காவிரியின் பிறப்பிடம்தான் "இந்தியாவின் ஸ்காட்லாந்து"!

கர்நாடகாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள கூர்க், இயற்கையின் அழகை முழுமையாக கொண்ட ஒரு பகுதி.;

Update:2025-08-12 00:00 IST
Click the Play button to listen to article

கர்நாடகாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள கூர்க், இயற்கையின் அழகை முழுமையாக கொண்ட ஒரு பகுதி. உள்ளூர் மொழியில் 'குடகு' என்று அழைக்கப்படும் இந்த இடம், கண்கவர் இயற்கை காட்சிகள், அடர்ந்த காபி தோட்டங்கள், ஆரஞ்சு மற்றும் மிளகுத் தோட்டங்களால் சூழப்பட்ட ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. காவேரி ஆற்றின் பிறப்பிடம் என்ற பெருமையை கொண்ட கூர்க், அதன் அமைதியான சூழல் மற்றும் இதமான வானிலை காரணமாக சுற்றுலா பயணிகளின் சொர்க்கமாக விளங்குகிறது. இயற்கை ஆர்வலர்கள், சாகசப் பிரியர்கள் மற்றும் ஆன்மிக நாட்டம் கொண்டவர்களுக்கு மிகவும் பிடித்தமான இந்த இடத்தைப் பற்றிய விரிவான தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்.

இந்தியாவின் ஸ்காட்லாந்து

கர்நாடகாவின் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான கூர்க், பழமையான வரலாற்றையும், தனித்துவமான கலாசாரத்தையும் தன்னகத்தே கொண்டது. பெங்களூரிலிருந்து சுமார் 257 கி.மீ. தொலைவில் உள்ள இந்த பகுதி, மடிகேரி, விராஜ்பேட்டை, குஷால்நகர், சோம்வார்பேட்டை ஆகிய இடங்களை உள்ளடக்கிய ஒரு முக்கியமான மாவட்டம் ஆகும். இங்கு வசிக்கும் பூர்வகுடி மக்கள் கொடவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் தங்கள் வீரத்திற்கும், பாரம்பரியத்திற்கும் பெயர் பெற்றவர்கள். தங்களை தாங்களே ஆட்சி செய்த கொடவர்கள், தங்களின் ஆயுதங்களையும், வீர வரலாற்றையும் பெரிதும் போற்றுகின்றனர். இவர்களின் தனித்துவமான கலாசாரம், உடை, மொழி, உணவு மற்றும் பழக்கவழக்கங்கள் கூர்க்கின் பாரம்பரியத்தை இன்றும் பிரதிபலிக்கின்றன.


காபி மற்றும் மசாலா தோட்டங்களுக்காக புகழ் பெற்ற கூர்க்

இங்கு ஆண்டு முழுவதும் இதமான காலநிலை நிலவுவதால் எந்த நேரத்திலும் சுற்றுலா செல்லலாம். கோடையில் அதிகபட்ச வெப்பநிலை 26°C ஆகவும், குளிர்காலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 15°C ஆகவும் இருக்கும். கூர்க்கின் பொருளாதாரம் பெரும்பாலும் காபி, மசாலாப் பயிர்கள் மற்றும் சுற்றுலாவை சார்ந்துள்ளது. இங்குள்ள பசுமையான காபி தோட்டங்கள், மலைகள், அடர்ந்த வனப்பகுதிகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் முக்கிய அம்சங்களாகும். குறிப்பாக பிரிட்டிஷ் ஆட்சியின்போது, கூர்க் அதன் வளமான காபி மற்றும் மசாலா தோட்டங்களுக்காக உலகப் புகழ் பெற்றது. மலைப்பாங்கான பகுதியில் நிலவும் இதமான காலநிலை, காபி சாகுபடிக்கு மிகவும் ஏற்றது என்பதால் இங்குள்ள பெரும்பாலான பகுதிகள் காபி தோட்டங்களால் பசுமையாகக் காட்சியளிக்கின்றன. மேலும், கூர்க்கின் அழகிய மலைகள், அடர்ந்த காடுகள் மற்றும் பசுமையான பள்ளத்தாக்குகள் ஆகியவை ஸ்காட்லாந்தின் இயற்கை எழிலை ஒத்திருப்பதால், இந்த நகரம் "இந்தியாவின் ஸ்காட்லாந்து" என்று அழைக்கப்படுகிறது.

