பிறந்த குழந்தையின் உடல் நீல நிறத்தில் இருந்தால்... இதயப் பிரச்சனை?

இதயம் தொடர்பான நோய்கள் வர காரணம் என்ன? அவற்றை தடுக்க என்னென்ன செய்ய வேண்டும்? என்னென்ன உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர் அஸ்வினி தாஸ் விளக்கியுள்ளார்.;

Update:2025-08-19 00:00 IST
Click the Play button to listen to article

பிறக்கும்போதே சில குழந்தைகள் இதயத்தில் துளையுடன் பிறப்பது ஏன்? ப்ளூ பேபி சிண்ட்ரோம் என்றால் என்ன? மாரடைப்பு வந்தால் முதலில் செய்ய வேண்டிய முதலுதவிகள் என்னென்ன? என இதய நோய்கள் தொடர்பான பல சந்தேகங்களுக்கும் ராணி ஆன்லைனுக்கு அளித்த நேர்காணல் மூலம் விளக்கமளித்துள்ளார் மருத்துவர் அஸ்வானி லதா. இந்த விளக்கங்கள் குறித்தும், இதய நோய்களை கட்டுப்படுத்த என்னென்ன செய்யலாம் என்பது குறித்தும் அவர் பேசியதை இந்த வார ஹெல்த் பகுதியில் காண்போம். 


ரத்தத்தில் ஆக்ஸிஜன் குறைபாட்டால் சருமம் நீல நிறத்தில் தெரியும்

இதயத்தில் துளையுடனும், நீல நிறத்துடன் குழந்தைகள் பிறக்க காரணம் என்ன?

மரபணு சம்பந்தப்பட்ட, தாய்வழி காரணிகள் காரணமாக இருக்கும். கொஞ்சம் வயதானதற்கு பின்பு கருத்தரித்தால் அதுதொடர்பான பிரச்சனைகளாகவும் இருக்கும். இதுபோன்ற பிரச்சனைகள் வரக்கூடாது என்பதற்காகத்தான், இப்போதெல்லாம் ‘ஃபீட்டல் எக்கோ’ (குழந்தையின் இதயத் துடிப்பு மற்றும் இதயம் தொடர்பான பிற செயல்பாடுகளைக் கண்டறியப் பயன்படும் ஒரு மருத்துவப் பரிசோதனை) என்ற மருத்துவ பரிசோதனை முறையை கர்ப்ப காலத்தின் 5வது மாதத்தின்போது எடுக்கிறோம். இதன்மூலம் ஏதேனும் பிரச்சனைகள் இருப்பது தெரியவந்தால், குழந்தை பிறப்பதற்கு முன்பாகவே சிகிச்சைகள் கொடுக்கக்கூடிய வசதிகள் உள்ளன. பிறந்தபின் தெரியவந்தாலும் சிகிச்சைகள் அளிக்கமுடியும். இதயத்தின் வலது ஏட்ரியம், இடது ஏட்ரியம், வலது வென்ட்ரிக்கிள், இடது வென்ட்ரிக்கிள் ஆகிய நான்கு அறைகளை பிரிக்கும் சுவர் போன்ற அமைப்பான செப்டமில் ஏற்படும் அசாதாரண திறப்பே இதயத்தில் ஏற்படும் துளை எனக் கூறுகிறோம். இதயத்தின் மேல் அறைகளில் ஏற்படுவது ஏட்ரியல் செப்டல் குறைபாடு(ASD), இதயத்தின் கீழ் அறைகளில் ஏற்படுவது வென்ட்ரிகுலர் செப்டல் குறைபாடு(VSD) எனக் கூறுவர். குழந்தை பிறந்தபின் சிலநேரங்களில் இந்த துளை மூடிவிடும். சிலநேரங்களில் மூடாது. அப்படி மூடவில்லை என்றால் அவர்களுக்கு பீடியாட்ரிக் கார்டியாலஜி (குழந்தைகளின் இதய நோய்கள் மற்றும் பிறவி இதய குறைபாடுகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் முறை) கொடுத்து சரிசெய்வார்கள்.

