குழந்தைகளுக்கு காதுகளில் எண்ணெய் விடலாமா?
உடல்சூட்டைத் தணிக்க கண், காதுகளில் எண்ணெய் ஊற்றி, பின் உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்து குளிப்பது என்பது கிராமங்களில் வழக்கமாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் இப்படி கண், காதுகளில் எண்ணெய் ஊற்றுவது என்பது மருத்துவரீதியாக முறையானதா என்பது குறித்து பார்ப்போம்.;
காதில் எறும்பு புகுந்துவிட்டால் உடனடியாக தண்ணீரை எடுத்து ஊற்றுவோம். அதுபோல உடல் சூடு தணிய, பலரும் காது, கண்களில் எண்ணெய் விடுவார்கள். ஆனால் இவையெல்லாம் உண்மையில் உடலுக்கு நன்மை பயக்கக்கூடியவையா? காதுகளில் எண்ணெய் விடுவதால் வரும் விளைவுகள் என்ன? அதுபோல தொண்டை புற்றுநோய் வர காரணம் என்ன? உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளிப்பது நல்லதா? குழந்தைகள் காசு, பேட்டரி, போன்ற பொருட்களை முழுங்கிவிட்டால் உடனடியாக செய்யவேண்டியது என்ன? என்பன குறித்து விளக்கமாக பேசியுள்ளார் ENT மருத்துவர் வருண்குமார். மேற்காணும் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கும் விதமாக ராணி ஆன்லைனுக்கு அவர் அளித்த நேர்காணலை காணலாம்.
குழந்தைகள் கையில் காசு உள்ளிட்டவை கிடைக்காதவாறு பார்த்துக்கொள்ளுங்கள் - மருத்துவர் வருண்குமார்
குழந்தைகள் காசுகளை முழுங்கிவிட்டால் என்ன செய்வது?
ஃபாரின்பாடி என சொல்லக்கூடிய இந்த நிலையைத்தான் நாங்கள் பீடியாட்ரீஷனில் அவசர வழக்காக பார்ப்போம். குழந்தைகள் காதில் மணி, தெர்மாகோல் போன்றவற்றை போட்டுக்கொள்வார்கள். மூக்கில் பொத்தானை போட்டுவிடுவார்கள். அதுபோல சாப்பிடும் பொருட்களான வேர்க்கடலையைக்கூட போட்டுக்கொள்வார்கள். விழுங்குவது என்றால் காசு, சிலர் பேட்டரிகளை எல்லாம் முழுங்கிவிடுவார்கள். குழந்தைகளுக்கு சொல்லத் தெரியாது. இதனை பெற்றோர் எப்போது பார்ப்பார்கள் என்றால், கையில் இருந்த பொருளை காணவில்லையே எனும்போதுதான் குழந்தையின் வாயை பார்ப்பார்கள். இதில் ஆபத்து என்னவென்றால் மூக்கில் ஒரு பொருள் மாட்டிக்கொண்டது என்றால், அதை குழந்தை உறிஞ்சும்போது நுரையீரலுக்கு சென்றுவிடும். நுரையீரலுக்கு செல்லும் குழாய் அடைத்துக்கொண்டால் அந்தப்பக்கம் மூச்சுவிடமாட்டார்கள்.
அப்போது மூச்சுத்திணறல் என பெற்றோர் அழைத்துவருவார்கள். அதுபோல காசு, பேட்டரி போன்றவற்றை முழுங்கிவிட்டால் குழந்தைகள் சாப்பிடமாட்டார்கள். சாப்பிட்டால் அடைக்கும். அப்போது அழைத்துவருவார்கள். இதுபோல நடந்தால் உடனடியாக ஒரு இஎன்டி மருத்துவரை பாருங்கள். எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தால்தான் எந்த இடத்தில் உள்ளது என்பது தெரியவரும். சிலநேரங்களில் நுரையீரலின் சுவாசக்குழாயில் சென்று அடைத்துக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. அப்போது குழந்தை இறப்பதற்கும் வாய்ப்பு உள்ளது. நான் முடிந்தவரை மக்களிடம் சொல்வது, கைக்குழந்தை அல்லது 6, 7 வயதுவரை உள்ள குழந்தைகள் வீட்டில் இருக்கிறார்கள் என்றால், கீழே எந்தப் பொருளையும் வைக்காதீர்கள். முக்கியமாக காசுகள், பேட்டரிகள். ஒரு இரண்டு ரூபாயை கீழேபோட்டுவிட்டு, ரூ.1 லட்சத்திற்கு செலவு செய்யாதீர்கள்.
