தந்தூரி, டிக்கா, தாலி என பாரம்பரிய பஞ்சாபி உணவுகளுக்கு பெயர்பெற்ற நகரம் "மொஹாலி"!

பஞ்சாப் மாநிலத்தில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் மொஹாலி முக்கிய இடத்தைப் பிடிக்கிறது.;

Update:2025-08-26 00:00 IST
Click the Play button to listen to article

பஞ்சாப் மாநிலத்தில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் மொஹாலி முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. நவீன உள்கட்டமைப்பு மற்றும் வளமான வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட இந்த நகரம், அதன் அழகிய சூழலுக்காக பெயர் பெற்றது. பொதுவாக, மொஹாலி என்றவுடன் பலருக்கும் நினைவுக்கு வருவது இங்குள்ள சர்வதேச தரத்திலான பஞ்சாப் கிரிக்கெட் அசோசியேஷன் ஐ.எஸ். பிந்த்ரா ஸ்டேடியம் தான். சுமார் 26,000 பார்வையாளர்கள் அமரக்கூடிய இந்த மைதானம், எண்ணற்ற சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கும், ஐ.பி.எல். ஆட்டங்களுக்கும் புகழ்பெற்ற இடமாகத் திகழ்கிறது. நகரத்தின் மையத்தில் அமைந்துள்ளதால், கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமன்றி, பொதுமக்களும் எளிதாக இங்கு சென்று பார்வையிடலாம். இத்தகைய கிரிக்கெட் மைதானத்தை தாண்டி, மொஹாலி நகரத்தின் சிறப்புகள், வரலாறு, பார்க்க வேண்டிய இடங்கள் மற்றும் உணவுமுறை குறித்த விரிவான தகவல்களை இங்கே காணலாம்.

மொஹாலியின் வரலாறு

சீக்கியர்களின் பத்தாவது குருவான கோபிந்த் சிங்கின் மூத்த மகன் சாகிப் சாதா அஜித்சிங் நினைவாக சாகிப் சாதா அஜித்சிங் நகர் என்று அழைக்கப்படும் இந்த மொஹாலி, 2006-ஆம் ஆண்டு வரை ரூப்நகர் மாவட்டத்தின் ஒரு பகுதியாகவே இருந்தது. 1966-ஆம் ஆண்டு, பஞ்சாப் மாநிலம் சண்டிகர் நகரம், யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது. மேலும் அது பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய இரு மாநிலங்களுக்கும் தலைநகரானது. அப்போது, சண்டிகருக்கு அருகாமையில் இருந்த மொஹாலி, பல்வேறு மொழி பேசுபவர்களுக்கான பஞ்சாப் மாநிலத்தின் முக்கிய நகரமாக வளர்ச்சி பெற்றது. அதன் காரணமாக, சண்டிகரின் நவீன மற்றும் சிறந்த கட்டமைப்பு அம்சங்கள் இங்கும் காணப்படுகின்றன.


அதிக மக்கள் தொகை கொண்ட மொஹாலி நகரம் 

மொஹாலியில் தற்போது சுமார் 3.3 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இது, பஞ்சாப் மாநிலத்தின் ஆறாவது பெரிய நகரமாகவும், இந்தியாவின் 170-வது அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாகவும் உள்ளது. மக்கள் தொகை அடர்த்தி அதிகமாக இருந்தாலும், இது நன்கு திட்டமிடப்பட்ட நகரம் என்பதால், நகரத்தில் கூட்ட நெரிசல் குறைவாகவே உள்ளது. இங்குள்ள மக்கள் தொகையில் பெரும்பான்மையாக இந்து மற்றும் சீக்கிய மதத்தினர் உள்ளனர். இந்நகரத்தின் கல்வியறிவு விகிதம் 91% ஆகும். இது, நகரின் சிறந்த கல்வித் தரத்தை வெளிப்படுத்துகிறது. மேலும் இந்நகரத்தின் ஆட்சி மொழி பஞ்சாபி என்றாலும், பெரும்பாலான மக்கள் இந்தி மொழியையும் சரளமாக பேசுகின்றனர். தற்போது, மொஹாலி இந்தியாவின் முக்கிய தகவல் தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக மையங்களில் ஒன்றாக வளர்ந்து வருகிறது. இங்கு பல பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், மென்பொருள் நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை நிறுவனங்கள் அமைந்துள்ளன. இது, இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கி, பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகிறது. மேலும், இந்த நகரம் ஒரு முக்கியமான வர்த்தக மையமாகவும் உருவெடுத்துள்ளது.

