துர்கா பூஜையின் திகைப்பூட்டும் கொண்டாட்டங்களைக் காண ஏற்ற நகரம் "கட்டாக்"...
ஒடிசாவின் பழைய தலைநகரமாக விளங்கிய கட்டாக், மகாநதி மற்றும் கதாஜோதி நதிகளுக்கு இடையில் அமைந்துள்ள ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நகரம்.;
ஒடிசாவின் பழைய தலைநகரமாக விளங்கிய கட்டாக், மகாநதி மற்றும் கதாஜோதி நதிகளுக்கு இடையில் அமைந்துள்ள ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நகரம். 1950 வரை மாநிலத்தின் தலைநகராக இருந்த இந்த நகரம், பின்னர் புவனேஸ்வருக்கு மாற்றப்பட்டது. ஒடிசாவின் இரண்டாவது பெரிய நகரமான இது, அதன் தனித்துவமான சில்வர் ஃபிலிக்ரீ எனப்படும் வெள்ளி இழை வேலைப்பாடுகள், புகழ்பெற்ற நெசவுப் பொருட்கள், பிரம்மாண்டமான துர்கா பூஜை மற்றும் வளமான வரலாற்றிற்காகப் பரவலாக அறியப்படுகிறது. இந்தியாவின் பழமையான கல்லூரிகளில் ஒன்றான ராவன்ஷா பல்கலைக்கழகம், ஒடியா திரைப்படத் துறை மற்றும் பராபதி ஸ்டேடியம் போன்ற முக்கிய இடங்களைக் கொண்ட இந்த நகரம், கலாச்சாரத்திற்கும் கல்விக்கும் ஒரு முக்கிய மையமாகத் திகழ்கிறது. இப்படிப்பட்ட இந்நகரத்தின் சிறப்புகள் குறித்து விரிவாக இந்த தொகுப்பில் காணலாம்...
வரலாறும் கலாச்சாரமும்
கட்டாக் நகரம், இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்குப் பல தலைவர்களை வழங்கியுள்ளது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், கோபபந்து தாஸ் மற்றும் மதுசூதன் தாஸ் போன்ற புகழ்பெற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் பிறப்பிடமாக இது விளங்குகிறது. இங்குள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அருங்காட்சியகம், ஒடிசா மாநில கடல்சார் அருங்காட்சியகம், மதுசூதன் சங்க்ராலயா மற்றும் ஆனந்த் பவன் அருங்காட்சியகம் போன்றவை, இந்த மண்ணின் வரலாற்றையும், முக்கிய தலைவர்களின் பங்களிப்பையும் எடுத்துரைக்கின்றன. 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பராபதி கோட்டையின் இடிபாடுகள், கட்டாக்கின் பழமையான பெருமைக்கு சான்றாக நிற்கின்றன. கட்டாக் சண்டி கோவில், நகரின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.
ஒடிசா மாநில கடல்சார் அருங்காட்சியகம்
அதேபோல், இரண்டு பெரிய நதிகளின் சங்கமத்திற்கு இடையில் நகரம் அமைந்துள்ளதால், இங்கு வெள்ளப்பெருக்கு அடிக்கடி ஏற்படுகிறது. இருப்பினும், இது நகரத்தின் அழகியலுக்கு ஒரு தடையாக இருப்பதில்லை. கட்டாக் நகரில் கொண்டாடப்படும் துர்கா பூஜை, கொல்கத்தாவிற்கு அடுத்தபடியாக மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இது நகரத்தின் மத நம்பிக்கைக்கும், கலை உணர்வுக்கும் ஒரு எடுத்துக்காட்டு. ஒடிசாவின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நகரத்தின் கலாச்சாரத்தையும், கலைகளையும் அறிந்துகொள்ள அக்டோபர் முதல் மார்ச் வரையிலான மாதங்கள் மிகவும் ஏற்றவை. குறிப்பாக, இந்த நாட்களில் பல விழாக்கள் நடப்பதால், நகரத்தின் உண்மையான நிறத்தை ரசிக்கலாம்.
கடல் கடந்த பெருமை
கட்டாக் நகரம் அதன் கலாச்சாரத்திற்கு மட்டும் அல்ல பண்டிகைகளுக்காகவும் மிகவும் பிரபலமானது. குறிப்பாக, துர்கா பூஜை இங்கு மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது. ஆனால், அதைவிடச் சிறப்பானது, பாலி யாத்திரை பண்டிகை. இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகத் திருவிழாவான இது, மகாநதி ஆற்றின் கரையில் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. இந்தோனேசியாவின் பாலி மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு வணிகப் பயணம் மேற்கொண்ட பண்டைய கடல் வணிகர்களை நினைவுகூறும் வகையில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. இது ஒடிசாவின் கடல்சார் வர்த்தகப் பெருமைக்கு ஒரு சான்றாகும்.
