62 வயதாகும் இவர்தான் உலகின் மிக அழகான பெண்மணி!

Update:2025-05-06 00:00 IST
Click the Play button to listen to article

அந்தந்த வயதில் கழுதை கூட அழகாகதான் இருக்கும் என்று பலர் சொல்ல கேட்டிருப்போம். ஏனென்றால் அழகு என்பது பெரும்பாலும் இளமையோடு தொடர்புபடுத்தியே சொல்லப்படுகிறது. ஆனால் அதற்கு நேரெதிராக 2025-ம் ஆண்டிற்கான உலகின் மிக அழகான பெண்ணாக நடிகை டெமி மூர் அறிவிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் 'பீப்பிள்' பத்திரிகை நிறுவனம், இணையம் மூலமாக நடத்திய கருத்துக் கணிப்பில், உலகின் மிக அழகான பெண் என்ற பெருமையை இவர் தட்டிச் சென்றுள்ளார். டெமி மூரின் வயது என்ன தெரியுமா?... 62! என்ன இவ்வளவு வயதா என்று வாய்ப்பிளக்காதீர்கள். 62 வயதானாலும், தன் அழகிய தோற்றத்தாலும், நடிப்பாலும், ஹாலிவுட் ரசிகர்களை வசியம் செய்து வைத்துள்ளார் டெமி மூர். இந்த பெருமை, டெமி மூருக்கு அத்தனை எளிதாக கிடைத்துவிடவில்லை. இதற்கு பின்னால் அவரின் விலைமதிப்பில்லா கடின உழைப்பு இருக்கிறது!


18 வயதில் ஹாலிவுட்டில் அறிமுகமானபோது டெமி - தற்போது 62 வயதில்

டெமி மூரின் கடினமான குழந்தை பருவம்!

1962 நவம்பர் 11-ம் தேதி  நியூ மெக்ஸிகோவின் ரோஸ்வெல்லில் பிறந்தார் டெமி மூர். பெற்றோர், சார்லஸ் ஹார்மன் மற்றும் வர்ஜீனியா கெய்ன்ஸ். ஆனால் டெமி மூர் பிறப்பதற்கு முன்பே அவரது தந்தை சார்லஸ் ஹார்மன், தாயார் வர்ஜீனியா கெய்ன்ஸை பிரிந்து சென்றுவிட்டார். இதையடுத்து தாய் வர்ஜீனியா, டேனி கெய்ன்ஸ் என்பவரை மறுதிருமணம் செய்துகொண்டார். ஆனால் இந்த திருமணமும் நிலைக்கவில்லை. இருவரும் எப்போதும் குடித்துவிட்டு சண்டையிட்டுக்கொள்வதை வாடிக்கையாக வைத்திருந்ததால், சிறு வயதிலேயே டெமி மூர் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். ஒரு கட்டத்தில் கணவன், மனைவி இடையேயான சண்டையில், தாய் வர்ஜீனியா தற்கொலை செய்துகொள்ள, டெமியின் வாழ்க்கை சூன்யமயமானது. இதனால் தனது பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்ட டெமி, தனது 16 வயதிலேயே கிளாமர் மாடல் ஆனார். 

ஹாலிவுட் அறிமுகம்

1981-ம் ஆண்டு ஹாலிவுட் நடிகையாக அறிமுகமான டெமி மூர், எ ஃபியூ குட் மென், இன்டீசென்ட் ப்ரொபோசல் போன்ற படங்களின் மூலம் திரையுலகில் புகழ்பெற்று  பிரபல நடிகையாக உருவெடுத்தார். 1995-ல் உலகின் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக தன்னை உயர்த்திக்கொண்டார். மேலும் தற்போதுவரை கதாநாயகியாக நடித்து வருகிறார். கடந்த ஆண்டு டெமி நடிப்பில் வெளியான "தி சப்ஸ்டான்ஸ்" திரைப்படம், உலக அளவில் பாராட்டுகளை குவித்ததுடன் வசூலையும் வாரிக்குவித்தது. இப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய டெமி மூர், சிறந்த நடிகைக்கான கோல்டன் குளோப் விருதை வென்றார். மேலும் லாஸ் ஏஞ்சலிஸில் கடந்த மார்ச்சில் நடைபெற்ற 97-வது ஆஸ்கார் விருது விழாவில், கிரிஸ்டல் அர்மானி உடையில் டெமி கலந்து கொண்டார். அவரின் உடை ஆஸ்கார் பார்வையாளர்கள் அனைவரையும் பெரிதும் கவர்ந்தது. 