பார்க்க வேண்டிய இடங்கள்

மொஹாலி, அதன் நவீன அடையாளங்களுடன் சேர்த்து, வரலாறு, ஆன்மிகம், இயற்கை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. இங்குள்ள ஃபதே புர்ஜ், 1710-ஆம் ஆண்டு சீக்கிய தளபதி பாபா பந்தா சிங் பகதூர் முகலாயர்களுக்கு எதிராகப் பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை நினைவு கூறும் வகையில், இந்தியாவின் மிக உயரமான வெற்றி கோபுரங்களில் ஒன்றாக கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. அருகிலுள்ள சாஹிப்சாதா அஜித் சிங் நகர் அருங்காட்சியகம், பஞ்சாபின் வளமான பாரம்பரியம் மற்றும் சுதந்திரப் போராட்ட வரலாற்றை விரிவாக காட்சிப்படுத்துகிறது. மேலும், சீக்கிய அருங்காட்சியகம், சீக்கியர்களின் வீரத்தையும் தியாகங்களையும் ஓவியங்கள் மற்றும் கலைப் பொருட்கள் மூலம் காட்சிப்படுத்துகிறது. இந்த இடங்கள் அனைத்தும் வரலாற்றை விரும்புபவர்களுக்கும் பஞ்சாப்பின் கலாச்சாரத்தை அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கும் சிறந்த அனுபவத்தை அளிக்கின்றன.


சீக்கிய அருங்காட்சியகம் மற்றும் குருத்வாரா

இவைகள் தவிர ஆன்மிக விரும்பிகளுக்கான இடங்களில், குருத்வாரா ஸ்ரீ அம்ப் சாஹிப் மிகவும் குறிப்பிடத்தக்கது. அதன் அமைதியான சூழ்நிலை, தூய்மையான வெள்ளை நிற அமைப்பு மற்றும் அழகிய தோட்டங்களுக்காக இந்த இடம் மிகவும் புகழ்பெற்றது. மேலும், இங்குள்ள ஒரு மாமரம் குளிர்காலத்திலும் பழம் கொடுத்ததாக நம்பப்படுகிறது. இதேபோல், குருத்வாரா நாபா சாஹிப் மற்றொரு முக்கிய புனித தலமாகும். இந்த இடம் ஒன்பதாவது சீக்கிய குருவான ஸ்ரீ குரு தேக் பகதூர் ஜி அவர்களின் தியாகத்துடன் தொடர்புடையது. இந்த இரண்டு புனிதத் தலங்களும் மன அமைதி தேடி வரும் பக்தர்களுக்கு ஒரு உன்னதமான அனுபவத்தை வழங்குவதோடு, மொஹாலியின் ஆன்மிக பாரம்பரியத்தையும் வெளிப்படுத்துகின்றன.

மேலும் இயற்கை அழகு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாகவும் விளங்கும் மொஹாலி, இன்றைய நவீனமயமாக்கலுக்கு ஏற்றவாறு புதுவித அனுபவத்தையும் வழங்கி வருகிறது, அதில் பசுமையான மலைகளுக்கு மத்தியில் அமைந்துள்ள சிஸ்வான் அணை, அமைதியையும் இயற்கையின் அழகையும் தேடுபவர்களுக்கு ஏற்ற இடமாகும். குறிப்பாக, சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தின்போது இங்குள்ள காட்சிகள் மனதை மயக்கும். அதேபோல் ஏற்கனவே கூறியது போல கிரிக்கெட் ரசிகர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடம் என்றால், அது இந்தர்ஜித் சிங் பிந்த்ரா மைதானம்தான். இது இந்தியாவின் முதன்மையான கிரிக்கெட் மைதானங்களில் ஒன்று. இது, பல சர்வதேச மற்றும் உள்நாட்டுப் போட்டிகளை நடத்தியுள்ளது. இதைத் தவிர, மொஹாலியில் உள்ள பல்வேறு ஷாப்பிங் மால்கள் சினிமா தியேட்டர்கள் மற்றும் உணவகங்கள் பயணிகளுக்குப் பலவிதமான பொழுதுபோக்கு அனுபவங்களை வழங்குகின்றன.


