விபத்தில் விரல் வெட்டுப்பட்டால், 6 மணிநேரத்திற்குள் மருத்துவமனை கொண்டுசெல்ல வேண்டும்!

விபத்தில் விரலோ, சிறிய பாகமோ வெட்டுப்பட்டால், அதனை ஸ்டெரெயில் பேண்டேஜ் போட்டு, பிளாஸ்டிக் ராப்பரில் சுற்றி, ஐஸ்கட்டிகளுக்கு இடையே வைத்து, 6 மணிநேரத்திற்குள் மருத்துவமனைக்கு கொண்டுசென்றால், பொறுத்திவிடலாம்.;

Update:2025-08-05 00:00 IST
Click the Play button to listen to article

முதுகுத்தண்டில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன? எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை என்றால் என்ன? எலும்புகளை வலிமையாக்க பெண்கள் எந்தமாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பன குறித்து பேசியுள்ளார் மருத்துவர் காளிதாஸ். 


ஃபேட் எம்பாலிசம்தான் எலும்பியல் நிபுணர்களுக்கு இருக்கின்ற மிகப்பெரிய நைட்மேர் - மருத்துவர் காளிதாஸ்

எலும்பியல் மருத்துவராக நீங்கள் சந்தித்த சவாலான விஷயம்?

எலும்பை சுற்றிதான் சதை, நரம்பு, ரத்த ஓட்டம் எல்லாம் இருக்கும். ஒரு சிகிச்சை செய்ய வேண்டுமென்றால் இதை எல்லாம் தாண்டிதான் எலும்பை தொட முடியும். அதுவே கொஞ்சம் கடினமானதுதான். நீளமான எலும்புகள் உடைந்தால், எலும்பு மஜ்ஜையில் இருக்கும் கொழுப்பு வெளியில் வந்து, ரத்த ஓட்டத்தில் கலந்து நேராக நுரையீரலை பாதிக்கும். ஃபேட் எம்பாலிசம்தான் எலும்பியல் நிபுணர்களுக்கு இருக்கின்ற மிகப்பெரிய கவலை. இதுமாதிரியான வழக்குகள் பலவற்றை சரி செய்துள்ளோம். மற்றொன்று 14 வயது பெண் ஒருவர் இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்துவிட்டார். முதுகுத்தண்டில் எலும்பு உடைந்துவிட்டது. கால் பாதத்தின் நரம்புகள் பாதித்துவிட்டன. கட்டுப்பாடு இல்லாமல் யூரின் சென்றுகொண்டிருந்தது. அவருக்கு 6 மணிநேரம் அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்தினோம். இப்போது அவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இது ஒரு சந்தோஷமான விஷயம். 


ஊசி, மருந்துகள் இடைக்கால நிவாரணமே... அறுவை சிகிச்சைதான் நிரந்தர தீர்வு!

முதுகுத்தண்டு பிரச்சனைகளுக்கு அறுவை சிகிச்சைதான் தீர்வா?

முதுகுத்தண்டில் நிறைய பிரச்சனைகள் வரும். முக்கியமானது டிஸ்க் ப்ரொலாப்ஸ். (முதுகெலும்பு வட்டு விலகுதல் அல்லது நழுவுதல்). கேனால் ஸ்டினோசிஸ். அதாவது நரம்பு வெளிவரும் பாதை சிறிதாகி, நரம்பை அழுத்தும்போது காலில் ஏற்படும் உணர்ச்சிகள் குறைந்து, வலியும் நடக்க முடியாத தன்மையும் ஏற்படும். சில நேரங்களில் எலும்புகள் நகர்ந்துவிடும். இவற்றை கிரேடு 1, கிரேடு 2 என வகைப்படுத்துவோம். கொஞ்சம் விலகுவது போன்றவற்றிற்கு மாத்திரைகள் கொடுத்து சரிசெய்ய முயற்சிப்போம். மாறாக வலி அதிகரிக்கிறது, கால் நரம்பை பாதிக்கிறது என்றால், ஸ்பைனல் கார்டை திறந்து டிஸ்கை (முதுகெலும்பு வட்டு) எடுத்துவிட்டு, ப்ளேட் பொறுத்துவோம். மாறாக எலும்பு நகரவில்லை, டிஸ்க் மட்டும்தான் பிரச்சனை என்றால், டிஸ்க்கை எடுத்துவிட்டு நரம்பை விட்டுவிடுவோம். முதுகுத்தண்டு சிகிச்சையிலும் பலருக்கு பயம் இருக்கும். ஆனால் தற்போது இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியால் சிக்கல்கள் வருவதில்லை. ஒரேயொரு பிரச்சனை என்னவென்றால் மக்கள் ஆரம்பகட்டதிலேயே வருவதில்லை. முதலிலேயே வந்தால் நூறு சதவீதம் குணப்படுத்த முடியும். 

எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை எதற்காக செய்யப்படுகிறது?

எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை என்பது மிகப்பெரிய சிகிச்சை. இதற்கு பல பேரின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. மேலும் அதிகம் செலவாகும். ரத்த புற்றுநோய் இருப்பவர்களுக்கு இந்த சிகிச்சை செய்யப்படும். அப்லாஸ்டிக் அனீமியாவிற்கும் இந்த சிகிச்சை செய்யப்படும். எலும்பில் உள்ள மஜ்ஜை மூலமாகத்தான் நமக்கு ரத்தம் உற்பத்தி ஆகிறது. இந்த மஜ்ஜை போதுமான ரத்த அணுக்களை உற்பத்தி செய்யாமல் இருக்கும் நிலையைத்தான் ரத்த புற்றுநோய் என்கிறோம். இந்த சிகிச்சையில், நோய்வாய்ப்பட்ட மஜ்ஜையை நீக்கிவிட்டு, நோயாளியிடமிருந்து ஸ்டெம்செல் எடுத்து ஊசிமூலம் செலுத்துவோம். அல்லது வோறொரு நபரிடம் இருந்து ஸ்டெம்செல் எடுத்து, நோயாளிக்கு செலுத்தி புது மஜ்ஜையை உருவாக்குவோம். இதில் தானமாக பெறப்பட்ட ஸ்டெம்செல், நோயாளிக்கு ஒத்துப் போக வேண்டும். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், ரேடியேஷன், கீமோதெரபி போன்றவற்றால் நோய்வாய்ப்பட்ட மஜ்ஜையை அழித்துவிட்டு, புது ஸ்டெம்செல்ஸை செலுத்தி, புது மஜ்ஜையை உருவாக்கி, அதன்மூலம் புது செல்களை உற்பத்தி செய்ய வைப்போம். இதுதான் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை. 


வயதானவர்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் வருவது இயல்பானது 

முதியவர்களின் எலும்புகள் எளிதில் உடைய காரணம் என்ன?

வயதானவர்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் ( எலும்புகள் பலவீனமாகும் மற்றும் எளிதில் உடையக்கூடிய நிலை) வருவது இயல்பான ஒன்று. அதற்கு காரணம் வயது மற்றும் உணவு முறைதான். நல்ல உணவு எடுத்துக் கொள்ளாதது, சூரிய ஒளியில் அதிகம் படாமல் இருப்பது போன்றவை காரணங்களாக அமைகின்றன. அதுமட்டுமில்லாமல், வயதாக வயதாக தசை பலவீனமாகும். இதனால் நடப்பது கடினமாக இருக்கும். இதனால் அவர்களின் வாழ்க்கை சுழற்சியை நாம் மாற்ற வேண்டும். இவர்கள் விழாமல் இருப்பதற்கு ஊன்றுகோல், நான் ஸ்லிப்பரி மேட்ரஸ் உள்ளிட்டவை தேவை. மேலும் அவர்கள் பயன்படுத்தும் பாத்ரூம், பாசி பிடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். யாராவது ஒருவர் அவர்களை கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். அவர்களை தனியாக எங்கும் அனுப்பக் கூடாது. இதன்மூலம் அவர்கள் கீழே விழாமல் இருப்பதை தடுக்கலாம். எலும்பு முறிவுகளையும் தவிர்க்கலாம். 


விபத்தில் விரல்கள் துண்டானால் 6 மணிநேரத்திற்குள் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்

விபத்தில் விரல்கள் துண்டிக்கப்பட்டால் எவ்வளவு நேரத்திற்குள் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்?

