பூமியின் மிகப்பெரிய நதித்தீவு... இந்தியாவின் மஜுலி!
மஜுலி, இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில், பிரம்மபுத்திரா நதியின் நடுவே அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய நதி தீவு.;
மஜுலி, இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில், பிரம்மபுத்திரா நதியின் நடுவே அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய நதி தீவு. பறவைகளின் புகலிடமாகவும், இந்தியாவின் பழமையான வைஷ்ணவ கலாசாரத்தின் மையமாகவும் திகழும் இத்தீவு, இத்தாலியின் வெனிஸ் நகரத்தை விட அதிகப் படகுகளைக் கொண்டுள்ளது. நவீன உலகின் ஆரவாரமில்லாமல், அமைதியான வாழ்க்கையை அனுபவிக்க விரும்புபவர்களுக்கு இது ஒரு சொர்க்கம். இருப்பினும், காலநிலை மாற்றத்தாலும், நதி அரிப்பாலும் கடந்த 200 ஆண்டுகளில் அதன் பரப்பளவில் நான்கில் ஒரு பங்கு சுருங்கிவிட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வேகமாக அழிந்து வரும் இந்த அழகான இடத்தின் தனித்துவமான வரலாறு, கலாசாரம், சுற்றுலா அம்சங்கள் மற்றும் அதன் எதிர்காலம் குறித்து இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்.
வரலாறும் புவியியல் தனித்தன்மையும்
மஜுலி தீவின் வரலாறு 15ஆம் நூற்றாண்டிலிருந்து ஆவணப்படுத்தப்பட்டிருந்தாலும், 7ஆம் நூற்றாண்டிலேயே இங்கு விவசாயக் குடியிருப்புகள் இருந்ததற்கான தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 16ஆம் நூற்றாண்டில், இது சுடியா ராஜ்ஜியத்தின் தலைநகராக விளங்கியது. அப்போது இந்தத் தீவு ரத்னாபூர் என்று அழைக்கப்பட்டது. 1750ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஒரு பெரிய வெள்ளப்பெருக்கு, பழைய ரத்னாபூர் நகரத்தை அழித்து, தற்போதைய மஜுலி நகரத்தை உருவாக்கியது. இந்த வெள்ளப்பெருக்கு, தீவின் புவியியல் அமைப்பையே முற்றிலுமாக மாற்றி அமைத்து, நிலத்தின் அளவையே சுருக்கியது. ஒரு காலத்தில் சுமார் 1440 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான பரப்பளவை கொண்டிருந்த மஜுலி, பிரம்மபுத்திரா ஆற்றின் தொடர்ச்சியான மண் அரிப்பினால் தற்போது வெறும் 352 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் மட்டுமே எஞ்சியுள்ளது. இந்த மண் அரிப்பு இன்றும் தொடர்வதால், மஜுலி ஒரு புவியியல் அதிசயமாய் இருப்பதோடு, அழிவின் விளிம்பில் இருக்கும் ஒரு அரிய கலாசாரப் பொக்கிஷமாகவும் பார்க்கப்படுகிறது.
மஜுலி தீவு மற்றும் மிசிங் பழங்குடி மக்கள்
மஜுலித் தீவில் மிசிங் பழங்குடி மக்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். இவர்களைத் தவிர, தேவரி மற்றும் சோனோவால் கச்சாரி போன்ற பழங்குடி இனத்தவரும் இங்கு வாழ்கின்றனர். இந்த மக்கள் அனைவரும் தென்கிழக்கு ஆசிய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தங்கள் பாரம்பரியங்களையும் பழக்கவழக்கங்களையும் மிகுந்த ஆர்வத்துடன் பின்பற்றுகிறார்கள். இவர்களின் முதன்மை மொழி மிசிங் ஆக இருந்தாலும், அஸ்ஸாமி மொழியும் இங்கு பரவலாகப் பேசப்படுகிறது. மேலும் மஜுலி அதன் தனித்துவமான கலாசார அடையாளத்தின் காரணமாக, அஸ்ஸாமின் கலாச்சார தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் இதன் தனித்தன்மை, இந்தியாவின் மற்ற பகுதிகளை விட இதை வித்தியாசப்படுத்துகிறது என்பதால்தான்.
