நாகர்ஜுனாவின் 2-ம் மனைவியாக சென்ற அமலா! திருமணத்திற்கு பின் பல துயரங்களுடன் வாழ்க்கை?

‘மைதிலி என்னை காதலி’ படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்களின் நெஞ்சை கொள்ளை கொண்ட நடிகை அமலா தனது 59வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். இந்நிலையில் அவர் குறித்த சில சுவாரசிய தகவல்களை இங்கு காணலாம்.;

Update:2025-09-09 00:00 IST
Click the Play button to listen to article

1980களில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின் தென்னிந்தியா முழுவதும் மின்னிய நடிகைகளில் ஒருவர் அமலா. தன் அழகாலும், நடிப்பாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என தென்னிந்திய சினிமாவையே ஒரு சுற்று சுற்றிவந்தார். திருமணத்திற்கு பின் விழுந்த இடைவெளியை ஈடுகட்ட மீண்டும் நடிப்பின் பக்கம் திரும்பிய அமலா உணர்ச்சிப்பூர்வமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில் வரும் 12ஆம் தேதி தனது 58-வது பிறந்தநாளை கொண்டாடவிருக்கிறார் அமலா. அமலாவுக்கு வயது 58-ஆ என அனைவரும் ஆச்சர்யத்துடன் கேட்கும் அளவிற்கு, தற்போதும் இளமை மாறாத தனது அழகு சிரிப்புடன் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அமலாவின் பிறந்தநாளை ஒட்டி அவர் குறித்த பல சிறப்பு தகவல்களை இங்கு காணலாம். 


மைதிலி என்னை காதலி மற்றும் மெல்ல திறந்தது கதவு படத்தில் நடிகை அமலா

அமலா அக்கினேனி...

1967ஆம் ஆண்டு பெங்காலி தந்தைக்கும், ஐரிஷ் தாய்க்கும் பிறந்தவர்தான் நடிகை அமலா. தந்தை இந்திய கடற்படையில் வேலை செய்ததால், சிறுவயதிலேயே சென்னைக்கு குடிபெயர்ந்துள்ளனர். அப்போது கலாஷேத்ரா கல்லூரியில் அமலாவை சேர்த்துள்ளார் அவரது தாய். சினிமா பயணத்தை தொடங்குவதற்கு முன்பு கிளாசிக்கல் டான்ஸராக உலகம் முழுவதும் ஆடியுள்ளார் அமலா. அப்படி மேடையில் ஒருமுறை அமலாவின் நடனத்தை பார்த்த நடிகர் மற்றும் இயக்குநருமான டி.ராஜேந்தர் மற்றும் அவரது மனைவி, அமலாவிடம் சென்று படத்தில் நடனமாடுவாயா? எனக் கேட்டுள்ளனர். நடனம்தானே என அவரும் ஒப்புக்கொண்டுள்ளார். இப்படித்தான் ‘மைதிலி என்னை காதலி’ படத்தில் அமலாவை அறிமுகப்படுத்தினார் டி.ராஜேந்தர். இப்படம் வெற்றிப்பெற தொடர்ந்து வந்த படவாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டுள்ளார் அமலா.

அப்படி அவர் நடிப்பில் வெளிவந்த இரண்டாவது படம்தான் ‘மெல்ல திறந்தது கதவு’. அப்படத்தில் இவரின் நூர்ஜஹான் கதாபாத்திரமும், ‘தேடும் கண் பார்வை’, ‘வா வெண்ணிலா’ போன்ற பாடல்களும் தற்போதும் ரசிகர்களின் மனதில் எவர்கிரீனாக உள்ளது. இப்படி இந்தியாவின் 5 மொழிகளில் 50க்கும் மேற்பட்ட படங்களில் ரஜினி, கமல், விஜயகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் அமலா. 1992-ல் நாகர்ஜுனாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். நாகர்ஜுனாவின் இரண்டாம் மனைவியாக அக்கினேனி குடும்பத்திற்கு சென்றார். இவர்களின் திருமண நிகழ்வு சுவாரஸ்யமானது.

நாகர்ஜுனா - அமலா காதல் கதை!

அமலாவைச் சந்திப்பதற்கு முன்பு, நாகர்ஜுனாவின் தனிப்பட்ட வாழ்க்கையில் பல சவால்கள் இருந்தன. 1984-ம் ஆண்டு லட்சுமி டகுபதியை திருமணம் செய்தார் நாகர்ஜுனா. இது இந்தியாவின் 2 முக்கிய திரைப்படக் குடும்பங்களை இணைத்த திருமணம். இந்த தம்பதிக்கு 1986-ஆம் ஆண்டு நாக சைதன்யா பிறந்தார். நாகார்ஜுனா, லட்சுமி இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் காரணமாக, 1990-ஆம் ஆண்டு இருவரும் விவாவரத்து செய்து பிரிந்தனர்.

