தெரு நாய்களை மொத்தமாக ஒழித்துவிட்டால் ஊரே நாசமாகிவிடும்! பிளேக் நோய் பரவும்!

தெருநாய்களை மொத்தமாக ஒழித்துவிட்டால் பிளேக் நோய் பரவும்! ஊரே நாசமாகிவிடும்! தெருநாய்கள் விஷயத்தில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு என்ன? தெருநாய்களுக்கு உணவளித்தால் தண்டனையா? தெருநாய்கள் பிரச்சனைக்கு தீர்வு என்ன?;

Update:2025-09-23 00:00 IST
Click the Play button to listen to article

தலைநகர் டெல்லியில் உள்ள அனைத்து தெரு நாய்களையும் காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் அண்மை உத்தரவு, நாடு தழுவிய அளவில் விவாதத்தைத் தூண்டியுள்ளது. சாலையில் செல்வோரை கடிப்பது, ரேபிஸ் உயிரிழப்பு, சாலையில் திடீரென ஓடிவந்து விபத்தை ஏற்படுத்துவது உள்ளிட்ட காரணங்களால், தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை ஒரு தரப்பு மக்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட நிலையில், நீதிமன்றத்தின் தீர்ப்பு மனிதாபிமானமற்ற செயல் என்று விலங்கு நல ஆர்வலர்கள் ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர். நாய்களால் மனிதர்கள் உயிரிழக்கும் நிலையில், நாய்களை ஒழிப்பதே உத்தமம் என்றும், நாயைவிட மனிதனின் உயிர் முக்கியம் என்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஆதரிப்போர் தெரிவித்துவரும் நிலையில், இந்த உலகம் அனைத்து உயிர்களுக்குமானது என விலங்கு நல ஆர்வலர்கள் கூறிவருகின்றனர். இது சமூகத்தில் கடுமையான விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தெரு நாய்களை ஒட்டுமொத்தமாக ஒழிப்பது சாத்தியமா? அவற்றை ஒழிப்பது மட்டுமே பிரச்சனைக்கு தீர்வா? ஒருவேளை, ஒட்டுமொத்த தெரு நாய்களையும் ஒழித்துவிட்டால், ரேபிஸ் பிரச்சனையே வராதா? தெரு நாய்கள் இல்லாத ஊர் எப்படி இருக்கும்? போன்ற பல்வேறு சந்தேகங்களுக்கான விளக்கத்தை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.


தெரு நாய்க்கடியால் டெல்லியில் மாணவி உயிரிழந்ததையடுத்து தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு கூறுவது என்ன?

டெல்லியில் தெரு நாய்க்கடிக்கு ஆளான மாணவி ஒருவர் ரேபிஸ் தொற்று ஏற்பட்டு உயிரிழந்ததைத் தொடர்ந்தே, தெரு நாய்கள் பிரச்சனை தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. டெல்லியில் உள்ள அனைத்து தெரு நாய்களையும் காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து, தனது உத்தரவை உச்சநீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லி, மும்பை, சென்னை போன்ற நகரங்களில் விலங்கு நல ஆர்வலர்கள் சார்பில் பேரணிகளும் போராட்டங்களும் நடைபெற்றன.

மேலும், உச்சநீதிமன்றத்தின் முந்தைய சில உத்தரவுகளுக்கு மாறாக புதிய உத்தரவு உள்ளதாகக் கூறி தலைமை நீதிபதி அமர்வில் சில வழக்கறிஞர்கள் முறையிட்டனர். இதையடுத்து 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டது. அதன்பிறகு, தெரு நாய்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக முக்கிய உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்தது. அதன் படி, "தெரு நாய்களுக்கு பொது இடங்களில் உணவு வழங்கக் கூடாது. அவ்வாறு வழங்கினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். விதிமீறல் தொடர்பாக புகார் அளிக்க, உள்ளாட்சி அமைப்புகள் உதவி எண்ணை உருவாக்க வேண்டும். மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் தெரு நாய்களுக்கு உணவு அளிக்கும் வகையில் பிரத்யேக கூடங்களை அமைக்க வேண்டும். அங்கு பொதுமக்கள் உணவளிக்கலாம். தெரு நாய்களை தத்தெடுத்து வளர்க்க விரும்புவோர், அதுதொடர்பாக உள்ளாட்சி அமைப்புகளிடம் விண்ணப்பம் அளித்து தத்தெடுத்த வளர்க்க வேண்டும். அவ்வாறு நாய்களை வளர்ப்போர், மீண்டும் அதனை தெருவில் விடக்கூடாது. தெரு நாய்களைப் பிடிப்பதற்காக வரும் உள்ளாட்சி அமைப்பு ஊழியர்களை விலங்கு நல ஆர்வலர்களோ, தன்னார்வ அமைப்பினரோ தடுக்கக் கூடாது. அவ்வாறு தடுத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன், தெரு நாய்களை எப்படி கையாள வேண்டும்? இவ்விவகாரத்தில் என்னென்ன விதிமுறைகளை வகுக்க வேண்டும்?" உள்ளிட்டவை குறித்து அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் கருத்து தெரிவிக்க வலியுறுத்தி நோட்டீஸ் அளிக்கப்பட்டது.