காக்லியர் இம்பிளாண்ட் கூட இஎன்டி துறையின் ஒரு மைல்ஸ்டோன்தான் - மருத்துவர் வருண்குமார்
ENT துறையின் மைல்ஸ்டோன் என எதைக் கூறுவீர்கள்?
நாளுக்கு நாள் தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது. காதுக்கான காக்லியர் இம்பிளாண்ட் என்பதே அட்வான்ஸ்தான். ஆடிட்டரி மூளைத்தண்டு உள்வைப்பு (auditory brainstem implant) என நேரடியாக மூளையில் இம்பிளாண்ட் வைக்கிறார்கள். காதில் லேசர் சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. டிப்ரைடரை மூக்கின்வழியே விட்டு அடினாய்டு தசைகளை வெளியே எடுக்கிறோம். கோ- ஆப்லேட்டர் மூலம் வாயில் இருக்கும் டான்சில்கள், கொரட்டை சிகிச்சை, மூக்கில் இருக்கும் அடினாய்டுகளை நீக்குகிறோம். இவற்றையெல்லாம்விட, Surgical navigation என ஒன்று வந்துள்ளது. அதாவது மூக்கில் ஒரு கம்பியை விட்டோமானால், நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என டிவி-யில் காட்டும். அதனால் புதிதாக கற்றுக் கொள்பவர்கள் எந்தெந்த இடத்தில் எந்தெந்த குழாய்கள் இருக்கின்றன என்பதை எளிதாக கற்றுக்கொள்ள முடியும். இப்போது ரோபோட்டிக்ஸ் வந்துவிட்டது. காக்லியர் இம்பிளாண்ட் என்பது செவிகளில் பிரச்சனை இருப்பவர்களுக்கு. சிலருக்கு நரம்பே வளராமல் இருக்கும். அவர்களுக்கு ஆடிட்டரி மூளைத்தண்டு உள்வைப்பு பயன்படும்.
வாய்ப்புண், தொண்டைப்புண் ஏற்பட காரணம் என்ன?
இதனை ஸ்ட்ரெஸ் அல்சர்ஸ் (மன அழுத்தப் புண்) எனக் கூறுவோம். அதாவது நீங்கள் மிகுந்த மன அழுத்தம், அதிக பதற்றத்தில் இருக்கும்போது, அந்த அழுத்தம் ஹார்மோன்களில் வெளியாகிறது. அதில் அமிலமும் உற்பத்தியாகிறது. அதனால் வாய், தொண்டை, வயிற்றில் புண் உருவாகிறது. அழுத்தத்தால் உடலின் அனைத்து பகுதிகளும் பாதிக்கப்படும். சிலநேரங்களில் வாயில் உணவு ஏதாவது குத்தினால்கூட வாய்ப்புண் வரும். இரண்டாவது வைட்டமின் குறைபாடால் வரும். மூன்றாவது அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கலாம். நீரிழிவு நோய் இருக்கும். வேறு ஏதாவது நோய் இருக்கலாம். வெகுநாட்களாக இருக்கலாம். அதை சரிசெய்யாமல் இருக்கலாம். சிலருக்கு மருந்து சாப்பிடுவதால் அலர்ஜி வரும். இதுபோன்ற காரணங்களால்கூட வாயில் புண் உண்டாகும். மன அழுத்தமும் ஒரு காரணம்.
வைட்டமின் குறைபாட்டால் வாயில் புண் உருவாகும்
நாக்கில் கொப்புளங்கள் வருவதற்கான காரணங்கள் என்ன?
நாக்கில் ரத்தக்குழாய்கள் அதிகம். சிலருக்கு இரவில் தூங்கும்போது நாக்கு கடிக்கும் பழக்கம் இருக்கும். அதுபோல நாக்கில் கடித்திருக்கலாம். அதனால் ரத்தக்கொப்புளம் வரலாம். சிலருக்கு ஏதாவது குத்தியிருக்கலாம். சிலருக்கு இயல்பாகவே இருக்கும். கொப்புளங்கள் வந்தால் போகாது. சிலருக்கு தொற்று ஏற்பட்டால் பெரிதாகும். சிலருக்கு சிகிச்சை செய்து நீக்கவேண்டியதாக இருக்கும்.