காவிரியின் பிறப்பிடம்

கூர்க், பயணிகளைக் கவரும் பலதரப்பட்ட சுற்றுலாத் தலங்களை கொண்ட ஒரு அற்புதமான மலைப்பிரதேசமாகும். அதன் ஒவ்வொரு இடமும் தனித்துவமான அழகையும், மறக்க முடியாத அனுபவத்தையும் நமக்கு தருகிறது. அந்த வகையில் இங்கு முதன்மையான இடமாக இருப்பது தலக்காவேரி. இது பிரம்மகிரி மலைத்தொடரில் அமைந்துள்ள புனிதமான காவேரி ஆற்றின் பிறப்பிடமாகும். இந்த இடம் இயற்கையின் ரம்மியமான அழகுடன் ஆன்மிக உணர்வையும் ஒருங்கிணைக்கிறது. காவிரியின் பிறப்பிடமாக திகழ்வதோடு மட்டுமல்லாமல், இது ஒரு முக்கிய புனித யாத்திரை மையமாகவும் உள்ளது. இங்கு வரும் பக்தர்கள், ஒரு சிறிய குளத்தில் நீராடினால், தங்கள் பாவங்கள் நீங்குவதாக நம்புகிறார்கள். தலக்காவேரியின் அமைதியான சூழலும், சுற்றியுள்ள பசுமையான மலைகளின் அழகும் இங்கு வருபவர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது. இதேபோல் மடிகேரியிலிருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் உள்ள பைலகுப்பேவில் அமைந்துள்ள பொற்கோயில், நம்ட்ரோலிங் மடாலயம் என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு ஆன்மிகத் தலமாகவும், பௌத்த கல்வி மையமாகவும் திகழ்கிறது. இந்த ஆலயத்தின் அமைதியான சூழல், கண்கவர் கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு, பௌத்த கலாசாரத்தின் செழுமையை பிரதிபலிக்கின்றன.


தலக்காவேரி மற்றும் அபே நீர்வீழ்ச்சி காட்சிகள் 

இது தவிர மடிகேரியிலிருந்து சுமார் 8 கி.மீ தொலைவில், காபி மற்றும் மசாலாத் தோட்டங்களுக்கு நடுவே அமைந்துள்ள அபே நீர்வீழ்ச்சி, கூர்க்கின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். இந்த நீர்வீழ்ச்சியை அடைய, அழகான மலை பாதையில் 5 முதல் 10 நிமிடங்கள் நடக்க வேண்டும். இந்தப் பாதை அடர்ந்த பசுமையாலும், கண்கவர் காட்சிகளாலும் நிறைந்துள்ளது. மழைக்காலத்தில் இங்கு வந்தால், நீர்வீழ்ச்சி முழு வெள்ளத்தில் ஆர்ப்பரிப்பதைக் காணலாம். இது பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக இருக்கும். இதே மடிகேரியில் உள்ள மற்றொரு அழகான இடம் ராஜா சீட் பூங்கா. இந்தப் பூங்காவிலிருந்து கூர்க் மலைத்தொடர்கள் மற்றும் பள்ளத்தாக்குகளின் அழகை முழுமையாகக் காணலாம். மாலை நேரங்களில், குறிப்பாக சூரியன் மறையும்போது இங்கு இருப்பது ஓர் இனிமையான அனுபவம். அந்தி வானத்தின் பல வண்ணங்கள், மலைகளுக்குப் பின்னால் மெதுவாக மறையும் சூரியன் என இந்த இடம் ஒரு மாய உலகத்தைப் போன்ற உணர்வை ஏற்படுத்தும். இங்கு குழந்தைகள் விளையாடுவதற்கு அருமையான பூங்காவும் உள்ளது. அதிகாலையில் சூரிய உதயத்தைக் காண்பதும் தனிச்சிறப்பான அனுபவமாக இங்கு இருக்கும்.

மலைகளும், சாகசங்களும்!

கூர்க்கில் உள்ள மண்டல்பட்டி சிகரம் பிரமிக்க வைக்கும் இயற்கை அழகையும், அமைதியான சூழலையும் கொண்ட பகுதியாகும். இங்கு மலையேற வேண்டிய அவசியமில்லை. ஒரு குறிப்பிட்ட இடம் வரை வாகனத்தில் சென்ற பிறகு, அங்கிருந்து ஜீப் மூலம் சிகரத்தின் உச்சியை அடையலாம். இத்தகைய வசதிகள் பல மலைப்பகுதிகளில் இல்லை என்றாலும் மலைப்பாதை கரடுமுரடாக இருப்பதால், சொந்த வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இவ்வாறான உச்சியை நோக்கிய பயணத்தில், பசுமையான புல்வெளிகளும், பனி மூடிய காட்சிகளும் மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் இங்கு காணப்படுகின்றன. குறிப்பாக சிகரத்தின் உச்சியில் இருந்து இயற்கையின் அழகை பார்க்கும் போது, கூர்க் ஏன் இந்தியாவின் ஸ்காட்லாந்து என்று அழைக்கப்படுகிறது என்பதை நம்மால் முழுமையாக உணர முடியும். இதுபோலவே, கூர்க்கின் மிக உயரமான சிகரமான தடியாண்டமோல், சவாலான மலையேற்றத்தை விரும்புபவர்களுக்கு சிறந்த அனுபவத்தைத் தருகிறது. சுமார் 15 கி.மீ தூரம் கொண்ட இந்த மலையேற்றம், 6 முதல் 8 மணி நேரம் வரை நீடிக்கும். அக்டோபர் முதல் மார்ச் வரையிலான மாதங்கள் இங்கு மலையேற்றம் செய்ய மிகவும் உகந்த காலம் ஆகும்.


