மீண்டும் வாலாட்டினால் பாகிஸ்தானே இருக்காது! மொத்தமாக அழித்துவிடுவோம்! - இந்தியா ட்விஸ்ட்

Update:2025-05-13 00:00 IST
Click the Play button to listen to article

பஹல்காமில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு இந்தியா கடந்த 7-ம் தேதி பதிலடி கொடுத்தது. தீவிரவாதிகளை மட்டுமே குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இத்துடன் வாலை சுருட்டிக்கொள்ள பாகிஸ்தானுக்கு எச்சரிக்கப்பட்ட நிலையில், எங்களால் அப்படியெல்லாம் இருக்க முடியாது என தானாக வந்து பிரம்பை கொடுத்து தர்ம அடி வாங்கி சென்றது. இப்படியே சென்றால் இரு நாடுகளுக்கும் இடையே போர் ஏற்படும் அபாயம் இருந்ததால், உலக நாடுகள் பலவும், இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை நடத்தி பதற்றத்தை தணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டன. இதையடுத்து, கடந்த 10-ம் தேதி இரு நாடுகள் இடையே சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. ஆனால், சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்ட 3 மணி நேரத்தில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறியது. இதனால் இந்தியா பதில் தாக்குதல் நடத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டது. இந்நிலையில் இரு நாடுகளும் மீண்டும் சண்டை நிறுத்தத்திற்கு உடன்பட்டுள்ளன. இது குறித்த முழு தகவலையும் பார்ப்போம்.


பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலின் அழியாத சோகம்

பெண்களை வைத்து பதிலடி கொடுத்த இந்தியா!

கடந்த மாதம் 22-ம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்தியர்கள் 25 பேர் மற்றும் நேபாள நாட்டவர் ஒருவர் என மொத்தம் 26 பேர் கொல்லப்பட்டனர். அதுவும் கொல்லப்பட்ட அனைவரும் ஆண்கள் மட்டுமே. தங்கள் கணவருடன் இன்ப சுற்றுலா சென்ற பல பெண்கள் இதனால் துணையை இழந்து செய்வதறியாது தவித்து வருகின்றனர். இந்த தாக்குதலில் பல பெண்களின் குங்குமம் அழிக்கப்பட்ட நிலையில், அதற்கு சரியான பதில் நடவடிக்கையாக பெண் வீராங்கனைகளின் தலைமையில், கடந்த 7-ம் தேதி அதிகாலையில் ஆப்பரேஷன் சிந்தூரை இந்தியா தொடங்கியது. பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளின் இருப்பிடங்களை குறிவைத்து 9 இடங்களில் இந்தியா துல்லிய தாக்குதல் நடத்தியது. இதில் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதுடன், தீவிரவாத முகாம்களும் அழிக்கப்பட்டன. இந்த தாக்குதல் குறித்து உலக நாடுகளுக்கு தகவல் அளித்த இந்தியா, தீவிரவாதிகளை மட்டுமே தாங்கள் குறிவைத்ததாகவும், அதுவும் பாகிஸ்தானுக்குள் நேரடியாக நுழையாமல் தாக்குதலை நடத்தியதாகவும், தாக்குதல் வெற்றி பெற்றதாகவும் அறிவித்தது. 


ஆப்பரேஷன் சிந்தூரை தலைமையேற்று நடத்திய விங் கமாண்டர் வியோமிகா சிங் & கர்னல் சோஃபியா குரேஷி

அடங்காத பாகிஸ்தான்...

பாகிஸ்தானில் தீவிரவாதிகளை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்திய நிலையில், அங்கு உயிரிழந்த தீவிரவாதிகளின் இறுதி சடங்கில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பங்கேற்றதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை எற்படுத்தியது. இந்த நிலையில்தான் மே 8-ம் தேதி இரவு இந்திய எல்லையோர பகுதிகளில் பாகிஸ்தான் திடீர் தாக்குதல் நடத்தியது. ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப், சண்டிகர், குஜராத் உள்ளிட்ட இடங்களில், ஏவுகணைகளை வீசியும், ட்ரோன்கள் மூலமாகவும் தாக்குதலை தொடங்கியது. இதனால் பதில் தாக்குதலில் இறங்கிய இந்தியா, பாகிஸ்தானை அதகளம் செய்தது. பாகிஸ்தானின் ஒரு தாக்குதல் கூட இந்தியாவில் எங்கும் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில், பாகிஸ்தானின் ஆயுதங்களை இந்தியா துல்லியமாக அழித்தது. அன்றைய இரவு முழுவதும் இந்திய எல்லையோர பகுதிகள் இருட்டடிப்பு செய்யப்பட்டன. மேலும் ஜம்மு காஷ்மீரில் மக்கள் பாதுகாப்பாக பதுங்கு குழிகளில் தங்க வைக்கப்பட்டனர். ராஜஸ்தானின் ஜெய்சால்மர், பஞ்சாப், சண்டிகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் வீடுகளைவிட்டு வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டனர். இந்த தாக்குதலில் ஆரம்பத்தில் தடுப்பு நடவடிக்கையை மட்டுமே மேற்கொண்ட இந்தியா, ஒருகட்டத்திற்கு மேல் பதில் தாக்குதலில் இறங்கியது. 8-ம் தேதி இரவு முழுவதும் நடைபெற்ற இந்த தாக்குதலில் பாகிஸ்தானுக்கு சொல்ல முடியாத அளவுக்கு பேரிழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் பொதுமக்களை மனித கேடயமாக பாகிஸ்தான் பயன்படுத்தியதாகவும், இரு நாடுகள் இடையேயான வான் தாக்குதலின்போது பயணிகள் விமானத்தை பாகிஸ்தான் தடை செய்யாமல், அவற்றை வைத்தும் ஆதாயம் அடைய முயன்றதாகவும் இந்தியா குற்றம்சாட்டியது. 


