ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகமாக இருந்தாலும் ஆபத்து! - மருத்துவர் தமிழ்மணி திருநாராயணன்
காசநோய் இருப்பவர்கள் சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கும்போது ரத்த தானம் செய்யலாம். அதுவே ஒருசிலருக்கு குணமாகி மீண்டும் 6 மாதத்திற்கு பிறகு வரும். இப்படி அடிக்கடி டிபி வருவோர் வாழ்நாள் முழுக்கவும் ரத்த தானம் செய்யவே கூடாது.;
தானங்களில் சிறந்தது ரத்த தானம். உலகில் யாராலும் இதுவரை செயற்கையாக கண்டுபிடிக்க முடியாத ஒன்று என்றால் அது ரத்தம் மட்டும்தான். அத்தகைய மகத்துவம் மிக்க ரத்தத்தை பிறருக்கு தானமாக கொடுப்பதன்மூலம் தினசரி ஆயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன. விபத்துகள், உடல்நல பிரச்சினைகள், நோய்கள் மற்றும் அறுவை சிகிச்சைகள் என பல்வேறு காரணங்களுக்கு ரத்தம் தேவைப்படுகிறது. ரத்தத்தை எல்லா மருத்துவமனைகளும் சேமித்து வைத்துக்கொள்ளலாமா என்றால் அதற்கு சாத்தியமில்லை. காரணம், இன்னுயிர் காக்கும் ரத்தத்தை அரசு அனுமதி பெற்ற ரத்த வங்கிகளில் மட்டுமே சேமித்து வைக்கமுடியும். அப்படி சேகரிக்கப்படும் ரத்தங்கள் என்னென்ன வடிவங்களில் சேமிக்கப்படுகின்றன? என்னென்ன மாதிரியான ரத்தங்களை சேகரிக்கவே முடியாது? என்பதை விளக்குகிறார் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் தலைமை ரத்த வங்கி அதிகாரி மருத்துவர் தமிழ்மணி திருநாராயணன்.
ரத்த அணுக்கள் குறைபாடுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு அவ்வப்போது ரத்தம் மாற்று சிகிச்சை மேற்கொள்வார்கள். இதுபோன்று குழந்தைகள் பிறப்பது எதனால்?
ஒரு ஆணாக இருந்தால் 14லிருந்து 17 கிராம் ஹீமோகுளோபின் இருக்கவேண்டும். அதுவே பெண்ணாக இருந்தால் 12லிருந்து 14 கிராம் ஹீமோகுளோபின் இருக்கவேண்டும். சிறுகுழந்தைகளுக்கு ரத்த மாற்று சிகிச்சை கொடுக்கப்பட்டால் அது பெரும்பாலும் ஹீமோஃபிலியா பிரச்சினையாக இருக்கலாம். சிறு குழந்தைகளுக்கு இந்த பிரச்சினை வர வாய்ப்பு இருக்கிறது. சிலருக்கு மரபணுரீதியாக வரும். இதை நிரந்தரமாக குணப்படுத்த அதற்கேற்ற மருந்துகளை கொடுத்துதான் நாளடைவில் சரிபடுத்தமுடியும். இந்த பிரச்சினையை கண்டுகொள்ளாமல் அப்படியே குழந்தையை விட்டுவிட முடியாது. ஆனால் சிறுகுழந்தைகளுக்கு ரத்த புற்றுநோய் வந்திருந்தால் அவர்களுக்கு தேவைப்பட்டால் பிளேட்லெட்டுகள் அல்லது பிளாஸ்மா அல்லது ரத்த மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்படும். நோயை பொருத்து சிகிச்சை அளிக்கப்படும். 12 வயதுக்கு கீழுள்ள குழந்தைகளுக்கு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை பிரிவுகள் இருக்கின்றன. அதேபோல் ஆண்களுக்கு பாலிசைதீமியா வீரா (polycythemia vera) என்ற நோய் வரும். அவர்களுக்கு ஹீமோகுளோபின் அளவு 17 கிராமுக்கு மேல் இருக்கும். அந்த ரத்தத்தை வெளியே எடுத்துவிட வேண்டும். அதை மற்ற நோயாளிகளுக்கும் பயன்படுத்த முடியாது. இதை ஃப்ளிபாட்டமி (Phlebotomy) என்று சொல்கின்றனர். ஹீமோகுளோபின் அளவு குறையாவிட்டால் மூச்சு அடைத்தல், கொஞ்ச தூரம் நடந்தால் கஷ்டமாக இருப்பதை போன்று இருக்கும். இதுபோன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்க அரசாங்கம் பல்வேறு திட்டங்களையும் முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. எனவே உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு சென்று பிரச்சினைக்கு ஏற்றவாறு சிகிச்சை எடுக்கவேண்டும். மருத்துவர்கள் குறிப்பிட்ட நாட்களில் சென்று ஃபேக்டர்களை ஏற்றிக்கொள்ள வேண்டும்.