சத்திரங்களும் கைவினைப் படைப்புகளும்
மஜுலி தீவில் உள்ள தனித்துவமான மடாலய அமைப்புகள் சத்திரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஒரு காலத்தில் 65 சத்திரங்கள் இங்கு இருந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், பிரம்மபுத்திரா ஆற்றின் வெள்ளம் மற்றும் மண் அரிப்பின் காரணமாக தற்போது 22 சத்திரங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. ஒவ்வொரு சத்திரத்திற்கும் சத்திராதிகாரி என்றொரு தலைவர் இருப்பார். இந்த சத்திரங்கள், அஸ்ஸாமின் கலை, கலாசாரம் மற்றும் ஆன்மிக வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றி வருகின்றன. இவற்றுள், சாமகுரி சத்திரம் முகமூடி கலைக்காக உலகப் புகழ் பெற்றுள்ளது. பீமன், நரசிம்மர், ராவணன், நரகாசுரன் போன்ற புராணக் கதாபாத்திரங்களின் முகமூடிகள் இங்கு நுட்பமாக உருவாக்கப்படுகின்றன. மூங்கில், மண், பசுஞ்சாணம், வைக்கோல் போன்ற இயற்கை பொருட்களைக் கொண்டு இவை தயாரிக்கப்படுவது இவற்றின் தனிச்சிறப்பு ஆகும்.
முகமூடி அணிந்த கலைஞர்கள் மற்றும் கமலாபாரி சத்திரம்
இது போலவே மஜுலியின் பிற முக்கியமான சத்திரங்களும் அசாமின் கலை மற்றும் கலாசார பாரம்பரியத்தை இன்னும் உயிர்ப்புடன் வைத்துள்ளன. அவற்றில் கமலாபாரி சத்திரம், கலை, இலக்கியம் மற்றும் கலாசாரத்தின் மையமாகத் திகழ்கிறது. இங்கு அஸ்ஸாமிய பாரம்பரியத்தின் பல கூறுகளை நம்மால் காண முடியும். குறிப்பாக இங்கு நடைபெறும் பாரம்பரிய அஸ்ஸாமிய கலை நிகழ்ச்சிகள், பார்வையாளர்களை வெகுவாக கவரும். அதேபோல் தெற்கு பத் சத்திரம், 1584ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாகும். இது மஜுலியின் கலாசார அடையாளங்களில் ஒன்றாக பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது. மேலும் ஔனியாதி சத்திரத்தின் நுழைவாயிலில் உள்ள சிங்க சிலைகள், காண்போரைக் கவரும் வகையில் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ள அதேவேளையில், இங்குள்ள சத்திரிய நடனம் மற்றும் பாடல்கள் போன்ற பாரம்பரிய கலை வடிவங்கள், அஸ்ஸாமின் கலாசாரச் செழுமையை உலகிற்கு எடுத்துரைக்கின்றன. இப்படி மஜுலியின் சத்திரங்கள் ஆன்மிக மையங்களாக மட்டுமல்லாமல், கலை, இலக்கியம் மற்றும் பாரம்பரியத்தின் களஞ்சியங்களாகவும் திகழ்கின்றன.
இயற்கையின் மடியில் ஒரு தனித்துவமான பயணம்
பிரம்மபுத்திரா நதியின் நடுவே அமைந்துள்ள மஜுலி தீவு, இயற்கை விரும்பிகளுக்கும், தனித்துவமான கலாசாரத்தை அனுபவிக்க விரும்புபவர்களுக்கும் ஓர் அருமையான சுற்றுலாத் தலமாகும். ஜோர்காட் நகரத்திலிருந்து படகுப் பயணம் மூலமே இந்த தீவிற்கு நம்மால் செல்ல முடியும் என்பதோடு, இத்தாலியின் வெனிஸ் நகரத்தை விட இங்கு அதிகப் படகுகள் இயக்கப்படுவதால், மஜுலி 'படகுகளின் நகரம்' என்றும் அழைக்கப்படுகிறது. குறிப்பாக, மழைக்காலங்களில் ஒரு கிராமத்திலிருந்து மற்றொரு கிராமத்திற்கு செல்ல படகுகளே ஒரே போக்குவரத்துச் சாதனமாக உள்ளன. எனவே இங்குள்ள வண்ணமயமான படகுகளில் பயணிப்பது சுற்றுலா வருபவர்களுக்கு ஓர் அலாதியான அனுபவத்தைத் தரும். மேலும், உலகெங்கிலும் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த பறவை இனங்கள் இங்கு வருவதால், இது பறவை விரும்பிகளுக்கும் ஒரு சொர்க்க நகரமாக திகழ்கிறது. அதுபோலவே மஜுலி மக்களின் வாழ்க்கை முறையும் அவர்களின் வீடுகளும் பார்க்க மிகவும் தனித்துவமானவையாக தெரியும். ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளப்பெருக்கு மற்றும் கனமழையால் வீடுகள் சேதமடைவதால், அவர்கள் மூங்கில் மற்றும் மண் கொண்டு வீடுகளைக் கட்டியும், பழுது பார்த்தும் வாழ்கின்றனர். இந்த மூங்கில் மற்றும் மண் வீடுகள் அவர்களின் பாரம்பரிய வாழ்க்கை முறையை பிரதிபலிப்பதுடன், அவர்களின் வாழ்க்கை சூழலுக்கு ஏற்ப அமைக்கப்பட்டவையாகவும் உள்ளன.