இந்தியா - பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தத்தை அறிவித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் பாகிஸ்தான்?

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்துவிட்டு அமைதிகாத்த இந்தியாவை சீண்டிபார்த்த பாகிஸ்தானுக்கு இந்திய தரப்பில் மரண அடி கொடுக்கப்பட்டது. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்தியாவிடம் இருந்த புது ஆயுதங்கள் பல, பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிரான இந்த சண்டையில் பயன்படுத்தப்பட்டு வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் இந்த தாக்குதல் எல்லாமே இந்தியா, தீவிரவாதிகளை மட்டுமே குறிவைத்து நடத்தியது. இதனிடையே இந்தியா, பாகிஸ்தான் என இரு நாடுகளிடமும் அணு ஆயுதம் உள்ளதால், ஒருவேளை போர் ஏற்பட்டால், அது கடும் விளைவுகளை ஏற்படுத்திவிடும் என உலக நாடுகள் அஞ்சின. இதையடுத்து இரு நாடுகளையும் சமாதானம் செய்யும் முயற்சியில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இறங்கின. ஒரு வழியாக கடந்த 10-ம் தேதி மாலை சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. ஆனால் இதனை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தது பல்வேறு கேள்விகளை எழுப்பியது. அதுகுறித்த விவாதங்கள் ஒருபுறம் சென்று கொண்டிருக்க, சண்டை நிறுத்தம் அறிவித்த 3 மணி நேரத்திலேயே பாகிஸ்தான் அதனை மீறியது. மீண்டும் இந்தியா மீது தாக்குதலை தொடங்கியது. பாகிஸ்தானின் பேச்சை ஒருபோதும் நம்பாத இந்தியா இம்முறையும் நம்பவில்லை. சண்டை நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால், எப்போதும் பதிலடி கொடுக்க ஆயத்தமாகவே இருந்தது. இதற்கு ஏற்ப பாகிஸ்தான் தாக்குதலை தொடங்கியவுடன், இந்தியா முழுவீச்சில் பதில் தாக்குதல் நடத்தியது. பின்னர் உலக நாடுகளின் தலையீட்டால் மீண்டும் சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தானின் இந்த செயல் உலக நாடுகளை அதிருப்தி அடைய செய்தது. பாகிஸ்தான் அரசு, சண்டை நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்த நிலையில், தாக்குதலை நடத்தியது யார்? அப்போது பாகிஸ்தான், அரசு கட்டுப்பாட்டில் இல்லையா? தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ளதா? என்ற கேள்விகளை உலக நாடுகள் எழுப்பின.

இருநாடுகளிலும் ஏற்பட்ட இழப்புகள்

இந்தியா பாகிஸ்தான் இடையே நடைபெற்ற சண்டையில், பாகிஸ்தானுக்குள் சென்று வான் தாக்குதல் நடத்திய போர் விமானிகள் அனைவரும் பத்திரமாக திரும்பிவிட்டதாக இந்தியா தெரிவித்துள்ளது. அதேநேரம் எல்லையோர பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த 5 வீரர்கள் வீர மரணம் அடைந்ததாக இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு கருதி முழு இழப்பு விவரத்தை வெளியிட இந்திய ராணுவம் மறுத்துவிட்டது.

பாகிஸ்தான் தரப்பில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில், அந்நாட்டின் ஆயுதங்கள் ஏராளமானவை இந்த 2 நாட்களிலேயே காலி செய்யப்பட்டுள்ளன. இது பாகிஸ்தானுக்கு பேரிழப்பு என்றும், இந்த இழப்பிலிருந்து பாகிஸ்தான் வெளிவரவே பல ஆண்டுகள் ஆகும் என்றும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. 