ரத்தத்தில் வெள்ளையணுக்கள் மற்றும் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அளவு முக்கியம்
ஒரு ஆரோக்கியமான நபரின் ரத்தத்தில் எவ்வளவு வெள்ளையணுக்கள், எவ்வளவு சிவப்பணுக்கள் இருக்கவேண்டும்?
ரத்தத்தில் பொதுவாக ஹீம் என்ற அயர்ன் இருக்கிறது. பிளாஸ்மா என்ற திரவத்தில் புரதங்கள் இருக்கின்றன. ரத்தத்தில் உராய்வுத்தன்மையை கொடுக்க தட்டணுக்கள் இருக்கின்றன. இந்நிலையில் ரத்தத்தில் தட்டணுக்களின் எண்ணிக்கையானது 1.5 லட்சத்திலிருந்து 3.5 லட்சம்வரை இருக்கவேண்டும். அதேபோல் வெள்ளையணுக்கள் 11 ஆயிரம்வரை இருக்கலாம். சிவப்பணுக்கள் 4 முதல் 5 லட்சம்வரை இருக்கலாம். உடலில் நோயெதிர்ப்பு சக்தியை கொடுக்கக்கூடியவை வெள்ளையணுக்கள். அதுவே ஆன்டிபாடிகள் பிளாஸ்மாவிலிருந்து உற்பத்தியாகின்றன.
ஒருசில அரியவகை இதய நோயாளிகளுக்கு ‘ப்ளூ பேபி’ என்ற ஒரு வியாதி வருவதாக சொல்கிறார்கள். அவர்களுக்கு நாக்கு, நகம் போன்றவை ப்ளூ நிறத்தில் மாறிவிடுவதாக சொல்கிறார்கள். இது என்ன வியாதி?
இதை சைன்மத்ஹீமோகுளோபின் (cyanmethemoglobin) என்று சொல்கின்றனர். அதாவது ஹீமோகுளோபினின் நிறம் சற்று மாறியிருக்கும். அதனால் நக கணுக்கள் மற்றும் ஓரங்களில் நிறமாற்றம் ஏற்படும். ஹீமோகுளோபின் வேறு மாதிரி மாறுவதால் இப்படி ஆகும். இதனால் கார்டியாக் பிரச்சினைகள் அதிகமாக வரும். சில குழந்தைகளுக்கு படிக்கட்டுகள் ஏறினாலே மூச்சுத்திணறும். அதுபோன்ற குழந்தைகளுக்கு இந்த பிரச்சினைகள் வரலாம். அவர்களை ப்ளூ பேபி என்றெல்லாம் சொல்லமாட்டார்கள். ரத்த சம்பந்தப்பட்ட பிரச்சினைகளால் இதுபோன்ற மாற்றங்கள் வரலாம். ஆனால் இதற்கும் ரத்த தானம் செய்வதற்கும் தொடர்பு கிடையாது.
சைன்மத்ஹீமோகுளோபின் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காணப்படும் அறிகுறிகள்
ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்கள் சாதாரண நபர்களுக்கு ரத்தம் கொடுப்பது சாத்தியமா?
