டெஸ்ட் டியூப் முறையில் பிறக்கும் குழந்தை, மற்ற குழந்தைகளைப் போல நார்மலாக இருக்குமா?
விந்தணு அல்லது முட்டை தானம் பெற்று பெறப்படும் குழந்தைகள் யார் ஜாடையில் இருக்கும், பெண்களின் கருமுட்டையை சேமிப்பது எப்படி, தம்பதியினருக்கு குழந்தையின்மை தன்மை ஏற்படுவதற்கான காரணங்கள் என்னென்ன போன்ற கேள்விகளுக்கு விளக்கமளித்துள்ளார் மருத்துவர் நிவேதிதா.;
கருமுட்டை அல்லது விந்தணு தானம் பெற்று குழந்தை பெறுபவர்கள் பலருக்கும் இருக்கும் ஒரு பொதுவான சந்தேகம், குழந்தை நம்மைப்போல இருக்குமா? அல்லது தானம் வழங்கியவர்களை போல இருக்குமா என்றுதான். அதுபோல ஐவிஎஃப், இக்ஸி போன்ற முறைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருக்குமா? என்பனபோன்ற பல்வேறு சந்தேகங்கள் தம்பதியினருக்கு இருக்கும். இப்படி செயற்கை கருத்தரித்தலில் உள்ள பல்வேறு சந்தேகங்களுக்கும் அனைவருக்கும் புரியும் வகையில் விளக்கமளித்துள்ளார் கருத்தரித்தல் சிறப்பு சிகிச்சை மருத்துவர் நிவேதிதா.
டெஸ்ட் டியூப் குழந்தைகளுக்கும், இயற்கை முறையில் பிறக்கும் குழந்தைகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை
கருமுட்டைகளை சேமிக்க முட்டை வங்கி இருக்குமா?
இருக்கிறது. பெண்களுக்கு ஊசிபோட்டு முட்டையை வளரவைத்து, அதை வெளியே எடுத்து திரவ நைட்ரஜன் க்ரையோகேன்ஸில் -190 டிகிரியில் உறையவைத்துவிடுவோம். அது வருடக்கணக்கானாலும் பத்திரமாக இருக்கும். அது எப்போதுவரைக்கும் தேவையோ அதுவரை அதனை சேமித்து வைத்துக்கொள்ளலாம். 3, 4 வருடங்களிலேயே அதை பயன்படுத்த வேண்டும் என்றால், அந்த முட்டையை எடுத்து அவர்களின் கணவரின் விந்தணுவை பெற்று, இக்ஸி செய்து கருவாக்கி, அதனை அப்பெண்ணின் கர்ப்பப்பைக்குள் செலுத்திவிடுவோம்.
“டெஸ்ட் டியூப் பேபி” முறை ஆரோக்கியமானதா?
ஐவிஎஃப், இக்ஸி முறையைத்தான் டெஸ்ட் டியூப் பேபி என சொல்கிறோம். 10 பேர் குழந்தை இல்லை என வருகிறார்கள் என்றால், எல்லோருக்கும் ஐவிஎஃப் பண்ணமாட்டோம். முதலில் அடிப்படை சிகிச்சைகளை அளிப்போம். அந்த சிகிச்சைகளில் சிலர் கருவுறுவார்கள். சிலருக்கு அடிப்படை சிகிச்சை முறைகள் உதவாது. அவர்களுக்கு வேறுவழியில்லை என்ற சூழலில்தான், டெஸ்ட் டியூப் பேபி முறையை அறிவுறுத்துவோம். டெஸ்ட் டியூப் பேபி என்றாலே குழந்தை எப்படி இருக்கும்? குழந்தை நார்மலாக இருக்குமா? என்று எல்லோரும் கேட்பார்கள். சாதாரணமாக 100 பேர் கருவுறுகிறார்கள் என்றால், அதில் 97 பேருக்கு குழந்தை ஆரோக்கியமானதாகத்தான் இருக்கும். அதில் 3 சதவீத குழந்தைகளுக்கு ஏதேனும் பிரச்சனைகள் இருக்கும். இது இயற்கை கருவுறுதலின் சதவீதம்.