பொது இடங்களில் நாய்களுக்கு உணவளிக்க உச்சநீதிமன்றம் தடை

உச்சநீதிமன்ற உத்தரவு இவ்வாறு இருக்கும் நிலையில், பொது இடங்களில் தெரு நாய்களுக்கு ஆங்காங்கே உணவு வழங்கும் நிகழ்வு நடைபெற்று வருவதால், உணவளிப்போர் மீது காவல் நிலையத்தில் புகார்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. இது ஒருபுறம் என்றால், தெரு நாய்களை ஒழிப்பதே பிரச்சனைக்கு தீர்வாக இருக்கும் என்று மற்றொருபுறம் மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ரேபிஸால் உயிரிழப்போரின் மரணங்கள் கொடுமையானது என்றும், ரேபிஸை ஒழிக்க வேண்டும் என்றால், நாய்களை ஒழிக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறி வருகின்றனர். இந்த இடத்தில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம், நாய் கடித்தால் மட்டும்தான் ரேபிஸ் வருமா?

பூனை, மாடு, குரங்கு, குதிரை, வௌவால் மூலமும் ரேபிஸ் வரும்!

உலகின் ரேபிஸ் இறப்புகளில் 36% இந்தியாவில் நடப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. இந்த ஒரு தகவலை வைத்துக்கொண்டுதான் நம் மக்களில் பலர், நாய்களை கொல்ல வேண்டும் என்றுகூட கூறி வருகின்றனர். ஆனால், உலக சுகாதார நிறுவனத்தின் தகவலை ஆராய்ந்து பார்த்தால், இந்தியாவில்தான் ரேபிஸ் தடுப்பூசி போடாத நாய்களின் எண்ணிக்கையும் அதிகம். அமெரிக்க உள்ளிட்ட நாடுகளில், ஒரு நாய் விடாமல் அனைத்து நாய்களுக்கும் ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதால், ரேபிஸ் மரணங்கள் அங்கு நிகழ்வதில்லை. ஆனால், இந்தியாவில் நிலைமை தலைகீழ். இந்தியாவிலும் அனைத்து தெரு நாய்களுக்கும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தி, அவற்றின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்காக சிகிச்சையை முறையாக மேற்கொண்டால், இங்கும் தெரு நாய்கள் பிரச்சனை இருக்காது என்று விலங்கு நல ஆர்வலர்கள் கூறுகின்றனர். தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டிய நடவடிக்கைகளையும் சரியாக மேற்கொள்ளாமல், அவற்றுக்கு ரேபிஸ் தடுப்பூசியும் போடாமல், அவற்றை ஒழிக்க வேண்டும் என்று சொல்வது மட்டும் எவ்வாறு ஞாயம் என்று அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். 


நாய் மட்டுமன்றி பூனை, மாடு, குதிரை, வௌவால், குரங்கு உள்ளிட்டவை கடித்தாலும் ரேபிஸ் வரும்

மேலும், ரேபிஸ் என்பது நாய் மட்டுமன்றி, பூனை, மாடு, குரங்கு, குதிரை, வௌவால் உள்ளிட்ட பாலூட்டிகள் கடித்தாலும் ஏற்படும் என்று கால்நடை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த விலங்குகளின் எச்சில் மூலம் ரேபிஸ் வைரஸ் மனிதர்களுக்கு பரவுகிறது. அதேநேரம் விலங்குகள் கடிப்பது மட்டுமல்ல... அவற்றின் நகம் கீறினால்கூட ரேபிஸ் வர வாய்ப்பிருக்கிறதாம். காரணம், அவை தங்கள் உடல் முழுவதையும் நாக்கால் நக்குவதுடன், தங்கள் கால்களையும் வாயில் வைப்பதால்தான். அண்மையில் மதுரையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பூனைக் கடித்து ரேபிஸ் தொற்றுக்கு ஆளாகி பலியானார் என்பது இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது.

தெரு நாய்களை மொத்தமாக ஒழித்துவிட்டால்?

