‘அஷ்மிதா தவறான தொழில் செய்பவர்’ - பேட்டியளித்த கணவர் விஷ்ணு கைது!

Update:2025-06-24 00:00 IST
Click the Play button to listen to article

சமூக வலைதளங்களான யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றில் அவ்வப்போது ஒரு கப்புல்ஸ் வைரலாவார்கள். அப்படி இந்த வாரம் முழுவதும் இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூபில் டிரெண்டிங்கில் இருந்தவர்கள்தான் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் அஷ்மிதா மற்றும் அவரது கணவர் ஸ்ரீவிஷ்ணுகுமார். விவாகரத்துக்கு பிறகும் மீண்டும் திருமணம் செய்து சேர்ந்து வாழ்ந்த இவர்கள்தான், தற்போது மாறி மாறி ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் அஷ்மிதா அளித்த புகாரின் பேரில் விஷ்ணுவை விருகம்பாக்கம் போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், டிரேடிங் பணமோசடி விவகாரத்தை திசைதிருப்ப இருவரும் நாடகம் ஆடுகின்றனரோ என இணையவாசிகள் சந்தேகம் தெரிவித்து வருகின்றனர். 


அஷ்மிதா - விஷ்ணு ஜோடி; மூன்றாவது குழந்தையுடன் அஷ்மிதா

யார் இந்த அஷ்மிதா - ஸ்ரீவிஷ்ணுகுமார்? 

பிரபல மேக் ஓவர் கலைஞராக இருப்பவர்தான் அஷ்மிதா. 10ஆம் வகுப்புவரை மட்டுமே படித்துள்ள அஷ்மிதா, அதன்பின் படிப்பை நிறுத்திக்கொண்ட நிலையில் விஜேவாக பணியாற்றினார். சிறிதுகாலம் மாடலிங் செய்து வந்த இவர், பின்னர் படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கு சிறுவயதில் இருந்தே மேக்கப் விஷயத்தில் ஆர்வம் அதிகமாக இருந்ததனால் தனக்கு தெரிந்தவர்கள், தோழிகளுக்கு மேக்கப் போட்டு பயிற்சி எடுத்து கொண்டாராம்.

கடந்த 2017ஆம் ஆண்டு ஒரு அகாடெமியில் பியூட்டி கோர்ஸ் படித்தாராம். இதையடுத்து தானாகவே சொந்தமாக அஷ்மிதா அகாடெமி என்ற பெயரில் மேக்கப் கிளாஸ் எடுத்து வருகிறார். தற்போது மிகப்பெரிய ப்ரைடல் மேக்கப் ஆர்ட்டிஸ்டாக வளர்ந்துள்ளார். வசதி படைத்தோரின் திருமணம் மற்றும் விசேஷங்களுக்கும், பிரபலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் சென்று பலருக்கும் மேக்கப் செய்து வருகிறார். தமிழகத்தில் உள்ள மேக்கப் ஆர்டிஸ்டுகளில் இவர் மிகவும் காஸ்ட்லியானவர் என்று கூறப்படுகிறது. அதுபோல் அழகு சாதன பொருட்களையும் அவர் விற்பனை செய்து வருகிறார். 

அஷ்மிதாவின் கணவர் ஸ்ரீவிஷ்ணுகுமார். அஷ்மிதாவும் விஷ்ணுவும் ஒரு ஆல்பத்தில் நடித்தபோது காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனராம். விஷ்ணு ஒரு இன்ஸ்டாகிராம் பிரபலம். இன்ஸ்டாகிராமில் கிட்டதட்ட 2 லட்சத்து 50 ஆயிரம் பாலோயர்ஸ்களை கொண்டுள்ள இவர், சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். மேலும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் பொறுப்பில் இருப்பதாக கூறப்படும் விஷ்ணு, அரசியல் நிகழ்வுகள் குறித்து பேசி வீடியோக்கள் போடுவது, டான்ஸ் ஆடுவது என வீடியோக்களை பதிவிடுவார்.

விவாகரத்து பெற்று பிரிந்து, மீண்டும் சேர்ந்த ஜோடி!

அஷ்மிதா - விஷ்ணு ஜோடிக்கு 2 குழந்தைகள் இருந்தநிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து விவாகரத்து பெற்று பிரிந்தனர். விவாகரத்து குறித்து விஷ்ணு தனது சமூகவலைதள பக்கங்களில் வெளிப்படையாகவே பதிவிட்டிருந்தார். ஆனால் விவாகரத்து ஆன ஒரு சில மாதங்களில் இருவரும் கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டு மீண்டும் ஒன்று சேர்ந்து வீடியோ வெளியிட்டனர்.


