ஹார்ட் அட்டாக் என்றால் என்ன? கார்டியாக் அரெஸ்ட் என்றால் என்ன?
மாரடைப்பு எதனால் வருகிறது? அதன் அறிகுறிகள் என்னென்ன? மாரடைப்பை சரிசெய்ய என்னென்ன சிகிச்சை முறைகளை மேற்கொள்ளலாம்? ஆஞ்சியோகிராம் போன்ற இதய பரிசோதனை முறைகள் என்றால் என்ன? இதயத்துடிப்பை ஒழுங்குப்படுத்த செயற்கையாக பொருத்தப்படும் பேஸ்மேக்கர் என்றால் என்ன? என்பது குறித்தெல்லாம் பார்க்கலாம்.;
மாரடைப்பு எதனால் வருகிறது? அதன் அறிகுறிகள் என்னென்ன? மாரடைப்பை சரிசெய்ய என்னென்ன சிகிச்சை முறைகளை மேற்கொள்ளலாம்? ஆஞ்சியோகிராம் போன்ற இதய பரிசோதனை முறைகள் என்றால் என்ன? இதயத்துடிப்பை ஒழுங்குப்படுத்த செயற்கையாக பொருத்தப்படும் பேஸ்மேக்கர் என்றால் என்ன? என்பது குறித்தெல்லாம் இந்த வார ஹெல்த் பகுதியில் பார்க்க இருக்கிறோம். இதுதொடர்பாக ராணி ஆன்லைனுக்கு மருத்துவர் அஸ்வானி லதா அளித்துள்ள நேர்காணலை இங்கு காண்போம்.
ரத்த குழாய்களில் ஏற்படும் நோய்கள் எதுவாக இருந்தாலும் அது கார்டியோவாஸ்குலர்தான் - மருத்துவர்
கார்டியோவாஸ்குலர் நோய் என்றால் என்ன?
இதயம் மட்டுமல்ல, ரத்த குழாய்களில் ஏற்படும் நோய்கள் எதுவாக இருந்தாலும் அது கார்டியோவாஸ்குலர் நோய்தான். அயோட்டாவில் (இதயத்திலிருந்து உடலின் மற்ற பகுதிகளுக்கு இரத்தத்தை கொண்டு செல்லும் முக்கிய ரத்தக்குழாய்) ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டாலும், அதுவும் கார்டியோவாஸ்குலர் நோயில்தான் அடங்கும்.
ஹார்ட் அட்டாக் & கார்டியாக் அரெஸ்டிற்கு இடையே உள்ள வித்தியாசங்கள்?
இதயத்திற்கு செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படும் நிலையே ஹார்ட் அட்டாக் எனக் கூறுகிறோம். இந்த அடைப்பால் இதயத்திற்கு செல்லும் ரத்த அளவு குறையத் தொடங்கும். இதனால் நோயாளிக்கு இதயத்தில் வலி வந்துவிடும். இதனை உடனே கண்டறிந்து சிகிச்சை அளித்தால், ஆபத்தான நிலையில் இருந்து நோயாளியை மீட்கலாம். அப்படி சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்க தவறும்போது, இந்த அடைப்பு கார்டியாக் அரெஸ்டுக்கு வழிவகுக்கும். கார்டியாக் அரெஸ்ட் என்றால் இதயம் துடிக்காமல் நின்றுவிடும். இதயத்தின் வேலையே ரத்தத்தை பம்ப் செய்வதுதான். இதயம் ரத்தத்தை பம்ப் செய்தால்தான் உடலின் அனைத்து பாகங்களுக்கும் ஆக்ஸிஜன் செல்லும். இந்த கார்டியாக் அரெஸ்டால் ரத்தம் பம்ப் செய்வது நின்றுவிடும். இரண்டு நிமிடங்கள் மூளைக்கு ரத்தம் செல்லாவிட்டால், நோயாளி கோமா நிலைக்கு சென்றுவிடுவார். ஹார்ட் அட்டாக், கார்டியாக் அரெஸ்ட் என்பது வேறு வேறு. ஹார்ட் அட்டாக்கை தடுக்க முடியும், சரிசெய்ய முடியும். அதை சரிசெய்தால்தான் கார்டியாக் அரெஸ்டை தடுக்க முடியும்.
எல்லா மாரடைப்புக்கும் பைபாஸ் சிகிச்சை தேவை இல்லை - மருத்துவர் அஸ்வானி
மாரடைப்பு வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள் என்னென்ன?
