திண்டுக்கல்னா பிரியாணி, பூட்டு மட்டுமா? இன்னும் எவ்வளவோ இருக்கு!

திண்டுக்கல், தமிழகத்தின் மையத்தில் அமைந்திருக்கும் இந்த மாவட்டம், சுவைமிகு உணவுகளுக்கு மட்டுமல்லாமல், வரலாறு, இயற்கை மற்றும் ஆன்மீகத்தின் அற்புத சங்கமமாகவும் விளங்குகிறது.;

Update:2025-05-13 00:00 IST
Click the Play button to listen to article

திண்டுக்கல், தமிழகத்தின் மையத்தில் அமைந்திருக்கும் இந்த மாவட்டம், சுவைமிகு உணவுகளுக்கு மட்டுமல்லாமல், வரலாறு, இயற்கை மற்றும் ஆன்மிகத்தின் அற்புத சங்கமமாகவும் விளங்குகிறது. இம்மாவட்டத்தை பொறுத்தவரை கோடைக்காலம் என்றாலே பலரும் குளிர்ச்சி நிறைந்த கொடைக்கானலை நினைவுகூர்வது இயல்பானதே. ஆனால், திண்டுக்கல் அதைத் தாண்டியும், கம்பீரமான பழமையான கோட்டைகள், பூத்துக்குலுங்கும் மலர்கள், செழித்த வயல்கள், வானை முட்டும் வண்ணமயமான கோவில் கோபுரங்கள், ஆர்ப்பரித்துக் கொட்டும் குளிர்ச்சியான அருவிகள் மற்றும் இப்பகுதிக்கே உரித்தான சுவையான மண் சார்ந்த உணவுகள் என எண்ணற்ற தனித்துவமான சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இத்தகைய பல்வேறு சிறப்புகளால் திண்டுக்கல் மாவட்டம் ஒரு மயக்கும் உலகமாக நம்மை ஈர்த்து வரும் நிலையில், இந்த மாவட்டத்தின் முக்கியமான மற்றும் தனித்துவமான அம்சங்களை நாம் இங்கே விரிவாகக் காண்போம்.

காலத்தால் அழியாத வீரம்

திண்டுக்கல் மாநகரின் மத்தியில் வானுயர எழுந்து நிற்கும் பாறைக்கோட்டை, இப்பகுதியின் வரலாற்றுப் பெருமையை பறைசாற்றும் அழியாதச் சின்னமாகத் திகழ்கிறது. சுமார் 280 அடி உயரத்தில் அமைந்திருக்கும் இக்கோட்டை, 17ஆம் நூற்றாண்டில் மதுரை நாயக்க மன்னர்களின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டதாகும். காலப்போக்கில் இக்கோட்டையின் முக்கியத்துவத்தை உணர்ந்த மைசூர் மன்னர் ஹைதர் அலி, இதனை ஒரு வலிமையான இராணுவத் தளமாக மாற்றினார். ஆங்கிலேயர்களுக்கும் திப்பு சுல்தானுக்கும் இடையே நடைபெற்ற கடுமையான போர்களில் இக்கோட்டை முக்கியப் பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது. பல்வேறுகட்டப் போராட்டங்களுக்குப் பின்னர், 1790ஆம் ஆண்டு இக்கோட்டை ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.


திண்டுக்கல் பாறைக்கோட்டை - அங்குள்ள பீரங்கி

இன்று இக்கோட்டையில் சிதைந்த நிலையில் காணப்படும் பழமையான மண்டபங்கள், உறுதியான கோட்டைச் சுவர்கள் மற்றும் துருப்பிடித்த பீரங்கிகள் என ஒவ்வொன்றும் கடந்த கால போர்களின் மௌன சாட்சிகளாக நம் கண்முன் காட்சி அளிக்கின்றன. குறிப்பாக, மாலை வேளையில் சூரியனின் கதிர்கள் கோட்டையின் மீது விழுந்து நீண்ட நிழல்களை உருவாக்கும் காட்சி, அக்காலத்திய போர்க்களத்தின் வீரத்தையும், அதன் வரலாற்றையும் நம் மனக்கண்ணில் ஓட செய்கிறது. திண்டுக்கல்லுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் தவறாமல் பார்வையிட வேண்டிய முக்கியமான இடங்களில் ஒன்றாகத் திகழும் இக்கோட்டையின் உச்சியில் இருந்து திண்டுக்கல் நகரின் அழகிய காட்சியைக் கண்டு ரசிப்பது கண்கொள்ளாக் காட்சியாகும்.

