சின்னக்குயிலுக்கு வயது 62! பல சாதனைகள் படைத்தாலும் நெஞ்சைவிட்டு நீங்காத சோகம்...
இந்தியாவின் 16க்கும் மேற்பட்ட மொழிகளில், 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி தனக்கென தனி இசை சாம்ராஜ்யத்தையே கொண்ட ‘பாடகி சின்னக்குயில்’ சித்ரா வரும் ஜூலை 27ஆம் தேதி தனது 62வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.;
தென்னகத்தின் “சின்னக்குயில்”, “கேரளத்தினின்டே வானம்பாடி” என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர்தான் பாடகி கே.எஸ். சித்ரா. பாடலின் ஒலி அவரது குரலின் வழி வரும்போது நம்மால் அதை ஏற்காமல் இருக்க முடியாது. அப்படி எந்த மொழியில் பாடினாலும், மொழியை சிதைக்காமல், தெளிவான உச்சரிப்போடு, கதாபாத்திரத்தின் தன்மை புரிந்து உணர்வுபூர்வமாக பாடும் ஒரு சில பாடகிகளில் ஒருவர் சித்ரா. இந்தியாவின் அனைத்து பிரதான மொழிகளிலும் கிட்டத்தட்ட 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி, தன்னுடைய குரலால் ரசிகர்களை ஈர்த்தவர் பாடகி சித்ரா. திரையுலகில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பாடகியாக கோலோச்சி வரும் சித்ரா வரும் ஜூலை 27ஆம் தேதி தனது 62வது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். இந்நிலையில் கேரளாவில் பிறந்த இவர் இந்தியாவின் பட்டித் தொட்டி எங்கும், தனது கவிக்குரலால் அனைவரது மனதிலும் தங்கியது எப்படி என்பது குறித்து இந்தப் பதிவில் காணலாம்.
பூஜைக்கேத்த பூவிது... பாடல்தான் தமிழில் சித்ரா பாடிய முதல் பாடல்
கேரளத்தினின்டே வானம்பாடி...
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த வானொலி பாடகரான கிருஷ்ணன் நாயருக்கும், வீணை இசைக் கலைஞரான சாந்தகுமாரிக்கும் கடந்த 1963-ம் ஆண்டு ஜூலை 27-ம் தேதி பிறந்தவர்தான் சித்ரா. இசை பாரம்பரியமிக்க குடும்பத்தில் பிறந்த சித்ராவிற்கு, இளம் வயதிலிருந்தே இசைமீது நாட்டம் இருந்து வந்துள்ளது. தனது ஐந்து வயதிலேயே அகில இந்திய வானொலியில் பாடியும் உள்ளார். தனது பள்ளிப் பருவத்திலேயே பேராசிரியர் ஓமண்ணக்குட்டி என்பவரிடம் இசை பயின்று வந்துள்ளார். அப்போது அவருடைய சகோதரர் எம். ஜி. ராதாகிருஷ்ணன் திரைத்துறையில் புது குரல்வளம் கொண்டவர்களை அறிமுகம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஓமண்ணக்குட்டி, சித்ராவின் பெயரை தனது சகோதரர் இடத்தில் முன்மொழிந்துள்ளார். இதன்மூலம் 1979 ஆம் ஆண்டு ராதாகிருஷ்ணன் மூலம் திரைப்படத்தில் பாடும் வாய்ப்பு பெற்று தனது திரையிசைப் பயணத்தைத் தொடங்கினார் சித்ரா. இதனிடையே பாடகர் யேசுதாஸ் உடன் சிறுவயதிலிருந்தே கச்சேரிகளில் சேர்ந்து பாடி வந்துள்ளார். பூவே பூச்சூடவா படத்தின் மலையாள வெர்ஷன்தான், சித்ரா பாடிய முதல் படம். இப்படத்தில் சித்ராவின் குரலை கேட்ட இளையராஜா, அதன் தமிழ் வெர்ஷனிலும் அவரையே பாட வைக்க வேண்டும் என முடிவு செய்தார். ஆனால் 'நீ தானா அந்தக் குயில்' படத்தில் இடம் பெற்ற 'பூஜைக்கேத்த பூவிது' பாடல்தான் இளையராஜா இசையில் சித்ரா பாடிய முதல் பாடல் ஆகும்.
