“நடிகர் எம்.எஸ். பாஸ்கர் ஒரு மகான்”! - நடிகர் கலைதரன்
பார்க்கிங், மாரீசன் என 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, கிடைக்கும் சீரியல் வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொண்டு தன்னை திரையில் வளர்த்துவரும் நடிகர் கலைதரன் ராணி ஆன்லைனுக்கு அளித்த நேர்காணலை பார்ப்போம்.;
சினிமாவில் நடிக்கவேண்டும் என ஆசைப்பட்டு சொந்த ஊர்களிலிருந்து சென்னை நோக்கி ஓடிவருபவர்கள் ஏராளம். அதில் அனைவரின் கனவும் நிறைவேறுமா என்றால், இல்லை. ஒருசிலரே கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி மேலே வருவர். ஒருசிலருக்கு வாய்ப்புகள் கிடைத்தாலும் சிலகாலத்தில் காணாமல் போய்விடுவார்கள். சிலர் வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும் கடைசிவரை காத்திருப்பார்கள். பிற்காலத்தில்தான் வாய்ப்புகள் கிடைக்கும். அப்படி நீண்ட காலத்திற்கு பின் வாய்ப்பு கிடைத்து, அதனைப் பயன்படுத்தி சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களுள் ஒருவர்தான் கலைதரன். படங்கள் மட்டுமின்றி தொலைக்காட்சி தொடர்களிலும் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை அழகாக பயன்படுத்திக் கொண்டு, ஒரு அங்கீகாரத்தை பெற உழைத்துக் கொண்டிருக்கிறார். ஜுங்கா, பார்க்கிங் என 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது தனது திரைப்பயணம் தொடர்பாக ராணி ஆன்லைனுக்கு அவர் அளித்த நேர்காணலை காணலாம்.
நடிகர் கலைதரன்
சினிமாவிற்குள் வந்தது எப்படி?
நான் கோயம்புத்தூரை சேர்ந்தவன். விவரம் தெரிந்த வயதிலிருந்து சினிமா மீது ஆர்வம் அதிகம். குடும்ப சூழ்நிலைகள் காரணமாக சினிமா வாய்ப்புகள் அமையவில்லை. தெரிந்தவர்கள் யாரும் சினிமாவில் இல்லாததால், குடும்பத்தை செட்டில் செய்துவிட்டு, சென்னைக்கு வந்து ஆறு வருடங்களாக சினிமா வாய்ப்புகளை தேடிவந்தேன். இந்த ஆறு வருடங்களில் பிரபல தனியார் தொலைக்காட்சிகளில் பல சீரியல்களில் நடித்துள்ளேன். தற்போது 50க்கும் மேற்பட்ட படங்களில் பணிபுரிந்து வருகிறேன்.
சினிமாவில் கிடைக்கும் வாழ்வாதாரம் என்ன?
வாழ்வாதாரம் என்று பார்த்தால் வேறு எந்த வேலை வேண்டுமானாலும் பார்க்கலாம். மனதுக்கு பிடித்த வேலை என்று ஒன்று உள்ளது. பணத்தை மையமாக கொண்ட வாழ்க்கை இருக்கிறது. நான் 48 வயதுவரை பணத்திற்காகத்தான் வாழ்ந்துவந்தேன். இருந்தாலும் மனதின் ஒரு ஓரத்தில் சினிமா மீது காதல் இருந்துக்கொண்டே இருந்தது. விவரம் தெரிந்ததில் இருந்து சினிமா மீது ஒரு அலாதியான பார்வை உண்டு. சினிமாவில் இல்லையென்றாலும் ராணி போன்ற சினிமா தொடர்பான புத்தகங்களை படித்துக்கொண்டுதான் இருந்தேன். இறை அருளால் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறேன்.
பார்க்கிங் படத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியாக நடித்துள்ள கலைதரன்
திரைத்துறையில் பாகுபாடு பார்க்கப்படுகிறதா?
எல்லாத் துறைகளிலும் இது இருக்கும். தங்களுக்கு தெரிந்தவர்களை உள்ளே கொண்டுவர வேண்டும் என நினைப்பது தவறில்லை. இந்தப் போட்டிகளை எல்லாம் கடந்துதான் நாம் ஜெயிக்க வேண்டும். அடுத்தடுத்து முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். உண்மையான முயற்சியும், நம்பிக்கையும் ஒருநாள் ஜெயிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
எடுக்கப்பட்ட திரைப்படங்கள், தொடர்கள் வெளிவராமல் இருப்பதற்கு காரணம் என்ன?
எல்லோரும் படத்தை திரையரங்குக்கு கொண்டுவர வேண்டும் என்றுதான் எடுக்கிறார்கள். சிலநேரம் பொருளாதாரம் காரணமாக இருக்கலாம். சிலநேரங்களில் இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் இடையே இருக்கும் ஈகோ காரணமாக இருக்கலாம். நடிகர்களுக்கும் பிரச்சனை இருக்கலாம். ஒவ்வொரு படத்திற்கும் ஒவ்வொரு காரணம் இருக்கிறது. பெரிய விஷயமோ, சின்ன விஷயமோ ஒருசில காரணங்களால் அதை தொடர முடியாமல் போகிறது.