பக்தி பொங்கும் பாரம்பரிய பூமி

திண்டுக்கல் கோட்டையை தாண்டி பயணித்தால், வரலாற்றுச் சுவடுகளும், கலாச்சாரப் பெருமைகளும் நம்மை வரவேற்கக் காத்திருக்கின்றன. திண்டுக்கல்லுக்கு மிக அருகாமையில் உள்ள சின்னாளப்பட்டி, உலகப் புகழ்பெற்ற கைத்தறி ஆடைகளின் தாயகமாக திகழ்கிறது. இங்குள்ள திறமையான நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவாகும் பட்டு மற்றும் பருத்தி ஆடைகள் நம்மை வியக்க வைக்கின்றன. இங்கு நாம் அழகான நினைவுப் பரிசுகளை வாங்கிச் செல்வதுடன், நெசவுத் தொழிலின் நுணுக்கங்களையும் அறிந்து கொள்ள முடியும். இதேபோல் கைவினைத்திறன் மிக்க பூட்டுகளுக்குப் பெயர் பெற்ற திண்டுக்கல்,  "பூட்டு நகரம்" என்றே அழைக்கப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் கைவினைப் பூட்டுகள் பல நூற்றாண்டுகள் பழமையானவை. இந்த பூட்டுகள் அவற்றின் தரம், நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் பாதுகாப்புக்காக புகழ்பெற்றவை. இங்குள்ள பூட்டுகளின் தனித்தன்மை என்னவென்றால், அவை கையால் உருவாக்கப்பட்டவை மற்றும் ஒவ்வொரு பூட்டும் தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டிருக்கும்.

இப்படி நெசவு, பூட்டு என பாரம்பரியம் மிக்க தொழில்களுக்கு மட்டுமல்லாமல் திண்டுக்கல் மாவட்டம் ஆன்மிகத் தேடல் கொண்டவர்களுக்கும், வரலாற்றுச் சுவடுகளை விரும்புபவர்களுக்கும், கலை ஆர்வலர்களுக்கும் ஒருங்கே விருந்தளிக்கும் அற்புத பூமியாகவும் திகழ்கிறது. அதில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதன்மையான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் இப்பகுதிக்கு பெருமை சேர்க்கும் பொக்கிஷமாகும். பழனி மலையில் சிரமமான கருங்கல் படிகளில் மனமுருகி ஏறிச் செல்லும் பக்தர்களின் பக்திப் பரவசம் காண்போரை மெய்சிலிர்க்க வைக்ககிறது. விண்ணை முட்டும் தங்கக் கோபுரம் கண்களுக்கு விருந்தளிக்கும் பேரழகுக் காவியமாக மட்டுமல்லாமல், பஞ்சாமிர்தத்தின் தித்திப்பும், ஆண்டவனின் அருளும் பக்தர்களின் உள்ளத்தை நிரப்பி அமைதியளிக்கிறது.