உப்புத் தண்ணீருக்கும், டான்சிலுக்கும் என்ன சம்பந்தம்?
நிறைய கிருமிகள் இருக்கும் இடத்தில் சுடுநீரை ஊற்றினால் அவை செத்துவிடும். உப்பு இன்னும் நல்லது. இவை இரண்டும் சேர்ந்து டான்சிலில் படும்போது அந்த இடத்தில் இருக்கும் வீக்கம் குறையும். கிருமிகளும் செத்துவிடும். கிருமிகள் இல்லையென்றால் டான்சில் வீங்காது. இரண்டாவது சூடாக உப்புத் தண்ணீர் எடுத்துக்கொண்டால் நமக்கு கொஞ்சம் இதமாக இருக்கும். மேலும் இது ஆன்டி-செப்டிக்காக செயல்படுவதால் கிருமிகள் இறக்கின்றன.
தொண்டை புற்றுநோய் எதனால் வருகிறது? அதனை குணப்படுத்த முடியுமா?
தொண்டை புற்றுநோயை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று குரல்நாணப் பகுதியில் வருவது, மற்றொன்று உணவுக்குழாயில் வருவது. பெண்களில் ரத்தசோகை இருப்பவர்களுக்கு உணவுக்குழாய் மேல் சுருக்குப்பை போல இருக்கும். அந்த இடத்தில் வெப்ஸ் (உணவுக்குழாயின் உட்பகுதியில் வளரும் மெல்லிய திசுக்களால் ஆன ஒரு சவ்வு) என்பது ஏற்படும். அது அப்படியே புற்றுநோயாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. சாப்பிடும் இடத்தில் இருப்பதால் இந்த புற்றுநோயை கையாள்வது மிகவும் கடினம். நோயாளியை கீமோதெரபி, ரேடியோதெரபிக்கு அனுப்புவோம். அந்தக் கட்டி சுவாசக்குழாய்க்கு வந்துவிட்டது என்றால் மூச்சுத்திணறல் வரும். அதுபோல் இருப்பவர்களுக்கு கீமோ ரேடியோதெரபி சிகிச்சை அளிக்கப்படும்.
3 வாரத்திற்குமேல் குரலில் மாற்றம் இருந்தால் உடனடியாக மருத்துவரை சந்திப்பது நல்லது
அதேபோல், மூன்று வாரங்களுக்கு மேல் குரல்மாற்றம், விழுங்குவதற்கு கடினமாக உள்ளது, காதுவலி என்றால் உடனடியாக மருத்துவரை பாருங்கள். தொண்டையில் கட்டி இருந்தாலும், காதுவலி இருக்கும். அதுபோல் குரல் நாணத்தில் ஏதேனும் கட்டிகள் இருந்தாலும் குரலில் மாற்றம் இருக்கும். அதனால் மூன்று வாரத்திற்கு மேல் மேற்கூறிய அறிகுறிகள் இருந்தால் ENT மருத்துவரை பாருங்கள்.
காது, மூக்கு, தொண்டையை பராமரிப்பதற்கான வழிமுறைகள் என்னென்ன?
காதில் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யக்கூடாது. இரண்டாவது காதில் பட்ஸ் பயன்படுத்தக்கூடாது. மூன்றாவது ஊக்கு பயன்படுத்தி காதை சுத்தம் செய்யக்கூடாது. காது, மூக்கு, தொண்டை என்பது உடலில் இருக்கும் இயற்கையான ஓட்டைகள். அதனால் இதனை ஒழுங்காக பார்த்துக்கொள்ளவேண்டும். நினைத்த நேரத்தில் சாப்பிடுகிறோம். வாய் சுத்தமாக இல்லையென்றால், எல்லாவிதமான நோய்களும் வரும். துர்நாற்றத்தில் தொடங்கி, பல் சொத்தையாகும். அல்சர் வரும், பின்னர் விழுங்கமுடியாது. இதுபோன்ற குரல்மாற்றங்கள் நிறையவரும். மூக்கை அழுத்தி சிந்துதல் கூடாது. மூக்கில் சிறிய ரத்தக்குழாய்கள் அதிகமாக இருக்கும். அதனை நாம் வேகமாக அழுத்தும்போது விட்டுபோய்விடும்.
