ஈரான் தலைநகர் தெஹ்ரான், எவ்வளவு அழகிய நகரம் தெரியுமா?

அண்மைக் காலமாக சர்வதேச அரங்கில் ஈரானும் இஸ்ரேலும் மோதிக்கொள்வது பற்றிய செய்திகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன.;

Update:2025-07-01 00:00 IST
Click the Play button to listen to article

அண்மைக் காலமாக சர்வதேச அரங்கில் ஈரானும் இஸ்ரேலும் மோதிக்கொள்வது பற்றிய செய்திகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. மத்திய கிழக்கு அரசியலில் நிலவும் இந்த பதற்றமான சூழல், உலகின் பார்வையை ஈரானின் மீது திருப்பியுள்ளது. ஆனால், போர் மற்றும் அரசியல் பதட்டங்களுக்கு அப்பால், ஈரானின் தலைநகரான தெஹ்ரான், ஒரு செழிப்பான வரலாற்றையும், பன்முகக் கலாச்சாரத்தையும், கண்கவர் இயற்கை அழகையும் தன்னகத்தே கொண்டுள்ள ஓர் அற்புதமான நகரமாகும். அல்போர்ஸ் மலைத்தொடரின் அடிவாரத்தில் கம்பீரமாக வீற்றிருக்கும் தெஹ்ரான், 90 லட்சத்திற்கும் அதிகமான மக்களைக் கொண்ட ஒரு பிரம்மாண்டமான பெருநகரம். பாரசீக நாகரிகத்தின் தொட்டிலாக கருதப்படும் தெஹ்ரான், ஈரானின் ஆன்மாவையும், அதன் நவீன பரிணாம வளர்ச்சியையும் ஒரே நேரத்தில் பிரதிபலிக்கிறது. இந்த சிறப்புமிக்க நகரத்தின் வரலாறு, சுற்றுலாத் தலங்கள், தனித்துவமான உணவு வகைகள் குறித்து விரிவாக இந்த தொகுப்பில் காணலாம்.

வரலாற்றுப் பின்னணி

தெஹ்ரானின் வரலாறு கி.பி. 9-ஆம் நூற்றாண்டிலிருந்து தொடங்குகிறது. அக்காலத்தில், இது 'ரே' என்ற புகழ்பெற்ற பண்டைய நகரத்திற்கு அருகில் அமைந்திருந்த ஒரு சிறிய கிராமமாக மட்டுமே இருந்தது. 13-ஆம் நூற்றாண்டில் மங்கோலியப் படையெடுப்பால் ரே நகரம் அழிக்கப்பட்ட பிறகு, தெஹ்ரான் படிப்படியாக முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. கி.பி. 1796-ஆம் ஆண்டில், காஜார் வம்சத்தைச் சேர்ந்த ஆகா மொஹம்மத் கான் தெஹ்ரானை ஈரானின் தலைநகராக அறிவித்தார். இந்த அறிவிப்பு நகரத்தின் வளர்ச்சிக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. பின்னர், 19 மற்றும் 20-ஆம் நூற்றாண்டுகளில் பஹ்லவி அரசர்களின் ஆட்சி காலத்தில், தெஹ்ரான் மிகப்பெரிய அளவில் நவீனமயமானது. பிரம்மாண்டமான கட்டிடங்கள், அகலமான சாலைகள் மற்றும் நவீன வசதிகளுடன் நகரம் ஒரு பெருநகரமாக உருவெடுத்தது. 1979-ஆம் ஆண்டில் நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பிறகு, தெஹ்ரான் நாட்டின் அரசியல் மற்றும் மதத் தலைமைக்கான மையமாக மாறியது. இந்த நீண்ட வரலாற்றுப் பயணம், தெஹ்ரான் நகருக்கு ஒரு தனித்துவமான கலாச்சார அடையாளத்தையும், நவீன மற்றும் பாரம்பரிய கூறுகளின் கலவையையும் வழங்கியுள்ளது.