திண்டுக்கல்லின் ஆன்மிகத்தலங்களான பழனி மற்றும் புனித ஜோசப் தேவாலயம்

பழனி மலை மட்டுமல்லாது, தடிக்கொம்பு பெருமாள் கோயில் தமிழர்களின் கலைநுட்பத்தின் உன்னத வெளிப்பாடாக திகழும் சிற்பங்களையும், தொன்மையான மரபுகளையும் கொண்டு பக்தர்களை வசீகரிக்கிறது. பின் திண்டுக்கல் நகரின் காவல் தெய்வமான கோட்டை மாரியம்மன் கோயில் தனது நீண்ட நெடிய வரலாற்றையும், தனித்துவமான கலை சிறப்பையும் பறைசாற்றுகிறது. இவைகள் தவிர ராணி மங்கம்மாள் கட்டிய அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோயில், அபிராமி அம்மன் கோயில் என ஒவ்வொரு திருத்தலமும் பக்திக்கும், கலைக்கும் அழியாத சாட்சியாக விளங்குகின்றன. இவற்றையெல்லாம் தாண்டி திண்டுக்கல் மாவட்டம் மத நல்லிணக்கத்துக்கும் சிறந்த உதாரணமாக திகழ்கிறது. பேகம்பூரில் கம்பீரமாக உயர்ந்து நிற்கும் பெரிய மசூதி ஹைதர் அலியின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட வரலாற்று சின்னமாகும். அதேபோல் நூற்றாண்டுகளைக் கடந்த புனித ஜோசப் தேவாலயம் இப்பகுதியின் ரோமன் கத்தோலிக்கர்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக திகழ்ந்து தனித்துவமான கட்டிடக்கலையை வெளிப்படுத்துகிறது. இந்த ஆலயங்களின் அமைதியும், தெய்வீக அதிர்வும் பக்தர்களுக்கு மன அமைதியையும், சந்தோஷத்தையும் வழங்குவதோடு, திண்டுக்கல் மண்ணின் ஆன்மிகச் செழுமையும் உலகிற்கு பறைசாற்றுகின்றன.

குளிர்ச்சி தரும் மலைகளின் அழகு

வரலாற்றுச் சிறப்பும், ஆன்மிகப் பொலிவும் ஒருங்கே அமைந்த திண்டுக்கல் மாவட்டம், சுற்றுலா பயணிகளின் மனதை கொள்ளை கொள்ளும் இயற்கை எழில் மிகுந்த பூமியாகவும் திகழ்கிறது. ‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானல் முதல் அதிகம் அறியப்படாத சிறுமலை வரை, ஒவ்வொருவரின் ரசனைக்கும் ஏற்ற இடங்கள் இங்கு ஏராளம். பசுமையான மலைகள், அமைதியான ஏரிகள், ரம்மியமான கிராமங்கள் என திண்டுக்கல் மாவட்டம் இயற்கை பொக்கிஷமாக விளங்குகிறது. பைன் மரக்காடுகளின் கம்பீரமும், வெள்ளி நீர்வீழ்ச்சியின் குளுமையான தூறலும், அமைதியான பேரிஜம் ஏரியின் அழகும் கொடைக்கானலுக்கு தனிச்சிறப்பை சேர்க்கின்றன. இது தவிர படகு சவாரி, சைக்கிள் ஓட்டுதல், மலையேற்றம் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களுடன் நட்சத்திர ஏரி, வெள்ளி நீர்வீழ்ச்சி, பியர் ஷோலா நீர்வீழ்ச்சி, குறிஞ்சி ஆண்டவர் கோயில் போன்ற இடங்கள் இங்கு அவசியம் காண வேண்டியவை.


வெள்ளி நீர்வீழ்ச்சி மற்றும் காமராஜர் சாகர் ஏறி 

அதேபோல், அமைதியை விரும்பும் பயணிகளுக்கு சிறுமலை ஒரு வரப்பிரசாதம் எனலாம். இங்கு இருக்கும் 18 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட சாலையில் பயணிப்பதே ஒரு புதுமையான அனுபவமாகும். சஞ்சீவினி மலை, படகு சவாரி செய்யக்கூடிய செயற்கை ஏரி, வெள்ளிமலை முருகன் கோயில் ஆகியவை சிறுமலையின் முக்கிய அடையாளங்களாகும். இதுமட்டுமின்றி, வாழை மற்றும் தென்னை மரங்கள் சூழ்ந்த காமராஜர் சாகர் ஏரி, குடும்பத்துடன் பொழுதை கழிக்கவும், பறவைகளின் அழகை ரசிக்கவும் சிறந்த இடமாக விளங்குகிறது. அதேபோல் பழனி மலைத்தொடரில் அமைந்துள்ள பூம்பாறை கிராமத்தின் படிக்கட்டு போன்ற நில அமைப்பும், அமைதியான சூழலும் காண்போரை மெய்மறக்கச் செய்யும் என்றால், வத்தலகுண்டு அருகே ஆர்ப்பரிக்கும் குண்டாறு அருவியோ பருவமழையின் போது கண்கொள்ளாக் காட்சியாக காட்சியளிக்கிறது. இவை தவிர திண்டுக்கல் நகருக்கு அருகில் உள்ள பேகம்பூர் பெரிய பாறை சூரிய அஸ்தமனத்தின் பேரழகை ரசிக்க ஏற்ற இடமாக உள்ளது. இத்தகைய இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள் மட்டுமல்லாமல், இன்னும் பல அழகான மற்றும் அமைதியான சுற்றுலாத் தலங்கள் திண்டுக்கல் மாவட்டத்தை சுற்றியுள்ளன என்பது நாம் தெரிந்து கொள்ளவேண்டிய ஒன்று.

