சூர்யா ஜோதிகா காதலுக்கு நான்தான் தூது சென்றேன் - நடிகர் ரமேஷ் கண்ணா
‘ஆதவன்’ கதையில் முதலில் நடிகர் விஜயகாந்த் நடிக்க இருந்ததாகவும், பின்னர் சில காரணங்களால் கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு பின் அதில் சூர்யா நடித்ததாகவும் அப்படத்தின் கதை ஆசிரியர் ரமேஷ் கண்ணா தெரிவித்துள்ளார்.;
இயக்குநராக இருந்தாலும் தான் ஒரு நடிகராகவே பெரிதும் அடையாளப்படுத்தப்படுவதாகவும், அதற்கான காரணத்தையும், தனது இயக்குநர் அனுபவம் குறித்தும், தான் கதை ஆசிரியராக இருந்த ‘ஆதவன்’ படம் குறித்தும் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார் நடிகர் ரமேஷ் கண்ணா.
அஜித்தின் தொடரும் படத்தை இயக்கிக்கொண்டே கார்த்திக்குடன் நடித்த ரமேஷ் கண்ணா
இயக்குநராக இருந்தாலும் நடிகர் என்ற முகம்தான் அதிகம் வெளியில் தெரிகிறதா?
பெரிய குடும்பம் படத்தின் தயாரிப்பாளர் என்னிடம் மீண்டும் ஒரு படம் எடுக்க சொன்னார். அதுவும் அஜித்திடம் கதைக்கூற சொன்னார். நான் உடனே, “சார் என்ன விளையாடுறீங்களா? அஜித் இப்போதுதான் காதல் கோட்டை படம் நடித்துள்ளார். அதில் அவர் இளம் ஹீரோ. என்னுடைய கதை தொடக்கமே ஹீரோவுக்கு ஒரு குழந்தை இருக்கும். இதில் எப்படி நடிப்பார்? எனக் கேள்வி எழுப்பினேன். அதற்கு, “பரவாயில்லை. போய் சொல்லிவிட்டு வா” எனக் கூறினார். பின்னர் கதை சொல்லி, அஜித் ஓகே சொல்லிவிட்டார். முதல்நாள் ஷூட்டிங். அஜித் வந்துவிட்டார். தேவையானி இரவு முழுவதும் பயணம் செய்து மதுரையிலிருந்து ஷூட்டிங்கிற்காக சென்னை வந்தார். அப்போது உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் படத்திற்காக விக்ரமன் சார் கூப்பிடுகிறார். எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. சூழ்நிலையை புரிந்துகொண்ட அஜித், பரவாயில்லை சார் போய்ட்டு வாங்க எனக் கூறினார். ஒரு ஷாட்டுக்காக போய் அரைநாள் ஆகிவிட்டது. அங்கு கார்த்திக் என்னை கிண்டல் செய்கிறார். “ரமேஷ் கண்ணா உங்களுக்கு 10 வருடம் கழித்து ஒரு படம் இயக்க கிடைத்தது. அதையெல்லாம் விட்டுட்டு நடிக்க வந்தீங்களே, இது எல்லாம் ஒரு படமா?” என கிண்டல் செய்தார். அவர் உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் படம் முழுவதும் திட்டிக்கொண்டே இருப்பார். ஏனென்றால் ‘நந்தவன தேரு’ படமும் இந்த படமும் ஒரே கதை. அதனால் கார்த்திக் புலம்பிக் கொண்டே இருப்பார். பின்னர் ஷூட்டிங் முடித்துவிட்டு அங்கு போனேன். அரைநாள் முழுவதும் எனக்காக அஜித் உட்கார்ந்திருந்தார். நேரம் நன்றாக இருந்தால் எல்லாம் நன்றாக இருக்கும்.
நடிகர் ரமேஷ் கண்ணாவின் திரைவாழ்வில் முக்கிய பங்காற்றிய இயக்குநர் விக்ரமன்
புத்தாண்டு என்றால் இயக்குநர் விக்ரமனை சென்று பார்த்து விடுவீர்களாமே?