சிஸ்வான் அணை மற்றும் இந்தர்ஜித் சிங் பிந்த்ரா மைதானம்

உணவு அனுபவங்கள்

மொஹாலி பஞ்சாபி கலாச்சாரத்தின் சுவையை அதன் உணவுகள் மூலம் முழுமையாக வெளிப்படுத்துகிறது. பாரம்பரிய பஞ்சாபி உணவுகளுக்கு இந்த நகரம் மிகவும் பெயர் பெற்றது. இங்குள்ள பல உணவகங்களும், தெருவோரக் கடைகளும் உள்ளூர் மற்றும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பல்வேறு சுவையான உணவுகளை வழங்குகின்றன. இங்குவரும் பயணிகள் உண்மையான பஞ்சாபி விருந்தின் சுவையை அனுபவிக்கலாம். மேலும், மொஹாலியின் உணவுப் பயணம், ஒவ்வொருவரின் சுவைக்கும் ஏற்ற பல்வேறு வகையான உணவுகளை வழங்குகிறது. குறிப்பாக சைவ மற்றும் அசைவப் பிரியர்களுக்கு இங்கு பலவிதமான விருப்பங்கள் உள்ளன.

மொஹாலியின் பாரம்பரிய உணவு வகைகளில் சில முக்கிய உணவுகள் உள்ளன. இதில் மிகவும் பிரபலமானது 'சரோன் டா சாக்' மற்றும் 'மக்காய் டி ரோட்டி' ஆகும். கடுகு கீரைகளை மென்மையாகச் சமைத்து செய்யப்படும் 'சாக்' என்ற கறி, சோள மாவில் செய்யப்படும் ரொட்டியுடன் சேர்த்துச் சாப்பிடப்படுகிறது. இது பஞ்சாபில் குளிர்காலத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. மேலும், 'பஞ்சாபி தாலி' என்பது ஒரு முழுமையான உணவாகும், இதில் ரொட்டி, சுவையான 'தால் மக்கானி', 'பன்னீர் டிக்கா', 'விதவிதமான காய்கறிகள்' மற்றும் 'லஸ்ஸி' ஆகியவை அடங்கும். இந்த தாலி, ஒரு தட்டில் பலவிதமான பஞ்சாபி சுவைகளை அனுபவிக்க ஒரு சிறந்த வழியாகும்.


மொஹாலியின் புகழ்பெற்ற உணவுகளான சரோன் டா சாக் மற்றும் லஸ்ஸி

அதேபோல் மொஹாலியில் கிடைக்கும் மற்றொரு பிரபலமான பானம் 'லஸ்ஸி' ஆகும். இந்த இனிப்பு அல்லது காரமான மோர் பானம், மொஹாலியில் பல சுவைகளில் கிடைக்கிறது. வெயில் காலத்தில் உடலைக் குளிர்விக்க இது மிகவும் ஏற்றது. மேலும், மொஹாலியின் தெருவோரக் கடைகளில் கிடைக்கும் 'அமிர்தசாரி குல்ச்சா' மிகவும் புகழ்பெற்றது. மசாலா உருளைக்கிழங்கு, வெங்காயம் அல்லது பன்னீர் போன்ற கலவைகளை கொண்டு அடைத்து, நெய்யில் சுடப்பட்டு வழங்கப்படும் இந்த குல்ச்சா, காரமான சுண்டல் கறியுடன் சேர்த்து பரிமாறப்படுகிறது. நீங்களும் இதுபோன்று பலவித சுவைகளையும், புதுமையான அனுபவங்களையும் பெற விரும்பினால், கிரிக்கெட்டோடு சேர்த்து கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி மொஹாலியைச் சுற்றிப் பார்த்து வாருங்கள். அது நிச்சயமாக உங்களைத் திருப்திப்படுத்தும்.

மொஹாலி கூகுள் வரைபடம்

Full View


Tags:    

மேலும் செய்திகள்