சுவைகளின் ராஜ்ஜியம் திண்டுக்கல்

திண்டுக்கல் என்றாலே நாவில் நீர் ஊற வைக்கும் பிரியாணிதான் முதலில் நினைவுக்கு வரும். ஆனால், இந்த ஊர் பிரியாணியோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. அதன் உணவுப் பாரம்பரியம் மிகவும் வளமானது. திண்டுக்கல்லின் நிலவியல் கூறுகளும், கலாச்சாரமும் இணைந்து இங்கு பல தனித்துவமான சுவை மிகுந்த உணவுகளை உருவாக்கியுள்ளன. உதாரணமாக, கரடுமுரடான மேற்புறமும், பஞ்சுபோன்ற உட்புறமும் கொண்ட 'கல் தோசை', காரமான சட்னி மற்றும் சாம்பாருடன் காலை உணவுக்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கிறது. அதேபோல், கிராமப்புறங்களில் கிடைக்கும் 'ஆட்டுக்கால் பாயா' மிதமான மசாலாக்களுடன் நீண்ட நேரம் சமைக்கப்பட்டு, இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும். இத்தகைய காரமான உணவுகளுக்கு பிறகு, திண்டுக்கல்லின் 'பால்கோவா' இனிப்பு விரும்பிகளுக்கு ஒரு சொர்க்கம் என்றே சொல்லலாம். பால் மற்றும் சர்க்கரை சேர்த்து செய்யப்படும் இந்த இனிப்பு வாயில் போட்டதும் கரைந்துவிடும்.


திண்டுக்கல் ஃபேமஸ் ஆட்டுக்கால் பாயா மற்றும் பரபரப்பான காய்கறி சந்தை 

இதுதவிர நறுமணமிக்க மசாலாப் பொருட்களின் ராஜ்ஜியமாகவும் திண்டுக்கல் மாவட்டம் திகழ்கிறது. இங்குள்ள சந்தைகளில் விதவிதமான மசாலா பொடிகள் நம்மை சுண்டி இழுக்கின்றன. தரமான மிளகாய், மஞ்சள், கொத்தமல்லி போன்ற மசாலாக்கள் வீட்டு சமையலுக்கு ஒரு தனி சுவையை சேர்க்கின்றன. மேலும், திண்டுக்கல் சந்தைகள் வெறும் வணிக இடங்கள் மட்டுமல்ல; அவை ஒரு கலாச்சாரக் களமாகவும் விளங்குகின்றன. இங்குள்ள வண்ணமயமான காய்கறிகளும், மசாலாப் பொருட்களின் நறுமணமும் நம் உணர்வுகளை தூண்டுவதுடன், நமது பாரம்பரியத்தையும் நினைவுபடுத்துகின்றன. இவ்வாறு திண்டுக்கல் மாவட்டம் வெறும் உணவுக்கு மட்டும் பிரபலம் அல்ல. வரலாறு, கலை, பண்பாடு, அழகு எனப் பன்முகத்தன்மை கொண்ட சிறந்த சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது. அமைதியான சூழலில் ஆன்மிகம், வரலாறு, கலை கைவினை விரும்பிகளுக்கு இது மிகச் சிறந்த தேர்வாக அமையும்.

Tags:    

மேலும் செய்திகள்