போரில், அமானுஷ்யத்தை பயன்படுத்தும் இஸ்ரேல்? ஈரானுக்கு எதிராக சாத்தானை ஏவி சித்ரவதை?
இஸ்ரேல் உளவு பார்ப்பதற்காக இயற்கைக்கு அப்பாற்ப்பட்ட சக்திகளான ஜின்களை பயன்படுத்துவதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.;
உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே 3 ஆண்டுகளுக்கும் மேலாக போர் தொடர்ந்து வருகிறது. இரு நாடுகளுக்கிடையேயான இந்த போரில் லட்சக்கணக்கான பொதுமக்களும், ராணுவ வீரர்களும் இறந்துள்ளனர். இந்த நாடுகளுக்கிடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர பல உலக நாடுகளும் முயற்சித்து வருகின்றன. ஆனால் இதுவரை எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. இதனிடையே அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து இந்த போர் நிறுத்த பேச்சுவார்த்தை இன்னும் தீவிரமடைந்தது. ஆரம்பத்தில் பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நிலையில், அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன. காரணம் ரஷ்யாவுக்கு ஆதரவாக பல கருத்துகளை அமெரிக்கா முன்வைத்தது. இதற்கு உக்ரைன் மறுப்பு தெரிவிக்க, அதிபர் ஜெலன்ஸ்கி மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுப்பதாகவும், பல அப்பாவி மக்களின் உயிர்களை கருத்தில் கொள்ளவில்லை எனவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டினார். இந்நிலையில் திடீரென உக்ரைனுக்கு ஆதரவாக பேசிவரும் அமெரிக்கா, ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதாக கூறி இந்தியாவிற்கு அதிக வரிவிதித்து வருகிறது. இதனிடையே மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில், தங்களுக்கு எதிரான போரில், அமானுஷ்ய சக்திகளை இஸ்ரேல் பயன்படுத்தியதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் இஸ்ரேல் அதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறது. போரில் நிஜமாகவே அமானுஷ்ய சக்திகளை பயன்படுத்த முடியுமா? இஸ்ரேல் பயன்படுத்தியதாக கூறப்படும் இயற்கைக்கு அப்பாற்ப்பட்ட சக்தியான "ஜின்" என்றால் என்ன என்பது குறித்து இங்கு காண்போம்.
இஸ்ரேலின் தாக்குதல்களால் நிலைகுலைந்துள்ள காஸாவின் கட்டிடங்கள்
மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையே தொடரும் போர்பதற்றம்...
கடந்த 2023ஆம் ஆண்டு அக்.7ஆம் தேதி காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து இஸ்ரேல் ஹமாஸ் மீது போரை அறிவித்தது. இந்தப் போர் கிட்டத்தட்ட 2 ஆண்டுகாக தொடர்ந்து வரும் நிலையில், காசாவில் உணவின்றி குழந்தைகளும், பொதுமக்களும் இறந்து வருகின்றனர். காசாவிற்கு அனுப்பப்படும் மனிதாபிமான உதவிகளையும் இஸ்ரேல் தடுத்து வருகிறது. தற்போதுவரை பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இப்போரை முடிவுக்கு கொண்டுவர உலக நாடுகள் பல முயற்சியில் ஈடுபட்டாலும், அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தது. தற்போது காசாவை கைப்பற்றும் முனைப்பில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது. இதனிடையே ஹமாஸ் - இஸ்ரேல் இடையேயான இந்தப் போர் மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் பரவியுள்ளது.
இஸ்ரேலின் தென்மேற்கில் காசா முனை அமைந்துள்ளது. வடக்குப் பகுதி எல்லையில் லெபனான் அமைந்துள்ளது. காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு, ஈரானின் ஆதரவு பெற்றதாக கூறப்படும் லெபனான் நாட்டில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது. ஹமாஸுக்கு ஆதரவு தெரிவித்து, இஸ்ரேல் எல்லை அருகே தாக்குதலும் நடத்தியது. இதனால் இஸ்ரேலின் மொத்த கவனமும் ஹமாஸ் பக்கத்திலிருந்து, ஹிஸ்புல்லா பக்கம் திரும்பியது. இந்த இரண்டு இயக்கங்களுக்கும் பின்னணியில் ஈரான் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்களை தொடங்கியது ஈரான். இதுபெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஈரானின் இந்த தாக்குதல் மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் எனவும் கூறப்பட்டது. தொடர்ந்து ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி கொடுப்போம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார். இப்படி இருநாடுகளுக்கு இடையே சின்ன சின்ன தாக்குதல்கள் தொடர, கடந்த ஜூன் மாதம் 12 நாட்கள் தொடர் தாக்குதலை, அமெரிக்க ஆதரவுடன் ஈரான் மீது இஸ்ரேல் தொடுத்தது. இந்த 12 நாள் போரில் தங்களது இலக்குகளை அடைந்துவிட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்தார்.