தொடர்களில் திடீரென ஆட்கள் மாற்றப்படுவதற்காக காரணம் என்ன?
இதற்கு இதுதான் காரணம் எனக்கூற முடியாது. பணப்பிரச்சனை, தனிப்பட்ட காரணங்கள், கருத்து வேறுபாடு, நேரமின்மை என பல காரணங்கள் இருக்கும்.
திரைத்துறையில் அட்ஜெஸ்மெண்ட் என்பது இருக்கலாம் - நடிகர் கலைதரன்
நடித்ததில் பிடித்த சீரியல்கள்?
எனக்கு ஒரு நான்கைந்து சீரியல்கள் இருக்கின்றன. முதன்முதலில் காற்றுக்கென்ன வேலி சீரியலில்தான் நடித்தேன். அதன்பின் வித்யா நம்பர் ஒன் என்ற தொடர், மக்களிடம் நன்கு தெரியப்படுத்தியது. அதை கவனித்து நிறையபேர் ஃபோன் செய்து பேசினார்கள். சமீபத்தில் மூன்றுமுடிச்சு என்ற தொடரில் நடித்தேன். அதைப்பார்த்து நிறையபேர் ஃபோன் செய்து சந்தோஷமாக பேசினார்கள். லட்சுமி என்ற தொடரில் நடித்தேன். பெரும்பாலும் நான் உயரமாக இருப்பதால், போலீஸ் கதாபாத்திரத்திற்குத்தான் பயன்படுத்துவார்கள். அதிகப்படியாக நான் இன்ஸ்பெக்டர் கேரக்டர்களில்தான் நடித்திருப்பேன். மாரீசனில் ஜெயிலராக நடித்திருப்பேன். பார்க்கிங்கில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகரியாக நடித்திருப்பேன். அந்தப் படம் இப்போது மூன்று தேசிய விருதுகளை வாங்கியுள்ளது. எம்.எஸ். பாஸ்கர் ஒரு மகான். அவர் நடித்துள்ள படத்தில் நான் துரும்பாக இருக்கிறேன் என்பதில் எனக்கு பெருமையாக உள்ளது. எம்.எஸ். பாஸ்கர் மிகச்சிறந்த திறமைசாலி. காலம் கடந்துதான் இந்த அங்கீகாரம் அவருக்கு கிடைத்துள்ளது எனக்கூற வேண்டும். நிறைய இடங்களில் அவர் தன்னை நிரூபித்துள்ளார்.
திரைத்துறையில் பெண்களுக்குத்தான் அதிகம் முக்கியத்துவமா?
அப்படி எல்லாம் இல்லை. திரைத்துறையில் ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்கள் குறைவாகத்தான் இருப்பார்கள். மேலும் அட்ஜஸ்மெண்ட் என்பதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். எல்லா பெண்களையும் நாம் தவறாக சொல்லமுடியாது. ஒருசிலர் அப்படி இருக்கலாம். அட்ஜஸ்மெண்ட் என்பது எல்லா இடத்திலும் இருக்கும். இது சினிமாத்துறை என்பதால் எளிதில் தெரிகிறது. ஆனால் சினிமாவில் பெண்களுக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும்.
திரைத்துறையில் ஆண்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்னென்ன?
வாய்ப்புதான். வாய்ப்பு அமைவதுதான் கடினம். நிறைய பேருடன் பழகினால்தான் வாய்ப்பு கிடைக்கும். ஆண்களுக்கு வாய்ப்பு என்பது அவ்வளவு எளிதில் கிடைக்காது. பழக்க வழக்கங்களையும், நட்புறவையும் அதிகரிக்க வேண்டும். அதுவரை குடும்பத்தை பார்த்துக்கொள்வது என்பது மிகவும் கடினமான ஒன்று. இவற்றைத் தாண்டிதான் முயற்சி செய்துக் கொண்டிருக்கிறேன். இணை, துணை இயக்குநர்கள்தான் எங்கள் வாழ்வில் முக்கிய பங்கு வகிப்பர். இயக்குநரோ, தயாரிப்பாளரோ நேரடியாக எங்களுக்கு வாய்ப்பு வழங்கமாட்டார்கள்.
உயரமாக இருப்பதால் போலீஸ் வேடங்கள்தான் அதிகம் கிடைக்கும் - கலைதரன்
வாய்ப்புகள் கேட்கும்போது சுயமரியாதையை இழப்பது போல தோன்றியுள்ளதா?
