ஃப்ரீ மெடிக்கல் செக்கப் என்ற பெயரில் மக்கள் ஏமாற்றப்படுகிறார்களா?

Update:2025-07-01 00:00 IST
Click the Play button to listen to article

ஒவ்வொரு ‘லேப்’களையும் (ஆய்வகங்கள்) பொறுத்தே மருத்துவ பரிசோதனை முடிவுகள் அமைகின்றன. ஒரே டெஸ்டை நாம் இரண்டு, மூன்று ஆய்வகங்களில் எடுக்கும்போது அவற்றின் முடிவுகள் வெவ்வேறாக வருகின்றன. அதற்கு, அந்தந்த ஆய்வகங்களில் பரிசோதிக்க பயன்படும் கருவிகள், பரிசோதிக்கும் செயல்முறை, தரக்கட்டுப்பாடு, நோயாளியிடமிருந்து இரத்தம், சிறுநீர் உள்ளிட்டவை பெறப்பட்ட நேரம் போன்றவையே காரணம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்த மேலும் பல சந்தேகங்களுக்கு விளக்கமளித்துள்ளார், உயிர் வேதியியல் மருத்துவருமான எழிலரசன் கைலாசம்.


ஆய்வுகளில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளின் மாதிரி - மாத்திரைகள்

எந்தெந்த பரிசோதனைகள் ஆய்வகங்களில் எடுக்கப்படுகின்றன?

உயிர் வேதியியல் பரிசோதனை, ரத்த அணுக்கள் பரிசோதனை, சிறுநீர் கலாச்சார சோதனை (Urine Culture Test), புற்றுநோய் பரிசோதனை, மரபணு பரிசோதனை போன்ற பரிசோதனைகள் ஆய்வகங்களில் எடுக்கப்படும்.

அடிக்கடி மருத்துவ சோதனை செய்தும் திடீர் உயிரிழப்புகள் ஏற்படுவது ஏன்?

சர்க்கரை நோயாளிகளை அடிக்கடி டெஸ்ட் எடுக்க சொல்வார்கள். காரணம், மருத்துவர் முதலில் சில மருந்துகளை எடுத்துக்கொள்ள பரிந்துரைப்பார். அந்த மருந்து உட்கொண்ட பிறகு ஒரு டெஸ்ட் எடுக்க சொல்வார்கள். அதில் உடல் நலம் தேறியுள்ளதா அல்லது வேறு ஏதேனும் மாற்றம் நிகழ்ந்துள்ளதா என்பதை பார்ப்பார்கள். மாற்றம் இருந்தால் அடுத்த முறை அப்போதைய உடல் நலனிற்கு ஏற்றவாறு மருந்துகளை வழங்குவார். ஏனெனில் நாம் எப்பொழுதும் ஒரே வகையான உணவுகளை உண்பதில்லை. மேலும் காலநிலை மாறுபடும். இது உடலில் மாற்றத்தை ஏற்படுத்தும். சில சமயங்களில் உடல் அதன் இயல்பு நிலையை அடைந்திருக்கும். அப்போது மருந்துகள் தேவைப்படாது. இல்லையென்றால் குறைவாக தேவைப்படலாம். மேலும் மருந்துகள் தொடர்ந்து எடுக்கும்போது உடல் உபாதைகள் ஏற்படும். இதனால்தான் அடிக்கடி டெஸ்ட் எடுக்க சொல்வது. எவற்றையும் முன்னெச்செரிக்கையாக தடுக்கலாம். ஆனால் நூறு சதவிகிதம் உத்தரவாதம் அளிக்க முடியாது. 


இரத்தத்தை எடுத்து ஆய்வுக்கு உட்படுத்துவது...

ஒரு ஆய்வகத்தின் முடிவும், மற்றொரு ஆய்வகத்தின் முடிவும் மாறுபடுவது ஏன்?

இதற்கு பல காரணிகள் உள்ளன. ஆய்வகத்தின் தவறாகவும் இருக்கலாம். ஆய்வகத்தின் தரத்தை பொறுத்தும், ஒவ்வொரு மையத்திலும் அவர்கள் பயன்படுத்தும் கருவியைப் பொறுத்தும் முடிவுகள் மாறுபடும். சில நேரம் நோயாளிகளை பொறுத்து முடிவுகள் மாறுபடும். முதலில் ஒரு ஆய்வகத்திற்கு இரத்த மாதிரி கொடுத்துவிட்டு, 5 நிமிட இடைவெளியில் வேறு ஆய்வகத்தில் இரத்த மாதிரி கொடுத்தால்கூட முடிவுகள் மாறுபடும். அது அப்போதைய உடல்நிலையை பொறுத்து அமையும். காலையில் எடுக்கும் டெஸ்டின் முடிவும், மாலையில் எடுக்கும் டெஸ்டின் முடிவும் முழுவதுமாக மாறும். காரணம் உடல்நிலை. இது இயற்கையாகவே நிகழக்கூடியது. அதனால்தான் பலமுறை வெறும் வயிற்றில், எதுவும் சாப்பிடாமல் டெஸ்ட் எடுக்க சொல்வார்கள். அதுபோல இரத்த பரிசோதனையின்போது, இரத்த மாதிரியை சேகரித்து வெகுநேரம் ஆகிவிட்டால், பரிசோதனை முடிவு துல்லியமாக இருக்காது.

பணம் கொடுத்தால் முடிவுகள் மாற்றித்தரப்படுமா?