என் பெயரே சில்வர் ஜூப்லி காமெடியன். வானத்தைப் போல, பிரியமான தோழி, உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், ஆசை என நான் நடித்த எல்லாப் படங்களும் சில்வர் ஜூப்லி வெற்றியே. இது எல்லாம் விக்ரமன் சார் மூலமாகத்தான் நடந்தது. வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை கொடுத்தவர் விக்ரமன் சார். எங்கு இருந்தாலும் புத்தாண்டு என்றால் அவரைப் போய் பார்த்துவிடுவேன்.
தொடரும் படத்திற்கு பிறகு இயக்கத்தை தொடாதது ஏன்?
தொடரும் படத்திற்கு பின் ஒரு கதை பண்ணோம். ஆனால் அது செய்யமுடியவில்லை. படத்திற்கு பாட்டெல்லாம் எழுதிவிட்டோம்.
சூர்யா என்னை தெய்வ மச்சான் என்றுதான் கூப்பிடுவார் - ரமேஷ் கண்ணா
ஃப்ரண்ட்ஸ் படம்போல உங்கள் கேங் யார்?
அஜித், சூர்யா என அனைவரும் ஒரே கலாட்டாதான். அப்போது தெனாலி மற்றும் ஃப்ரண்ட்ஸ் படங்களில் மாறி மாறி நடித்தேன். ஃப்ரண்ட்ஸ் பட ஷூட்டிங்கிலிருந்து சூர்யா சொல்லி அனுப்புவார், “தங்கச்சியை கேட்டதா சொல்லுங்க” என... நான் தெனாலி ஷூட்டிங்கிற்கு செல்லும்போது ஜோதிகாவிடம் சொல்லுவேன். உடனே அவர்கள் ஆங்கிலத்தில் சொல்லி அனுப்புவார்கள். நான் சூர்யாவிடம் வந்து, எப்பா தங்கச்சி உன்ன கேட்டுதுப்பா என சொல்லுவேன். அதனால் சூர்யா என்னை தெய்வ மச்சான் என்றுதான் கூப்பிடுவார். அதுபோலத்தான் அமர்க்களம் ஷூட்டிங்கும். அஜித், ஷாலினி காதலிப்பது தெரியாமல், ஒரு நாள் அஜித்திடம் சென்று, "நீ இப்போ பெரிய நடிகனா இருக்கப்பா.. குடும்பம் நல்லா அமைஞ்சா, நீ நல்லா இருக்கலாம். அதனால, சினிமா ஃபீல்டுல இல்லாத நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணிக்கோன்னு" சொல்லிட்டு இருந்தேன். அவரும் அப்படியே பார்த்துட்டு இருந்தாரு. பிறகுதான் இயக்குநர் சரண், விஷயத்தை சொன்னார். கூடிய சீக்கிரம், அஜித்தும்-ஷாலினியும் திருமணம் செஞ்சிக்கபோறாங்கன்னு. அதன்பிறகு என்னை எங்கே பார்த்தாலும் ஷாலினி சிரிப்பாங்க.
நீங்கள் பயங்கரமா சிரித்து ரசித்த படம் எது?
காதலிக்க நேரமில்லை, ஊட்டி வரை உறவு உள்ளிட்ட படங்களை சொல்லலாம். இப்படங்களின் எல்லா டயலாக்குகளும் எனக்கு இப்போதுவரை நியாபகம் இருக்கு. 200 முறை பார்த்திருப்பேன். எப்போது வேண்டுமானாலும் பார்ப்பேன். காதலிக்க நேரமில்லை படமெல்லாம் வாரம் வாரம் போய் பார்ப்போம். அதுபோன்ற படங்களை ரஜினி, கமலால் கூட எடுக்க முடியவில்லை.
