கொத்து கொத்தாக ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ஐடி நிறுவனங்கள்! ஏஐ காரணமா?

நடப்பு நிதியாண்டில் இதுவரை 80 ஆயிரத்திற்கும் அதிகமான தொழில்நுட்ப ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், 12,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யவுள்ளதாக TCS நிறுவனம் அறிவித்துள்ளது.;

Update:2025-08-12 00:00 IST
Click the Play button to listen to article

ஐடி சேவைகள் துறை இந்த ஆண்டு குறிப்பிடத்தக்க மாற்றத்தை சந்தித்து வருகிறது. AI தொழில்நுட்பம், மாறிவரும் வாடிக்கையாளர் தேவைகள், செலவு மேம்படுத்தலுக்கான உடனடித் தேவை உள்ளிட்ட காரணங்களால், தொடக்க நிறுவனங்கள் முதல் ஜாம்பவான்கள் வரையிலான நிறுவனங்களிடையே நிச்சயமற்ற தன்மை உருவாகியுள்ளது. அந்த வகையில், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), மைக்ரோசாஃப்ட், இன்டெல், மெட்டா, பேனசோனிக் உள்ளிட்ட பல உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த ஆண்டு அதன் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்கின்றன. இது குறித்த விரிவான தகவலை இங்கு காண்போம். 


ஐடி துறையில் தொடரும் வேலை நீக்கங்கள்

2025-ல் இதுவரை 80,000-க்கும் மேற்பட்ட IT ஊழியர்கள் பணிநீக்கம்

கொரோனாவால் கடந்த 2020ஆம் ஆண்டு உலகளவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டது. கிட்டத்தட்ட அனைத்து ஐடி நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களைப் பெரிய அளவில் பணிநீக்கம் செய்தன. ஆனால் கொரோனாவிலிருந்து மீண்டு வந்து மூன்று, நான்கு ஆண்டுகள் ஆகும் நிலையில், தற்போது உலகின் பல பிரபல நிறுவனங்களும், இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களும் ஊழியர்களின் எண்ணிக்கையை கடுமையாக குறைத்துள்ளன. ஜூலை 31 நிலவரப்படி,  2025 ஆம் ஆண்டில் 176 நிறுவனங்களில் 80,250 ஐடி ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, தொழில்நுட்பத் துறையில் உள்ள பணிநீக்கங்களைக் கண்காணிக்கும் Layoffs.fyi வலைத்தளம் தெரிவித்துள்ளது. இதில் ஜூலை மாதத்தில் மட்டும் கிட்டத்தட்ட 25,000 வேலை நீக்கங்கள் நடந்துள்ளன. 2024 ஆம் ஆண்டில் மொத்தம் 152,922 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இந்த ஆண்டு இதுவரை அமேசான், கூகுள், ஹெச்பி இன்க்., ஹெச்பிஇ, இன்டெல், மைக்ரோசாஃப்ட், நெட்ஆப், டிசிஎஸ் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிநீக்கங்கள் நடைபெற்றுள்ளன. மாறிவரும் வணிகத் தேவைகளுக்கும், செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சிக்கு ஏற்ப நிறுவனங்கள் தங்களை மாற்றிக் கொள்வதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 


2025-ல் தனது உலகளாவிய பணியாளர்களில் 3% பேரை பணிநீக்கம் செய்தது மைக்ரோசாஃப்ட் 

மைக்ரோசாஃப்ட்

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட், கடந்த மே மாதம் 6,000 ஊழியர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்தது. அதைத்தொடர்ந்து ஜூன் மாதம் முதல் வாரம் 300 பணியாளர்களை நீக்கம் செய்தது. இதில் பெரும்பாலானோர் மென்பொறியாளர்கள் மற்றும் திட்ட இயக்குநர்கள். உலகெங்கும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துக்கு 2.28 லட்சம் பணியாளர்கள் உள்ளனர். இதில் கிட்டத்தட்ட 3 சதவீதம் பேரை நிறுவனம் தற்போது பணி நீக்கம் செய்துள்ளது. முன்னதாக கடந்த 2024ஆம் ஆண்டு அதன் ஊழியர்களில் 4 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது. அதேபோல் 10,000 ஊழியர்களை கடந்த 2023 ஆம் ஆண்டு வேலையை விட்டு அனுப்பி இருந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் மிகப்பெரிய அளவில் பணிநீக்கம் செய்துள்ளது மைக்ரோசாஃப்ட் நிறுவனம். அதுபோல இன்டெல் நிறுவனமும் பெரிய அளவிலான பணியாளர் குறைப்புகளை அறிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அதன் உலகளாவிய பணியாளர்களின் எண்ணிக்கையை 24,000 முதல் 25,000 வரை குறைக்க திட்டமிட்டுள்ளது. FY25-இன் முதல் காலாண்டு மற்றும் இரண்டாம் காலண்டில் இழப்பை சந்தித்த பிறகு இந்த பணிநீக்கம் குறித்து அறிவித்தது இன்டெல். முதல் காலாண்டில் 821 மில்லியன் டாலர் இழப்பும், இரண்டாம் காலாண்டில் 2.9 பில்லியன் இழப்பையும் இந்நிறுவனம் சந்தித்துள்ளது. 


