Velunachiyar History: இந்திய சுதந்திர வரலாற்றில் ஆங்கிலேயரை தோற்கடித்து முடிசூடிய ஒரே ராணி "வேலுநாச்சியார்"!

ஜான்சி ராணிக்கு 100 ஆண்டுகளுக்கு முன்பே பிரிட்டிஷ் படைக்கு சிம்ம சொப்பனமா இருந்தவர் தமிழக மங்கை வேலுநாச்சியார். சபதமிட்டபடி சிவகங்கை கோட்டையை கைப்பற்றி ஆங்கிலேய கொடியை இறக்கி, தங்கள் கொடியை பறக்கவிட்டவர் வேலுநாச்சியார்.;

Update:2024-08-13 00:00 IST
Click the Play button to listen to article

இந்திய சுதந்திர போரில் ஆண்களின் பங்களிப்பு எவ்வளவு அளப்பரியதோ, அதற்கு துளியும் குறைவில்லாதது பெண்களின் பங்களிப்பு! அதிலும் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் முன்னோடியாக, தமிழ்நாட்டு சுதந்திர போராட்ட வீராங்கனைகள் இருந்துள்ளனர். இந்திய விடுதலைக்கு வித்திட்ட முதல் வீர மங்கையாக தமிழ்நாட்டின் வேலுநாச்சியார் திகழ்கிறார். ஆனால் வட இந்தியாவில் ஜான்சி பகுதி ராணியாக இருந்த லஷ்மி பாய், பிரிட்டிஷாரை எதிர்த்து போரிட்டது, இந்திய அளவில் கொண்டாடப்படும் நிலையில், ஜான்சி ராணிக்கு 100 ஆண்டுகளுக்கு முன்பே ஆங்கிலேயர் படைக்கு சிம்ம சொப்பனமா இருந்த தமிழ்நாட்டின் வேலுநாச்சியார் பெயர் இந்திய அளவில் அறியப்படவில்லை. அவரின் வீர வரலாற்றை இப்பதிவில் காண்போம்.


களரி, வாள் வீச்சு, சிலம்பம், ஈட்டி எறிதல், குதிரையேற்றம் உள்ளிட்டவற்றில் கைதேர்ந்து விளங்கிய வேலுநாச்சியார் 

ராமநாதபுரத்தில் பிறந்த வீரமங்கை

ராமநாதபுரத்தை ஆண்டுவந்த மன்னர் செல்லமுத்து விஜயரகுநாத சேதுபதி - சக்கந்தி முத்தாத்தாள் தம்பதியினருக்கு ஒரே மகளாக 1730-ம் ஆண்டு ஜனவரி 3-ம் தேதி பிறந்தார் வேலுநாச்சியார். ஒரே மகளாக இருந்தாலும் ஆண் வாரிசு இல்லாத குறையை போக்கும் வகையில் அறிவிலும், வீரத்திலும் தலைசிறந்து, எதற்கும் அஞ்சாத பெண்ணாக நெஞ்சுரமும் கொண்டவராக திகழ்ந்தார். களரி, வாள் வீச்சு, சிலம்பம், ஈட்டி எறிதல், குதிரையேற்றம், யானையேற்றம் உள்ளிட்டவற்றில் கைதேர்ந்து விளங்கினார். தமிழ், தெலுங்கு, மலையாளம், உருது, ஃப்ரெஞ்ச், ஆங்கிலம் உள்ளிட்ட 10 மொழிகளை கற்றரிந்தார். 

சிவகங்கை சீமையின் ராணி

வீர மங்கையாக வளர்ந்த வேலுநாச்சியார், தனது 16-வது வயதில் சிவகங்கை சீமையின் மன்னர் முத்து வடுகநாதரை திருமணம் செய்துகொண்டு பட்டத்து ராணியானார். வெள்ளை நாச்சியார் என்ற பெண் குழந்தையை ஈன்றெடுத்தார். செல்வ செழிப்பு மிக்க சிவகங்கை சீமையின் ராணியாக வலம்வந்தார் வேலு நாச்சியார்.