பாகிஸ்தானில் குறிவைத்து இந்தியா நடத்திய தாக்குதல்

சண்டை நிறுத்தம்

அடங்காமல் கொக்கரித்த பாகிஸ்தான், சண்டை நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவிக்க முக்கிய காரணம், போர் என்ற ஒன்று முழு வீச்சில் தொடங்குவதற்கு முன்னரே, இந்தியா தன்னை துவம்சம் செய்து முடித்துவிடும் என்ற அச்ச உணர்வு அந்நாட்டிற்கு வந்துள்ளது. அதுமட்டும் அல்லாது பாகிஸ்தான் தன் அணு ஆயுதத்தை மறைத்து வைத்துள்ள இடத்தையும் இந்தியா கண்டறிந்துவிட்டதாக தகவல் வெளியாகிவுள்ளது. அந்த இடத்தில் இந்தியா தாக்குதல் நடத்தினால் பேரிழப்பு ஏற்படும் என்ற அச்ச உணர்வால் பாகிஸ்தான் அடக்கிவாசிப்பதாகக் கூறப்படுகிறது. 

இதனிடையே இந்தியா, பாகிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிடக் கூடாது என்றும், இந்தியா, பாகிஸ்தான் மீதான தாக்குதலில் பின்வாங்கக்கூடாது என்றும் இந்தியாவில், சுப்பிரமணியின் சுவாமி போன்ற அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பஹல்காம் தாக்குதலின்போது வராத அமெரிக்கா தற்போது எதற்கு வருகிறது? என கேள்வி எழுப்பியுள்ள சுவாமி, சண்டை நிறுத்தம் நல்ல முடிவல்ல என்றும் தெரிவித்துள்ளார். 


இந்தியா, பாகிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலையிடக்கூடாது - சுப்பிரமணியன் சுவாமி

கசியும் தகவல் உண்மையா? வதந்தியா?

பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரத்தில் இருந்து சுமார் 30 கி.மீ. தூரத்தில்,பெஷாவர் செல்லும் வழியில் இடையில் ஒரு மலைத்தொடர் இருக்கிறது. இது ஆப்கானிஸ்தான்வரை செல்லும் இந்துகுஷ் மலைத்தொடர். இந்த மலைத்தொடருக்கு அடியில் மிக அதிக ஆழத்தில் இயற்கையாகவே சுரங்கங்கள் அமைந்துள்ளன. இந்த சுரங்கங்களில் ஒரு குறிப்பிட்ட சுரங்கத்தில்தான் பாகிஸ்தானின் 50 சதவீத அணு ஆயுதங்கள் பாதுகாப்பாக பதுக்கி வைக்கப் பட்டிருந்ததாகவும், அதன் மீது கடந்த 10-ம் தேதி அதிகாலை இந்தியா தாக்குதல் நடத்தி இருப்பதாகவும், மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த உலகப் போர்க்களச்சூழல் நிபுணர்களிடையே சந்தேகம் எழுகிறது. இதில் குறைந்தபட்சம் பாகிஸ்தானின் மூன்று அணுகுண்டுகள் அழிக்கப்பட்டிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. 

மே 11-ம் தேதி இரவு மீதி இருக்கும் அத்தனை அணு ஆயுதங்களையும் தரைமட்டம் ஆக்குவதற்காக இந்தியா ரகசியத் திட்டம் தீட்டி இருந்ததாகவும், இதுகுறித்து இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் பத்துக்கும் மேற்பட்ட முறை தனித்தனியாக தீவிர ஆலோசனைகள் நடந்ததாகவும், அதனால்தான் பாகிஸ்தான் அலறி அடித்து அமெரிக்காவிடம் ஓடியதாகவும் கூறப்படுகிறது. எனவேதான் இந்த விஷயத்தில் அமெரிக்கா அவசரமாக தலையிட்டதாகவும் கூறப்படுகிறது.

நாட்டு மக்களுக்கு மோடி ஆற்றிய உரை!

சண்டை நிறுத்தம் தொடர்பாக பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களுக்கு விளக்கம் அளித்தார். அப்போது இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்த சண்டை குறித்தும் அவர் தகவல்களை பகிர்ந்துகொண்டார். எல்லையில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தயாராக இருந்ததாகவும், ஆனால் பாகிஸ்தானை அதன் மார்பிலேயே இந்தியா குத்திவிட்டதாகவும், இனி அணு ஆயுத மிரட்டல் எல்லாம் வேலைக்கு ஆகாது என்றும் கூறினார். 

மேலும், ஆப்பரேஷன் சிந்தூர் தற்காலிகமாகவே நிறுத்தி வைக்கப்படுவதாகக் குறிப்பிட்ட பிரதமர், பாகிஸ்தானோ அல்லது பாகிஸ்தான் தீவிரவாதிகளோ இனி இந்தியாவை தாக்கினால், அதன்பிறகு பாகிஸ்தானே இருக்காது என்று மறைமுகமாக எச்சரித்தார். பாகிஸ்தான் என்றொரு நாடு நிலைத்திருக்க வேண்டும் என்றால், அங்குள்ள தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்