இதற்கு முக்கியமானது நமது வாழ்க்கைமுறை. உணவு முறையில் மெடிடேரியன் டயட்தான் சிறந்தது. மெடிடேரியன் டயட் என்பது ஒமேகா கொழுப்பு அமிலங்கள், காய்கறிகள், பழங்கள், அதிக புரதச்சத்து நிறைந்த, கொழுப்பு குறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதுதான். அதாவது எண்ணெய் பொருட்களை குறைத்துக்கொள்ள வேண்டும். வெளியில் சாப்பிடுவது, எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சாப்பிடுவது, அதிக இறைச்சிகள் சாப்பிடுவது போன்றவற்றையும் குறைத்துக்கொள்ள வேண்டும். சிறுவயதிலிருந்தே அனைவரும் உடற்பருமன் என்றால் என்ன? அதனால் வரும் விளைவுகள் என்ன? சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் வராமல் எப்படி நம்மை பாதுகாக்க வேண்டும் என்பதை அறிந்து வைத்திருக்க வேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கை முறை, உடற்பயிற்சிகள், மன அழுத்தம் இல்லாமல் பார்த்துக்கொள்வது போன்றவற்றை பின்பற்ற வேண்டும். இப்போதெல்லாம் குழந்தைகளுக்குக் கூட மன அழுத்தம் இருக்கிறது. இவைத்தவிர, குடும்பத்தில் யாருக்காவது இதயம் தொடர்பான நோய்கள் இருந்தால், மற்றவர்களும் தங்களுக்கு ஏதாவது பாதிப்புகள் இருக்கிறதா என அடிக்கடி பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான உடல் எடையை பராமரிப்பது போன்றவற்றை பின்பற்றினால், பெரும்பாலான இதய பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.
இளம் வயதிலேயே இதய நோய்கள் வர மன அழுத்தம் காரணமாக இருக்கிறது
இதய நோய்கள் ஏற்பட காரணம் என்ன?
இளம் வயதினருக்கு கார்டியாக் அரெஸ்ட், சமீப நாட்களாக அதிகரித்து வருகிறது. வயதாகும்போது சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் வருவதற்கு காரணங்கள் வேறு. ஆனால் இளம் வயதினருக்கு வருவதற்கு சில காரணங்கள் உள்ளன. மரபணு தொடர்பாக வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. மற்றொன்று உச்சக்கட்ட மன அழுத்ததில் இருந்தால், மன அழுத்தம் தொடர்பான கார்டியோமயோபதி வர வாய்ப்புகள் உள்ளன. பெண்களுடன் ஒப்பிடுகையில் ஆண்களுக்குத்தான் இந்த பிரச்சனைகள் அதிகம்.
மாரடைப்புக்கான அறிகுறிகள் என்னென்ன?
பொதுவாக அனைவரும் நினைப்பது, இடதுமார்பு வலிதான் மாரடைப்பு என நினைப்பார்கள். முக்கால்வாசியான வழக்குகளிலும் அதுதான் நடக்கிறது. ஆனால் வலதுபக்க மார்பில் வலி ஏற்பட்டாலும், அதுவும் கவனிக்க வேண்டிய முக்கியமான ஒன்று. இடது பக்கத்தில் வலிவந்தால் எப்படி 90 சதவீதம் இதயநோயாக இருக்க வாய்ப்புள்ளதோ, அதுபோல வலது பக்கம் வந்தால், 96 சதவீதம் இதயநோயாக இருக்க வாய்ப்புள்ளது. இதனால் இடதுமார்பு வலி மட்டுமல்ல, வலது பக்கம் வலி வந்தாலும் கவனிக்க வேண்டும். சிலநேரங்களில் சுண்டுவிரலில், இடது கையில், கீழ்தாடையில் வலி வரலாம். இவை எல்லாம் வலி தொடர்பான அறிகுறிகள். நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கு வலி இருக்காது. படபடப்பு இருக்கும். நடந்தால், உட்கார்ந்தால் மூச்சு வாங்கும். இதில் எந்த அறிகுறி வேண்டுமானாலும் மாரடைப்பிற்கு காரணமாக இருக்கலாம்.
மாரடைப்பு என்றாலே அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமா?
மாரடைப்பு முதலில் எதனால் வந்தது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். மாரடைப்பு வந்தாலே ஈசிஜி, எக்கோ, ரத்த பரிசோதனை செய்து பார்ப்போம். அதில் சிவியாரிட்டி தெரிந்துவிடும். பின்னர் சிகிச்சை செய்ய வேண்டும். சிகிச்சை என்றால் ஆஞ்சியோகிராம் செய்ய வேண்டும். அப்போதுதான் ரத்த நாளங்களில் அடைப்பு எந்தளவு உள்ளது என்பதை தெரிந்துகொள்ள முடியும். ஆஞ்சியோகிராமில் ரத்தக்கட்டிதான் இருக்கிறது, கொழுப்பு கட்டி இல்லை என்று தெரிந்தால், அதற்கு மருந்தே போதும். சிகிச்சை தேவையில்லை. அனைத்து ரத்த குழாய்களும் பாதிக்கப்பட்டுள்ளது, நோயாளிக்கு நீரிழிவு நோய் என்றால் அவர்களுக்கு பைபாஸ் சிகிச்சை பரிந்துரைக்கப்படும். எல்லா மாரடைப்பு நோயாளிகளுக்கும் பைபாஸ் சிகிச்சை கிடையாது. ரத்த அடைப்புக்கு ஏற்றவாறுதான் சிகிச்சையை முடிவு செய்வோம்.
