பால் கொடுத்தவுடன் படுக்கவைத்துவிடக்கூடாது. இரண்டாவது சின்னக் குழந்தைகளுக்கு அடினாய்டு தசையும் அங்குதான் இருக்கும். அப்போது அடினாய்டு பெரிதாகும்போது ஆடிட்டரி டியூப் அடைத்துவிடும். அப்போது சீழ் காதுக்கு போகும். இதனால்தான் காதில் சீழ் உருவாகிறது.


6 வயதுவரை உள்ள குழந்தைகளுக்கு அரசு திட்டத்தின்கீழ் இலவசமாக காக்லியர் இம்பிளாண்ட் செய்யலாம்

பிறக்கும்போதே செவித்திறன் குறைவாக இருக்கும் குழந்தைகளை குணப்படுத்த முடியுமா?

செவித்திறன் குறைபாடு அல்லது பேசமுடியாமல் இருப்பவர்களுக்குதான் அதே குறைபாட்டுடன் குழந்தை பிறக்கும். ஒரு மனிதன் பேசவேண்டும் என்றால் காது கேட்க வேண்டும். காதில் கேட்காவிட்டால் அவன் பேசமாட்டான். இரண்டாவது பிறக்கும் குழந்தைகளுக்கு ஓஏஇ செய்வார்கள். அதாவது செவித்திறனில் இருக்கும் முடிகள் வேலை செய்கிறதா? என பார்ப்பார்கள். அது வேலை செய்யவில்லை என்றால், மறுபடியும் ஒரு டெஸ்ட் எடுத்துப் பார்ப்பார்கள். அதிலும் வேலை செய்யவில்லை எனில், பேரா (BERA) டெஸ்ட் எடுப்போம். குழந்தைகளை படுக்கவைத்து இசிஜி போல குழந்தைகளின் செவித்திறனை கேட்பார்கள். அதிலும் காது கேட்கவில்லை என்றால், ஹியரிங் ட்ரையல் கொடுப்பார்கள். அதிலும் கேட்கவில்லை என்றால்தான் காக்ளியர் இம்பிளான்ட் செய்வார்கள். பிஸியோதெரபி போல செவித்திறனுக்கும் பயிற்சி கொடுத்துக்கொண்டே இருப்போம். இரண்டு வருடத்தில் குழந்தை பேசிவிடும். இதுபோல குழந்தைகள் இருந்தால் தாமதப்படுத்தாமல், 6 வயதிற்குள் அரசின் திட்டத்தின் கீழ் (முதல்வர் காப்பீட்டு திட்டத்தின்கீழ்) சிகிச்சை செய்து கொள்ளலாம். செலவு குறையும். இல்லையென்றால் ரூ.10 லட்சம் வரையில் செலவாகும்.

திக்குவாயை சரிசெய்யலாமா?

குழந்தைகளை ஒரு அழுத்தத்தில் தள்ளும்போதுதான் இப்படி ஆகும். சின்னக் குழந்தைகள் பேசும்போது திக்கி திக்கி பேசமாட்டார்கள். சிலருக்கு நாக்கு கீழே ஒட்டியிருக்கலாம். சிலருக்கு நரம்பியல் ரீதியாக பிரச்சனைகள் இருக்கலாம். மூன்றாவது பதட்டம். குழந்தைகள் திட்டுவாங்கும்போதோ, பள்ளிக்கு போய் படிக்கவேண்டும் எனும் அழுத்தத்தாலோ, மேடையில் ஏறி பேசுங்கள் எனக் கூறும்போதோ, அந்த பதட்டத்தில் திக்குவார்கள். இது சரியாகிவிடும் என அவர்களை தேற்றினாலே சில குழந்தைகளுக்கு சரியாகிவிடும். அதையும் மீறி பிரச்சனை இருந்தால் இஎன்டி மருத்துவரை பார்த்து சிகிச்சை அளித்தால், பெரும்பாலும் சரியாகிவிடும்.

Tags:    

மேலும் செய்திகள்