அஷ்மிதா - விஷ்ணுவின் திருமண புகைப்படம் & காதலர் தினக் கொண்டாட்ட புகைப்படம் 

அந்த நேரம் இருவரும் ஒரு ஆல்பத்தில் நடித்திருந்தனர். அந்த ஆல்பம் பாடல் புரமோஷனுக்காகவே இருவரும் விவாகரத்து நாடகமாடியதாக இவர்கள் மீது விமர்சனங்கள் எழுந்தன.எனினும் பிரிந்திருந்தபோது ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டதாகவும், ஏன் இன்னொரு வாய்ப்பு எடுத்து இருவரும் சேர்ந்து வாழக்கூடாது என யோசித்ததாகவும் தெரிவித்திருந்தனர். பிறகு அஷ்மிதா மூன்றாவது முறையாக கர்ப்பமானார். அவருக்கு இப்போது மூன்றாவது குழந்தையும் பிறந்துவிட்டது.

தொடர் சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீவிஷ்ணு..

இன்ஸ்டா பிரபலங்களான அஷ்மிதா மற்றும் விஷ்ணுவின் வீடியோக்கள் எல்லாம் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். குறிப்பாக, ‘அட வருஷத்தில் ஒருமுறைதான் இந்த காதலர் தினம் வருது’ என்னும் பாடலுக்கு இவர்கள் ஆடிய நடன வீடியோ, காதலர் தினத்துக்கு அஷ்மிதா மீது விஷ்ணுகுமார் பூ கொட்டிய வீடியோக்கள் எல்லாம் சமீபத்தில் மிகவும் வைரலாகின. விவாகரத்து பெற்றபிறகும் மீண்டும் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்ததை பார்த்த பலரும், இவர்களுக்கிடையே இவ்வளவு காதலா என பேசிவந்தனர். இவர்களின் சமூகவலைதள வீடியோக்களை பார்த்த பல ரியல் ஜோடிகள், நம்மால் இப்படி இருக்க முடியவில்லையே என்று ஆதங்கம் கூட பட்டிருந்திருக்கின்றனர். இப்படி அனைத்தும் சுமூகமாக போய் கொண்டிருந்த சூழலில்தான், அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்கினார் விஷ்ணுகுமார்.

ஆன்லைன் ட்ரேடிங் மூலம் பலபேரை ஏமாற்றி, பண மோசடியில் ஈடுபட்டதாக இவர்மீது புகார் எழுந்தது. பாதிக்கப்பட்ட பலரும் இவர்மீது காவல் நிலையத்தில் புகாரும் அளித்ததாக தெரிவிக்கப்பட்டது. மேலும் அஷ்மிதா என்ற நபருக்காகத்தான், விஷ்ணுவிடம் பணம் கொடுத்ததாக பலரும் கூறியிருந்தனர். இதுதொடர்பாக நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த ஸ்ரீவிஷ்ணு, தான் ஏமாற்றவில்லை எனவும், அனைத்தையும் சட்டரீதியாக எதிர்கொள்வேன் என்றும் தெரிவித்திருந்தார். இந்த ட்ரேடிங்  விவகாரத்தில் ஏராளமான கோடி ரூபாய் ஸ்கேம் செய்யப்பட்டதாகவும், ஏமாந்தவர்களில் பலரும் பெண்கள் என்றும் தகவல் வெளியான நிலையில், தனது மனைவி அஷ்மிதாவிற்கும், இதற்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் விஷ்ணு கூறியிருந்தார்.


ஆல்பம் ஒன்றில் ஜோடியாக அஷ்மிதா - விஷ்ணு; வெளியான விஷ்ணுவின் வீடியோவிலிருந்து காட்சி

நண்பனின் தங்கைக்கு தவறான மெசேஜ்

இந்த சர்ச்சையே அடங்காத நிலையில், தனது ஆண் நண்பர் ஒருவரின் தங்கைக்கு தவறான முறையில் இன்ஸ்டாகிராமில் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், அதற்காக அப்பெண்ணின் சகோதரர்களிடம் விஷ்ணு அடிவாங்கும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகின. இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து பல்வேறு விமர்சனங்கள் ஸ்ரீவிஷ்ணு மீது எழுந்தன. அதற்கு விளக்கமளித்த அவர், தான் தவறாக மெசேஜ் அனுப்பவில்லை எனவும், வீட்டிற்கு வரவழைத்து தன்னை அடித்து அவர்கள் பணம் கேட்டு மிரட்டி, அதுபோல வீடியோ பதிவு செய்ததாகவும் கூறினார்.