2025-ல் 12 ஆயிரம் பணியாளர்களை பணி நீக்கம் செய்யும் டிசிஎஸ்

டிசிஎஸ்

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் 12 ஆயிரம் பணியாளர்களை பணிநீக்கம் செய்வதாக கடந்த மாத இறுதியில் அறிவித்தது. இது அந்த நிறுவனத்தின் உலகளாவிய பணியாளர்களின் எண்ணிக்கையில் 2 சதவீதம் ஆகும். இந்த பணிநீக்கம் எதிர்கால தேவை மற்றும் மாற்றங்களைச் சமாளிக்கத் தயாராகும் முயற்சியின் ஒரு பகுதி என டிசிஎஸ் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநரான க்ரீத்திவாசன் தெரிவித்துள்ளார். அதுபோல மெட்டா நிறுவனம் 3,600 ஊழியர்களைக் குறைப்பதாக அறிவித்துள்ளது. பொருளாதார மந்தநிலை மற்றும் குறைந்துவரும் PC விற்பனை காரணமாக ஹெச்பி நிறுவனம் 7,000 பணியாளர்களை நீக்குவதாக அறிவித்தது. இதுபோல ஜப்பானிய மின்னணு நிறுவனமான பேனசோனிக், அதன் முக்கிய பிரிவுகளில் தேவை குறைந்து வருவதைக் காரணம் காட்டி 10 ஆயிரம் பணியாளர்களை நீக்குவதாக அறிவித்தது. இது அதன் உலகளாவிய பணியாளர்களில் 4 சதவீதமாகும். ஐடி துறை, தங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட பல பொருளாதாரத் தடைகளைச் சந்தித்து வருவது, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தின் தொடர்ச்சியான வரிவிதிப்பு போன்றவை இந்த பணிநீக்கங்களுக்கு காரணமாக பார்க்கப்பட்டாலும், ஏஐ வளர்ச்சியே இதற்கு முக்கிய காரணம் என்றும் கூறப்படுகிறது. 


பென்ச் கொள்கையை நடைமுறைக்கு கொண்டுவந்த டிசிஎஸ்

ஐடி நிறுவனங்களில் பணிநீக்கம் தொடர்வது ஏன்?

சர்வதேச பொருளாதார நிலைமை

உலகளாவிய பொருளாதார மந்த நிலைமை (global recession fears) மற்றும் வாடிக்கையாளர்கள் செலவுகள் குறைதல் ஆகியவை ஐடி துறையை பெரிதும் பாதித்துள்ளன. மேலும் ஐடி துறையில் உள்ள புதிய பெஞ்ச் கொள்கைகளும் வேலைவாய்ப்பு இழப்பிற்கு காரணமாக அமைகின்றன. 

ஏஐ

பல பணிகள் தற்போது AI மூலம் செய்யப்படும் நிலையில் உள்ளன. ஏஐயின் இந்த வருகையால் முன்னர் மனிதரால் செய்யப்பட்டு வந்த வேலைகளுக்கு தேவையின்றி போய்விடுகின்றன. பல நிறுவனங்களும் தற்போது செயற்கை நுண்ணறிவில் முதலீடு செய்வதிலேயே ஆர்வம் காட்டி வருகின்றன. மேலும் நாளுக்கு நாள் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், பழைய தொழில்நுட்பங்களில் திறமையுள்ள ஊழியர்கள் புதிய தொழில்நுட்பங்களுக்கு update ஆகவில்லை என்றால், அவர்கள் பணிநீக்கத்திற்கு உள்ளாகிறார்கள். பணிநீக்கம் மேற்கொள்ளும் அனைத்து நிறுவனங்களுமே இந்த செயற்கை நுண்ணறிவையே காரணமாக கூறுகின்றன. 