கலாச்சார ரீதியாகவும், புவியியல் ரீதியாகவும் பன்முகத்தன்மை கொண்ட தெஹ்ரான்

அதேபோல் தெஹ்ரான் கலாச்சார ரீதியாகவும், புவியியல் ரீதியாகவும் பன்முகத்தன்மை கொண்ட ஒரு நகரமாகும். வடக்குப் பகுதிகள் நவீன வாழ்க்கை முறை, ஆடம்பர வீடுகள் மற்றும் துடிப்பான கஃபே கலாச்சாரத்துடன் விளங்க, தெற்குப் பகுதிகள் பாரம்பரியத்தையும், உழைக்கும் வர்க்கத்தின் வாழ்க்கையையும் பிரதிபலிக்கின்றன. புவியியல் ரீதியாக, தெற்கில் வெப்பமான, வறண்ட நிலப்பரப்பு இங்கு இருக்க, வடக்கில் பனி படர்ந்த மலைகள் உள்ளன. இதனால் ஒரே நாளில் இரு வேறுபட்ட பருவநிலைகளை தெஹ்ரானில் நம்மால் அனுபவிக்க முடியும். கல்வியைப் பொறுத்தவரை, 400-க்கும் மேற்பட்ட புத்தகக் கடைகளைக் தெஹ்ரான் கொண்டுள்ளதே, அதன் கல்வித் தரத்திற்கு சான்றாகிறது. மேலும், 'தெஹ்ரான் பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி' மேற்கு ஆசியாவின் மிகப்பெரிய நிகழ்வுகளில் ஒன்றாகும். பெண் கல்வியை பொறுத்தவரை அவர்கள் இங்கு கல்வி மற்றும் தொழில்களில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். ஹிஜாப் கட்டுப்பாடுகளுக்கு பெண்கள் உட்பட்டிருந்தாலும், அவர்கள் சமூகத்தில் பரந்த அளவில் செயல்படுகிறார்கள். அதிலும் சமீபகாலமாக சினிமா, அரங்கு கலை மற்றும் இசை போன்ற கலை வடிவங்கள் இங்கு மறைமுகமாக வளர்ந்து வருவது, நகரத்தின் உயிருள்ள கலாச்சார பன்முகத்தன்மையை மேலும் உறுதிப்படுத்தி வருகிறது.

சுற்றுலா தலங்கள்

சுற்றுலாவை பொறுத்தவரை தெஹ்ரானில், வரலாறு, இயற்கை, கலை மற்றும் நவீனக் கட்டிடக்கலை என அனைத்தையும் ஒன்றாக காண முடியும். அதில் மிக முக்கியமாக யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமான கோலெஸ்தான் அரண்மனை தனிச்சிறப்பு வாய்ந்தது. காஜார் ஆட்சிக் காலத்தின் கலை மற்றும் கட்டிடக்கலையின் சிறந்த எடுத்துக்காட்டான இது, கண்ணாடிகளால் அலங்கரிக்கப்பட்ட சுவர்கள், நுட்பமான ஓவியங்கள் மற்றும் ஐரோப்பிய பாணி வடிவமைப்புகளுடன் மிக கம்பீரமாக காட்சியளிக்கிறது. அதேபோல் இங்கு இருக்கும் சதாபாத் அரண்மனை வளாகம், நிவாரன் அரண்மனை ஆகியவை பஹ்லவி வம்சத்தின் முன்னாள் மன்னர்களால் பயன்படுத்தப்பட்ட அரண்மனைகள் ஆகும். அழகிய ஓவியங்கள், விலையுயர்ந்த கலைப் பொருட்கள் மற்றும் பரந்த பூங்காக்களுடன் கூடிய வளாகங்கள் வாயிலாக பஹ்லவி காலத்தின் ஆடம்பரமான வாழ்க்கையை இது பிரதிபலிக்கின்றது. இதுதவிர ஈரான் தேசிய அருங்காட்சியகம் பண்டைய பாரசீக நாகரிகத்தின் வரலாற்று பொக்கிஷங்களான தொல்பொருட்கள், சிற்பங்கள் மற்றும் கலைப் பொருட்களை காட்சிப்படுத்துகிறது என்றால், தெஹ்ரான் நவீன கலை அருங்காட்சியகம் கலை ஆர்வலர்களின் விருப்பமான இடமாக திகழ்கிறது. இங்கு வான் கோக், பிக்காசோ போன்ற உலகப் புகழ்பெற்ற கலைஞர்களின் அரிய ஓவியங்கள் மற்றும் ஈரானிய நவீன ஓவியர்களின் சிறந்த படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.


    தெஹ்ரானில் உள்ள சதாபாத் அரண்மனை மற்றும் ஆசாதி கோபுரம்

இவைகள் தவிர நவீன ஈரானின் கலை பொக்கிஷமாக திகழும் ஆசாதி கோபுரம், 1971-ஆம் ஆண்டில் பாரசீக நாகரிகத்தின் 2,500-வது ஆண்டு கொண்டாட்டத்தின் நினைவாக கட்டப்பட்ட அற்புதமாகும். சாசானிய, அகமேனிய மற்றும் இஸ்லாமிய கட்டிடக்கலைகளின் அற்புதமான சங்கமத்தை இதில் காணலாம். இந்த கோபுரம் ஈரானின் சுதந்திரத்தையும், தேசிய பெருமையையும் பறைசாற்றுகிறது. அதேபோல் இன்றைய நவீனத்துவத்தின் மற்றொரு அடையாளமாக திகழும் மிலாட் கோபுரம் (435 மீட்டர்) உலகின் மிக உயரமான தொலைத்தொடர்பு கோபுரங்களில் ஒன்றாகும். இங்கிருந்து தெஹ்ரான் நகரத்தை வானுயரக் கண்ணோட்டமாக காணலாம். சுழலும் உணவகம், கண்காணிப்பு மேடைகள் மற்றும் ஒரு கலைக்கூடத்தை உள்ளடக்கிய இது, நகரின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக திகழ்கிறது. மேலும் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தெஹ்ரான் பெரிய சந்தை, நகரத்தின் வர்த்தக மற்றும் கலாச்சார இதயம் என்றே சொல்லலாம். இங்கு பட்டுபொருட்கள், மசாலாப் பொருட்கள், தங்கம், வெள்ளி நகைகள், கையால் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் ஈரானிய கைவினைப் பொருட்கள் என அனைத்தும் கிடைக்கும். இதிலிருந்து சற்று விலகி நகரத்தின் பரபரப்பில் இருந்து ஓய்வெடுக்க விரும்புவோருக்கு தர்பந்த் மற்றும் தோச்சால் மலைத்தொடர்கள் சிறந்த இடமாகும். தர்பந்த் என்பது அல்போர்ஸ் மலை அடிவாரத்தில் உள்ள ஒரு அழகிய கிராமம் ஆகும். இங்கு அருவிகள், உணவகங்கள் மற்றும் மலையேற்றப் பாதைகள் போன்ற பல இடங்கள் உள்ளன. அதேபோல் தோச்சால் மலைப்பகுதியில் ஒரு பிரபலமான பனிச்சறுக்கு நிலையம் உள்ளது, இது குளிர்காலத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த அனுபவத்தை தரும். இங்கு கேபிள் கார் சவாரிகள் மூலம் மலையின் உச்சியில் இருந்து நகரத்தின் அழகிய காட்சிகளை ரசிக்கலாம்.