தெருநாய்களை முற்றிலுமாக அகற்றினால் சுற்றுச்சூழல் பேரழிவு ஏற்பட்டு மனிதர்களுக்கு பெரும் பிரச்சனை ஏற்படும் என்று ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.தெரு நாய்கள் என்பது ஒரு விலங்கு என்பதை தாண்டி, நகர்ப்புற சூழலியல் அமைப்பின் ஒரு பகுதி என்றும், அவை மற்ற உயிரினங்களையும் மனித சமூகத்தையும் சமநிலைப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிப்பதாகவும் பிரிட்டன் எடின்பரோ பல்கலைக்கழகத்தில் மனித - விலங்கு தொடர்பான பொலிட்டிகல் ஈகாலஜி துறையின் பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

எனவேதான் உலக சுகாதார நிறுவனம் போன்ற உலகின் பல்வேறு அமைப்புகளும், நாய்களை அதன் இருப்பிடத்தில் இருந்து அகற்றும் நடவடிக்கையை எதிர்ப்பதாக அவர் கூறியுள்ளார்.

தெரு நாய்கள் இயற்கையாகவே பூனை, எலிகளை வேட்டையாடுவதுடன், உணவு கழிவுகளை தின்று குப்பைகளைக் குறைக்கும் என்றும், தெரு நாய்கள் இல்லையென்றால் எலிகள் பெருகி பிளேக் நோய் பரவும் அபாயம் ஏற்படும் என்றும் கால்நடை மருத்துவ துறையினர் தெரிவிக்கின்றனர்.


நாயின் எச்சில் மூலம் ரேபிஸ் வைரஸ் பரவுகிறது

1994-ம் ஆண்டு குஜராத் மாநிலம் சூரத்தில் அனைத்து நாய்களும் அகற்றப்பட்ட பிறகு அங்கு எலிகளின் தொல்லை அதிகரித்து மக்களுக்கு பிளேக் நோய் பரவியதாக நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும், விலங்கு நல ஆர்வலருமான மேனகா காந்தி பல முன்னணி ஆங்கிலப் பத்திரிக்கைகளில் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

தெரு நாய்கள் பிரச்சனைக்கு என்னதான் தீர்வு?

ஒற்றை தீர்வு என எதுவும் இல்லை என்கிறார் பிரிட்டன் எடின்பரோ பல்கலைக்கழகப் பேராசிரியர். நாய்க்கடி, ரேபிஸ், விழிப்புணர்வு என மூன்றாக இதனைப் பிரித்து பார்த்தால் மட்டுமே பலன் கிடைக்கும் என்றும், தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த தடுப்பூசிகளை செலுத்துவதும், அனைத்து நாய்களுக்கும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவதும் தீர்வுகளில் சிறந்ததாக இருக்கும் என்றும் கூறுகிறார்.

இதனிடையே, நாய்கள் மீது அன்பு செலுத்துவோருக்கும், தெரு நாய்களை ஒழிக்க வேண்டும் என்று சொல்பவர்களுக்கும் இடையே ஏற்பட்டுவரும் கருத்து மோதல்கள் குறித்து டிடெக்டிவ் பிரசன்னா, ராணி ஆன்லைனுக்கு அளித்துள்ள சிறப்பு பேட்டியின் முக்கிய தகவல்களை பார்ப்போம்.


தெரு நாய்களை அணுகுவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும் - சமூக ஆர்வலர்கள்

டிடெக்டிவ் பிரசன்னாவின் கருத்துகள் :

ஒரு நாயால் மனிதனின் உயிர் போவதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. 

சாலையின் குறுக்கே நாய்கள் திடீரென ஓடிவருவதால் ஏற்படும் விபத்துகளில் மனித உயிர்கள் பலியாவதை ஞாயப்படுத்த முடியாது.

மனித உயிரையும், நாயின் உயிரையும் ஒன்றாக மதித்து ஒப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

மனிதனையே நேசிக்க முடியாதவர்களால் நாய்களை எப்படி நேசிக்க முடியும்?

தெரு நாய்கள் பிரச்சனைக்கு தீர்வுதான் வேண்டும் என்று கேட்கிறோமே தவிர, தெரு நாய்களை கொல்ல வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை. 

தெரு நாய்களுக்கு யாரும் எதிரிகள் அல்ல; ஆனால் அவற்றை பார்த்தால் பயமாக இருக்கிறது என்றுதான் சொல்கிறோம்.

நாய்கள் மீது பாசம் செலுத்துபவர்கள், தெரு நாய்களை தத்தெடுத்து தங்கள் வீட்டில் வளர்க்கலாம்... ஆகிய கருத்துகளை பிரசன்னா தனது பேட்டியில் முன்வைத்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்