அழகாக இருக்க சிறுவயதில் என்னை நானே சித்திரவதை செய்து கொண்டேன் - டெமி மூர்

டெமியின் வாழ்க்கை பயணம்

டெமி தனது 18 வயதில் ஃப்ரெடி மூர் என்ற ராக் இசைக் கலைஞரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமண பந்தம் 1981 முதல் 1985 வரை 4 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. ஃப்ரெடி மூருடன் 1985-ல் விவாகரத்தாக, 1987-ல் புரூஸ் வில்லிஸ் என்பவரை மணந்தார் டெமி. இந்த திருமண உறவு மூலம் 3 குழந்தைகளுக்கு தாயானார் டெமி. சுமார் 13 ஆண்டுகள் நிலைத்த இருந்த திருமண வாழ்க்கை 2000-ம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது. பின்னர் 2005-ம் ஆண்டு, நடிகை டெமி மூருக்கும் ஹாலிவுட் நடிகர் ஆஷ்டன் குட்சருக்கும் திருமணம் நடந்தது. இவர்கள் இருவரும் 2013-ல் பிரிந்தனர். அதன்பிறகு தனது ரிலேஷன்ஷிப்பை சிங்கிளாகவே வைத்துள்ள டெமி, தற்போது பேரப்பிள்ளைகளை பெற்று பாட்டியும் ஆகிவிட்டார். இந்தநிலையில்தான், 62 வயதாகும் டெமி, 2025-ம் ஆண்டின் உலகின் மிக அழகான பெண் என 'பீப்பிள்' பத்திரிகையால் அறிவிக்கப்பட்டுள்ளார்.

என் உடலுக்கு அதிக மதிப்பை கொடுத்தேன்!

'பீப்பிள்' பத்திரிகையின் அட்டைப்படத்தில் இடம்பிடித்துள்ள டெமி, அதற்காக அளித்துள்ள நேர்காணலில் பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார். "60 வயதுகளில் நான் அழகாக இருப்பதாக கூறுகிறார்கள். இதற்கு காரணம் என் உடலுக்கு நான் அதிக மதிப்பைக் கொடுத்தேன். அதன் பலனாக தற்போது இந்த நிலையில் இருக்கிறேன். ஆனால் என் இளமை காலத்தில் சில நேரங்களில், அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக என்னை நானே சித்திரவதை செய்து கொண்டுள்ளேன். உண்மையை சொல்ல வேண்டும் என்றால், என்னை நானே தண்டித்துக்கொண்டேன் என்று கூறலாம். உணவு, உடற்பயிற்சி, அழகு பொருட்கள் உள்ளிட்டவற்றில், வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு கடும் கட்டுப்பாட்டுடன் இருந்தேன். இப்போது என் உடலுடன் நல்ல நட்புடன் இருக்கிறேன். அது எனக்கு ஏதாவது சாப்பிட வேண்டும் என்று சொல்லும்போதோ, ​​அது தாகமாக இருக்கிறது என்று சொல்லும்போதோ நான் என் உடலைப் புரிந்துகொண்டு அதற்கு தேவையானதைக் கொடுக்கிறேன். இப்போது எனக்கும் என் உடலுக்கும் இடையே மிகவும் இணக்கமான உறவு இருக்கிறது" என டெமி தெரிவித்துள்ளார்.  


என் முகம் வாடிவிட்டதே என்றெல்லாம் கவலைப்பட்டது இல்லை - டெமி மூர்

வயதாவதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன்

62 வயதிலும் கவர்ச்சிக் கன்னியாக காட்சியளிக்கும் டெமி மூர், தனக்கு வயதாவதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ளார். "வயதாவது என்பது ஒரு அற்புதமான பரிசு. நான் ஒருபோதும் கண்ணாடியைப் பார்த்து ஐயோ கடவுளே எனக்கு வயதாகிவிட்டதே, என் முகம் வாடிவிட்டதே என்றெல்லாம் கவலைப்பட்டது இல்லை. புலம்பியதும் இல்லை. அவ்வாறு புலம்புவதால் எந்த பயனும் இல்லை. நான் அதை முழு மனதுடன் ஏற்றுக்கொள்கிறேன்." என டெமி குறிப்பிட்டுள்ளார்.

அழகு என்பது ஒருவரின் தனிப்பட்ட கருத்து!

இந்த பதிவை படிக்கும்போது, டெமி மூர் என்ன அப்படி அழகு? அவரை தவிர வேறு யாருமே அழகு இல்லையா? என்ற கேள்விகள் நம் எல்லோருக்குள்ளும் எழும். உண்மை என்னவென்றால்,  உலகின் மிக அழகான பெண் என்ற கேள்விக்கு ஒரு பொதுவான பதில் இல்லை. அழகு என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட கருத்து மற்றும் பார்வைக்கு பார்வை வேறுபடலாம். மேலும் அழகின் வரையறை கலாச்சாரம் மற்றும் காலத்திற்கு ஏற்ப மாறுகிறது. 'பீப்பிள்' போன்ற பத்திரிகைகள் அவ்வப்போது ஒரு குறிப்பிட்ட பெண்ணை "உலகின் மிக அழகான பெண்" என்று அறிவிக்கலாம், ஆனால் இது ஒரு பொதுவான கருத்து அல்ல. நடிகைகள் ஜுலியா ராபர்ட்ஸ், ஜெனிஃபர் அனிஸ்டன் உள்ளிட்டோரை "உலகின் மிக அழகான பெண்கள்" என்று பீப்பிள் பத்திரிகை பலமுறை தேர்வு செய்திருந்தாலும், இது ஒருவரின் தனிப்பட்ட கருத்தையே பிரதிபலிக்கிறது. அழகின் உண்மையான வரையறை என்பது ஒருவரின் உள் மற்றும் வெளி அழகின் கலவையைக் குறிப்பதோடு, உடலின் தோற்றத்தை மட்டும் சார்ந்தது அல்ல என்பதே நிதர்சனம்.

Tags:    

மேலும் செய்திகள்