இதுபோன்ற தவறுகள் சில இடங்களில் நடக்கும். தரச்சான்றிதழ் பெற்ற ஆய்வகங்கள் இதுபோன்ற தவறுகளை செய்யமாட்டார்கள். முடிவுகளை மாற்றிதர மாட்டார்கள். ஆனால் சில ஆய்வகங்கள் பணத்திற்காக இவ்வாறு செயல்படுகின்றன. இவற்றை தடுக்க அரசு ஏதேனும் விதிமுறைகளை கொண்டுவந்தால், குற்றங்கள் குறையும். லெட்டர் பேட் கட்சிகளை போல, லெட்டர் பேட் லேப்ஸ் இருக்கிறார்கள். மக்கள்தான் புரிந்துகொள்ள வேண்டும். பார்க்க பெரியதாக, அழகாக, ஏசி போட்டிருந்தால் மட்டும் போதாது; தரமான லேப் தானா என்பதை உறுதி செய்ய வேண்டும். அதுபோல பணம் குறைவாக கேட்கிறார்கள் என்பதற்காக, உடல்நலனை விட்டுக் கொடுக்ககூடாது. கூகுள் ரிவியூவை மட்டும் நம்பி செல்லக்கூடாது. 


இதய துடிப்பு பரிசோதனை - நோயாளியிடம் ரத்த மாதிரி சேகரிப்பு

இலவச பரிசோதனை என்பது உண்மையா?

மருத்துத்துறை என்பது தற்போது வியாபாரத் துறையாக மாறிவருகிறது. வாடகை, ஊழியர்கள் சம்பளம், இயந்திரங்கள் என இவற்றை கருத்தில்கொண்டு மருத்துவ கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. இலவச பரிசோதனை எனக்கூறி, உள்ளே அழைத்து இந்த சிகிச்சை செய்து கொள்ளுங்கள், அந்த சிகிச்சை செய்து கொள்ளுங்கள் எனக்கூறினால், இது தேவை, தேவையில்லை என்பதில் நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டும்; அது நமக்கு தேவைதானா என சிந்திக்க வேண்டும். குறைந்த செலவு எனக்கூறுவது மக்களை வரவழைக்கத்தான். உணவு, உடை என எங்கு பார்த்தாலும் ஆஃபர், குறைந்தவிலை என்ற விளம்பரம் வந்துவிட்டது. இப்படி கூறப்படும் எல்லாம் தரமற்றதாகவே இருக்கும். அதனால் மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

இந்த லேபில்தான் டெஸ்ட் எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுவது ஏன்?

ஒருசில ஆய்வகங்களின் தரத்தை கருத்தில்கொண்டு, மருத்துவர்கள் அவ்வாறு கூறலாம். இங்கு எடுத்தால் சரியாக இருக்கும் என குறிப்பிட்ட ஆய்வகத்தை மட்டும் சொல்ல வாய்ப்புகள் உள்ளது. அதேநேரம் அது வியாபார நோக்கம் கொண்டதாகவும் இருக்கலாம்.

ஒரே பெயரில் வரும் நோயாளிகளின் முடிவுகள் அடிக்கடி மாற்றி வழங்கப்படுவது ஏன்?

அது தெரிந்து செய்யக்கூடிய தவறாக இருக்காது. இதுபோன்ற தவறுகள் நடப்பது எதிர்பாராததுதான். வேறு வேறு பெயர் கொண்டவர்களின் முடிவுகளும் மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அப்போது நாம்தான் கவனமாக இருக்க வேண்டும். நம்முடைய விவரங்களை சரியாக சொல்கிறார்களா? நம்முடைய ஐடி எண் சரியாக உள்ளதா என்பதை பார்த்துக்கொள்ள வேண்டும். அதுபோல இரத்த சேகரிப்பான்களில் பெயரை உடனடியாக எழுதுகிறார்களா? என்பதை கவனிக்க வேண்டும். இவற்றையெல்லாம் கேள்வி கேட்க நமக்கு அனைத்து உரிமையும் உள்ளது. ஒரே வயதுள்ள, ஒரே பெயருள்ளவர்கள் வரும்போது அதற்கேற்றவாறு அவர்களின் ஃபைல்களை நிர்வாகமும் சரியாக கையாள வேண்டும்.


நோயாளிக்கு அவசர சிகிச்சை அளிப்பது போன்ற மாதிரி...

ஒவ்வொரு ஆய்வகத்திலும் ஒவ்வொரு கட்டணம் வசூலிக்கப்படுவது ஏன்?

அரசுத்தரப்பில் இதற்காக சட்டமோ, விதிமுறைகளோ வரையறுக்கப்படவில்லை. அப்படி பார்த்தால் உணவு, உடை என எல்லா இடங்களிலும் கட்டணம் வேறுபடும். அது பிராண்டை பொறுத்தது. தரத்திற்கு தகுந்தவாறே கட்டணம் மாறுபடும். குறைவாக கட்டணம் வசூலிக்கப்படும் இடங்களில் தரம் இருக்காதா? என்றால், இருக்கும். அதற்கு அவர்கள் சான்றிதழ் பெறவேண்டும். சிறு ஆய்வகங்களுக்கும், பெரிய ஆய்வகங்களின் இயந்திரங்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இதற்கு அரசுதான் ஒரு முடிவு எடுக்க வேண்டும். 

Tags:    

மேலும் செய்திகள்