ரயில் டிக்கெட் கட்டணம் உயர்வு! டிக்கெட் முன்பதிவு முறையிலும் மாற்றம்!
ரயில் டிக்கெட் கட்டணம் ஜூலை 1 முதல் உயர்த்தப்படுவதுடன், ரயில் டிக்கெட் முன்பதிவு முறையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.;
143 கோடி மக்கள்தொகை கொண்ட உலகின் 2வது மிகப்பெரிய மக்கள்தொகையை உள்ளடக்கிய இந்தியாவில், ரயில் பயணம் என்பது ஏழை, நடுத்தர மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம் தான். வேலை தேடியோ, பொருளீட்டவோ, இடம் பெயரவோ பயணப்பட நினைப்பவர்களின் யோசனைக்கு தப்பாமல் நினைவில் வருவது ரயில் பயணம்தான். குறைவான பயண நேரம், நீண்ட தூரம் பயணிக்க ஒரே போக்குவரத்து, குறைவான கட்டணம், கழிப்பறை மற்றும் உணவக வசதி போன்ற இன்றியமையாத காரணங்களுக்காத்தான் பொதுமக்கள் ரயிலையே நம்பி இருக்கின்றனர். பொதுவாக நீண்ட தூரம் பயணிப்பதற்கு வேறெந்த பயண சேவைகளுக்கும், தூரம் கூட கூட, டிக்கெட் கட்டணமும் உயர்ந்து கொண்டே இருக்கும்; ஆனால் ரயில் சேவையில் மட்டும்தான் தூரம் கூட கூட, டிக்கெட் கட்டணம் குறைந்து கொண்டே வரும். சாலைப் போக்குவரத்தில் இருந்து ஒரு பாதுகாப்பான பயணத்தை தருகிற காரணத்தினால்தான் பெரும்பாலான பயணிகள் ரயில் போக்குவரத்தை நம்பி இருக்கின்றனர். அதனால்தான் 11 மணிக்கு தொடங்கும் தட்கல் முன்பதிவின் போது 11:01 க்கு அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விடுகின்றன. இந்நிலையில்தான் ஜூலை 1 முதல் புதிய ரயில் டிக்கெட் கட்டணம் அமலுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. படிப்படியாக டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படும் என மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா தெரிவித்துள்ளார்.
தட்கல் டிக்கெட் முன்பதிவிற்கு ஆதார் கட்டாயம்
இந்திய ரயில்வே - ஓர் பார்வை
இந்திய ரயில்வே உலகின் நான்காவது மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க் ஆகும். இந்தியாவில் உள்ள ரயில் வலையமைப்பின் மொத்த நீளம் 68,584 கிமீ (42,616 மைல்) ஆகும். 132,310 கிமீட்டருக்கும் (82,210 மைல்) அதிகமான பாதை மற்றும் 7000க்கும் அதிகமான ரயில் நிலையங்கள் என மிகப்பெரிய ரயில் சேவையாக திகழ்கிறது. இந்திய ரயில்வே ஆண்டுதோறும் 11 பில்லியனுக்கும் அதிகமான பயணிகளையும், 1.416 பில்லியன் டன் சரக்குகளையும் கொண்டுசெல்கிறது. அதேபோல இந்தியாவில் தினமும் 1.8 கோடி பயணிகள் இந்திய ரயில்வே மூலம் பயணிப்பதாகவும், அவர்களுக்குப் போதுமான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்யும் விதமாக மொத்தம் 473 இணை ரயில்களில் உணவுத் தயாரிப்புப் பிரிவுகளும், 706 இணை ரயில்களில் உணவு வழங்கும் வசதியும் உள்ளதாக கடந்த ஆண்டு நடைபெற்ற ஆண்டறிக்கை கூட்டத்தில் மத்திய அமைச்சர் அஸ்விணி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார். கிட்டத்தட்ட 28 மாநிலங்களையும், 3 யூனியன் பிரதேசங்களையும் இந்திய ரயில்வே இணைக்கிறது. சிக்கிம் மட்டுமே இந்திய ரயில் வலையமைப்புடன் இன்னும் இணைக்கப்படவில்லை. அதுமட்டுமல்ல பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கும் இந்தியாவில் இருந்து ரயில்கள் இயக்கப்படுகின்றன. சாதரண வகுப்புகளுடன் கூடிய பயணிகள் ரயில்கள் தொடங்கி, எக்ஸ்பிரஸ், மெயில், சூப்பர் ஃபாஸ்ட், தேஜஸ் மற்றும் வந்தே பாரத் என பலவிதமான ரயில்கள் இந்தியாவில் இயங்குகின்றன. இது தவிர மும்பை, டெல்லி, சென்னை போன்ற முக்கிய நகரங்களில் புறநகர் ரயில் சேவையும் கணிசமான அளவு பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இது பொதுமக்கள், சுமூகமான மற்றும் குறைவான கட்டணங்களுடன் பயணிக்க வழிவகை செய்கிறது.