விவாகரத்திற்கு பின் சினிமாவில் தீவிர கவனம் செலுத்திவந்த நாகர்ஜுனா, ஒரு படத்தின் படப்பிடிப்பின் போது அமலாவை சந்தித்துள்ளார். இருவருக்கும் இடையே ஆழமான நட்பு உருவான நிலையில், இருவரும் பல படங்களில் ஒன்றாக நடித்தனர். அமலாவின் நேரம் தவறாமை, தொழில் அர்ப்பணிப்பு ஆகியவை நாகர்ஜுனாவை பெரிதும் ஈர்த்ததாம். அமலாவின் எளிமையால் மிகவும் ஈர்க்கப்பட்ட நாகர்ஜுனா, ஒருக்கட்டத்தில் அமலாவை காதலிக்க தொடங்கினாராம்.

இந்தநேரத்தில், இருவரும் இணைந்து நடித்த படம் ஒன்றில், அமலாவின் காட்சி ஒன்றிற்கு கவர்ச்சியான ஆடைகளை அணியுமாறு இயக்குநர் கூறியதாக சொல்லப்படுகிறது. அப்பொழுது அழுதுகொண்டு இருந்த அமலாவை தேற்றிய நாகர்ஜுனா, ஆடைகுறித்து தான் இயக்குநரிடம் பேசுவதாக கூறி அந்த பிரச்சனையை முடித்து வைத்துள்ளார். அப்போதிலிருந்து நாகர்ஜுனா மீது ஒரு மரியாதை வந்துள்ளது அமலாவுக்கு.

இந்நிலையில் 1991-ஆம் ஆண்டில், படப்பிடிப்புக்கு அமெரிக்கா சென்றிருந்த நேரம், அமலாவிடம் தனது காதலை தெரிவித்தாராம் நாகர்ஜுனா. இதனை சற்றும் எதிர்பாராத அமலா, ஆச்சர்யத்தில் ஆழ்ந்தாராம். ஒருவித சந்தோஷம் இருந்தாலும், சற்று அச்சத்துடனேயே நாகர்ஜுனாவின் காதலை ஏற்றுக்கொண்டாராம் அமலா. இதைத் தொடர்ந்து 1992-ஆம் ஆண்டு நாகார்ஜுனாவும், அமலாவும் சென்னையில் எளிய முறையில் திருமணம் செய்து கொண்டனர். இதில் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். திருமணமான 2 ஆண்டுகளுக்கு பிறகு 1994-ல் அகில் அக்கினேனி பிறந்துள்ளார்

திருமணத்திற்கு பின் நடிப்பதை நிறுத்திக்கொண்ட அமலா, சமூக ஆர்வலராகவும் இருந்து வருகிறார். முதலில் ப்ளூ கிராஸில் தன்னார்வலராக இருந்த அமலா, திருமணத்திற்கு பிறகு ஹைதராபாத்தில் ‘ப்ளூ கிராஸ் ஆஃப் ஹைதராபாத்’ என்ற விலங்குகள் நல காப்பகத்தை தொடங்கி, நோய்வாய்ப்படும் விலங்குகள், அடிப்படும் விலங்குகள் உள்ளிட்டவற்றுக்கு மருத்துவ உதவி அளிப்பது, நாய்களுக்கு கருத்தடை செய்வது, விலங்குகள் நல தன்னார்வலராக வரவிரும்பும் மாணவர்களுக்கு கோர்ஸ் நடத்துவது போன்ற பணிகளை செய்துவருகிறார். மேலும் ஃபிலிம் இன்ஸ்டிடியூட் ஒன்றையும் நடத்திவருகிறார். இதற்கிடையே மீண்டும் சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுத்து உணர்ச்சிபூர்வமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.  


அமலா மீது ரஜினிகாந்த் காதல்வயப்பட்டிருந்ததாக கிசுகிசு...

ரஜினியுடன் காதலா?

திருமணத்திற்கு முன்பு பல நடிகர்களுடன் சேர்த்துவைத்து கிசுகிசுக்கப்பட்டார் அமலா. நடிகர் ரஜினி அமலாவை திருமணம் செய்துகொள்வதற்காக, மனைவி லதாவையே விவாகரத்து செய்ய முயன்றதாகவும், பின்னர் இயக்குநர் பாலச்சந்தரின் அறிவுரையை கேட்டு, மீண்டும் மனைவியுடன் இணைந்து வாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. அத்துடன் கமலுடன் கொஞ்சம் நெருக்கமான காட்சிகளில் நடித்ததால் அவருடனும் சேர்த்துவைத்து பேசப்பட்டார் அமலா. ஆனால் இதை எல்லாம் காதில் போட்டுக்கொள்ளாத அமலா 1992-ஆம் ஆண்டு நாகர்ஜுனாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 