குழந்தைகள் நீல நிறமாக மாற காரணம் என்ன?

உடம்பில் இருக்கும் கார்பன் டை ஆக்சைடு நிறைந்த ரத்தம் முழுவதும் வலது இதயத்திற்கு சென்றுவிடும். இந்த ரத்தம் நுரையீரலுக்கு அனுப்பப்பட்டு, ஆக்சிஜனேற்றம் அடைந்து இடது இதயத்திற்கு வரும். இடது இதயம் அந்த ரத்தத்தை பம்ப் செய்து உடல் முழுவதும் உள்ள உறுப்புகளுக்கு வழங்கும். இந்த நோயாளிகளுக்கு என்ன ஆகும் என்றால், இரண்டு ரத்தமும் ஒன்றாக கலந்துவிடும். ஆக்ஸிஜன் நிறைந்த ரத்தம் செல்ல வேண்டிய இடங்களுக்கெல்லாம், இந்த கார்பன் டை ஆக்ஸைடு நிறைந்த ரத்தம் செல்லும். ரத்தத்தில் குறைந்த அளவு ஆக்ஸிஜன் இருப்பதால் சருமம் நீல நிறத்தில் தெரியும். 


சிபிஆர் அனைவரும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டிய அடிப்படை முதலுதவி

திடீரென மாரடைப்பு வந்தால் செய்ய வேண்டிய முதலுதவிகள்?

ஒருவருக்கு மார்பில் வலி வந்தோ, மூச்சு வாங்கியோ மயக்கம் அடைகிறார்கள் என்றால், அவர்களுக்கு இதயம் பம்ப் செய்வது சரியாக இருக்காது. இதனால் மூளைக்கு ரத்தம் செல்வது தடைபடும். உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்துவிட்டு, அதற்குள் நோயாளிக்கு கார்டியாக் மசாஜ் கொடுத்து, ரத்த ஓட்டத்தை சீராக்க வேண்டும். சிபிஆர் (கார்டியோபல்மோனரி ரெசசிட்டேஷன்) என்பது அனைவரும் தெரிந்துவைத்திருக்க வேண்டிய அடிப்படை முதலுதவி. வலி வந்தால் 90 நிமிடங்களுக்குள் அதனை சரி செய்ய இந்த முறையை ஃபாலோ செய்ய வேண்டும். ஊசி மூலம் சரிசெய்யலாம். அல்லது ஈசிஜியில் செமி என தெரிந்தால், உடனே ஆஞ்சியோ செய்து அடைப்பை கையோடு சரிசெய்ய வேண்டும். 

கொழுப்பால்தான் பெரும்பாலான இதய நோய்கள் வருகிறதா?

கொலஸ்ட்ராலால் அடைப்பு வருவது உண்மைதான். ஆனால் கொலஸ்ட்ரால் இருக்கும் எல்லோருக்கும் மாரடைப்பு வராது. அது ஒரு மரபணு வழிதான். அதை தெரிந்துக்கொள்ளத்தான் லிப்போ புரோட்டீன் ஏ, அபோலிப்போ புரோட்டீன் ஏ, பி சோதனைகள் எடுக்கப்படுகின்றன. சிலருக்கு லிப்போ புரோட்டீன் ஏ அளவு அதிகமாக இருந்தால், நார்மல் கொலஸ்ட்ரால் இருந்தாலும் அடைப்பு வரும். அவர்களுக்கு அதை சரிசெய்தால் ஆபத்திலிருந்து மீட்க முடியும். இயல்பைவிட கொஞ்சம் அதிகமாக இருப்பவர்களுக்கு லிப்போ புரோட்டீன் நன்றாகத்தான் இருக்கும். அவர்களிடம் லைஃப் ஸ்டைல் மாடிஃபிகேஷன் (உணவுகள், உடற்பயிற்சி, தூக்கம் மற்றும் மன அழுத்தம் போன்ற வாழ்க்கை முறையின் செயல்பாடுகளை மாற்றுதல்) ட்ரை செய்யுங்கள் எனக்கூறுவோம். ஆனால் மிக அதிகமாக கொலஸ்ட்ரால் இருக்கிறது என்றால், அது இதய நோய்க்கு வழிவகுக்கும். அவர்களுக்கு சிகிச்சை அளித்துதான் ஆகவேண்டும். 

