கள்ளக்காதல் விவகாரத்தில் இந்தியாவிலேயே காஞ்சிபுரம் முதலிடம்? கொதித்தெழும் மக்கள்...

திருமணம் தாண்டிய தகாத உறவில் இருப்பவர்களின் எண்ணிக்கையில், இந்திய அளவில் காஞ்சிபுரம் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளதாக சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. இது தமிழ்நாடு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;

Update:2025-08-05 00:00 IST
Click the Play button to listen to article

தமிழ்நாட்டில் வரலாற்று ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் வளர்ந்து வரும் மாவட்டங்களில் ஒன்றாக இருப்பது காஞ்சிபுரம். இந்நிலையில் திருமணம் தாண்டிய தகாத உறவில் இருப்பவர்களின் எண்ணிக்கையில், இந்திய அளவில் காஞ்சிபுரம் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளதாக சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. இது தமிழ்நாடு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதற்கு காஞ்சிபுரம் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எந்தவித அடிப்படை ஆதாரமும் இன்றி, குறிப்பிட்ட ஒரு நகரத்தின் மீது திட்டமிட்டு வேண்டுமென்றே பரப்பப்படும் அவதூறு என தெரிவித்து வருகின்றனர். யார் இந்த செய்தியை வெளியிட்டது? இந்த தகவல் நிஜமாகவே உண்மைதானா? என பார்ப்போம்.  


 சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அபிராமி & காதலர் மீனாட்சி சுந்தரம்

இந்தியாவில் அதிகரிக்கும் கொடூர கொலைகள்...

அண்மைக்காலமாகவே திருமணத்தை தாண்டிய தகாத உறவுகள் அதிகரித்து வருகின்றன. இந்த தகாத உறவால், பல கொடூரமான கொலைகள் இந்தியாவில் அரங்கேறுவதையும் நாம் பார்த்து வருகிறோம். திருமணம் தாண்டிய உறவுகள், காதலில் இருக்கும்போதே மற்றொருவருடன் நெருக்கம் போன்ற காரணங்கள், கோபத்தை தூண்டி, கொலையில் முடிகின்றன. இதற்கு உதாரணமாக ராஜா ரகுவன்ஷி கொலை, சவுரப் ராஜ்புத் கொலை, தகாத உறவால் பெங்களூருவில் குத்திக் கொல்லப்பட்ட 33 வயது பெண் என பல சம்பங்களை கூறலாம். இருவருக்கும் இடையிலான ஒரு உறவில் நம்பிக்கை துரோகமாகவும், காமம் வன்முறையாகவும் மாறும்போது இந்த கொலைகள் அரங்கேறுகின்றன. இந்த ஒவ்வொரு செய்திக்குப் பின்னும் நம்பிக்கை சிதைக்கப்பட்டு, உயிர்வலி வேதனையைவிட, மனவலி வேதனையுடன் இறந்த உயிர்களின் கதை உள்ளது. தகாத உறவால் கணவன், மனைவியை தாண்டி குழந்தைகள் கொல்லப்படும் சம்பவமும் இந்தியாவில் அதிகரித்துள்ளது. சில நாட்களுக்கு முன்புகூட திருமணத்தை மீறிய உறவால், தனது இரண்டு குழந்தைகளையும் பாலில் தூக்கமாத்திரை கலந்து கொடுத்து கொன்ற குன்றத்தூர் அபிராமிக்கும், அவரது காதலர் மீனாட்சி சுந்தரத்திற்கும் 'சாகும் வரை ஆயுள் தண்டனை' அளித்து காஞ்சிபுரம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்ததை நினைவுக் கூறலாம். இந்த தீர்ப்பு வழங்கி ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், கோவையில் கள்ளகாதலுக்கு இடையூறாக இருந்த தனது நான்கு வயது குழந்தையை தாயே கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. கள்ளக்காதல் மற்றும் தகாத உறவுகளால் கொலை மற்றும் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்த வண்ணமே உள்ளன. 


தகாத உறவுகள் அதிகம் இருக்கும் நகரங்களின் பட்டியலில் காஞ்சிபுரம் முதலிடம்?

தகாத உறவின் தலைநகரம் காஞ்சிபுரம்? 