சாத்தியமில்லை. யாரெல்லாம் ரத்தம் கொடுக்கலாம்? யாரெல்லாம் கொடுக்கக்கூடாது? என்று வகைப்படுத்தப்படும். அதில் ஒருசிலர் குறிப்பிட்ட மாதங்களுக்கு கொடுக்கக்கூடாது, அதன்பிறகு கொடுக்கலாம் என்ற வகை இருக்கிறது. இதை பொதுவாக permanent deferral மற்றும் temporary deferral என்று வகைப்படுத்துவர். இதில் காய்ச்சல் இருப்பவர்கள், மாதவிடாயில் உள்ள பெண்கள், பாலூட்டும் பெண்கள், கர்ப்பிணிகள் போன்றோர் அந்த சமயத்தில் ரத்தம் கொடுக்கக்கூடாது என்பது தற்காலிகம். சாதாரணமாக பெண்கள் எப்போது ரத்த தானம் செய்யலாம் என்ற சந்தேகம் நிறையப்பேருக்கு இருக்கும். மாதவிடாய் வந்த 5வது நாளில் இருந்து ரத்தம் கொடுக்கலாம். டாட்டூ போட்டுக்கொள்ளும் ஆண்கள், பெண்கள் இருவருமே 6 மாதங்கள் கட்டாயம் ரத்தம் கொடுக்கக்கூடாது. அதன்பிறகு தாராளமாக கொடுக்கலாம். ஹீமோகுளோபின் குறைவாக இருக்கும்போது பெண்கள் ரத்தம் கொடுக்கக்கூடாது. அதுவே 12.5 கிராமுக்கு மேல் அதிகரித்து பின்னர் ரத்தம் கொடுக்கலாம். பல் சிகிச்சை எடுத்தவர்கள், டிடி வாக்சின் போட்டவர்கள் 6 மாதத்திற்கு ரத்தம் கொடுக்கக்கூடாது. நாய்க்கடி, மஞ்சள் காய்ச்சலுக்கு தடுப்பூசி செலுத்தியவர்கள், சரும சிகிச்சை எடுப்பவர்கள் போன்றோர் சில காலத்திற்கு ரத்த தானம் செய்யக்கூடாது. அதேபோல் டயாபெட்டிக் பிரச்சினை இருப்பவர்களில் டைப் 1 இருப்பவர்கள் இன்சுலின் ஊசி எடுப்பதால் கொடுக்கக்கூடாது. அதுவே டைப் 2 இருப்பவர்கள் மாத்திரை எடுத்து சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்பட்சத்தில் மருத்துவரிடம் கலந்தாலோசித்து ரத்தம் கொடுக்கலாம். 160/100 வரை பிபி இருப்பவர்கள் ரத்தம் கொடுக்கலாம். அதற்குமேல் இருப்பவர்கள் கொடுக்கக்கூடாது. இவை அனைத்துமே தற்காலிகமாக ரத்த தானம் செய்யக்கூடாத வகைகள்.
அதுவே கட்டுப்பாடில்லாத தீவிர அனீமியா, ரத்த உறைவுத்தன்மை இல்லாதவர்கள், ரத்த புற்றுநோய் இருப்பவர்கள், மூளையில் பிரச்சினை இருப்பவர்கள், வலிப்பு நோய் இருப்பவர்கள், ஹைபோ தைராய்டு இருப்பவர்கள், கேன்சருக்கு சிகிச்சையெடுத்து குணமானவர்கள் போன்றோர் நிரந்தரமாக ரத்த தானம் செய்யவே கூடாது. இதுமட்டுமல்லாமல் ஹெச்.ஐ.வி, மஞ்சள் காமாலை, ஹெபடிட்டிஸ், பால்வினை நோய் இருப்பவர்கள் வாழ்நாள் முழுவதும் ரத்த தானம் செய்யவே கூடாது. மலேரியா வந்தவர்கள் ஒரு வருடத்திற்கு பிறகு கொடுக்கலாம்.
மதுபானம் குடிப்பவர்கள் ரத்த தானம் செய்யக் கூடாது
தொடர்ந்து மதுபானம் எடுத்துக்கொள்பவர்கள் ரத்த தானம் செய்யலாமா?