விரும்பித்தான் ஒரு இடத்திற்கு வருகிறோம். அதில் ஏற்ற, இறக்கங்கள் இருக்கும். இன்று நிறையபேர் படிக்கிறார்கள். இரண்டு, மூன்று பட்டம் வாங்குகிறார்கள். சிலர் நான்காவது, ஐந்தாவது படித்துவிட்டு தொழிலதிபர்களாக இருக்கிறார்கள். இவர்களிடம் சென்று அந்த பட்டம் பெற்றவர்கள் வேலைக்கு நிற்கும்போது அவர்களுக்கு இந்த மனநிலை வரும் இல்லையா. அவர் நான்காவது படித்திருந்தாலும் பல படித்த பட்டதாரிகளுக்கு வேலை கொடுக்கும் இடத்தில் அவர் இருக்கிறார். என்ன இவரிடம் வந்து நிற்கிறோம் என அந்த பட்டதாரிகள் நினைப்பார்கள். அதுபோல எங்களுக்கும் தோன்றும். ஆனால் இதை பெரிதுப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. நல்ல வாய்ப்பு அமைந்தால் எல்லாம் திரும்பிவரும்.
எந்த கதாபாத்திரத்தில் நடிக்கவேண்டும் என்பது கனவு?
எல்லோருக்கும் இருக்கும் பொதுவான ஆசைதான் எனக்கும். வில்லனாக வரவேண்டும் என்பதுதான் எனது ஆசை. ஆனால் உயரமாக இருப்பதால் போலீஸ் கதாபாத்திரங்கள்தான் வருகிறது. ஆனால் நல்ல ஒரு குணச்சித்திர கதாபாத்திரமாக வரவேண்டும். ஹீரோ, ஹீரோயினின் அப்பா கதாபாத்திரம் அல்லது நல்ல வில்லன் கதாபாத்திரம் வரவேண்டும். அதற்கான முயற்சிகளில் இருந்துவருகிறேன். இறைவன் அருளால் ஒருசில வாய்ப்புகள் கிடைக்கின்றன. எதிர்காலத்தில் சிறப்பான கதாபாத்திரம் கிடைக்கும் என நம்புகிறேன். மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்துக்கொண்டுதான் இருக்கிறேன்.
நீங்கள் வேண்டாம் என்றுக்கூறிய கதாபாத்திரத்தில் வேறொருவர் நடித்து ஹிட் ஆனது உண்டா?
அதுமாதிரி சொல்லமுடியாது. சில இடங்களில் நம்பிபோய் மோசமடைந்துள்ளேன். சிலநேரங்களில் வில்லன் கதாபாத்திரம் எனக்கூறி, மோசமான கேரக்டரை கொடுத்துவிடுவார்கள். திடீரென எதுவும் செய்யமுடியாது. இதுவும் வில்லன்தான் எனக்கூறுவார்கள். அதுபோல ஏமாற்றங்கள் நிறைய உண்டு. மற்றபடி நான் நடிக்காமல்விட்டு, வேறொருவர் நடித்த நிகழ்வு இதுவரை எனக்கு நடக்கவில்லை.
எம்.எஸ். பாஸ்கர் ஒரு மகான் - கலைதரன்
நீங்கள் பார்த்த பெரும் நடிகர்களில் உங்களிடம் சகஜமாக பழகியவர்கள் யார்?
எம்.எஸ். பாஸ்கரை முதன்முதலில் பார்க்கிங் படத்தில்தான் பார்த்தேன். எனக்கு ஆச்சர்யாக இருந்தது. அவர் ஜுனியர் ஆர்ட்டிஸ்டுகளுடன் உட்கார்ந்து சாப்பிடுவார். சாப்பிடுங்கள் எனக்கூறுவார். உட்கார்ந்து சாப்பிடுங்கள் எனக்கூறிவிட்டு, அவர்போய் நாற்காலி இல்லாமல் நின்றுகொண்டிருப்பார். அதுபோல பழகுவது, பேசுவது என இயல்பாக இருப்பார். சினிமாவில் நல்லவர்களும் இருக்கிறார்கள்.
சினிமா வாய்ப்பு தேடுபவர்களுக்கு நீங்கள் கூறும் ஆலோசனை என்ன?
அறிவுரை சொல்லும் அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை. இருந்தாலும் அனைத்தும் நம் முயற்சிதான். முயற்சி, நம்பிக்கை இரண்டும்தான் முக்கியம். நான் கோயம்புத்தூரில் இருந்து சென்னை வரும்போது 50 படங்கள் நடிப்பேன் என்று நினைக்கவில்லை. 6 வருடங்கள் ஆகியுள்ளது. அதில் கொரோனாவால் இரண்டரை வருடங்கள் ஓடிவிட்டன. இந்த மூன்று வருடங்களில் 50 படங்கள் நடித்துள்ளேன். எந்த ஒரு அறிமுகமும் இன்றி, சென்னையில் யாரையும் தெரியாமல் வந்து, தனிப்பட முறையில் ஹோட்டலில் அறை எடுத்து தங்கி சினிமாக்காரர்களை சென்று பார்ப்பேன். பணம் இல்லாமல் அலைந்துள்ளேன். இப்படி சினிமாவில் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். ஏனெனில் எளிதில் கிடைப்பது எதுவும் நிலைக்காது. கஷ்டப்பட்டால்தான் நிலைக்கும்.