மகன் அகில் அக்கினேனியுடன் நாகர்ஜுனா-அமலா தம்பதி & நாகர்ஜுனா- நடிகை தபு

நாகர்ஜுனாவின் முதல் மகனான நாக சைதன்யாவையும் அமலா வளர்த்து வந்தாராம். மேலும் திருமணத்திற்கு பின் தான் நடிக்கவில்லை எனவும் நாகர்ஜுனாவிடம் தெரிவித்துள்ளார் அமலா. நாகர்ஜுனாவும் உனக்கு என்ன விருப்பமோ அதை செய் எனக் கூறினாராம்.  இவர்களின் திருமணத்திற்கு பிறகு தபுவுக்கும், நாகர்ஜுனாவிற்கும் இடையே காதல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின. மேலும் நாகர்ஜுனாவுடனான திருமண வாழ்க்கையில் அமலா பல துயரங்களை சந்தித்து வருவதாகவும், அவருக்கு மொட்டை அடிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த தகவல்கள் எல்லாம் அப்போது பெரும் பூதாகரமாக வெடிக்க "எனது கணவர் மற்றும் தபு என இருவரைப் பற்றியுமே எனக்கு தெரியும்" எனக்கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் அமலா. "நாகர்ஜுனா, நான், தபு ஆகிய மூவரும் நல்ல நண்பர்கள், அந்த உறவு எப்போதும் தொடரும்" என தெரிவித்தார். இப்படி இவர்கள் திருமண வாழ்வில் நிறைய வதந்திகள் எழுந்தாலும் தற்போதுவரை இந்திய சினிமாவின் எவர்கிரீன் ஜோடிகளில் ஒன்றாக வலம் வந்துக் கொண்டிருக்கின்றனர். இதனிடையே திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகியிருந்த அமலா, 20 ஆண்டுகளுக்கு பின், ‘லைஃப் இஸ் பியூட்டிஃபுல்’ என்ற படத்தில் நடித்தார். அதன்பின் தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகளில் நல்ல கதாபாத்திரங்களை தேர்வுசெய்து நடித்து வருகிறார். 

`ப்ளூ கிராஸ் ஆஃப் ஹைதராபாத்’ 

அமலா, நடிகை என்பதை தாண்டி ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா இன்டர்நேஷனல் ஸ்கூல் ஆஃப் ஃபிலிம் அண்ட் மீடியா கல்லூரியின் இயக்குநர் என்பது பலருக்கும் தெரியாது. இத்திரைப்பட பள்ளியை அக்கினேனி குடும்பத்தினர் நிறுவியுள்ளனர். இந்த பள்ளியில் நடிப்பு, எடிட்டிங், இயக்கம், ஒளிப்பதிவு, தயாரிப்பு போன்ற அனைத்து பிரிவுகளுக்குமான கல்வியும், பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இந்த பள்ளியின் கல்வி ஆலோசனை குழுவில் ஹேமமாலினி, கமல்ஹாசன், மணிரத்னம், ஷப்னா ஆஸ்மி மற்றும் பலர் உள்ளனர். நடிகை, கல்லூரியின் இயக்குநர் என்பதைவிட விலங்குகள் மீது அதீத அன்பு கொண்டவர் என அமலாவைக் கூறலாம். சிறுவயதில் இருந்தே விலங்குகள் மீது அன்பு கொண்டிருந்த அமலா, ப்ளூ கிராஸ் ஆஃப் இந்தியா அமைப்பில் ஒரு தன்னார்வலராக இருந்து வந்தார். தனது திருமணத்திற்கு பின் அடிப்பட்ட விலங்குகளை தனது வீட்டிற்கு கொண்டுவந்து அவற்றிற்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார்.


விலங்குகள் மீது அதிகம் அன்புகொண்ட நடிகை அமலா

ஒருகட்டத்தில் வீடு முழுவதும் விலங்குகள் நிறைய, இதை ஏன் அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லக்கூடாது என நாகர்ஜுனா கேட்டுள்ளார். மேலும் ‘ப்ளூ கிராஸ் ஆஃப் ஹைதராபாத்’ தொடங்க அமலாவிற்கு நிதியுதவி அளித்தும், அதற்கான முதல் ஆம்புலன்ஸையும் வாங்கி தந்துள்ளார். தொடர்ந்து தற்போதுவரை 32 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த விலங்குகள் நல காப்பகத்தை பராமரித்து வருகிறார். இந்த வளாகத்தில் நாய்கள், பூனைகள், ஒட்டகங்கள், எருமைகள், கழுதைகள், குரங்குகள் உள்ளிட்ட காயம்பட்ட, கைவிடப்பட்ட விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் தன்னார்வத்தோடு வரும் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு விலங்குகளை கையாள்வதற்கு, அவற்றிற்கு முதலுதவி வழங்க தனது குழுவுடன் இணைந்து பயிற்சியும் கொடுத்து வருகிறார். "இந்த உயிரினங்களுக்கு என்னால் முடிந்ததை உதவியிருக்கிறேன். அதேசமயம் அவைகளும் எனக்கு உதவி இருக்கின்றன. அவை என்னை மனிதராக உணர்வதற்கு உதவியிருக்கின்றன" என விலங்குகள் மீதான தனது அன்பை அழகாக கூறுகிறார் அமலா. வெளித் தோற்றத்தில் மட்டும் அழகாக இல்லாமல், அகத்திலும் அழகாக இருக்கும் அமலாவின் பிறந்தநாள் சிறக்க வாழ்த்துகள்.

Tags:    

மேலும் செய்திகள்