‘ஆதவன் படத்தில் முதலில் விஜயகாந்த்தான் நடிக்க இருந்தார்’ - ரமேஷ் கண்ணா
‘ஆதவன்’ அனுபவம் எப்படி இருந்தது?
ஆதவன் ஒரு வித்தியாசமான அனுபவம். அது முதலில் விஜயகாந்திற்காகத்தான் எழுதினோம். விவேக்தான் என்னிடம் ராவுத்தரிடம் போய் கதை சொல்லலாம் எனக் கூறினார். அப்போது கதையை டெவலப் செய்ய என்னை தினமும் கடற்கரைக்கு விவேக் அழைத்துச் செல்வார். நாங்கள் போகும்போதெல்லாம் அங்கு இப்போதையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருப்பார். அவர் 4 மணிக்கெல்லாம் வாக்கிங் வந்துவிடுவார். நாங்கள் அவருக்கு முன்னால் வந்துவிட வேண்டாம் என நினைப்போம். ஆனால் ஒருநாளும் முடியாது. இப்படி கதையை தயாரித்து ராவுத்தரிடம் கதை சொன்னேன். அவர், பொள்ளாச்சியில் ஷூட்டிங்கில் இருந்த விஜயகாந்திடம் போய் கதை சொல்ல சொன்னார். விஜயகாந்திடம் போனோம். ஆனால் விஜயகாந்த் கதை கேட்கவில்லை. நீ நல்ல இயக்குநர் என்று எனக்கு தெரியும். கதை எல்லாம் சொல்ல வேண்டாம். நீ ஷூட்டிங்கிற்கு தயார் செய் எனக் கூறிவிட்டார். ஆனால் மீண்டும் நான் நடிக்கப் போனதால், அதன்பிறகு அந்த கதையை அவரை வைத்து எடுக்க முடியவில்லை.
ஆதவன் படத்தில் நடிகை சரோஜா தேவி & நடிகர் ரமேஷ் கண்ணா
பின்னர் கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு பின், ஒருநாள் ரவிக்குமார் என்னிடம் ரெட் ஜெயண்ட மூவிசுக்கு ஒரு கதை வேண்டும் எனக் கூறினார். நான் இந்தக் கதையை கூறினேன். பின்னர் நாங்கள் இருவரும் சூர்யாவிடம் கதை சொன்னோம். சூர்யா ஓகே சொல்லிவிட்டார். நான் சரோஜா தேவியின் மிகப்பெரிய ரசிகன் என்பதால் அப்படத்தில் சரோஜா தேவியை போட சொன்னேன். அவரும் கதையை கேட்டுவிட்டு ஓகே சொல்லவிட்டார். அந்தப் படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரம் நான்தான் செய்யவேண்டும். அப்போது வடிவேலுக்கு அரசியல்ரீதியாக பிரச்சனைகள் இருந்ததால், அந்த கேரக்டரை ரெட் ஜெயண்ட் மூவிஸ், வடிவேலுக்கு கொடுக்கக் கூறினர். என்னுடைய கேரக்டரை வடிவேலுக்கு கொடுத்துவிட்டால் நான் என்ன செய்வேன், என இயக்குநர் ரவிக்குமார் சாரிடம் கேட்டேன். உன் பெயர்தான் கதையில் வருகிறதே, போதாதா? என அவர் கேட்டார். பின்னர் நானே அப்படத்திற்கு, இளையமான் என்ற ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி நடித்தேன். அந்தப் படத்திற்கு பிறகு சரோஜா தேவிக்கு என்னை ரொம்ப பிடித்துவிட்டது. என் மகன் திருமணத்திற்குகூட சரோஜா தேவி வந்திருந்தார். அதற்குபின் சிவாஜி கணேசனுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. படையப்பா படத்தின்போது என்னை எல்லோரிடமும் பெரிய நடிகன் என புகழ்ந்து பேசினார், சிவாஜி கணேசன். ஆஸ்கார் விருது வாங்கியதுபோல எனக்கு பெருமையாக இருந்தது.
தொடரும்...