கூர்க் மலைப்பகுதியும், துபாரே யானைகள் முகாமும் 

இத்தகைய சிகரங்கள் தவிர இங்கு உள்ள துபாரே யானைகள் முகாம், இயற்கையின் மடியில் அமைந்துள்ள காவேரி ஆற்றின் கரையில் ஓர் அற்புதமான இடமாகும். இது யானைகளை நெருக்கமாகப் பார்த்து, அவற்றின் வாழ்க்கை முறையைப் பற்றி அறிந்து கொள்ள ஒரு சிறந்த வாய்ப்பை நமக்கு வழங்குகிறது. இந்த முகாமை அடைய, படகு மூலம் காவேரி ஆற்றை கடந்து செல்ல வேண்டும். இந்த படகுப் பயணம், ஆற்றின் அழகையும், அதன் கரையில் உள்ள பசுமையான காடுகளையும் ரசிக்க ஒரு அரிய வாய்ப்பை அளிக்கிறது. இந்த முகாமில், பார்வையாளர்கள், யானைகளை பற்றிய விரிவான தகவல்களை பெறலாம். இருப்பினும், யானைகளின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி, அவற்றுக்கு உணவூட்டுவது, குளிப்பாட்டுவது போன்ற செயல்கள் தற்போது தடை செய்யப்பட்டுள்ளன. வனவிலங்குகளை நேசிப்பவர்களுக்கும், இயற்கையை விரும்புபவர்களுக்கும் இது ஒரு மறக்க முடியாத, அமைதியான அனுபவத்தைத் நிச்சயம் தரும்.

இங்கு எப்படி செல்வது?


ரெசார்ட் மற்றும் காபி தோட்டம் 

கூர்க்கிற்கு செல்ல நேரடி விமான நிலையம் அல்லது ரயில் நிலையம் இங்கு கிடையாது. விமானம் மூலம் வர விரும்பினால், நீங்கள் பெங்களூரு அல்லது மைசூரு விமான நிலையங்களை அடையலாம். பெங்களூருவிலிருந்து கூர்க் சுமார் 257 கி.மீ தொலைவில் உள்ளது. அங்கிருந்து வாடகை வண்டி அல்லது பேருந்துகள் மூலம் கூர்க்கை அடையலாம். ரயில் மூலம் வர விரும்பினால், நீங்கள் பெங்களூரு ரயில் நிலையத்திற்கு சென்று, அங்கிருந்து சாலை வழியாக கூர்க்கை அடையலாம். கூர்க்கில் தங்குவதற்கு மடிகேரி சிறந்த இடமாகும். பெரும்பாலான சுற்றுலா தலங்கள் மடிகேரிக்கு அருகில்தான் உள்ளன. எனவே, மடிகேரியில் தங்குவது பயணச் செலவுகளையும், நேரத்தையும் மிச்சப்படுத்தும். இங்கு பலவிதமான ஹோட்டல்கள், ரெசார்ட்டுகள் மற்றும் தனி வீடுகள் என்று பல வசதிகள் உள்ளன. இங்குள்ள உணவை பொறுத்தவரை கூர்க் உணவு அதன் தனித்துவமான மசாலாப் பொருட்களின் நறுமணத்திற்காக மிகவும் பிரபலமானது. குறிப்பாக காரமான கோழி மற்றும் பன்றி இறைச்சி உணவுகள் இங்கு மிகவும் பிரபலம். குறிப்பாக பன்றி இறைச்சி கறி, அக்கி ரொட்டி, நூல் புட்டு ஆகியவை இங்குள்ள பாரம்பரிய உணவுகளாகும். அதிலும் பயணத்தின்போது காபித் தோட்டங்களிலிருந்து தயாரிக்கப்படும் புதிய காபியை சுவைப்பது ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். எனவே, ஒரு புதிய அனுபவத்தைத் தேடினால், உங்கள் அடுத்த பயணத்திற்கு கூர்க்கை தேர்ந்தெடுத்து இயற்கையின் அழகையும், மறக்க முடியாத நினைவுகளையும் முழுமையாக அனுபவியுங்கள்.

கூர்க் கூகுள் வரைபடம்


Tags:    

மேலும் செய்திகள்

அமைதி தேவை