அதேபோல அந்த 3-5 சதவீதம் என்பது ஐவிஎஃப் முறையிலும் இருக்கும். இயற்கையாக கருவுறும்போது குழந்தைக்கு பிரச்சனைகள் இருந்தால் நாம் அதை ஏற்றுக்கொள்வோம். ஆனால் ஐவிஎஃப் முறையில் குழந்தைக்கு பிரச்சனை என்றால், அதை பெரிதுப்படுத்தி, ஐவிஎஃப் என்பதால்தான் இப்படி ஆனது என நினைத்துக்கொள்வோம். இயற்கை கருவுறுதலில் என்னென்ன சவால்கள் உள்ளதோ, அதே சவால்கள் ஐவிஎஃப் முறையிலும் உள்ளது. ஐவிஎஃப் முறை நூறு சதவீதம் பாதுகாப்பானது என என்னால் கூறமுடியாது. ஆனால் 97 சதவீதம் அது பாதுகாப்பானதுதான். ஐவிஎஃப் முறையில் பிறக்கும் குழந்தைகள் அப்நார்மலாக, வித்தியாசமாக இருப்பார்கள் எனக்கூறுவார்கள். அப்படி எல்லாம் கிடையாது. வெளிநாடுகளில் ஐம்பது வயதில்கூட ஐவிஎஃப் முறையில் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள்.
உடல் பருமனாலும் கரு உருவாதல் தள்ளிப்போகும் - மருத்துவர் நிவேதிதா
சிலருக்கு கருப்பைக்கு வெளியில் உள்ள குழாயில் குழந்தை வளருவது ஏன்?
மாதம் மாதம் பெண்களுக்கு சினைப்பையில் இருந்து ஒரு முட்டை வெளியே வரும். அந்தநேரத்தில் உடலுறவு கொண்டால், விந்தணுக்கள் நீந்தி சென்று, அதனுடன் இணைந்து கரு உருவாகும். ஒருசிலருக்கு கருக்குழாய் அடைப்பு அல்லது பாதிப்பு இருந்தால், கர்ப்பப்பைக்கு வெளியே உள்ள குழாயிலேயே கரு தங்கி வளரத்தொடங்கிவிடும். இதனை எக்டோபிக் கர்ப்பம் எனக் கூறுவோம். இந்தக் கருவால் ஆரோக்கியமாக வளர முடியாது. ஏனெனில் குழந்தையை தாங்குவதற்கான அமைப்பு கருக்குழாய்க்கு இருக்காது.
இப்படி 6, 7 வாரம் தாண்டி அந்த குழந்தை வளரும்போது, அந்த குழாய் வெடித்து உயிருக்கே ஆபத்தாக மாறக்கூடும். எனவே எக்டோபிக் கர்ப்பம் என அறிந்தால், மருத்துவரை சந்தித்து அதற்கு என்ன சிகிச்சை எடுக்கவேண்டுமோ உடனடியாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஆரம்ப நிலையிலேயே நாம் பார்த்தால், ஊசிமூலம் அதனை சரிசெய்துவிடலாம். கொஞ்சம் தாமதமாக பார்த்தோமானால், லேப்ரோஸ்கோபி மூலம் அந்தக் குழாயை நீக்க வேண்டியதாக இருக்கும்.
விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் ஆண்களுக்கு குழந்தையின்மை பிரச்சனை ஏற்படும்
ஆண், பெண் குழந்தையின்மை பிரச்சனைக்கு காரணங்கள் என்ன?
சமீபகாலமாக குழந்தையின்மை பிரச்சனை அதிகரித்து வருகிறது என்பது உண்மைதான். ஏனெனில் நமது வாழ்க்கைமுறை அப்படி உள்ளது. நமது வேலைமுறை, அதிகப்படியான வெளி உணவுகள் எடுத்துக்கொள்வது, உடல்பருமன் போன்ற காரணங்களால் குழந்தையின்மை பிரச்சனை அதிகரித்து வருகிறது. பொதுவாக பல பெண்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனை பிசிஓடி. முறையற்ற மாதவிடாய் சுழற்சி, உடல்பருமன் அதிகமாக இருப்பது போன்ற காரணங்களால் குழந்தையின்மை பிரச்சனை அதிகரித்து வருகிறது. சிலருக்கு இந்த பிரச்சனைகள் இல்லை என்றாலும், குழந்தை இருக்காது. இதனை விவரிக்கப்படாத கருவுறாமை எனக்கூறுவோம். அதுபோல கருக்குழாய் அடைப்பு, ஃபைப்ராய்டு கட்டிகள் உள்ளிட்டவற்றாலும் பெண்களுக்கு கருவுறுதல் தள்ளிப்போகும். அரிதாக சிலருக்கு முட்டையின் எண்ணிக்கையே குறைவாக இருக்கும். அதாவது இளம்வயதிலேயே அவர்களுக்கு மாதவிடாய் நின்றிருக்கும்.
ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது, விறைப்புத்தன்மை இல்லாமல் இருப்பது, வேகமாக விந்து வெளியேறுதல், விந்துக்கள் வெளியே வராமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் காரணமாக இருக்கின்றன.
கருமுட்டை, விந்தணு தானம் என்றால் என்ன?
முன்னர் சொன்னவாறு சில பெண்களுக்கு சிறுவயதிலேயே கருமுட்டை தீர்ந்துவிடும். அவர்களுக்கு கருமுட்டை இருக்காது. இந்த பிரச்சனை உடைய பெண்கள் கருவுற வேண்டும் என ஆசைப்பட்டால், அவர்களுக்கு வேறு பெண்களிடம் இருந்து முட்டையை தானமாக வாங்கி, அவர்களின் கணவரின் விந்தணுடன் இக்ஸி செய்து, கரு உருவாக்கி, அந்த கருவை சம்பந்தப்பட்ட பெண்ணின் கருப்பையில் வைத்துவிடுவோம். இது யாருக்கு தேவையோ அவர்களுக்கு மட்டும்தான் செய்வோம். இது தம்பதியரின் விருப்பம் இருந்தால் மட்டும்தான் செய்யமுடியும். இதேபோன்றுதான் விந்து தானமும்.
விந்தணு தானம் பெற்று உருவாகும் குழந்தை யார் ஜாடையில் இருக்கும்?
இது எல்லோருக்கும் இருக்கும் ஒரு சந்தேகம் மற்றும் பயம்தான். தானம் பெறுபவர்களுக்கு ஏற்றவாறு உடல்தோற்றத்தை கொண்டவர்களைத்தான் தானம் வழங்குபவராக முதலில் தேர்ந்தெடுப்போம். இப்போது ஒரு பெண்ணுக்கு கருமுட்டை தானம் பெறுகிறோம் என்றால், தானம் தருபவரின் ரத்த வகை, உயரம், எடை, நிறம் போன்றவற்றை பார்த்துதான் தேர்வு செய்வோம். தானம் பெறுபவர், வழங்குபவர் என இருண்டுபேரின் வெளிப்புறத் தோற்றத்தை ஒற்றுமைப்படுத்திதான் தேர்வு செய்வோம். அதுபோலத்தான் விந்தணு தானம் செய்பவர்களையும் தேர்வு செய்வோம். இதுபோல புறத்தோற்றத்தை வைத்துதான் தேர்வு செய்கிறோம் என்பதால், அவர்களின் முட்டை அல்லது விந்து தானம் மூலம் உருவாகும் குழந்தை பெற்றோர்களிடம் இருந்து வித்தியாசமாக இருக்காது.
ஐவிஎஃப் நடைமுறையில் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் ஹார்மோன் ஊசிகளை பெண்களே போட்டுக் கொள்ளலாம்
ஐவிஎஃப் ஷாட்ஸ் என்றால் என்ன?
ஐவிஎஃப் நடைமுறையில் சம்பந்தப்பட்ட பெண்ணிற்கு 10-12 நாட்கள்வரை ஹார்மோன் ஊசி செலுத்துவோம். இந்த ஊசியின் மூலம்தான் அவர்களின் முட்டை வளரும். இதைத்தான் ஐவிஎஃப் ஷாட்ஸ் என சொல்வார்கள். இந்த ஊசியினை நோயாளிகளே எடுத்துக் கொள்ளலாம்.
பிசிஓடி பிரச்சனை இருப்பவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய சிகிச்சைகள்?