'படகுகளின் நகரம்' மஜூலி
இது தவிர மஜுலி, நெல் உற்பத்திக்கு பெயர் பெற்ற நகரம் என்பதால், இங்குள்ள பரந்து விரிந்த பச்சை நிற நெல் வயல்வெளிகள் கண்களுக்கு விருந்தளிக்கும். அதேபோல் பிரம்மபுத்திரா நதியின் நடுவே அழகிய சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம் காண்பதும் மனதிற்கு புத்துணர்ச்சியையும் அமைதியையும் தரும் ஒரு சொர்க்க அனுபவமாகும். இப்படிப்பட்ட மஜுலி தீவின் அழகை முழுமையாக ரசிக்க வேண்டும் என்றால் மிதிவண்டிப் பயணமே ஒரு சிறந்த வழியாகும். இங்குள்ள பல சுற்றுலா குழுக்கள் மிதிவண்டிப் பயணங்களை ஏற்பாடு செய்து தருவதோடு, சிறந்த வழிகாட்டுதல்களையும் கொடுத்து வருகின்றன. இந்த மிதிவண்டியில் தீவை சுற்றி வரும்போது அதன் இயற்கை அழகையும், மக்களின் எளிமையான வாழ்க்கையையும் நெருக்கமாக நம்மால் பார்த்து உணர முடியும். மேலும் தங்கும் வசதியை பொறுத்தவரை மஜுலியில் பலவிதமான விடுதிகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை இயற்கையான சூழலில் அமைந்துள்ளதால் நிச்சயம் நீங்கள் தனித்துவமான அனுபவத்தை பெறலாம்.
நெல் உற்பத்திக்கு பெயர் பெற்ற மஜுலி நகரம்
இப்படி மஜுலி வெறும் ஒரு சுற்றுலாத் தலமாக மட்டும் இல்லாமல், இயற்கையையும் மனித வாழ்க்கையையும் இணைக்கும் ஒரு தனித்துவமான உதாரணமாக விளங்குகிறது. இங்குள்ள மக்களின் எளிமையான, நேர்மையான வாழ்க்கை உலகப் புகழ் பெற்றது. அவர்கள் தொலைபேசி, தொலைக்காட்சி போன்ற நவீன சாதனங்களை விட, குடும்பத்தினருடனும், அண்டை வீட்டாரோடும் பேசுவதையே பெரிதும் விரும்புகிறார்கள். ஆனால், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் வெள்ளப்பெருக்கு மற்றும் நதி அரிப்பு மஜுலியின் எதிர்காலத்திற்கு ஒரு பெரிய சவாலாக உள்ளது. இந்த சவால்களை எதிர்கொள்ள, அரசு மஜுலியின் வளர்ச்சிக்காகப் பல திட்டங்களைத் தொடங்கியுள்ளது. ஆனாலும், இந்தத் தீவு அழிவின் விளிம்பில் இருப்பது ஒரு கசப்பான உண்மை. இப்படிப்பட்ட தனித்துவமான இந்த அழகிய தீவை நேரில் காண நீங்கள் விரும்பினால், மழைக்காலத்தை தவிர்த்து மற்ற காலங்களில் உங்கள் பயணத்தை திட்டமிடுவது சிறந்த தேர்வாக இருக்கும். இது வெறும் ஒரு சுற்றுலாப் பயணம் அல்ல, ஒரு பொக்கிஷத்தை காணும் சிறந்த அனுபவமாகும்.