முன்பதிவு செய்யப்பட்ட பயணம் குறித்த தகவல்களை சரிபார்க்கும் பயணிகள்
ஜூலை 1 முதல் அதிரடி மாற்றம்
இந்நிலையில்தான் ஜூலை 1, 2025 முதல் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வோர் தங்களது ஆதாரை இணைப்பது கட்டாயம் என மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. தட்கல் திட்டத்தின் பலன்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், இது மோசடிகளை தடுத்து பல்க் புக்கிங்-ஐ தடை செய்ய வழிவகுக்கும் எனவும் ரயில்வே அமைச்சகம் ஜூன் 10, 2025 அன்று வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருந்தது. எனவே ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் முன்பதிவிற்கு இனி ஆதார் இணைப்பு கட்டாயம் இருக்க வேண்டும்.
உயரும் டிக்கெட் விலை...
ரயில் கட்டணத்தை உயர்த்த திட்டமிட்ட மத்திய அரசு, இந்த கட்டண உயர்வு ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் என அறிவித்தது. ரயில் பயணத்தின் தரத்தை மேம்படுத்தவும், புதிய திட்டங்களை கொண்டு வரவும், விலை வாசி உயர்வு, வருமானம் போன்ற காரணிகளின் அடிப்படையிலும் டிக்கெட் விலை உயர்த்தப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது. ஆனால், இந்த விலைவாசி உயர்வு ஏழை, நடுத்தர மக்களை ஓரளவு பாதிக்கும் என்பதால் பலரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
ரயிலில் தங்கள் பெட்டிகளை பார்த்து ஏறும் பயணிகளின் மாதிரி படம்
யாருக்கு எவ்வளவு கட்டணம் உயர்வு?
சாதாரண ரயில் பயணிகளுக்கான கட்டணம் ஒரு கிலோமீட்டருக்கு 1 பைசா உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. அதே போல ஏசி வகுப்பு பயணிகளுக்கான கட்டணம், கிலோமீட்டருக்கு 2 பைசா வரை உயரும் வாய்ப்புள்ளது. ஆனால் புறநகர் ரயில் பயணிகளுக்கும், இரண்டாம் வகுப்பு பயணிகளுக்கும் 500 கிலோமீட்டர் வரை பயணம் செய்பவராக இருந்தால் கட்டண உயர்வு இருக்காது. 500 கிலோமீட்டருக்கு மேல் பயணம் செய்பவர்களுக்கு அரை பைசா மட்டுமே கட்டணம் உயர்த்தப்படும். உதாரணத்திற்கு 600 கி.மீ பயணிக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அதற்கு அரை பைசா என கணக்கிட்டால் ரூ. 3 கூடுதலாக கட்டணம் உயரும். மேலும் மாதந்திர சீசன் டிக்கெட்டுகளில் கட்டண உயர்வு இருக்காது. அதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
குளிர்சாதன வசதி அல்லாத ரயில் அல்லது விரைவு ரயில்களில் பயணம் செய்பவர்களுக்கு ஒரு கி.மீட்டருக்கு 1 பைசா என்ற விகிதத்தில் கட்டணம் உயர்த்தப்படுகிறது. உதாரணமாக உங்கள் பயண தூரம் 1,000 கி.மீ ஆக இருப்பின் பயணத்திற்கான டிக்கெட் கட்டணம் முன்பு இருந்ததை விட ரூ.10 அதிகரிக்கும். குளிர்சாதன வகுப்பு பெட்டிகளான ஏசி சேர் கார், ஏசி 3-டயர், 2-டயர் அல்லது முதல் வகுப்பு ஏசி என அனைத்து ஏசி வகுப்புகளுக்கும் ஒரு கி.மீட்டருக்கு 2 பைசா உயர்த்தப்படுகிறது. அதாவது உங்கள் பயண தூரம் 1,000 கி.மீ ஆக இருப்பின் நீங்கள் முன்பு செலுத்தியதை விட ரூ.20 அதிகமாகச் செலுத்த வேண்டும்.
டிக்கெட் விலை உயர்வு குறித்து கருத்து தெரிவித்த மத்திய இணை அமைச்சர் சோமண்ணா
அதிர்ச்சியில் பொதுமக்கள்...
ரயில் டிக்கெட் விலை உயர்வு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், கடந்த 2013 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் கொண்டுவரப்பட்ட விலை உயர்வைக் காட்டிலும், இது மிகக்குறைவு என்றே கூறப்படுகிறது. மேலும் இந்த விலை உயர்வால் பாதிப்பு எதுவும் ஏற்படாது எனவும், இதனால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை எனவும் ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.