சந்தை தேவை குறைபாடு

குறிப்பிட்ட தொழில்நுட்பங்களுக்கு அல்லது சேவைகளுக்கான தேவை குறைந்துவிட்டால் அந்த துறையில் பணியாற்றுபவர்களுக்கு வேலை இல்லை என்ற நிலை ஏற்படுகிறது. அதுபோல ஒரு சில திட்டங்கள் முடிவடைந்தால் அல்லது மூடப்பட்டால் அதில் வேலை பார்த்த ஊழியர்களுக்கு மற்ற திட்டங்களில் வேலை இல்லாவிட்டால் layoff செய்கின்றனர். மேலும் சில நிறுவனங்கள் தங்கள் தொழில்துறைகளை மறுவடிவமைக்க முயலும்போது ஓரிரு நிலைகளில் வேலை செய்வோர் தேவையற்றவர்களாக மாறுகிறார்கள். 

ஊதியச்சுமை

இப்போதெல்லாம் பல நிறுவனங்களும் அனுபவமிக்க ஊழியர்களுக்கு அதிக சம்பளம் கொடுப்பதைவிட, அதே வேலைக்கு குறைந்த ஊதியத்தில் ஃப்ரெஷ்ஷர்களை எடுத்துக் கொள்கின்றன. 

புதிய Bench கொள்கை

ஜூன் 2025 முதல், TCS நிறுவன ஊழியர்கள் ஆண்டுக்கு குறைந்தது 225 நாட்கள் வாடிக்கையாளருக்காக நேரடியாக பணியாற்ற வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதனால், 35 நாட்களுக்கும் மேலாக வேலை இன்றி “பெஞ்சில்” இருப்பவர்களுக்கு சம்பளத்திலும், பதவி உயர்விலும் அல்லது வேலைவாய்ப்பு தொடர்வதிலும் பாதிப்பு ஏற்படலாம்.


தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப ஊழியர்கள் தங்கள் அறிவை வளர்த்துக்கொள்ள நிறுவனங்கள் அறிவுரை

Bench என்றால் என்ன?

ஒரு ஊழியர் தற்போதைய நிலைக்கு வேலை இல்லாமல், புதிய திட்டத்திற்காக காத்திருக்கும் நிலை. இந்தக் காலத்தில் அவர்களுக்கு சம்பளம் கிடைக்கும், ஆனால் அவர்கள் வாடிக்கையாளர்களுக்கு செலவிடும் நேரம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது.  இந்த முறை நிறுவனத்தின் உற்பத்தி திறனை அதிகரிக்கிறது. அதேநேரம் சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவை பில்லபில் நாட்கள் அடிப்படையிலேயே முடிவு செய்யப்படுகிறது. ஆனால் இந்த முறையால் 35 நாட்களுக்கும் மேலாக பெஞ்சில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு, பணி உயர்வு கிடைக்காமல் போகும். சிலநேரங்களில் வேலையும் பறிபோகும்.

AI மற்றும் Cloud போன்ற துறைகளில் அதிக கவனம் செலுத்தும் நிறுவனங்களுக்கு தேவையற்ற மனித வளத்தை குறைக்க, திறமையானவர்களை மட்டுமே வைத்துக் கொள்வதற்காக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. டிசிஎஸ்- இல் கடந்த காலங்களில் பலர் நீண்ட நாட்கள் bench-இல் இருந்ததால், அளவுக்கதிகமான ஊதியச் செலவுகள் ஏற்பட்டன. இந்த செலவை கட்டுப்படுத்தவே டிசிஎஸ் இந்த மாற்றத்தை கொண்டுவந்தது. 

ஊழியர்கள் என்ன செய்ய வேண்டும்?

நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப ஊழியர்கள் தங்கள் அறிவை வளர்த்து கொள்ள வேண்டும். சந்தையில் உள்ள புதிய தொழில்நுட்பங்களான ஏஐ, டேடா சயின்ஸ் போன்றவற்றை அறிந்து வைத்திருக்க வேண்டும். ஊழியர்கள் தொடர்ந்து புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்வது, திறன்களை மேம்படுத்திக்கொள்வது, தொழில்துறையின் மாற்றங்களை புரிந்துக்கொள்வது உள்ளிட்டவை மிகவும் முக்கியமானது. 

Tags:    

மேலும் செய்திகள்

அமைதி தேவை