ஆஞ்சியோகிராம், ஸ்டன்ட் சிகிச்சை முறைகள் என்றால் என்ன?
ஆஞ்சியோகிராம் என்பது ஒரு மருத்துவ பரிசோதனை ஆகும். அது சிகிச்சை முறை இல்லை. ரத்தக்குழாயில் எந்தளவு அடைப்பு உள்ளது? எந்த ரத்தக்குழாயில் அடைப்பு உள்ளது? அது எத்தனை சதவீதம் உள்ளது? ரத்தக்கட்டியா, கொழுப்புக்கட்டியா? என்பதை தெரிந்துகொள்வதற்குத்தான் ஆஞ்சியோகிராம். ஆஞ்சியோகிராமிற்கு பிறகு அடைப்பை சரிசெய்து, அந்த இடத்தை சுத்தம் செய்து, எங்கு அடைப்பு இருந்ததோ அந்த இடம் மறுபடியும் சுருங்காமல் இருப்பதற்கு, அங்கு பலூன் வைப்பதே ஸ்டன்ட் சிகிச்சை. ஆஞ்சியோபிளாஸ்டி என்றால் ஸ்டன்ட் வைக்கும் செயல்முறை. பலூன் ஆஞ்சியோபிளாஸ்டி என்றால் பலூன் மட்டும் வைப்பது.
பேஸ்மேக்கரை உடலின் உட்புறமும் வைக்கலாம், வெளிப்புறமும் வைக்கலாம்
பேஸ்மேக்கர் என்றால் என்ன?
பேஸ்மேக்கரில் இரண்டு வகைகள் உள்ளன. சில நேரங்களில் நாடித்துடிப்பு குறையும். இதயத்தில் இருக்கும் சைனஸ் நோட், ஒரு நிமிடத்திற்கு இத்தனை முறை துடிக்க வேண்டும் என்ற சைகையை கொடுக்கும். வயதாகும்போது இந்த சைனஸ் நோட் பலவீனமாக தொடங்கும். இதனால் நாடித்துடிப்பு குறையும். இதன் விளைவாக மயக்கம், தலைசுத்தல், மூச்சு வாங்குதல் போன்ற பிரச்சனைகள் வரும். இப்போது சைனஸ் நோட்டை சப்போர்ட் செய்வதற்கு நாம் பேட்டரி ஒன்று செட் செய்வோம். இதைத்தான் பேஸ்மேக்கர் எனக் கூறுகிறோம். இதை வெளிப்புறமும் வைக்கலாம். உட்புறமும் வைக்கலாம். மார்பில் ஊசி ஒன்றை செலுத்தி, 2 செமீ ஆழத்தில் இந்த பேட்டரியை பொறுத்துவோம். இது ஒரு சிறிய சிகிச்சைதான். இவை இல்லாமல், சிலருக்கு நாடித்துடிப்பு திடீரென அதிகமாகிவிடும். அப்போது நோயாளி மயங்கி விழுந்துவிடுவார்கள். வென்ட்ரிகுலர் ஃபைப்ரிலேஷன் (வென்ட்ரிக்கிள்கள், ஒழுங்கற்ற மற்றும் வேகமான முறையில் சுருங்குவதால் ஏற்படும் தீவிரமான இதயத்துடிப்பு). அப்போது ஷாக் கொடுத்தால் சரியாகிவிடும். அதுதான் ஐசிடி(Implantable Cardioverter-Defibrillator). நோயாளிக்கு 200க்கு மேல் நாடித்துடிப்பு என்றால், அதனை அறிந்து அதுவே ஷாக் கொடுத்துவிடும். இது ஒரு பேஸ்மேக்கர். மற்றொன்று இதயத்துடிப்பு கம்மியாக இருப்பதை சரிசெய்ய கொடுக்கும் சிஆர்டி (இதயத்தின் இரண்டு வென்ட்ரிக்கிள்களையும் ஒருங்கிணைத்து துடிக்கச் செய்து, இதயத்தின் பம்ப் செய்யும் திறனை மேம்படுத்துவது).