உள்ளே சேதாரம் ஏற்பட்டு, அழுத்தி சளியை சிந்தும்போது ரத்தத்துடன் வரும். ஜில்லென்று எதுவும் சாப்பிடாதீர்கள். முடிந்த அளவிற்கு சுடுதண்ணீர் குடியுங்கள். தண்ணீர் குடித்துக்கொண்டே இருங்கள். எந்த பிரச்சனை என்றாலும், கூகுளை பார்த்துவிடுகிறார்கள். காதில் சிறிய வலி வந்தாலே புற்றுநோயா என கேட்கிறார்கள். அதைவிட நீரிழிவு நோய் கொடூரமானது. ஆனால் புற்றுநோய்க்கு பயப்படுகிறார்கள். இதுபோல சிறிய விஷயங்களைத்தான் கவனிக்கவேண்டும். காது அதுவே சுத்தமாகிக்கொள்ளும். காது குறுகுறு என இருக்கும்போது செவிமடலை 10 முறை அழுத்தினாலே போதும். அதில் நமச்சல் குறையும்.
காதுகளில் பட்ஸ் பயன்படுத்தக்கூடாது
நீங்கள் பார்த்த சவாலான வழக்குகள்?
நிறைய வழக்குகள் உள்ளன. இஎன்டி நிபுணருக்கு டான்சிலே ஒரு கடினமான வழக்குதான். ஏனெனில் டான்சிலில் இருக்கும் ரத்தக்குழாய்கள் அதிகம். டான்சில்ஸ் தசை சிகிச்சை செய்யும்போது, கழுத்துப்பகுதியில் இருக்கும் ஒரு ரத்தக்குழாய் (carotid artery), டான்சில் கீழ்தான் ஓடும். நான் ஒரு சிறுமிக்கு இந்த சிகிச்சை செய்தேன். அதில் டான்சில் எடுத்தவுடன் இந்த ரத்தக்குழாய் கீழேயே இருந்தது. சிலருக்கு இந்தக்குழாய் வளைந்து போகும். சிலருக்கு நேராக இருக்கும். பார்க்கும்போதுதான் நமக்கு தெரியும். எனக்கு ஆயிரம் சிகிச்சைகள். நோயாளிக்கு ஒரு சிகிச்சைதான். அதனால் நேரம் எடுத்தாலும் சிகிச்சையை நன்றாக செய்யவேண்டும். இதுபோல மூக்கில் சின்ன சின்ன பேட்டரிகளை போட்டுக்கொண்ட குழந்தைகளை தூக்கிக்கொண்டு பெற்றோர் வருவார்கள். உணவுக்குழாயில் பேட்டரி மாட்டிக்கொள்ளும். இதுபோல நிறைய பார்த்துள்ளோம். மருத்துவம் என்பது கற்றுக்கொள்வதுதானே...
காதுகளில் எண்ணெய் ஊற்றினால் காதின் ஜவ்வு கிழிந்துவிடும் - மருத்துவர் வருண்குமார்
கண், காதுகளில் எண்ணெய் விடுவது சரியா?
எண்ணெய் விடக்கூடாது. ஆனால் சிலருக்கு நாங்களே எண்ணெய் விட சொல்லுவோம். காதில் கொஞ்சமாக அழுக்கு இருப்பவர்களுக்கு ஒரு சொட்டு எண்ணெய்விட சொல்வோம். ஆனால் சூடான எண்ணெய்யை சிலர் ஊற்றுவார்கள். அப்படி செய்தால் காதில் இருக்கும் ஜவ்வு வீங்கிவிடும். காதை சுத்தமாக வைத்துக்கொண்டால் போதும். உணவை நன்றாக மென்று சாப்பிட்டாலே காதில் இருக்கும் அழுக்கு வெளியேவந்துவிடும். அதை சுத்தம் செய்யவேண்டிய அவசியம் இல்லை. நல்லெண்ணெய், தண்ணீர், சுடதண்ணீர் எதையும் காதில் ஊற்றாதீர்கள்.