இது முக்கியமான கேள்வி. 24 மணிநேரத்திற்கு முன்பு மதுபானம் குடித்திருந்தால் அவர்கள் ரத்த தானம் செய்யலாம். ஆனால் தொடர்ந்து மதுபானம் குடிப்பவர்கள் வாழ்நாள் முழுக்க ரத்த தானம் செய்யவே கூடாது. ஏனென்றால் அவர்களுக்கு கல்லீரல் பிரச்சினை, மூளை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், மாய எண்ணங்கள் போன்ற நிறைய உடல்நல பிரச்சினைகள் இருக்கும். அதேபோல் காசநோய் இருப்பவர்கள் சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கும்போது ரத்த தானம் செய்யலாம். அதுவே ஒருசிலருக்கு குணமாகி மீண்டும் 6 மாதத்திற்கு பிறகு வரும். இப்படி அடிக்கடி டிபி வருவோர் வாழ்நாள் முழுக்கவும் ரத்த தானம் செய்யவே கூடாது.
ரத்த வங்கிகளில் ரத்தம் மட்டும்தான் வைத்திருப்பீர்களா? அல்லது பிளாஸ்மா, பிளேட்லெட்டுகள் போன்றவையும் வைத்திருப்பீர்களா?
பொதுவாக ஒரு மருத்துவமனை, health cosmetic act (1940) -இன் கீழ் லைசன்ஸ் வாங்கினால்தான் ரத்த வங்கியை அமைக்கமுடியும். இங்கு ரத்தம் தவிர பிளேட்லெட்டுகள், பிளாஸ்மா, கிரையோபிரிசிபிடேட், திரவம் நீக்கிய சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள் (PRBC) என 4 கூறுகளாக ரத்தத்தை பிரித்துவைப்பார்கள். ஒருவர் 450 மி.லி ரத்தம் கொடுத்தால் அதை இப்படி 4 கூறுகளாக பிரித்துவைப்பார்கள். ரத்த வங்கி குளிர்சாதனப் பெட்டிகளில் 2-6 டிகிரி வெப்பநிலையில் மொத்த ரத்தத்தையும் PRBC என்று சேகரித்து வைப்பார்கள். இதில் பிளேட்லெட்டுகளை 0 - 5 நாட்கள் வைத்திருப்பார்கள். இதில் அஜிட்டேட்டரில் வைக்கப்படும். ஏனென்றால் தட்டணுக்கள் வைக்கப்படும் மெஷினானது ஆடிக்கொண்டே இருக்கவேண்டும். இல்லாவிட்டால் அவை ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளும். இதனால் ரத்தக்குழாய்களில் சீரான ஓட்டம் இருக்காது. பிளாஸ்மாவை -20 முதல் -40 டிகிரி வெப்பநிலையில் வைத்திருப்பார்கள். இதை ஒரு வருடம்வரை வைக்கலாம். இதையே -80 டிகிரியில் வைத்தால் 5 வருடம்வரைகூட வைக்கலாம். இந்த பிளாஸ்மாவிலிருந்துதான் கிரையோபிரிசிபிடேட் உருவாக்கப்படுகிறது. இதில் ஃபைபனோஜின் என்ற ஃபேக்ட்டும், ஃபேக்டர் எட்டும் மிகவும் அதிகமாக இருக்கும். இவை சிறப்பு பிரிவுகளுக்கு பயன்படுத்தப்படும். இவை அனைத்தையும் லைசன்ஸ் இருந்தால் மட்டுமே வைத்திருக்க முடியும். 5 வருடத்திற்கு ஒருமுறை லைசன்ஸை புதுப்பிக்க வேண்டும்.
தானமாக கொடுக்கப்படுகிற ரத்தங்கள் சேகரித்து வைக்கப்படும் முறைகள்
ஹைபர் டென்ஷன் இருப்பவர்கள் ரத்தம் கொடுக்கலாமா?