கப்பம்கட்ட மறுத்த கணவர் முத்து வடுகநாதரை கொன்ற ஆங்கிலேயரை பழி தீர்க்க துடித்த வேலுநாச்சியார்

கொல்லப்பட்ட முத்து வடுகநாதர்

சிவகங்கை சீமை செழிப்புடன் இருப்பதை அறிந்த ஆற்காடு நவாப் முகம்மது அலி, அங்கு தனது படைகளை அனுப்பி, மன்னர் முத்து வடுகநாதரை கப்பம் கட்ட உத்தரவிட்டார். முத்து வடுகநாதர், கப்பம் கட்ட மறுக்கவே பிரிட்டிஷ் படையினரின் உதவியுடன் போர் தொடுத்தான் நவாப் அலி. காளையார்கோவிலில் வழிபாடு நடத்திக்கொண்டிருந்த முத்து வடுகநாதரை திடீரென்று சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தினான். மன்னர் முத்து வடுகநாதரும், அவரது படை வீரர்களும் உயிர் மாண்டனர். முத்து வடுகநாதர்-வேலுநாச்சியார் திருமணம் 1746-ல் நடந்த நிலையில் 1772-ல் முத்து வடுகநாதர் உயிரிழந்தார். கணவர் இறந்த செய்தி கேட்டு துடிதுடித்த வேலுநாச்சியார், உடன்கட்டை ஏறும் பழக்கத்தை கைவிட்டு, நவாப் முகம்மது அலியை பழிக்கு பழிவாங்க முடிவு செய்தார்.

வேலுநாச்சியார் சபதம்

ஆற்காடு நவாப் முகம்மது அலி மூலம் தந்திரமாக முத்து வடுகநாதரை கொன்ற ஆங்கிலேயர்கள், சிவகங்கை சீமை ஆட்சியையும் கைப்பற்றினர். இதையடுத்து தனது ஒரே மகளான வெள்ளச்சி நாச்சியாருடன் சிவகங்கை சீமை கோட்டையிலிருந்து வெளியேறிய வேலுநாச்சியார், "ஆங்கில படைகளை தோற்கடித்து சிவகங்கை சீமையை மீட்பேன்" என்று சபதமிட்டார். மருது சகோதரர்களான சின்ன மருது மற்றும் பெரிய மருதுவின் துணையுடன் மேலூருக்கு தப்பிச் சென்ற வேலுநாச்சியார், விருப்பாச்சி கோட்டையில் அடைக்கலம் புகுந்தார். 


சிவகங்கை சீமையில் ஆங்கிலேயரின் கொடியை இறக்குவேன் என சபதம் எடுத்த வீரமங்கை

கத்தியுடன் புத்தியையும் தீட்டிய வேலுநாச்சியார்

நவாப் முகம்மது அலியை பழிவாங்க வேண்டும் என்றும், ஆங்கிலேயர்களை தோற்கடிக்க வேண்டும் என்றும் ஏற்கனவே துடித்துக் கொண்டிருந்த மைசூர் மன்னர் ஹைதர் அலியின் உதவியை நாடினார் வேலுநாச்சியார். சிவகங்கை சீமையை மீட்க ஹைதர் அலியிடம் உதவி கேட்டார். ஹைதர் அலி தயக்கம் காட்டியநிலையில், அவரை நேரில் சந்தித்து ஆங்கிலேயரை எதிர்க்கும் திட்டம் குறித்து உருது மொழியில் விளக்கினார். வேலுநாச்சியாரின் உருது மொழி புலமையை கண்டுவியந்த ஹைதர் அலி, அவருக்கு  உதவிபுரிவதாக உறுதியளித்தார்.

8 ஆண்டுகள் பதுங்கி பாய்ந்த வீரம்

தன் கணவரை கொன்று சிவகங்கை சீமையை கைப்பற்றிய ஆங்கிலேயரிடம் இருந்து சீமையை மீட்பதற்காக உறுதியான திட்டம்போட்ட வேலுநாச்சியார், அதற்காக 8 ஆண்டுகள் தனது குழந்தையுடன் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார். திண்டுக்கல் கோட்டை, விருப்பாச்சி கோட்டை, அய்யம்பாளையம் கோட்டை என மாறிமாறி இடம்பெயர்ந்து தலைமறைவாக இருந்தார். இந்த காலத்தில், ஆங்கிலேயரை எப்படி வீழ்த்த வேண்டும் என்று உத்திகளை வகுத்தார். மருது சகோதரர்கள் மற்றும் ஹைதர் அலியின் உதவியுடன் ஆங்கிலேயருக்கு எதிராக பெரும் படையை திரட்டினார். ஹைதர் அலியின் குதிரை படை உள்ளிட்ட நவீன படைகள் மற்றும் போர் வீரர்களுடனும், மருது சகோதரர்களின் உதவியுடன் சிவகங்கை சீமையில் உருவாக்கப்பட்ட ஆதரவு படையுடனும் 1780-ம் ஆண்டு போர்க்களத்தில் இறங்கினார் வேலுநாச்சியார். 