தனித்துவ உணவு

தெஹ்ரானின் உணவுப் பழக்கவழக்கங்கள், பாரசீகப் பாரம்பரிய உணவுகளை நகரச் சூழலுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்து, ஒவ்வொரு உணவையும் வித்தியாசமான சுவையில் வழங்குகிறது. இங்கு எத்தனையோ பாரம்பரிய உணவுகள் இருந்தாலும், ஈரானின் தேசிய உணவான செலோ கபாப் தனித்துவமான ஒன்றாகும். ஊதப்பூ அரிசி, நெய், வதக்கிய தக்காளி மற்றும் புளிப்பான குழம்புடன் பரிமாறப்படும் கோழி அல்லது ஆட்டிறைச்சி கபாப் ஆன இது ஈரானியர்களின் உணவோடு பிரிக்க முடியாத ஒன்றாக திகழ்கிறது. அதேபோல் சம்பா அரிசி, கோழி அல்லது ஆட்டிறைச்சி மற்றும் தயிர் ஆகியவற்றுடன் அடுக்காக அடுப்பில் வறுக்கப்பட்டு, ஒரு ரசமான உணவாக பரிமாறப்படும் தஹ்சின் உணவு உள்ளூர் மக்களிடையே மிகவும் பிரபலம். இதன் மிருதுவான வெளி அடுக்கு மற்றும் தனித்துவமான சுவை இவ்வுணவிற்கென தனித்த அடையாளத்தை கொடுக்கிறது. குழம்பு வகைகளில் பெசென்ஜான் எனும் வித்யாசமான கோழிக் குழம்பு, பாதாம், மாதுளைப் பாகு மற்றும் மசாலாப் பொருட்களுடன் தயாரிக்கப்படுகிறது. இது பொதுவாக சிறப்பு நிகழ்வுகளிலும், விருந்துகளிலும் பரிமாறப்படுகிறது. இதன் தனித்துவமான இனிப்பு மற்றும் புளிப்பு சுவை அனைவரையும் கவரும் வகையில் இருக்கும்.


ஈரானின் தேசிய உணவான செலோ கபாப் மற்றும் ஆஷ் ரெஷ்டே சூப்

சூப் வகைகளை பொறுத்தவரை இறைச்சி, கொண்டைக்கடலை, உருளைக்கிழங்கு, தக்காளி மற்றும் பல்வேறு மசாலாப் பொருட்களுடன் தயாரிக்கப்படும் திசி ஒரு பழமையான மற்றும் சத்தான சூப் ஆகும். அதேபோல் மூங்கில் நூடுல்ஸ், கீரை, பீன்ஸ், வெங்காய வதக்கல் மற்றும் புளித்த தயிர் கலவையுடன் தயாரிக்கப்படும் ஆஷ் ரெஷ்டே சூப், குளிர்காலத்திற்கான சிறந்த உணவாகும். இப்படி கலாச்சாரத்தில் மட்டும் அல்ல, உணவிலும் வித்யாசமான காம்பினேஷனில் தயாரிக்கப்படும் பாரசீக உணவின் தனித்துவத்தை உலகிற்கு வெளிக்காட்டி வரும் தெஹ்ரான் ஒரு நகரம் மட்டுமல்ல. அது ஒரு நிலத்தின் அழகும், எதிர்பாராத மரபும், ஆழமான வரலாறும், சுவையான உணவுகளும், கலாச்சார கலவைகளும் நிறைந்த உயிருள்ள வாழ்வியல் ஆகும். இத்தகைய அழகிய வரலாற்று மற்றும் கலாச்சார செழுமை மிக்க பூமியில் இன்று போர் மேகங்கள் சூழ்ந்திருந்தாலும், விரைவில் அமைதியும் நல்லிணக்கமும் பிறக்க நாமும் வேண்டுவோம்.

Tags:    

மேலும் செய்திகள்