‘ஆயிரம் கோயில்களின் நகரம்’ என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம்,  இந்தியாவின் பழமையான நகரங்களில் ஒன்றாகும். மேலும் காஞ்சிபுரம், சிவன் மற்றும் விஷ்ணு கோயில்களுக்கு பெயர்பெற்றது. ஆன்மிகத் தலம் என்பதை தாண்டி அதன் பட்டு புடவைகள் மற்றும் பாரம்பரிய கைவினைகளுக்கும் பெயர் பெற்றது காஞ்சிபுரம். இந்நிலையில் தகாத உறவுகள் அதிகம் இருக்கும் பகுதிகளில் முதலிடமாக காஞ்சிபுரம் இருப்பதாக ‘ஆஷ்லே மேடிசன்’ என்ற டேட்டிங் செயிலியின் சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  பட்டுச் சேலைகள் மற்றும் பாரம்பரிய கோயில்களுக்குப் பெயர் பெற்ற, தொழில்வளர்ச்சியில் முன்னேறி வரும் நகரமான காஞ்சிபுரம், இப்படி ஒரு தலைப்பு செய்தியில் சிக்கியுள்ளது, தமிழ்நாடு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 'ஆஷ்லே மேடிசன்' செயலி, தனது தளத்தில் ஜூன் 2025 வரை பதிவு செய்த புதிய பயனர்களின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்தப் பட்டியலில் 17-வது இடத்தில் இருந்த காஞ்சிபுரம், டெல்லி, மும்பை மற்றும் புனே போன்ற நகரங்களை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளது. மேலும் இந்த பட்டியலில் பெருநகரங்களை விட சிறு நகரங்கள் ஆதிக்கம் செலுத்துவது முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது. முதல் 20 நகரங்களின் பட்டியல் காஞ்சிபுரத்தில் தொடங்கி, ஜெய்ப்பூரில் முடிகிறது. அவை, காஞ்சிபுரம், மத்திய டெல்லி, குர்கான், நொய்டா, தென்மேற்கு டெல்லி, டேராடூன், கிழக்கு டெல்லி, புனே, பெங்களூரு, தெற்கு டெல்லி, சண்டிகர், லக்னோ, கொல்கத்தா, மேற்கு டெல்லி, காம்ரூப், வடமேற்கு டெல்லி, ராய்கார்ட், ஹைதராபாத், காஜியாபாத் மற்றும் ஜெய்ப்பூர். இதில் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் மட்டும் 9 இடங்களை பிடித்துள்ளன. 


ஆஷ்லே மேடிசன் செயலியின் ஆய்வறிக்கைக்கு காஞ்சிபுரம் மக்கள் எதிர்ப்பு

காஞ்சிபுரம் மக்கள் சொல்வது என்ன?

தகாத உறவில் இருப்பவர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளின் பட்டியலில் ஒரு ஆன்மிக நகரம் முதலிடம் பிடித்திருப்பதை பார்ப்பதற்கு அதிர்ச்சியாக உள்ளது. இணையம் மற்றும் வளர்ந்து வரும் சமூக ஊடகங்களே இதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றன. டேட்டிங் செயலிகள் என்ற பெயரில் ரகசியமாக மக்கள் இணைவதற்கு இவைகள் வழிவகுக்கின்றன. நவீன செயலிகளை பயன்படுத்தி, கள்ள உறவில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை கேள்விக்குறியாக்கி உள்ளது.  திருமண வாழ்க்கையில் அல்லது வாழ்க்கை துணையால் ஒருவர் அடையும் அதிருப்தி, ஒரு உறவில் சலிப்பு ஏற்படுவது, அடுத்தவர்களின் துணைகள் மீது ஆசைப்படுவது போன்ற காரணங்கள் தகாத உறவுக்கு இட்டுச் செல்லும் மற்ற காரணிகளாகும். இப்போதெல்லாம் பலரும், தங்கள் துணையை பிடிக்கவில்லை என்றால் விவாகரத்து பெற்றுக் கொள்ளாமல், வாழ்க்கைத் துணையை ஏமாற்றி வேறு ஒருவருடன் உறவில் இருப்பதையே விரும்புகின்றனர்.

இந்நிலையில் காஞ்சிபுரத்தை மையமாக வைத்து செயல்பட்டு வரும் பல இன்ஸ்டாகிராம் பக்கங்களை சார்ந்த இன்ஃப்ளூயன்சர்கள் (Influencers), காஞ்சிபுரம் மீது முன்வைக்கப்படும் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். முறையான எந்தவித தகவலும் இன்றி காஞ்சிபுரத்தின் மீது, அவதூறு பரப்பப்பட்டு வருவதாக வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இது தொடர்பான வீடியோக்கள் காஞ்சிபுரத்தில் வைரலாக பரவி வருகிறது. அதேபோன்று காஞ்சிபுரத்தை சேர்ந்த அரசியல் பிரமுகர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த அறிக்கை வரலாறு, கலாச்சாரம், ஆன்மிகம் மற்றும் பாரம்பரிய பட்டுத் தொழிலுக்கு பெயர்பெற்ற காஞ்சிபுரத்தின் உண்மையான பிம்பத்தைச் சிதைக்கும் வகையில் அமைந்துள்ளது எனவும் கூறியுள்ளனர். மேலும் இதில் தமிழ்நாடு அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்‌ எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்