இப்போது நான்கில் ஒருவருக்கு பிபியானது ஏற்ற இறக்கத்துடன்தான் காணப்படுகிறது. அதற்கு நம்முடைய உணவுமுறை, பழக்கவழக்கங்கள், தூக்கம், மன அழுத்தம், டென்ஷன் போன்றவை முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன. பிபி இருப்பவர்கள் தொடர்ந்து ரத்த தானம் செய்யமுடியாது. ஆரோக்கியமாக இருப்பவர்களிடம் இருந்து மட்டும்தான் ரத்தம் பெறப்படும். சிலருக்கு மருத்துவரை பார்த்தவுடன் பிபி ஏறிவிடும். அவர்களை 10 நிமிடம் ரிலாக்ஸ் செய்யவைத்து பிறகு பரிசோதிக்கும்போது 160/100 இருக்கவேண்டும். அதாவது சிஸ்டாலிக் 160 ஆகவும், டயஸ்டாலிக் 100 ஆகவும் இருக்கவேண்டும். இதற்கும்மேல் இருந்தால் ரத்தம் பெறப்படாது.
எங்கிருந்து பெறப்படும் ரத்தம் சிறந்ததாக பார்க்கப்படுகிறது? தனியார் வங்கிகளிலா? அல்லது அரசு ரத்த வங்கிகளிலா?
ரத்தம் என்பது கமெர்ஷியல் கிடையாது. யாருக்கு கொடுக்கிறோம் என்றே தெரியாமல் ஒருவருக்கு தானமாக கொடுப்பதுதான் ரத்தம். இந்த தானத்தை பணத்துக்காக செய்வது கிடையாது. உதவிக்காகத்தான் செய்கிறார்கள். தனியார் மற்றும் அரசு ரத்த வங்கிகள் தனித்தனியாக செயல்படுகின்றன. தனியாரில்கூட செயலாக்க கட்டணம் மட்டும்தான் வசூலிப்பார்கள். ஆனால் அரசு ரத்த வங்கிகளில் தமிழ்நாடு எயிட்ஸ் கட்டுப்பாடு மற்றும் அந்தந்த மருத்துவமனைகளின் கட்டமைப்பு மூலமாக அவை ஈடுசெய்யப்படுகிறது. அதனால் அரசு ரத்த வங்கிகளில் ஹெச்.ஐ.வி, மலேரியா, மஞ்சள் காமாலை, பால்வினை நோய் போன்ற ரத்தத்தின்மூலம் பரவும் நோய்களுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவை தனியாரிலும் மேற்கொள்ளப்படுகின்றன. அரசு ரத்த வங்கிகளை பொருத்தவரை முகாம்களில் சேகரிக்கப்படும் ரத்தங்கள், ஸ்க்ரீன் செய்யப்படாத குளிர்சாதனப் பெட்டிகளில் வைக்கப்படும். அதேபோல் பிளேட்லெட்டுகளும் ஸ்க்ரீன் செய்யப்படாத அஜிட்டேட்டர்களில் வைக்கப்பட்டிருக்கும். அதன்பிறகு ஸ்க்ரீனிங் செய்யப்படும். அது ஒரு சிறப்பு பரிசோதனை என்பதால் அதற்கென்று தனி ஆய்வக மேற்பார்வையாளர்கள் இருப்பார்கள். அவர்கள் தொடர்ந்து பரிசோதனை மேற்கொண்டாலும் மருத்துவர்கள் பரிசோதித்து கையெழுத்து போட்டபிறகுதான் ரத்தம் ஸ்க்ரீனிங்கிற்குள் கொண்டுசெல்லப்படும். ரத்த வங்கிகளை பொருத்தவரை தனியார் சிறந்ததா அரசு சிறந்ததா என்று பார்க்க முடியாது. தரமான மருத்துவர்களால் பரிசோதிக்கப்பட்டால் போதும். அரசு ரத்த வங்கிகளில் சேகரிக்கப்படும் ரத்தங்கள் தனியார் நோயாளிகளுக்கு கொடுக்கப்படாது. அவை அரசு மருத்துவமனைகளுக்கு வரும் ஏழை, எளிய நோயாளிகளுக்குத்தான் பயன்படுத்தப்படும். ஆனால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெறுவோர் ரத்தத்திற்காக அணுகும்போது அவர்களுக்கு டோனர்களின் ஃபோன் நம்பர்களை கொடுத்து தொடர்புகொள்ள சொல்வதுண்டு.