மருது சகோதரர்களின் துணையுடன் சிவகங்கை சீமையை மீட்க போரிட்ட வேலுநாச்சியார் 

சபதத்தில் ஜெயித்த வேலுநாச்சியார்!

ஆங்கிலேயருக்கு எதிராக 1780-ல் தன் படைகளை மூன்றாகப் பிரித்து மும்முனைத் தாக்குதல் நடத்தினார் வேலுநாச்சியார். விஜயதசமி அன்று சிவகங்கை அரண்மனைக்குள் இருக்கும் ராஜராஜேஸ்வரி கோயிலில் பெண்கள் மட்டும் வழிபாடு நடத்துவது வழக்கம். இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட வேலுநாச்சியாரும், அவரது மகளிர் படையும் ஆயுதங்களை ஆடைக்குள் மறைத்து வைத்துக்கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக அரண்மனைக்குள் புகுந்து திடீர் தாக்குதல் நடத்தினர். வேலுநாச்சியாரின் பெண்கள் படை தளபதியான குயிலி, பிரிட்டிஷ் படைகளின் வெடிமருந்து கிடங்கை தற்கொலைப் படை தாக்குதல் நடத்தி அழித்தார். இதன்மூலம் உலகின் முதல் தற்கொலைப்படை போராளி என்ற வரலாற்றை உருவாக்கினார் குயிலி.

தெளிவான திட்டமிடல், பொறுமை, வீரம் என சாதுர்யமாக செயல்பட்டு சக்திவாய்ந்த ஆங்கிலேயரின் படையை தோற்கடித்து, தனது கணவரின் சமஸ்தானமான சிவகங்கை சீமையை மீட்டெடுத்தார். சபதத்தில் ஜெயித்து அரியணை ஏறினார். அப்போது வேலுநாச்சியாருக்கு 50 வயது. இந்திய சுதந்திர வரலாற்றில் ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டு வென்று முடிசூடிய ஒரே ராணி "வேலுநாச்சியார்"!


ஆங்கிலேயரின் வெடிமருந்து கிடங்கை தற்கொலைப்படை தாக்குதல் நடத்தி அழித்த வேலுநாச்சியாரின் பெண்கள் படை தளபதி குயிலி 

பிரிட்டிஷ் கொடியை இறக்கிய வீரமங்கை 

சபதமிட்டபடி சிவகங்கை கோட்டைக்குள் புகுந்து ஆங்கிலேயரை விரட்டியடித்து, அவர்களின் கொடியை கீழே இறக்கி, சிவகங்கை சீமையின் அனுமன் கொடியை கோட்டைக்குள் பறக்கவிட்டார் வேலுநாச்சியார். 1780 முதல் சுமார் 10 ஆண்டுகள் சிவகங்கை சீமையை ஆண்ட வேலுநாச்சியார், போர்க்களத்தில் சிதையுண்ட சிவகங்கையை செம்மையாக சீரமைத்தார். இவரின் ஆட்சியின்கீழ் சிவகங்கை பல்வேறு வகையிலும் வளர்ச்சி அடைந்தது. 1790-ம் ஆண்டு, ஆட்சியை தனது மகள் வெள்ளச்சி நாச்சியாரிடம் ஒப்படைத்தார் வேலுநாச்சியார். பின்னர் உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர், 1796-ம் ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி இயற்கை எய்தினார்.

இந்தியா பெருமை கொள்ளட்டும்!

வட இந்தியாவில் சுதந்திரப் போராட்டத்தின் முதல் முகமாக ஜான்சி ராணி அடையாளப்படுத்தப்படுகிறார். ஆனால் ஜான்சி ராணி பிறப்பதற்கு 100 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் நிலத்தில் பிறந்து, ஆங்கிலேயரை தோற்கடித்த வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் பெயர் இந்தியா முழுமைக்கும் இன்றுவரை சென்றுசேரவில்லை என்பது கசப்பான உண்மை. வேலுநாச்சியாரின் வரலாற்று வீரத்தில் இந்தியா முழுமையும் பெருமை கொள்ளட்டும்! தமிழகம் மட்டுமன்றி இந்தியா முழுவதும் வேலுநாச்சியாரின் புகழ் பரவட்டும்!

Tags:    

மேலும் செய்திகள்