இதற்கு விளக்கமளித்த அப்பெண்ணின் அண்ணன், "நாங்கள் ஒரு கோடி பணம் கேட்டு மிரட்டி அடித்ததாக ஸ்ரீவிஷ்ணு குமார் கூறியது முற்றிலும் தவறானது. அவரது போனில் அவரது மனைவி அஷ்மிதாதான் அனைத்து பாஸ்வேர்டு மற்றும் இன்ஸ்டாகிராம் டிபிகளையும் மாற்றினார். அஷ்மிதாதான் அந்த வீடியோவை இணையத்தில் பதிவேற்றம் செய்தார்" எனவும் தெரிவித்தார். மேலும் தாங்கள் ஸ்ரீவிஷ்ணுவை கடத்தவில்லை என்றும், அவர்தான் தன் வீட்டிற்கு வந்தார் எனவும் விளக்கமளித்திருந்தார். 

அஷ்மிதாதான் காரணம் என்று அறிந்து பழிவாங்க துடித்த விஷ்ணு!

தன்னுடைய வீடியோவை இணையத்தில் பதிவேற்றியது தனது மனைவிதான் என அறிந்த விஷ்ணு, அஷ்மிதா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை நேர்காணல் ஒன்றில் அண்மையில் முன்வைத்தார். அஷ்மிதா தற்போது மூன்றாவது குழந்தையை பெற்றெடுத்துள்ள இந்த நேரத்தில், தனது மனைவி அஷ்மிதா தவறானவர் எனவும், அவர் வேறு ஆண்களிடம் தொடர்பில் இருப்பதாகவும், விஷ்ணு, அந்த நேர்காணலில் தெரிவித்தார். அவரின் தவறுகளை மறைக்கவே, தன்னுடைய வீடியோவை அஷ்மிதா இணையத்தில் வெளியிட்டதாகவும் குற்றம்சாட்டினார். அஷ்மிதாவிடம் வெளிப்படையாக கூறிவிட்டே , தான் சில மாடல்களுடன் உறவில் இருந்ததாகவும் விஷ்ணு அதிர்ச்சி தகவல்களையும் வெளியிட்டார்.

தன்னிடம் இருந்து விவாகரத்து பெறவே அஷ்மிதா தன்னுடைய வீடியோவை வெளியிட்டு ஆதாரங்களை வலுப்படுத்திக்கொண்டதாகவும், சொந்த வீட்டிலேயே பணம் திருடியவர் அவர் என்றும், பல்வேறு குற்றச்சாட்டுகளை அஷ்மிதா மீது முன்வைத்தார் விஷ்ணு. மேலும், டிரேடிங் மோசடியில் அஷ்மிதாவுக்கு எந்த தொடர்பும் இல்லை என முன்னர் கூறியிருந்த ஸ்ரீவிஷ்ணு, சமீபத்தில் அளித்திருந்த அந்த நேர்காணலில், அஷ்மிதாவுக்கும் டிரேடிங் பணம் கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.


ஒருவரையொருவர் மாறிமாறி குற்றம்சாட்டிக்கொள்ளும் விஷ்ணு - அஷ்மிதா

ஸ்ரீவிஷ்ணு கைது...

ஸ்ரீவிஷ்ணுவின் இந்த நேர்காணலை தொடர்ந்து அஷ்மிதா அவர்மீது சென்னை விருகம்பாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், தன்னைப் பற்றி அவதூறு கருத்துகளை ஸ்ரீவிஷ்ணுகுமார் பரப்பி வருவதாக அஷ்மிதா தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில், நம்பிக்கை மோசடி, பெண் வன்கொடுமை, தாக்குதல் உள்ளிட்ட நான்கு  பிரிவுகளின் கீழ் விஷ்ணு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் கைது செய்யப்பட்ட விஷ்ணு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

இந்த சம்பவங்களை எல்லாம் பார்க்கும் இணையவாசிகள் பலரும் பலவாறு கருத்து தெரிவித்து வருகின்றனர். அதாவது, பண மோசடி விவகாரம் தொடர்பாக அஷ்மிதாவிற்கும், விஷ்ணுவிற்கும் இடையே பிரச்சனைகள் எழுந்ததாகவும், அஷ்மிதா கடினப்பட்டு முன்னேறிய மேக்கப் துறையில், டிரேடிங் ஸ்கேம் விவகாரத்தால், தனது ப்ராண்ட் பெயர் பாதிக்கப்பட்டுவிடுமோ என்று அஞ்சுவதாகவும், தன்னுடைய மேக் ஓவர் ஆர்டிஸ்டிரி நிறுவனத்திற்கு அவப்பெயர் வந்துவிடுமோ என்ற பயத்தில், கணவர் விஷ்ணுவை பிரிந்துவிடலாம் என்று அஷ்மிதா நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ஒருசாரார் கூறுகின்றனர். மற்றொரு தரப்பினரோ, பண மோசடி விவகாரத்தை திசைதிருப்பவே அஷ்மிதாவும், விஷ்ணுவும் திட்டமிட்டே இவ்வாறு நாடகம் நடத்தி வருவதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்