இளையராஜாவின் இசையமைப்பில்தான் தமிழில் முதல்முறையாக சித்ரா பாடினார்
இதனைத் தொடர்ந்து "கீதாஞ்சலி", “பூவே பூச்சூடவா”, “சிந்து பைரவி” என இளையராஜாவின் இசையில் பல இனிய பாடல்களைப் பாடி தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்ததோடு “சின்னக்குயில்” சித்ரா என அன்போடும், மரியாதையோடும் அழைக்கப்பட்டார். சிந்து பைரவி திரைப்படத்தில் “பாடறியேன் படிப்பறியேன்”, “நானொரு சிந்து காவடி சிந்து” ஆகிய பாடல்களை சிறப்பாக பாடியதற்காக அதே ஆண்டில் தேசிய விருதும் பெற்றார். இதனைத்தொடர்ந்து இசையமைப்பாளர்கள் பலரும் தங்கள் பாடல்களுக்கு உயிரூட்ட சித்ராவின் குரலைத் தேடினர். இசை அமைப்பாளர் கே வி மகாதேவன் இசையமைத்த "பிரளயம்" என்ற திரைப்படத்தின் வாயிலாக பின்னணிப் பாடகியாக தெலுங்கு திரையுலகிற்கும் அறிமுகமானார். மேலும் எண்பதுகளின் பிற்பகுதியில் சந்திரபோசின் இசைக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு இருந்த நிலையில், அவரது இசையிலும் ‘மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு’ போன்ற பல பாடல்களை பாடினார். இப்படி ஜானகி, பி.சுசீலா வரிசையில் தனக்கென ஒரு தனி இடத்தையும் பிடித்தார். அடுத்து தொடர்ந்த பத்தாண்டுகளில் ஏ. ஆர். ரஹ்மான், வித்யாசாகர், சிற்பி, பரத்வாஜ் போன்றவர்களின் இசை பரிணாமத்திலும் பாடல்கள் பாடினார்.
மேடை நிகழ்ச்சி ஒன்றில் கே.எஸ். சித்ரா
இவ்வாறு இவரின் இசைப்பயணம் தொடர கே. வி. மகாதேவன், எம். எஸ். விஸ்வநாதன், குன்னக்குடி வைத்தியநாதன், வி. குமார், இளையராஜா, ஏ. ஆர். ரஹ்மான், கங்கை அமரன், சந்திரபோஸ், தேவா, வித்யாசாகர், எஸ். ஏ. ராஜ்குமார், மரகதமணி, மணிஷர்மா, சிற்பி, பரத்வாஜ், ஆதித்யன், பாலபாரதி, யுவன் சங்கர் ராஜா என தமிழிலும், நதீம் ஷ்ரவண், அனுமாலிக், ராஜேஷ் ரோஷன், நிகில் வினய் என ஹிந்தியிலும் இவர் பின்னணிப் பாடாத இசையமைப்பாளர்களே இல்லை எனும் அளவிற்கு, தென்னிந்திய மொழிகளன்றி, ஹிந்தி, பெங்காலி, ஒரியா, குஜராத்தி, துளு, பஞ்சாபி, ராஜஸ்தானி, உருது, சமஸ்கிருதம், படுகா என உள்நாட்டு மொழிகளிலும், சிங்களம், மலாய், அரபு, லத்தீன், ஆங்கிலம் மற்றும் ஃப்ரஞ்ச் என அயல்நாட்டு மொழிகளிலும் சேர்த்து 25000க்கும் மேல் பாடல்களைப் பாடி தனக்கென ஒரு தனி இசை சாம்ராஜ்யத்தையே உருவாக்கியவர் 'சின்னக்குயில்' சித்ரா. தற்போதுவரை தொடர்ந்து பாடிக் கொண்டிருக்கிறார்.
பல்வேறு விருதுகளை பெற்றுள்ள பாடகி சித்ரா...
சித்ராவால் பெருமை பெற்ற விருதுகள்...