கட்டாக்கின் புகழ்பெற்ற துர்கா பூஜை
இந்த விழாக்காலங்களில், ஆயிரக்கணக்கான மக்கள் கூடி, படகுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் பாரம்பரிய நிகழ்ச்சிகளில் பங்கேற்பது வழக்கம். பாலி யாத்திரை, வர்த்தகத்தை மட்டும் அல்லாமல், இரு நாடுகளுக்கும் இடையே இருந்த கலாச்சாரப் பிணைப்பையும் எடுத்துரைக்கிறது. விழாக்காலங்களில் இங்குள்ள நகரமே கலைநயம், மகிழ்ச்சி மற்றும் பாரம்பரியத்தால் நிறைந்திருக்கும்.
பார்க்க வேண்டிய இடங்கள்
கட்டாக் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் பல சுற்றுலா இடங்களைக் கொண்டிருக்கின்றன. அதன் ரயில் நிலையமே ஒடிசாவின் கலைநயத்தை எடுத்துக்காட்டும் வகையில், ஒரு அழகிய கோட்டை வடிவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு பார்க்க வேண்டிய இடங்களில் மிகவும் சிறப்பானது தவளேஸ்வரர் கோவில். இந்த கோவில் மகாநதி ஆற்றின் நடுவில் ஒரு தீவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்குச் செல்ல, ஆற்றின் குறுக்கே உள்ள அழகான தொங்கு பாலத்தில் நடந்து செல்வது ஒரு மறக்க முடியாத அனுபவத்தை தரும். அத்துடன், மகாநதியின் பிரம்மாண்டமான அழகை ரசிக்க, ஜோப்ரா தடுப்பணைக்குச் செல்லலாம்.
மகாநதி ஆற்றின் நடுவில் அமைந்துள்ள தவளேஸ்வரர் கோவில்
இதுதவிர கட்டாக்கிற்கு அருகில் உள்ள லலித்கிரி, ரத்னகிரி மற்றும் உதயகிரி ஆகிய மூன்று இடங்களும், ஒரு காலத்தில் பௌத்த மதத்தின் முக்கிய கல்வி மையமான புஷ்பகிரி பல்கலைக்கழகத்தின் பகுதிகளாக இருந்தன. இங்கே நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில், பல கல்வெட்டுகளும், கலைப்பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகள், பௌத்த மதத்தின் வரலாறு, கலை மற்றும் தொல்லியல் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர்களுக்கு ஓர் அரிய அனுபவத்தை வழங்கும்.
பெருமைமிகு அடையாளங்கள்
கட்டாக் நகரம் அதன் வெள்ளி இழை வேலைப்பாடுகளான 'தாரகாசி'க்கு உலகப் புகழ் பெற்றது. வெள்ளி இழைகளைக் கொண்டு உருவாக்கப்படும் இந்த நுட்பமான வேலைப்பாடுகள், நகைகள் முதல் வீட்டு அலங்காரப் பொருட்கள்வரை பல வடிவங்களில் கிடைக்கின்றன. அதேபோல், 'பிசித்ரபூரி' மற்றும் 'நுவாபட்னா' போன்ற அழகிய நெசவுப் புடவைகளும் இந்நகரின் பெருமைமிகு அடையாளங்கள் ஆகும். இப்படி கைவினைப் பொருட்கள் மற்றும் துணிகளின் மையமாக இருந்துவரும் இந்நகரம் சமீபகாலமாக ஒரு சிறந்த ஷாப்பிங் இடமாகவும் திகழ்கிறது.
கட்டாக்கின் பிரபலமான தகிபரா அலுடும் உணவு
இது தவிர உணவுப் பிரியர்களுக்கு, கட்டாக் சிறந்த இடம் என்றே சொல்லலாம். இங்குள்ள 'ககரா பிதா' மற்றும் 'தகிபரா அலுடும்' ஆகிய உணவு வகைகள் மிகவும் பிரபலமானவை. இவை நிச்சயம் சுவைத்துப் பார்க்க வேண்டியவை. அதேபோல் தயிரில் ஊற வைத்த பெரிய வடைகளுடன், காரமான உருளைக்கிழங்கு கறியைச் சேர்த்துச் சாப்பிடுவது, இந்த நகரத்தின் தனித்துவமான சுவையை எடுத்துரைக்கிறது. இவ்வாறு சுற்றுலா பயணிகளுக்கு வரலாற்று அனுபவம், ஆன்மிக அமைதி மற்றும் சுவை மிகுந்த உணவு என அனைத்தையும் ஒன்றாக கொடுக்கும் இந்த கட்டாக் நகரம், அதன் வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடங்கள், கலாச்சார நிகழ்வுகள் மற்றும் சுவையான உணவுகள் மூலம், ஒரு மறக்க முடியாத பயண அனுபவத்தை நிச்சயம் வழங்கும்.