என்னென்ன பழக்கவழக்கங்கள் மாரடைப்பை ஏற்படுத்தும்?

முக்கிய காரணம் உணவுமுறை. நிறைய ஜங்க் ஃபுட் சாப்பிடுவது, அதிக வறுத்த உணவுகள், ரெட் மீட் (பாலூட்டி இனங்களில் இருந்து பெறப்படும் இறைச்சிகள்) அதிகம் எடுத்துக்கொள்வது போன்றவை முக்கிய காரணமாக இருக்கின்றன. ஆல்கஹால், புகைபிடித்தல், கொகைன், ஹான்ஸ் போடுவது போன்ற பழக்கங்களும் மாரடைப்புக்கு முக்கிய காரணமாக இருக்கின்றன. இவை இல்லாமல் தேவை இல்லாமல் மன அழுத்தம் எடுத்துக்கொள்வது மற்றும் எந்த கெட்டப் பழக்கங்களும் இல்லாமல் ஒரு டிப்ரஸ்டு பெர்சனாலிட்டியாக இருந்தாலும் மாரடைப்பு வரும்.


உணவில் 40 சதவீதம் பச்சை காய்கறிகள் இருப்பது இதய நலத்திற்கு நல்லது

இதய நோய்களை தவிர்க்க எந்தெந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்?

இயற்கையாக அந்தந்த காலங்களில் கிடைக்கக்கூடிய பழங்களை சாப்பிடுவது, சைவ உணவுகள், அதில் 40 சதவீதம் பச்சை காய்கறிகள் இருப்பது நல்லது. இதனால் நீரிழிவு நோய், வளர்சிதை மாற்ற நோய் வராது. முடிந்தளவு வறுத்த உணவுகளை தவிர்க்கலாம். அதுபோல பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்கலாம். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுங்கள். தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். முடிந்தளவு மன அழுத்தத்தை எடுத்துக் கொள்ளாதீர்கள். 


மாரடைப்பு ஏற்பட்ட நோயாளியிடம் உணர்ச்சிகரமான செய்திகளை சொல்லக்கூடாது - மருத்துவர் அஸ்வானி லதா 

மாரடைப்பு நோயாளியிடம் நல்ல, கெட்ட செய்திகளை சொல்லக்கூடாது எனக்கூறுவது உண்மையா?

அது சரிதான். ஏனெனில், இதய நோயாளிகள் ஏற்கனவே மன அழுத்தத்தில் இருப்பார்கள். அப்போது போய் நல்ல செய்தியோ, கெட்ட செய்தியோ எது சொன்னாலும் உணர்ச்சிவசப்படுவார்கள். அப்போது இதயத்துடிப்பு அதிகமாகும். இதனால் நிறைய பிரச்சனைகள் வரும். அதனால்தான் அவர்களை ஒரு அமைதியான சூழலில் வைத்திருக்க வேண்டும்.

மாரடைப்பிற்கும், மூளை பக்கவாதத்திற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா?

அதற்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதயத்தில் ஒழுங்கற்ற தாளம் வரும். இந்த ஒழுங்கற்ற துடிப்பால் இதயத்திலேயே ப்ளட் க்ளாட்ஸ் உருவாக ஆரம்பிக்கும். அது மூளைக்கு செல்லும்போது ஸ்ட்ரோக் ஏற்படுகிறது. இதயத்துடிப்பை சரிசெய்தால் இதனையும் சரிசெய்துவிடலாம்.   

Tags:    

மேலும் செய்திகள்