பின்னணி பாடலுக்கான தேசிய விருதை ஆறுமுறை பெற்ற ஒரே பாடகி கே.எஸ். சித்ராதான். மேலும் சிறந்த பின்னணிப் பாடகிக்கான “கேரள மாநில அரசு விருது” பதினைந்து முறையும்,“ஆந்திர மாநில அரசு விருது” ஆறு முறையும், “கர்நாடக மாநில அரசு விருது” இரண்டு முறையும், “தமிழ்நாடு மாநில அரசு விருது” நான்கு முறையும் கிடைக்கப்பெற்றவர். அதுமட்டுமின்றி கலைமாமணி, மத்திய அரசின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்ம பூஷண் உள்ளிட்ட விருதுகளையும் பெற்றிருக்கிறார். சமீபத்தில் வாழ்நாள் சாதனையாளர் விருதையும் பெற்றார். இவ்வாறு பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார் பாடகி சித்ரா.
மகளை இழந்த சித்ரா
பல்வேறு விருதுகளுக்கு சொந்தக்காரரான பாடகி சித்ரா கடந்த 1988ஆம் ஆண்டு விஜயசங்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் கழித்து ஒரு பெண் குழந்தை பிறந்தது. “நந்தனா” எனப் பெயரிடப்பட்ட அந்த பெண் குழந்தை ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும், மற்ற குழந்தைகளை போலவே தன் குழந்தையும் இயல்பாகவே வளர்த்து வந்துள்ளார் சித்ரா. நீண்ட நாட்களுக்குப் பின் பிறந்த குழந்தை என்பதால், அவர்மீது அதீத பாசத்துடன் இருந்து வந்துள்ளார். மேலும் தான் செல்லும் இடத்திற்கெல்லாம் தன் மகளை அழைத்துச் சென்றுள்ளார் சித்ரா. அப்படி முடியாவிட்டாலும், தன்னுடைய குரல் பதிந்த கேசட்டை கேட்கும்படி வைத்து விட்டுதான் செல்வாராம். இப்படி எந்த நேரத்திலும் தன் குரல் தன் மகளுக்கு கேட்கும்படியே இருந்துள்ளார் சித்ரா.
குழந்தைக்கு ஏங்கிய சின்னக்குயிலுக்கு வரமாய் வந்த மகள் நந்தனா..
அவ்வாறு 2011ஆம் ஆண்டு துபாயில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள செல்லும்போது, மகளையும் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு எதிர்பாராவிதமாக நீச்சல் குளம் ஒன்றில் தவறி விழுந்து நந்தனா உயிரிழந்தார். இந்த சம்பவம் சித்ராவின் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் பெரும் துயரத்தில் ஆழ்ந்திருந்த இவரை வெளியில் கொண்டு வருவது மிகவும் கடினமாக இருந்துள்ளது. சித்ராவை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வர சிறுவர்கள் பங்கேற்று பாடும் நிகழ்ச்சிகளுக்கு நடுவராக வற்புறுத்தி அழைத்துச் சென்றுள்ளனர். அப்படி பங்கேற்று கொண்டதுதான் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியாம். நிகழ்ச்சிகள் மெல்ல மெல்ல ஆறுதல் கொடுத்தாலும், தன் மகளின் ஒவ்வொரு நினைவு நாள் அன்றும், அவர் குறித்த நினைவுகளை எழுதுவதை வாடிக்கையாக வைத்துள்ளார் சித்ரா. இதற்கிடையே இந்த கஷ்டத்திலிருந்து வெளிவர வேறு குழந்தை ஒன்றை தத்தெடுக்கவும் சித்ராவுக்கு அறிவுறுத்தினர். ஆனால் வயது மூப்பு காரணமாக அந்த முடிவை மறுத்துள்ளார் சித்ரா. வாழ்க்கையில் பல்வேறு துயரங்களுக்கு மத்தியிலும், தனது பாடல்கள் மூலம் மக்களை மகிழ்வித்துவரும் சின்னக்குயில் சித்ரா என்றும் நலமுடன் வாழ ராணி ஆன்லைன் வாழ்த்துகிறது.