விபத்து ஏற்பட்டால் முறிந்த எலும்பு அல்லது விரல்களை சேர்க்க வேண்டும் என்ற பதட்டம் அனைவருக்கும் இருக்குமேதவிர, அதை எப்படி எடுத்து சென்று மருத்துவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு பலரிடத்தில் இருக்காது. காரணம் விபத்தினால் ஏற்பட்ட பதற்றம். விபத்தில் விரலோ அல்லது சிறிய பாகங்கள் ஏதேனும் வெட்டுப்பட்டால், அந்த விரலை ஸ்டெரெயில் பேண்டேஜ் போட்டு, பிளாஸ்டிக் ராப்பரில் சுற்றி, ஐஸ்கட்டிகள் மீது வைக்க வேண்டும். ஆறு மணிநேரத்திற்குள் அது சிகிச்சை செய்து பொறுத்தப்பட்டிருக்க வேண்டும். மற்றொரு விஷயம் மிக மிக முக்கியமானது. பலரும் வெட்டுப்பட்ட துண்டில் கவனம் செலுத்துவார்கள், ஆனால் வெட்டுப்பட்ட இடத்தில் கவனம் செலுத்துவதில்லை. அங்கு நிறைய ரத்தம் போகும். எனவே முதலுதவி செய்து, பேண்டேஜ் போட்டு ரத்தக்கசிவை நிறுத்த வேண்டும். அப்போதுதான் துண்டிக்கப்பட்ட உறுப்பை மீண்டும் பொறுத்த முடியும்.

சையாட்டிகாவை எப்படி குணப்படுத்துவது?

முதுகுத்தண்டில் ஒரு எலும்புக்கும், மற்றொரு எலும்புக்கும் நடுவில் ஜவ்வு இருக்கும். நாம் உட்கார, நிமிர, திரும்ப ஒரு ஸ்பிரிங் வடிவம் தேவை. இதை நம் உடலுக்கு கொடுப்பதுதான் இந்த டிஸ்க். வயதாக வயதாக இந்த டிஸ்க்கின் நீர்சுரப்பு வற்றி, நழுவி, காலுக்கு வரும் சையாட்டிக் நரம்பை அழுத்தினால் வலி ஏற்படும். அதைத்தான் சையாட்டிக் வலி என்கிறோம். இதன் ஆரம்பநிலையிலேயே அதிகம் எடை தூக்கமால் இருப்பது, மாடி படி ஏறாமல் இருப்பது, முறையாக மருத்துவரிடம் சென்று மாத்திரைகள் எடுத்துக் கொள்வது, பிசியோதெரபி செய்வது, இடுப்பு அதிகமாக அசையாமல் இருக்க பெல்ட் போடுவது போன்றவற்றை செய்யலாம். வலி அதிகமானால் டிஸ்கை நீக்க வேண்டி இருக்கும். 


ஆண்களைவிட பெண்களின் எலும்பின் அடர்த்தி குறைவானது - மருத்துவர் காளிதாஸ்

ஆண்களைவிட பெண்களின் எலும்புகள் பலவீனமாக இருப்பது ஏன்?

பெண்களின் உருவ அமைப்பே ஆண்களிடம் இருந்து வேறுபடும். ஆண்களைவிட பெண்களின் எலும்பின் அடர்த்தி இயல்பாகவே குறைவாகத்தான் இருக்கும். அதுமட்டுமில்லாமல் மெனோபாஸுக்கு (மாதவிடாய் நிரந்தரமாக நிற்கும் காலம்) பிறகு, ஹார்மோன் மாற்றத்தால் ஆஸ்டியோபோரோசிஸ் வர வாய்ப்புள்ளது. இதனால் லேசாக கீழே விழுந்தாலும் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புள்ளது. இவற்றை தடுக்க சத்தான உணவுகள் உட்கொள்வதுடன், மெனோபாஸ்க்கு பிறகு மருத்துவரிடம் சென்று ஹார்மோனல் ரீப்ளேஸ்மெண்ட் தெரபி எடுத்துக்கொள்ள வேண்டும். வைட்டமின் டி எடுத்துக் கொள்ளவேண்டும். இந்தியாவில் வயதானாலும் பெண்கள் ஓய்வு எடுக்க மாட்டார்கள். ஆண்கள் வயதானால் ரிட்டயர்ட் ஆகிவிடுவார்கள். ஆனால் பெண்கள் வீட்டு வேலை, குழந்தைகளை பார்ப்பது என வேலைகளை அதிகரித்துக் கொண்டுதான் இருப்பார்கள். இந்த வேலைகளை கொஞ்சம் குறைத்துக் கொள்ள வேண்டும். உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். 

Tags:    

மேலும் செய்திகள்