தெற்கு லெபனானின் பகுதிகளை இஸ்ரேல் குறிவைத்து தாக்கியதால் ஏற்பட்ட பாதிப்பு
இஸ்ரேல் தரப்பில் இப்படி கூறப்பட்டாலும், ஈரானை இஸ்ரேலால் எதுவும் செய்ய முடியாது என மறுதரப்பினர் கூறினர். ஏனெனில் ஈரானின் பெரும்பாலான நிலப்பகுதி மலைப் பிரதேசமாக உள்ளது. தரைப் படைகள் இங்கு எப்படி வரும்? ஈரானில் அதிகார மாற்றத்தைக் கொண்டு வர தரைப்படைகள் தேவை. இதை இஸ்ரேலால் எப்படிச் செய்ய முடியும்? காஸாவில் சண்டையிடுவதற்கே அதற்குப் போதிய ஆட்கள் இல்லை என பலரும் தெரிவித்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து இயற்கைக்கு அப்பாற்பட்ட அமானுஷ்ய சக்திகளை இந்த பன்னிரெண்டு நாட்கள் போரில் இஸ்ரேல் பயன்படுத்தியதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. அதாவது இஸ்ரேலியர்கள் மற்றும் ஈரானியர்களால் நம்பப்படும் "ஜின்"களை போரில் பயன்படுத்தியதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. ஜாவான் நாளிதழின் முன்னாள் ஆசிரியரும், தற்போது டெஹ்ரான் மேயரின் ஆலோசகருமான அப்துல்லா கஞ்சி, ஜூலை 9 அன்று சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்த ஒரு பதிவில், யூத தாயத்துக்கள் வரையப்பட்டிருந்த காகித துண்டுகள் டெஹ்ரானின் நகர் முழுவதும் கண்டெடுக்கப்பட்டிருந்தாக குறிப்பிட்டிருந்தார். இஸ்ரேல் உளவு பார்ப்பதற்கு ஜின்களை பயன்படுத்தி வருவதாக நீண்ட நாட்களாகவே ஈரான் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறது. இந்நிலையில் இந்தப் போரிலும் இதனை தொடர்புபடுத்தி கஞ்சி பேசியுள்ளார். இதற்கு முன் கடந்த 2020ஆம் ஆண்டு அயதுல்லா அலி கமேனியும் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தது குறிப்பிடத்தக்கது. மூடநம்பிக்கைகள் என கூறப்படும் இதுபோன்ற இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளை போர்களில் பயன்படுத்த முடியுமா? எனவும் பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில், மத்திய ஈரானில் உள்ள ஒரு ஏவுகணை தளத்திற்கு அருகிலுள்ள பாலைவனத்தில், நம் நாட்டில் கூறப்படும் சூனியம் போன்ற செயல்கள் செய்தது போன்ற செயற்கைக்கோள் படங்கள் ஆன்லைனில் பரவத் தொடங்கியது இந்த விவகாரத்தில் மேலும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
பேய் போன்ற அமானுஷ்ய சக்திக்கு இஸ்லாத்தில் ஜின் என்று பெயர்
ஜின் என்றால் என்ன?
ஜின் என்ற அரபு வார்த்தைக்கு, கண்ணுக்கு புலப்படாதது அல்லது மறைவானது என்று பொருள். நாம் எப்படி இங்கு பேய் எனக் கூறுகிறோமோ அதுபோல இஸ்ரேல், ஈரானில் ஜின். மனிதன் படைக்கப்படுவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த ஜின்கள் படைக்கப்பட்டதாக இஸ்லாத்தில் நம்பப்படுகிறது. மனிதர்களின் கண்களுக்கு இவை புலப்படாது என்றும், ஆனால் அவைகளுக்கு மனிதர்கள் தெரிவார்கள் என்றும் கூறப்படுகிறது. கண்களுக்கு தெரியவில்லை என்றாலும் இதன்மீது நம்பிக்கை கொள்ளவேண்டும் என்றும், அப்படி நம்பிக்கை கொள்ளாதவர்கள் இஸ்லாத்தை ஏற்காதவர்கள் எனவும் கூறப்படுகிறது. அல்லாஹ் நெருப்பிலிருந்து இந்த ஜின்னை படைத்ததாக இஸ்லாமியர்கள் நம்புகின்றனர். மனிதர்கள், பறவைகள் போல இவையும் ஒரு உயிரினம் என்றும், இவற்றிலும் ஆண், பெண் என பிரிவுகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவை பாம்பு, நாய், போன்ற வடிவங்களில் உருமாறும் என்றும் கூறப்படுகிறது. சைத்தான்களும் ஜின் இனத்தை சார்ந்தவைதான் எனக் கூறப்படுகிறது. இவை மனிதர்களுக்கு நல்லவையும் செய்யும், தீவையையும் செய்யும் என சொல்லப்படுகிறது.
இஸ்ரேல், தங்கள் நாட்டின் மீது ஜின்களை பயன்படுத்தியதாக ஈரான் அதிகாரி அப்துல்லா கஞ்சி குற்றச்சாட்டு
ஈரானின் குற்றச்சாட்டு உண்மைதானா?
இஸ்லாமிய உலகில் ஜின்கள் மீதான நம்பிக்கை பொதுவானதாக இருந்தாலும், பலராலும் இது அறிவியல் உலகிற்கு அப்பாற்பட்டதாகவே பார்க்கப்படுகிறது. இஸ்ரேல் மீதான ஈரானின் இந்த குற்றச்சாட்டு கேலி, கிண்டல்களுக்கும், ஜின்கள் தொடர்பான விவாதத்திற்கும் வழிவகுத்துள்ளது. மேலும் பலரும் ஜின்கள் என்பது உண்மையாக இருந்தால், உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு, ஆப்கானிஸ்தானியர்கள் நாடு கடத்தப்படுவது ஏன்? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.