பிசிஓடியில் நிறைய வகை உள்ளது. சிலர் மிகவும் ஒல்லியாக இருப்பார்கள். அவர்களுக்கு பிசிஓடி இருக்கும். அது மரபணு சார்ந்ததாக இருக்கும். அதுபோல சிலர் உடல் பருமனாக இருப்பார்கள். முன்காலத்தில் அவர்களுக்கு மாதவிடாய் சரியாக இருந்திருக்கும். தற்போது வேலை, உடல்எடை போன்ற காரணங்களால் மாதவிடாய் சரியாக இல்லாமல் இருக்கும். இவர்களுக்கு கூறும் ஒரே அறிவுரை வாழ்க்கை முறை மாற்றம். டயட் மற்றும் உயற்பயிற்சி சரியாக மேற்கொள்ள சொல்வோம். இதற்கு மூன்று மாதங்கள் நேரம் கொடுப்போம். இதை சரியாக செய்தால் 10ல் 5 பேருக்கு பிசிஓடி பிரச்சனை சரியாகிவிடும். அவ்வாறு சரியாகவில்லை என்றால் ஹார்மோன் மாத்திரைகளை பரிந்துரைப்போம்.
உடல் பருமனால் கருவுறுதலில் பிரச்சனைகள் ஏற்படுமா?
உடல் பருமன், இன்சுலின் பற்றாக்குறை போன்றவை கண்டிப்பாக மாதவிடாய் சுழற்சியை பாதிக்கும். இதனால் இயல்பாகவே கருவுறும் தன்மை குறையும்.
ஐவிஎஃப், இக்ஸி முறையில் பிறந்த குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி எப்படி இருக்கும்?
குறைவாகவும் இருக்காது, அதிகமாகவும் இருக்காது. சாதரணமாக பிறக்கும் குழந்தைகளுக்கு எந்தளவு நோய் எதிர்ப்பு சக்தி இருக்குமோ அதேமாதிரிதான் இவர்களுக்கும் இருக்கும்.
கருவுற்றவர்களுக்கு நீங்கள் சொல்லக்கூடிய அறிவுரை?
கர்ப்ப காலம் என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். முதல் மூன்று மாதம் சிலருக்கு கடினமாக இருக்கும். வாந்தி, அடிவயிறு வலி, முதுகு வலி என இருக்கும். இதனைப்பார்த்து மற்றவர்களும் பயப்படுவார்கள். அடுத்த மூன்று மாதம் இந்த பிரச்சனைகள் இல்லாமல் இயல்பாக இருப்பார்கள். கடைசி மூன்று மாதங்கள் குழந்தை எடை அதிகரிப்பால் கொஞ்சம் கஷ்டமாக இருக்கலாம். ஆனால் கர்ப்ப காலத்தை மகிழ்ச்சியாக அனுபவிக்கும்போது, இந்த வலிகள், வேதனைகள் குறைவாக இருக்கும். மற்றவர்கள் உங்களை பார்க்கவேண்டும் என நினைப்பதைவிட உங்களுக்கு தேவையானதை நீங்கள் பார்த்து பார்த்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்மூலம் குழந்தைக்கு ஊட்டச்சத்துக்கள் செல்லும். கர்ப்பமாக இருக்கும் அனைத்து பெண்களும் ஆரோக்கியமான டயட்டை பின்பற்ற வேண்டும்.
கர்ப்பிணிகள் தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும்
கருவுற்றவர்கள் இயல்பான வேலைகளை செய்யலாமா?
முதல் மூன்று மாதம் எந்த வேலையும் செய்யக்கூடாது என வீட்டில் உள்ளவர்கள் கூறுவார்கள். அதற்கு காரணம் குழந்தை கலைந்துவிடுமோ என்ற பயம். ஆனால் அது அப்படி கிடையாது. முதல் மூன்று மாதத்தில் கரு என்பது உருவாகும். அது ஆரோக்கியமாக உருவானால் அப்படியே தொடரும். எனவே பயம் தேவையில்லை. நாம் செய்யும் வேலைகளுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எந்த கட்டுப்பாடும் தேவையில்லை. சிலருக்கு குறை மாதத்திலேயே குழந்தை பிறக்கும் வாய்ப்பு இருக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கு மருத்துவர்களே சில கட்டுப்பாடுகளைக் கூறுவோம். மற்றபடி முழு நேரம் பெட் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்பது அவசியம் கிடையாது.